வெள்ளி, ஜனவரி 12, 2007

திருக்குறளின் வைப்புமுறை மாற்றத் தக்கதா?

திருக்குறள் தமிழ் நூல். தமிழர் நூல். தமிழ்ர்க்கான நூல். இந்தியத் தத்துவங்களின் பிழிவு. உலகின் பொதுமறை. இவை அனைத்தும் திருக்குறளின் முழுமை கருதி அந்நூலுக்குக் கிடைத்த பெருமைகள்.

திருக்குறளின் முழுமை என்பது அதன் முரணபாடற்ற கருத்துவளம், ஏற்றத் தாழ்வில்லா பொது நோக்கு, எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை போன்ற பலவற்றால் ஏற்பட்டதாகும். இந்த முழுமையைக் காத்து நிற்பது திருக்குறளின் யாப்பு, அதன் எண்ணிக்கை ஒழுங்கமைவு முதலியனவாகும்.

திருக்குறளின் யாப்பு எக்குறளிலும் குற்றம் குறை இல்லாததாக இடையீடு செய்ய இயலாததாக மிகச் செறிவை, செம்மையை உடையது. அதற்கு உரைகள் மாறுபடலாமே தவிர சொல் நீக்கத்தையோ அல்லது மாற்றத்தையோ அல்லது இடப் பெயர்வையோ எவரும் ஏற்படுத்தி விட முடியாத அளவிற்கு அதன் யாப்பு அமைந்துள்ளது.

திருக்குறளின் எண்ணிக்கை அளவு என்பது ஓரளவிற்குச் செறிவும் செம்மையும் உடையதே என்றாலும் அது யாப்பு அளவிற்கு மிகு கட்டுப்பாடு உடையது அல்ல. ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்கள், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள், மூன்று பால்கள் என்ற இந்த எண்ணிக்கை வரையறை வேறு எவரும் மிகைப்பாடல்களைப் புகுத்திவிடமுடியாத அளவிற்கு ஓரளவு கட்டுப்பாட்டைத் தருவது. அதாவது அந்தாதி போன்ற இலக்கிய வகைமைகள் போல இத்தனைப் பாடல் என்ற வரையறையைத் திருக்குறளில் வள்ளுவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்திற்குப் பத்துக் குறட்பாக்கள் என்பதில் இருக்கும் கட்டுப்பாடு எத்தனை அதிகாரங்கள் எத்தனை பால்கள் என்பதில் இல்லை. எனவே இந்த அமைப்பு குறள் அதிகாரங்களை முன்பின்னாக வைத்துக் கொள்ள, பால்பிரிவுகளை முன் பின்னாக வைத்துக் கொள்ள இடம் தருவதாக உள்ளது.

இருப்பினும் இதன் முழுமையை மரபு வழியாகக் கூறப்பெறும் சில கருத்துகள் காத்துவருகின்றன. 1. திருக்குறள் 'அ' என்ற எழுத்தில் தொடங்கப் பெற்று, 'ன்' என்ற மெய்யெழுத்தில் முடிவதாக உள்ளது. 2. அறம் பொருள் இன்பம் வீடு என்ற பொருள் வரிசையின்படி பால்கள் அமைக்கப் பெற்றுள்ளன. 3. எக்காலத்திற்கும் எல்லார்க்கும் ஏற்ற நூல் - இவை போன்ற தி¢ருக்குறள் பற்றிய சில கருத்துகள் அதன் முழுமையைக் காப்பதற்காக மரபு வழியாகக் கூறப்படும் கருத்துக்களாக உள்ளன.

இக்காப்புகளைக் கடந்து திருக்குறளின் முழுமையைப் பலவகைகளில் மாற்றியமைக்கும் போக்குகள் தற்போது உருவாகி வருகின்றன. அவற்றின் வன்மை மென்மைகளைத் தமிழ்உலகம் ஆராய்ந்து ஏற்கவோ அல்லது மறுக்கவோ வேண்டி உள்ளது.

பரவலாக்கம் என்ற அடிப்படையில் மக்களிடம் அதிகமாகச் சென்றடையச் செய்யப் பெற்ற இலக்கியங்கள் அனைத்திற்கும் இந்தச் சூழல் நிகழ்ந்துள்ளது. சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் இளங்கோ பாடியாதா இல்லையா அதனை ஏற்பதா வேண்டாமா என்ற கருத்தின் அடிப்படையில் விவாதங்கள் தொடர்ந்து வந்தாலும் கூட அதற்கு தமிழ்மக்கள் தந்த தீர்ப்பு ஏற்கலாம்¢ என்பதே. சிலப்பதிகாரப் பதிப்புகள் அனைத்தும் வஞ்சிக் காண்டத்தை ஏற்றிருப்பதன் வாயிலாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை தமிழ் மக்கள் இழக்காமல் வைத்தி¢ருக்கிறார்கள் எனத் தௌ¤யலாம். கம்பராமாயணத்திற்கும் இதுபோன்ற ஒரு சூழல் வந்தது. ரசிகமணி கம்பராமாயணப் பாடல்களில் பலவற்றைத் தள்ளியபோதிலும், கம்பராமாயணத்தை மக்களிடம் முன் எடுத்துச் சென்ற கம்பன் கழகங்கள் அதற்கான ஒரு பதிப்பை வெளியிட்டபோது (சென்னை கம்பன் கழகப் பதிப்பு) மிகைப் பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் கம்பராமாயண ஏட்டுப் பிரதிப் பாடல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு பதிப்பு செய்திருப்பது இங்கு கருதத்தக்கது. தொல்காப்பியத்திற்கும் இது போன்ற ஒரு சூழல் வந்தது. அதனை இயல் மாற்றிப் பதிப்பிப்பது (எடுத்துக் காட்டிற்குப் புலவர் குழந்தை உரை) நூற்பாக்களைப் புகுத்துதல் போன்றன நிகழ்ந்தபோதும் இன்றளவும் உரையாசிரியர்கள் பலரால் ஏற்கப் பெற்ற பொது வடிவம் மக்களுக்குக் கிடைத்துவருவது அதன் பழைய மரபுத் தன்மைக்குக் கிடைத்த வெற்றியே ஆகும்.

இதன் தொடர்வாய் திருக்குறளையும் சித்திக்க வேண்டி உள்ளது. திருக்குறளுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உரைகள் தோன்றி வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் தமிழாசிரியர் ஒருவர்¢ தன்னைத் தமிழாசிரியராக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமானல் திருக்குறளுக்கு உரை எழுதியே ஆகவேண்டும் என்ற நிலை தற்போது ஏற்ப்டுள்ளது. இதன் மூலம் தி¢ருக்குறள் மிகு பரவலாக்கம் பெற்ற நூல் என்ற பெருமையைப் பெற்று விட்டது. என்றாலும் அதன் மிகு பரவலாக்கம் அதன் முழுமையைக் கூறுபோட்டுவிடும் அளவிற்கு வளர்ந்து வருகிறதோ என்ற கவலையும் ஒருபுறம் ஏற்படுகிறது.

திருக்குறளைப் பரப்பும் பதிவு பெற்ற நிறுவனங்கள், பதிவு பெறாத நிறுவனங்கள், பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், தனிமனிதர்கள், குழுமனிதர்கள் என்ற அனைத்துக்கும் அனைவருக்கும் தற்போது திருக்குறள் பிரதி தேவை என்ற நிலையிலேயே திருக்குறளின் தேவை அதிகரித்து விட்டது. திருக்குறளின் எளிமை, தேவை கருதி அது பல வெளியீட்டு நிறுவனங்களினால் வெளியிடப் பெற்றுவருகிறது. பனையோலை, தாள், சுவர், பேருந்தின் உள்மேல் பகுதி, திரைப்படத் தொடக்கம், வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் இடம் பெறும் நிகழ்ச்சிகள், கணினி மென்பொருட்கள் போன்ற பல தளங்களில் தி¢¢ருக்குறள் பயன்படுத்தப் பெற்று வருகிறது. இதுதவிர திருக்குறள் கவனக நிகழ்ச்சி, திருக்குறள் வகுப்பு, கருத்தரங்கு, முற்றோதல் முதலான சிறப்புச் செயல்பாடுகளும் தமிழகத்தில் நிகழ்ந்து வருகின்றன. தமிழக அரசும் திருக்குறளை முன்னிறுத்துவதில் தனி பங்காற்றி விருதுகளும், பதக்கங்களும் அளித்து வருகிறது. இது தவிர ஆய்வு நிறுவனங்கள் மொழிபெயர்ப்புப் பணி, ஒப்பிடும் பணி முதலியவற்றைச் செய்து வருகின்றன.

இத்தகைய பல தளத் தேவை உடைய திருக்குறள் பிரதிக்குப் பொதுமை அல்லது முழுமை என்பது காப்பாற்றப் பட வேண்டிய ஒன்றாகும். அந்த முழுமை கருதியே தி¢ருக்குறள் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்க முடியும். இந்த ஒருங்கிணைப்பை இதுவரைக் காப்பாற்றி வந்தத் தமிழ்உலகம் தற்போது தி¢ருக்குறளை வெளியிடுவதில் சில மாற்றங்களைக் கண்டுவருகிறது. எழுத்துக்களை தரப்படுத்தி ஒரே நிலைப் படுத்துவது, தமிழ்க் கணினி எழுத்துருக்களைத் தரப்படுத்தி ஒரே நிலைப்படுத்துவது போன்றவற்றில் பல சிக்கல்களைச் சந்தித்து வரும் தமிழ் உலகம் தி¢ருக்குறளையும் நிலைப்படுத்த வேண்டிய சூழலுக்குத் தற்போது தள்ளப் பெற்றுவிட்டது.

திருக்குறளில் இதுவரைப் பாதுகாக்கப் பட்டு வந்த மரபும், வைப்புமுறையும் தற்போது மாற்றப் பெற்று வருகின்றன. அதாவது 1. பால் பகுப்பைப் புறக்கணி¢த்து அதனை பலவாக பிரித்துக் கொள்வது 2¢. அதிகார முறையை மாற்றி வைப்பது, அதிகாரத் தலைப்புகளை மாற்றுவது 3. பத்துக் குறள்கள் என்ற நிலையில் இதுவரை பின்பற்றப் பட்டு வந்த வைப்புமுறையை மாற்றியமைத்தல் முதலான மாற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. இந்த மாற்றம் தற்போது கட்டுடைத்தல் என்ற நிலையில் புதிய திறனாய்வின் பாற்பட்டது என்று ஒரு புறம் வரவேற்கலாம். என்றாலும் உலக இலக்கியமாகத் திருக்குறள் அறிமுகப் படுத்தப்பட்டபின் இந்த மாற்றங்களால் குழப்பமே நிலவும். மாற்றியமைக்கப் பட்ட முறைமையைக் கொண்டு உலகம் முழுவதும் பல்கிப் பெருகிவிட்ட பிரதிகளில் பொதுமையைக் காணமுடியாது. மாற்றியமைக்கப் பட்டமுறையும் ஒருவழிப்பட்டதாக இல்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடிக்கருத்து அடிப்படையில் மாற்றியமைக்கப் பட்டிருப்பதால் திருக்குறளைச் சார்ந்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல நிகழ்ச்சிகள் குழப்பத்தில் முடிந்துவிடும்.

சாதாரண மனிதர்க்கும் ஏற்ற வகையிலும், தற்கால நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவகையிலும் திருக்குறளின் வைப்புமுறை மாற்றியமைக்கப் பட வேண்டும் என்ற நிலையிலேயே இம்மாற்றங்களைச் செய்ய விரும்புவதாக மாற்றியமைத்த உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். அவர்களுள் இருவர்¢ குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுள் ஒருவர் திருக்குறள் உரையுடன் தந்த சாலமன் பாப்பையா, மற்றவர் திருவள்ளுவம் தந்த க. ப. அறவாணன்¢.

''தமிழில் எத்தகைய இலக்கியப் பயிற்சியும் இல்லாத சாமானியரும் எக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறளைத் தெரிந்து கொள்ளும்படி தரமுயலும் முயற்சி இது. இதன் நோக்கம் தி¢ருக்குறளைச் சிதைப்பது அன்று. அதன் அழகையும் உண்மையையும் இன்றைக்கு அது எல்லார்க்கும் பயன் தரும் பாங்கையும் வெளிப்படுத்துவதே '' ( சாலமன் பாப்பையா (உ. ஆ) தி¢ருக்குறள் உரையுடன் ப17 ) என்பது தி¢ருக்குறளின் முழுவடிவத்தையும் தன் விருப்பத்திற்கு ஏற்றவகையில்¢ மாற்றி அமைத்துக் கொண்ட சாலமன் பாப்பையா அவர்களின் கருத்தாக உள்ளது.

காமத்துப்பாலைத் தவிர்த்து மற்ற பால்களில் முறைமாற்றத்தை ஏற்படுத்தித் திருவள்ளுவம் என்ற நூலைத் தந்துள்ள க. ப. அறவாணன் '' இந்நூலின் நோக்கம் வழக்கமான திருக்குறள் வரிசை முறையைப் போற்றுவதுடன் தி¢ருக்குறளைக் கருத்து (பொருள் conceptual) அடிப்படையில் வழங்குவது ஆகும். திருக்குறளை வாசிக்க விரும்புவோர்க்கும் கருத்து அடிப்படையில் பொருளைத் தேடுவோர்க்கும் மிகவசதியாக இருக்கும் என்பதால் இம் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது'' (க. ப. அறவாணன். திரூவள்ளுவம்) என்று மாற்றத்திற்கான காரணத்தை வரையறை செய்கிறார்.

முன்னவர் திருக்குறள் வரிசைமுறை, எண்முறை போன்றவற்றை முழுமையையும் மாற்றிவிட பின்னவர் - அறவாணன் வரிசைப்படுத்தியபடி எண், திருக்குறள் பழைய மரபு எண் ஆகிய இரண்டையும் தந்து பழைய மரபு முறைக்கு மதிப்பளித்¢து உரைதந்துள்ளார். மேலும் அறவாணன் ''அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'' என்ற குறட்பாவில் தொடங்குவதன் மூலம் அறவாணன் வரிசைத் திருக்குறளும் 'அ' என்ற எழுத்தில் இருந்து தொடங்கி விடுகிறது. காமத்துப்பால் மாற்றம் பெறாமையால் 'ன்' என்ற மெய்யெழுத்தில் முடிவு பெற்று விடுகிறது.

ஆனால் இவர்கள் இருவரும் செய்துள்ள திருக்குறளின் பால்பகுப்புமுறைக்கு ஈடான பிரிப்புமுறை அவரவர் கருதுகோளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. சாலமன் பாப்பையா நூலின் உயிர், குடும்பம், சமுதாயம், அரசியல், நிர்வாகம், பண்பாடு, மெய்ப்பொருள் என்ற ஏழுவகையுள் பிரித்துள்ளார். அறவாணன் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவற்றில் உள்ள அதிகாரங்களைப் பின்வரும் பிரிவுகளில் அடக்கியுள்ளார். பண்பியல், கல்வியியல், வெற்றியியல், பொருளியல், மென்மையியல், குடும்பவியல், பால் உறவுக் குற்றவியல், கயவர் இயல், சமூகவியல், அரசியல், சான்றோர் இயல், தோழமைஇயல், வீர இயல், மீநம்பிக்கைஇயல், களவியல், கற்பியல் என்ற நிலையில் பிரிக்கப் பெற்றுள்ளது. இவரின் பகுதியில் காமத்துப்பால் மாற்றம் பெறாவிட்டாலும் அதன் முழுப்பகுப்புமுறைக்குக் காமத்துப்பால் என்ற பெயர் இடம் பெறச் செய்யப் படவில்லை.

முன்னவரின் உரைநூல் 1999ல் வெளியிடப் பெற பின்னவரின் நூல் 2006ல் வெளிவந்துள்ளது. ஏறக்குறைய ஏழுஆண்டுகளில் முன்னவரின் பதிப்பு வரிசை ஏற்கப் பெறாமல் பின் ஒருவரால் வேறுவகையில் மாற்றம் பெற்றுவிட்டது. ஏழு ஆண்டுகள் கூட தாங்காத அளவில் அவ்வகைமைப்பாடு இருக்குமானால் அவ்வகைமைப்பாடு வெற்றி பெற்றது எனக் கொள்ளல் தகாது. இதே நிலை பின்னவரின் நூலுக்கும் ஏற்படலாம். எனினும் இவர் திருக்குறள் எனத் தலைப்பை வைத்துக் கொள்ளாமல் திருவள்ளுவம் என் வைத்துக் கொண்ட அளவில் திருக்குறளுக்கு உள்ள மரபு உயிர் காக்கப் பெற்றுவிட்டது எனக் கொள்ளலாம். இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழாசிரியரும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்து முறைமையை மாற்றலாம். இந்த இருவருக்கான அனுமதி மற்றவர்க்கும் உரியாதாகவே ஏற்றுக் கொள்ளப் பெற்றுவிடும்.

இவ்வகையில் அவரவர் கருத்து அடிப்படையில் திருக்குறளை முறைமை செய்யப் புகுந்தால் இறுதியில் திருக்குறள் இருக்காது. ''கட்டிடத்தின் அடித்தளத்தையே அசைத்துவிட்டு கட்டிடத்தை அழகு படுத்துகிறேன் என்று சொன்னால் எவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ( ச. வே. சுப்பிரமணியம் வள்ளுவம் இதழ் புத்தக மதிப்புரை 06.2000 ப.81)'' என்ற ஆய்வாளரின் கருத்து இதுபோன்று முறைமை மாற்றும் உரையாளர்கக்கு எச்சரிக்கை செய்கிறது.

சொந்த வீட்டை இடித்துக் கட்டலாம். சொந்த நூலை மாற்றிப வைக்கலாம். உரையாசிரியர்கள் இம்முறையில் மூலநூலை மாற்றம் செய்யப் புகுவது சரிதானா என்று ஒரு கேள்வி எழுப்பினால்¢ அதற்கு தொல்காப்பிய நூற்பாக்கள் விடை தருகின்றன '' சொல்லப் பட்டன எல்லா மாண்பும் மறுதலையாயின் மற்றது சிதைவே (தொல் பொருள் 651)'' ''சிதைவில என்ப முதல்வன் கண்ணே ( தொல் பொருள் 652) '' என்ற மரபியல் நூற்பாக்கள் முதல் நூலின் மறுதலைகளை ஏற்பதில்லை என்ற கருத்தைத் தருவன. முதல்நூலைச் சிதைக்கும் வேலைகளில் உரையாசிரியர்கள் இறங்க வேண்டாம்¢ என்ற இந்த பொன்னே போல் போற்றும் முறைமை இக்காலத்திற்குத் தேவை. வழி வழி மரபாக உரையாசிரியர் காத்து வந்த முதல்நூலுக்கான மரபைச் சிதைக்க எவருக்கும் அனுமதி இல்லை. அதிலும் குறிப்பாக உரை எழுதப் புகுபவர் முதன் நூலை மேன்மைப் படுத்த வேண்டுமே தவிர அவர்¢ பதிப்பாசிரியராகச் செயலாற்ற இயலாது. இந்நடைமுறைகளைப் பார்க்கும்போது ''எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் '' என்ற பழமொழி எக்காலத்திற்கும் உரியதாக மாறிவிடுகிறது.

அச்சுக்கலை வந்தபின் தமிழ் வளரத்தொடங்கி விட்டது என்றாலும்¢ தற்போது அந்தத்துறையின் அபார வளர்ச்சி தமிழுக்குத் தடையாக அமைகிறதோ என எண்ணத் தோன்றிவிடுகிறது. காரணம் தினம் தினம் புத்தகங்கள் எழுதுபவரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. புத்தகம் வெளியிடும் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் புத்தகத்தின் தரம் அதன் கருத்து இவற்றில் குறைபாடுகள் பல உள்ளன. நூலாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு பதிப்பகத்தின் உரிமையாளராக மாறிவிட்டனர். இதன் காரணமாக முன்னர் தமிழ் வெளியீட்டு உலகில் இருந்த தணிக்கை முறை தற்போது இல்லை. அதாவது பழைய காலத்தில் ''பரிசோதிக்கப் பெற்றது'' என்ற நிலையில் மூத்த அறிஞர் ஒருவரின் ஒப்புதல் பெற்று நூல் வெளியிடும் பெறும் முறைமை இருந்தது. இன்னும் பழைய காலத்தில்¢ அரங்கேற்றும் முறை இருந்தது. இதில் ஒரு படைப்பு விவாதிக்கப் பெற்றபின்னரே வழக்கிற்கு வரும்.

இதுபோலவே பதிப்புத்துறையில் தரம் கொண்ட நிறுவனங்கள் இருந்தன. அவை தரப்படுத்தப் பட்ட புத்தகங்களை மட்டுமே வெளியிட்டன. இற்றைக் காலத்தில் நூல் வெளியிடுவதில் இலாபம், பணம், புகழ் முதலியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன்காரணமாக நூல் தரம் என்பது கேள்விக்குறியாகி வி¢ட்டது.

மேலே திறனாயப் பெற்ற இரண்டு நூல்களும் உரையாசிரியர்களின் சொந்தப் பதிப்பகங்கள் வாயிலாக வெளியிடப்பெற்றவை என்பது இங்குக் கருதத்தக்கது. வெளியிட ஆர்வமும், பொருளும் அமைந்துவிட்டால் அவரவர்¢ நோக்கத்திற்கு புத்தகங்களைச் சந்தைப் பொருளாக்கிவிடலாம். இந்தச் சந்தை மயமாக்கல் மக்களால் ஏற்கப்படுமா என்பது ஐயமே. பல பதிப்புகளைக் கண்ட மரபு வைப்புமுறை கொண்ட திருக்குறள் போல இவை நிலைக்கக்கூடியன அல்லன என்பது அழியா உண்மை.

எனவே காலவெள்ளத்தில் முழுமை பெற்று மரபாக உள்ள நூல்களை அதன் மரபு கெடாமல் குலையாமல், குறைக்காமல் கூட்டாமல் வெளியிடுவது என்பதே நல்லது. ஒரு பக்க மரபுகளை உடைத்தெரிவதில் தவறில்லை. எவ்விதத்திலும் ஊறு செய்யாத நல்ல மரபுகளைக் காப்பாற்றி இன்னும் சில நாட்களுக்காவது வைத்திருக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும்.

இக்கட்டுரை திருக்குறளி¢ன் வைப்புமுறை பற்றிய வேறுபாடுகளை மட்டுமே தொட்டுக் காட்டுகிறது. வைப்புமுறை மாற்றங்கள் நிகழ்த்திய நூல்களின் தரங்கள் குறித்து பெரும் விவாதமே எழ வேண்டும். அப்படி எழும் அந்த விவாதங்கள் இனி வரும் நூல்களின் தரத்தை உறுதி செய்யும். இல்லையாயின் தரமிலா நூல்களை தமிழ் இலக்கிய வரலாறு சுமக்க வேண்டியதாகிவிடும்.

1 கருத்து:

haran சொன்னது…

அன்புடையீர், வணக்கம்.

எனது இயற்பெயர் ஜாபர் அலி; ஹரன் என்ற பெயரில் சில வளைத்தலங்களில் எழுதுவது உண்டு. பிறந்த ஊர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கச்சிராயபாளையம் எனும் கிராமம். தற்சமயம் வசிப்பது துபாயில்.

"திருக்குறளின் வைப்புமுறை மாற்றத் தக்கதா?" எனும் இந்தக் கட்டுரையைத் 'திண்ணை'யிலும் படித்தேன். உடன் மடல் எழுத முடியவில்லை (விடுப்பில் இந்தியா வர நேர்ந்ததால்). தங்கள் கருத்துடன் நானும் முழுவதுமாக ஒத்துப்போகிறேன். மூலம் என்பது, தாங்கள் குறிப்பிட்டதுபோல அஸ்திவாரம். அதை அப்படியே வைப்பதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை. எவ்வளவு வித்தியாசமான பார்வைகளை வேண்டுமானாலும் நாம் கொடுக்கலாம். ஆனால் மூலம் சிதையாமல், வரும் சந்ததியினருக்கு அவைகளை, அப்படியே கொண்டுபோய் சேர்ப்பது நம் சமூகப் பொறுப்பு.

பல வருடங்களுக்கு முன், தினமணிக் கதிரில், திருமதி.ராஜம் கிருஷ்ணன் 'திருக்குறளில் மாற்றம் தேவை' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு ஒரு மறுப்புக் கட்டுரை நான் எழுதி தினமணிக் கதிருக்கு அனுப்பியிருந்தேன். பிரசுரிக்கப் படவில்லை. பின் சில ஆண்டுகள் கழித்து, அதனைத் திண்ணைக்கு அனுப்பினேன். வெளியிட்டிருந்தார்கள். முறையான தமிழ் இலக்கியம் பயிலாதவன்; எப்படி எழுதியிருந்தேனோ, தெரியவில்லை. தங்களைப்போன்ற தமிழ் அறிஞர்கள், அதைப்பற்றிக் கருத்துக் கூறினால் மகிழ்வேன்.

அந்த முழுக்கட்டுரைக்கு:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60606232&format=print