திருக்குறளில் பண்பாட்டுச் செழுமை (யுனிகோடு வடிவம்)
முனைவர் மு.பழனியப்பன்
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவாடானை
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவாடானை
கட்டுரையின் சுருக்கம்
Cultural Richness in Thirukkural
This research paper by Dr. M. Palaniappan explores the extensive cultural wealth embedded in the ancient Tamil text, Thirukkural. The author categorizes Tamil culture into two major aspects: Tangible (Material) Culture and Intangible (Non-material) Culture.
- Tangible Culture (பொருள் சார் பண்பாடு):
- Food and Attire: Thirukkural emphasizes that one's clothing and dining habits reflect social and economic well-being.
- Hospitality (விருந்தோம்பல்): A cornerstone of Tamil identity. A true householder prioritizes feeding guests first before consuming their own meals, treating hospitality as a duty that multiplies wealth rather than diminishing it.
- Respect for Elders: Honoring the wise and elderly, learning from their vast life experiences, and seeking their blessings remain continuous traditions in Tamil society.
- Philanthropy (ஈகை): Helping the impoverished and filling someone's hunger is celebrated as the highest virtue of tangible giving that brings lasting fame.
- Intangible Culture (பொருள் சாரா பண்பாடு):
- Aesthetics and Love (அகப் பண்பாடு): Thirukkural subtly defines the nuances of love, courtship, marital fidelity, and the delicate nature of small misunderstandings (ஊடல்) followed by harmonious reconciliation.
- Ethical Character: Values like truthfulness (வாய்மை), humility (பணிவு), gratitude (செய்ந்நன்றி மறவாமை), emotional self-restraint, avoiding anger, protecting all living creatures, and prioritizing inner wisdom over theoretical learning define the core non-material wealth of a civilized individual.
Ultimately, the author concludes that Thirukkural acts as an invaluable cultural archive that beautifully codifies the ideal way of living for humanity.
------------------------------------------------------------------------------------------------------
பண்பாடு என்பது மனித வாழ்க்க முறையின் வெற்றி பெற்ற பழக்க வழக்கங்களின் தொகுப்பாகும். மனிதன் உண்ணும்முறை, உடுக்கும் முறை, பேசும் முறை, வழிபடும் முறை, ஆகிய அனைத்திலும் பண்பாட்டுக்கூறுகள் அமைந்துள்ளன. ஒரு சமுதாயத்தின் சிந்தனை வளம், மற்றும் செயல் திறன் ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் பண்பாடு விளங்குகின்றது. பண்பாட்டு வெளிப்பாடுகளாக கலை, இசை, இலக்கியம், கட்டடக்கலை, சிற்பக்கலை, தத்துவம், சமயம், அறிவியல், பழக்க வழக்கம், திருவிழாக்கள் போன்றவை விளங்குகின்றன. பண்பாடு என்பது இனத்துக்கு இனம் வேறுபடுவதாகவும், குலத்துக்குக் குலம் மாறுபடுவதாகவும், சமூகத்திற்குச் சமூகம் வேறுபடாததும் உள்ளது. பண்பாடு என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாராத செயல்முறைகள் ஆகும். பண்பாடு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படக்கூடிய வலிமை பெற்றது. வலிமை பெற்றது. மனிதர்களின் நடத்தையே பண்பாடு ஆகும். ஒருசமுதாயம் உருவாக்கிய தத்துவங்கள், நிலைத்த கருத்துகள் பண்பாட்டுச் செழுமைக்கு உரியதாகின்றன. பண்பாட்டை இருநிலைகளில் பகுக்க முடிகின்றது. பொருள் சார்ந்த பண்பாடு, பொருள் சாராத பண்பாடு என்று இருவகையாக அமைகின்றன. பொருள் சார்ந்த பண்பாடு என்பது, உணவு, உடை, வழிபாடு, விருந்து போன்றவையாகும். பொருள் சாராத பண்பாடு என்பது கருத்துகள் உயர் லட்சியங்கள், எண்ணங்கள் ஆகியனவாகும்.
திருக்குறள் தமிழரின் பண்பாட்டுக்கருவூலமாக விளங்கு கிறது. தமிழர்களின் செழுமை மிக்க வாழ்வியல் தத்துவங்களையும் வளம் மிக்க வாழ்க்கை முறைகளையும் திருக்குறள் தனக்குள் தேக்கி வைத்துள்ளது.
பொருள் சார் பண்பாட்டுச் செழுமைகள்
உடுப்பதும் உண்பதும் பண்பாட்டுச் செயல்பாடுகள் ஆகும். இவற்றின் மூலமாகவே மனிதனின் இருப்பு, நடப்பு உலகினரால் அறிந்து கொள்ளமுடிகின்றது. நன்றாக உடுப்பதும் சிறப்பாக உண்பதும் மற்றொருவரின் செல்வ நலத்தை வெளிப்படுத்தும் என்பதை
உடுப்பதுஉம் உண்பதுஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாம் கீழ் (குறள் 1079)
உண்பதும் உடுப்பதும் பிறருக்குப் பொறாமையைக்கூட ஏற்படுத்தலாம் என்கிறார் வள்ளுவர். இவை இரண்டு செயல்கள் ஒருவரின் செல்வ நிலையை வெளிப்படுத்துவனவாகும். இன்றளவும் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிறப்பான உடை அணிவது குறிக்கத்தக்கது. விருந்துகள் அமைந்துள்ள முறை பற்றி செல்வ நிலை அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே உண்பதும் உடுப்பதும் பண்பாட்டு நிலைக்களன்கள் என்பதை உணர இயலும்.
விருந்தோம்பல்
தமிழர் பண்பாட்டில் மிகச் சிறப்பானது விருந்தோம்பல் பண்பாடாகும். நாளும் விருந்தினரை எதிர்பார்த்து வரவேற்று அவர்களுக்கு வேண்டுவன செய்து தரும் நல் நடைமுறை தமிழர்களின் வாழ்வில் உள்ளது. திருக்குறளில் இதுவே முன்னதாகவும் முதன்மையானதாகவும் விருந்தோம்பல் என்ற அதிகாரமாக பத்துக் குறட்பாக்களில் அமைந்துள்ளது.
இல்வாழ்க்கையின் தலையாய கடமை விருந்து போற்றல் ஆகும். விருந்து வழங்குவதால் செல்வம் தேய்வதில்லை. வளரும் என்கிறார் வள்ளுவர். விருந்தினர்களைப் பரிவுடன் கனிவாகக் கவனித்துப் போற்றல் சிறந்த பண்பாடாகும். சாக்காட்டைத் தவிர்க்கும் மருந்து (அமிர்தம்) என்றாலும் அதனை விருந்தினர் வந்த நேரத்தில் அவருக்கும் அளித்து உண்பதே பண்பாட்டு வாழ்க்கை. விருந்தினர் புறத்திருக்க இல்லத்தார் உண்பது சிறப்பு அன்று.
விருந்தினருடன் உடன் உண்பது சிறப்பா என்றால் விருந்தினர்க்கு அளித்து அன்பின் மிச்சம் உள்ள உணவினை இல்லத்தார் உண்பதே பண்பாட்டுச் செயல்பாடு என்கிறார் வள்ளுவர்.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம் (குறள் 85)
உலக அளவில் விருந்து நடைமுறை நடப்பதாக இருந்தாலும் விருந்தினருடன் தாமும் உண்ணும் வழக்கம் பெற்றுவர தமிழன் தனித்த பண்பாட்டு அடையாளம் உடையவனாக விருந்தினரை முன் உண்ணச்செய்து தான் பின் உண்ணும் விருந்துப் பண்பாடு உடையவனாக விளங்குகிறான்.
பெரியோரைப் பணிதல்
பெரியோருக்கு மதிப்பு அளித்தலும் அவர்கள் வழி நடத்தலும் தமிழர்களின் சிறந்த பண்பாட்டு நிலையாகும். பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைத் துணைக்கோடல் (அதிகாரம் எண் 45), பெரியாரைப் பிழையாமை (அதிகாரம் எண் 90) என்று பெரியோரைத் துணைக் கோடுவதால் வரும் நன்மையையும், பெரியோரைப் பிழைப்பதால் ஏற்படும் தீமைகளையும் உரைக்கிறார் திருவள்ளுவர்.
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையுள் எல்லாம் தலை (குறள் 444)
என்று தம்மை விட அறிவாலும், அனுபவத்தாலும், வயதாலும் சான்றாண்மை மிக்க பெரியவர்களின் வழி நடத்தல் வலிமைகள் எல்லாவற்றிலும் தலையாயது என்பது வள்ளுவக் கருத்து. பெரியவர்கள் தம்மை விடச் சிறியவர்களைக் கண்டு உசாவி வழிப்படுத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. ஆனால் சிறியவர்கள் பெரியவர்களைக் கண்டு அவர்களின் அனுபவ மொழிகளைப் பொன்னே போல் போற்றுவதால் மிகச் சிறப்பு கிடைக்கும். பெரியவர்கள் அறன் அறிந்தவர்களாக இருப்பர். உற்ற துன்பங்கள் நீங்க வழி சொல்லுவார்கள், இனி வரும் துன்பங்கள் இதுவெனக் காட்டி அவை வராமலும் காப்பர். பெரியோர்கள் சிறந்து அமைந்த சான்றோர்கள். அவர்களைப் பழிப்பது கூற்றத்தைக் கைதட்டி அழைத்து என் உயிரைக் கொண்டு செல்க என்று சொல்வதற்கு ஒப்பானதாகும்.
தமிழ்நாட்டுப் பண்பாட்டில் திருமணத்தின்போதும், பிறந்த நாள்களின்போதும் பெரியோர்களிடத்தில் ஆசி பெறும் நல்வழக்கம் தொடர்ந்து வருகிறது. இருப்பினும் பெரியாரை மதியாமை என்ற தேய்வும் உண்டு.
அகப் பண்பாடு
இன்பத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்தில் அகத்திற்கான பண்பாட்டுச் செழுமைகளை வள்ளுவர் வரிசைபட மொழிகிறார். பெண்ணின் பார்வையில் நோய் ஏற்படுத்தும் தன்மையும் உண்டு. அதனைத் தணிக்கும் மருந்தும் உண்டு. பெண்கள் கண்கள் களவு கொள்ளும் சிறுநோக்கம் உடையவர்களாக இருக்கவேண்டும். காதலன் பார்க்கும் காலத்தில் அவனைப் பார்க்காமல், அவன் பார்க்காத காலத்தில் அவனைப் பார்த்து மெல்லச் சிரிப்பது பெண்ணின் பண்பாட்டு இலக்கணம் ஆகும். ஒரு கண் சிறக்கணித்தால் போன்ற பார்வையே பெண்ணுக்கு வேண்டுவது. எதற்கும் உடன்படாதவள் போலவே பெண் அமையவேண்டும். செறாஅச் சிறு சொல்லும், செற்றார் போல் நோக்கும் தலைவியின் இணக்கத்தைச் சொல்வனவாகும். கையா நகுகுவது காதல் பண்பு. இவ்வாறு களவிற்கான பண்பாட்டு நிலையை வள்ளுவர் காட்டுகிறார்.
கற்பு வாழ்வில் தற்கொண்டான் பேணி வாழும் நன்முறை தலைவிக்கு அமைகிறது. அன்பும் அறனும் பேணி வாழ்வதும் சிறப்பான நடைமுறை, துறந்தார் துவ்வாதார், இறந்தார் அனைவரையும் போற்றும் பாங்கு சிறப்பு. தென்புலத்தார், தெய்வம், விருந்து ஓம்பல் போன்றவைகளும் கற்பின் பண்பாட்டுத் கடமையாகின்றன. பிறர் பழிக்காத நல்வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாகின்றது. கற்பும் நாணும், சாயலும் பெண்ணின் உடைமையாகின்றது.
தலைவன் பிரிந்த காலத்தில் கணவனையே நாளும் எண்ணி கனவிலும் எண்ணி நனவில் மகிழும் நிலை தலைவிக்கு அமைகிறது. ஊடலும் கூடலும் தலைவியின் நிலை ஆகின்றது. எழுதும்போது கோல் காண கண் போல தலைவனின் குறைகளை மறந்து அவனுடன் இனிது வாழ்தல் தமிழ்ப்பண்பாட்டு வாழ்க்கை ஆகிறது.
உணவில் உப்பின் சேர்க்கும் அளவைப் போல குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் அவ்வப்போது நிகழலாம். அவை தலைவன் தலைவியின் முயக்கத்தால் தீரும் நிலை சிறப்பு. நிழலகத்துக்குக் கிடைக்கும் நீர் இனிது. அத்தகைய இனிமை முரண்பாடு தீர்தலின்போது அமையும்.
தலைவன் தும்முகிறான். தலைவி அவன் தும்மிய நிலையில் நீடுவாழ்க என்று வாழ்த்தி ஊடல் தீர்கிறாள். தலைவன் தும்மிய காலத்தில் யாரோ நினைக்கிறார்கள் என்றபோது என்னைத் தவிர வேறு யார் என்று ஊடல் கொள்ளும் நுண்ணிய நிலை தலைவியின் பண்பாட்டுநிலையாகும். மறுமுறை தலைவன் தும்முவதைத் தடுக்க நினைத்தபோது இன்னமும் ஊடல் பெருகியது. எனினும் ஊடலில் தலைவன் தோற்பதும் தலைவி வெற்றி பெறுவதும் தமிழர்பண்பாடு.
ஈகை
பொருளைப் பெறுவதிலும் பொருளைத் தருவதிலும் உள்ள பண்பாட்டு முறைகளை வள்ளுவர் காட்டுகின்றார். வறியவர்க்கு ஒன்று வழங்குவதே ஈகை ஆகும். இரந்தவர் இன்முகம் அடையும் அளவிற்குப் பொருளை வழங்குதல் வேண்டும். பசியாற்றலே சிறந்த ஈகை. ஈத்துவப்பதன்றே இன்பம் ஆகும். இரப்பார்க்கு ஒன்று ஈபவரே நிலைத்த புகழைப் பெறுவர்.
பொருள் சாரா பண்பாட்டுச் செழுமைகள்
தத்துவ நிலையில் லட்சியப் போக்கில் நற்கருத்துகளை வழங்குவது திருவள்ளுவருக்கு நிகர் திருவள்ளுவரே என்று சொல்லும் அளவில் தமிழரின் பண்பாட்டு நெறிமுறைகளைச் சுருக்கமாக வள்ளுவர் தந்து பெருமை கொள்கிறார்.
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்மருளான்ஆம் மாணாப் பிறப்பு
என்ற நிலையில் பொருள் சார்ந்த பண்பாட்டையும் பொருள் சாராத பண்பாட்டையும் ஒருங்கே வைத்து குறள் செய்கிறார் வள்ளுவர். பொருள் சாராத மெய்ப்பொருள்களை உணர்தல் பண்பாட்டுச் சிறப்பாகும்.
பெருக்கத்து வேண்டும் பணிவு. பணிதலே பெருமை. மானம் குறைய வாழ்தல் வேண்டாம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மை ஆகியன சான்றாண்மைக் குணங்கள் ஆகும். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல் வேண்டும். மக்கட்பண்புடன் வாழ்தலே சிறப்பு. தம்பழிக்கு நாம் பொறுப்பேற்று அதற்காக நாணப்பட வேண்டும். நாம் சார்ந்தோர் செய்யும் பழிக்கும் நாம் நாணுதல் வேண்டும்.
அன்பின் வழியது உயிர்நிலை. நல்லவை நாடி இனிய சொல்லல் வேண்டும். இன்சொல் இனிது. செய்தன்றி மறவாமை நன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ஒருபால் கோடமை என்ற நடுநிலைமை வாழ்வில் வேண்டும். யாகாவார் ஆயினும் நா காக்க. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை. பொறுத்தார்க்குப் பொன்னும் துணையும் புகழும். மன்னுயிர் ஓம்பி அருள் செய்தல் வேண்டும். யாதொன்றும் தீமை இலாத சொலும் வாய்மை வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல் நலம்.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும் (குறள் 293)
என்ற நிலையில் வாழ்வது பண்பாட்டு வாழ்வாகும். அறன் அல்ல செய்யாமை நன்று. அழுக்காறு என்னும் பாவிகுணம் செல்வத்தை அழித்துவிடும். சிற்றின்பம் வெஃகி அறன் அல்லன செய்ய வேண்டாம். புறங்கூறாமை இனிது. தன்னைத் தான் காக்கின் சினம் காத்தல் வேண்டும். பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றி அதற்கு மாற்று செய்தல் வேண்டும்.
நுணுக்கிய நூல் பல கற்பினும் மற்றும்தன்உண்மை அறிவே மிகும்
என்ற நிலையில் உண்மை அறிவே நல்ல பண்பாடு என்கிறார் வள்ளுவர்.
நிறைவுரை
திருவள்ளுவர் காலத்தில் நிகழ்ந்த நற்பண்பாடுகள் தமிழகத்தின் இக்கால எல்லைவரை பின்பற்றப்பட்டு வரப்பெறுகிறது. விருந்தினரை முன் உண்ண வைத்து தாம் பின் உண்ணும் நன்முறை தமிழர் பண்பாடு ஆகின்றது. பெரியோரை ஏற்றிப் போற்றி அவர் வழி நடப்பது தமிழரின் தலையாய பண்பாடு ஆகிறது. காதலில் இன்பமும், ஊடலும், ஊடல் தீர்வும் பண்பாடாக அமைகிறது. ஈதல் என்ற பொருள் சார் பண்பாடு ஒருவருக்கு நிலைத்த புகழைத் தரும்.
அன்பு, அருள், ஒழுக்கம், நடுநிலைமை, மானம், பெருமை போன்ற பொருள்சாராப் பண்பாடுகளை வள்ளுவர் நிலைப்படுத்தி தமிழகம் அவற்றின்வழி நிற்கத் தன் திருக்குறளைப் பண்பாட்டு ஆவணமாகத் தந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக