ஞாயிறு, நவம்பர் 27, 2022

மன்னரைச் சேர்ந்தொழுகல் – பகுதி-2 முனைவர் மு.பழனியப்பன்

 



Mar 12, 2022

siragu mannar

அறிவுரை -1 மன்னவர் விரும்புவன விரும்பாமை

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்புவனவற்றைச் செய்வார்கள். அதனை அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் அப்படியே சரி என்று ஏற்று கொள்ளாமல் தள்ளி நின்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆட்சியாளர்கள் விரும்புவதைத் தான் விரும்பாமல் இருப்பவர்களால் நிறைய ஆக்கங்கள் கிடைக்கும் என்கிறார் வள்ளுவர்.

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.(692)

என்ற குறளின் வழி இதனை உணரலாம். இராவணன் மாற்றான் மனையாளை விரும்பினான் என்ற நிலையில் அவனுக்கு அவ்வெண்ணத்தை அவனைச் சார்ந்த சுற்றமாகிய சூர்ப்பனகை உருவாக்ககிறாள். அவன் விரும்பியதைத் தடுத்து பலர் சொன்னாலும் இராவணன் கேட்கும் அளவிற்கு யாரும் சொல்லவில்லை. இராவணனின் மந்திரச் சுற்றம் அவனுக்கு அவன் விருப்பத்திற்கு இயைபாகவே இருந்துள்ளது. இதனால் இராவணன் அழிய நேர்ந்தது. எனவே ஆட்சியாளர்களைச் சுற்றி இருப்போர் ஆட்சியாளர் விரும்பும் கருத்தினைத் தானும் விரும்பிவிடாமல் ஆராய்ந்து தள்ளி நிற்பது சிறந்த பண்பாகின்றது. இதனை ஆட்சியாளர்களைச் சார்ந்து வாழ்வோர் பின்பற்ற வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

இக்குறளுக்கு மற்றுமொரு பொருளும் உண்டு. மன்னன் கொடி, சிம்மாசனம், பட்டாடை, தேர், குதிரை, யானை, அறுசுவை உணவு போன்ற வசதிகளுடன் வாழ்வான். அவனின் வாழ்வைப் போல் அவனுடன் இணைந்து வாழக் கூடியவர்கள் அவ்வளவு வசதிகளைத் தான் ஏற்படுத்திக் கொண்டு வாழ எண்ணக் கூடாது என்பதும் இக்குறள் தரும் மற்றொரு பொருளாகும்.

வத்தவ நாட்டினுடைய அரசன் உதயணன். அவன் அரச செல்வத்துடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு உற்ற ஆலோசனைகள் சொல்ல இசைச்சன் என்பவன் அமைச்சனாக நல் நண்பனாக விளங்கினான். அரசன் நாடாள இவன் அடக்கமாக எந்த வசதியும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். இவனின் நற்பண்பு கருதி தனக்குத் திருமணம் ஆகவேண்டுமானால் முதலில் தன் நண்பன் இசைச்சனுக்குத் திருமணமாகவேண்டும் என்று உதயணன் கூறி அவ்வாறே நடக்கச் செய்து தன் நன்றியைத் தெரிவித்தான். மன்னர் விழைபவனவற்றைத் தான் விழையாமல் வாழ்ந்த இசைச்சன் பின்னாளில் உதயண மன்னனால் மன்னிய ஆக்கங்கள் பலவற்றைப் பெற்றான். இவ்வாறு மன்னர்தம் வசதியை அவரின் உடன் உறைவோர் வேண்டாமல் நிற்கும் நிலையே சிறந்ததாகும் என்கிறார் வள்ளுவர்.

அறிவுரை -2 அரியவை போற்றல்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. (693)

என்ற குறள் அடுத்த அறிவுரையைத் தரும் குறளாகும். ஆட்சியாளரைச் சார்ந்து ஒழுகுபவர்கள் தன்னிடம் சிறு தவறுகள் கூட நடக்காவண்ணம் காத்துக்கொள்ள வேண்டும். மேலும் தன் நடத்தைகளில் ஐயப்பாடு ஏற்படாத வண்ணம் தூய்மையாக நடக்கவேண்டும். தலைமையைச் சார்ந்த ஒழுகுபவர்களின் நடத்தைகளில் சிறு சந்தேகம் தோன்றினால்கூட அதனைத் தீர்ப்பது கடினமாகிவிடும்.

எனவேதான் ஆட்சியாளரைச் சார்ந்தவர்கள் சிறு தவறுகள் கூட தன் பக்கத்தில் நடக்காவண்ணம் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே ஆட்சியாளர்களைச் சார்ந்து வாழ்பவர்களின் மீதான முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அரியவை போற்றல் என்பது அரிய பிழைகள் தம்மை அடையா வண்ணடம் வாழ்தலாகும். அரியவை போற்றல் என்பது

1. மன்னர்க்குரிய மகளிரொடு வாழ எண்ணுதல்
2. மறைவாக அரும் பொருள்களைக் கவர்தல்
3. போர்க்களத்தில் கைவிட்டுவிட்டு ஓடுதல்

போன்றனவாகும் என்கிறார் திருக்குறள் குமரேச வெண்பா இயற்றிய ஜெக வீரபாண்டியனார். மேற்கண்ட மூன்று குற்றங்களும் தம்மை அடையாமல் மன்னரைச் சேர்ந்தொழுகுவார் வாழவேண்டும் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

அறிவுரை -3 செவிச் சொல், நகைப்பு இல்லாதிருத்தல்

ஆட்சியாளர்களிடத்தில் முக்கியமான செய்திகளைச் சொல்லும் நிலையில், மென்மையாகவும் நகைப்பின்றியும் செய்திகளைச் சொல்லுதல் வேண்டும். சிறு நகைப்பு தொனி கூட தகவலில் நம்பிக்கையின்மையை உண்டாக்கிவிடும். தன்னிலும் மேலானவர்களிடத்தில் காதோடு காதாக செய்தியை அறிவித்தால் அம்முறைமையும் சரியானதாக இருக்காது. அது மற்றவர்கள் தம் பார்வையில் ஆட்சியாளர் தானாக எதையும் செய்யத் தகுதி அற்றவர், மற்றவர்கள் சொல்லித்தான் அவர் நடக்கிறார், அல்லது ஏதோ ரகசியம் இருக்கிறது போன்ற கருத்துகளுக்கு இடமளித்துவிடும்.

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.(694)

என்ற குறளில் ஆட்சியாளர்களிடத்தில் அவரைச் சார்ந்தவர்கள் செய்திகைளைச் சொல்லும்போது மென்மையாகவும், வெளிப்படையாகவும், சிறு நகைப்பிற்குக் கூட இடம் தராமல் சொல்லவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

இதுமட்டும் அல்ல. அரசன் போன்ற பெரியோர் இருக்கும் அவையில் நடக்க வேண்டிய நடைமுறை பற்றி ஆசாரக் கோவை பின்வருமாறு அறிவிக்கின்றது.

‘‘உடுக்கை மிகவார் செவி சொறண்டார் கைமேல்
எடுத்து உரையார் பெண்டீர் மேனோக்கார் செவிச் சொல்லும்
கொள்ளார், பெரியாரகத்து”

என்று ஆசார கோவை குறிப்பிடுகிறது. அணிந்துள்ள ஆடையை இகவாது இருக்க வேண்டும். காதுகளைச் சொறியாமல் இருக்க வேண்டும். கைகளை அசைத்துப் பேசுதல் கூடாது. பெண்களை மோகம் கொள்ளப் பார்க்கக் கூடாது. செவியில் இரகசியமாகப் பேசக் கூடாது என்று ஆசாரக் கோவை அரசவையில் செய்யக் கூடாதன பற்றி அறிவிக்கின்றது.
மேலும்

‘‘நகையொடு கொட்டாவி, காறிப்பு தும்மல்
இவையும் பெரியார் முன் செய்யாரே”

என்று ஆசாரக் கோவை குறிப்பிடுகின்றது. பெரியோர்க்கு முன்பு சேர்ந்து நகைத்தல், கொட்டாவி விடுதல் காறித்துப்புதல், தும்முதல் போன்றனவற்றைச் செய்யாமல் காக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை குறிக்கிறது.

ஒரு மனிதனின் உடல் சார்ந்த இயக்கங்கள் கூட தன்னைவிட மேம்பட்டோர் இடத்தில் எரிச்சலை உண்டு பண்ணலாம் என்பதற்கு மேற்கண்ட செயல்கள் அனைத்தும் உதராணங்கள். இவற்றை எக்காலத்தும் தம்மைவிடப் பெரியாரிடத்தில் செய்யாமல் காப்பதே நலம் பயக்கும்.

அறிவுரை -4 செய்தி அறியும் ஆர்வம் இல்லாதிருத்தல்

ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நிலையில் அவர்களைப் பலரும் வந்து சந்திப்பார்கள். சந்தித்த ஒவ்வொருவர் பற்றியும் அவர் பேசிய ஒவ்வொரு செய்திகள் பற்றியும் வினவுதலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும். ஆட்சியாளர்களிடம் யார் என்ன பேசினார்கள், அவர்களிடம் ஆட்சியாளர் பேசியது யாது என்பனவற்றைத் தோண்டித் துருவிக் கேட்டல் கூடாது. ஆட்சியாளர்களே அந்தச் செய்திகளைச் சொல்லும் வரை காத்திருத்தல் வேண்டும். நிச்சயம் அவர் சொல்லித்தான் ஆகவேண்டும். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

தற்காலத்தில் கணவன் மனைவியிடத்தில் கூட இந்நடைமுறை பெரிதும் தேவைப்படுவதாக உள்ளது. குடும்பத்தின் தலைவன் செயல்பாடுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் மனைவிக்கு இருந்தாலும், உரிமை இருந்தாலும் கணவன் சொல்லும் வரை காத்திருப்பது கணவன் மனைவிக்குள் இன்னும் இணக்கமான சூழலை உருவாக்கும்.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.(695)

என்ற குறள் மேற்சொன்ன அறிவுரையைக் கொண்டதாகும்.


கருத்துகள் இல்லை: