சனி, அக்டோபர் 02, 2021

சிந்தாந்தச் செம்மணி முனைவர் பழ. முத்தப்பனாரின் வாழ்வும் பணிகளும்

 




செட்டிநாட்டின் சைவச் சிறப்பிற்கும், தமிழ் வளர்ச்சிக்கும், கல்விப் பெருக்கிற்கும் வழிகாட்டியாக, ஊக்க சக்தியாக விளங்கியவர் முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள். இவர் புதுவயலில் 1946 ஆம் ஆண்டில் பழனியப்பச் செட்டியாருக்கும், இலட்சுமி ஆச்சிக்கும் இளைய மகனாராகப் பிறந்தார்.

அடிப்படைக் கல்வியைப் புதுவயலில் உள்ள சரசுவதி வித்யாசாலை பள்ளியில் பயின்றார். அதனைத் தொடர்ந்து கண்டனூர் சிட்டாள் ஆச்சி பள்ளியில் பயின்றார். இதன்பின் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். இதன்பிறகும் இவரின் கல்வித்தேடல் இருந்துகொண்டே இருந்தது. சிவபுரி என்ற ஊரில் தங்கி அங்கேயே சிவத் தொண்டு புரிந்து கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல் பட்டத்தைப் பயின்றார். இதன்பிறகு மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணி கிடைத்தது. இதன் பிறகும் எம்.ஏ., பிஎச்.டி போன்ற பட்டங்களை அயராது கற்றுத் தன் அறிவுப் பெருக்கினை வளர்த்துக் கொண்டார்.

முனைவர் பட்டத்திற்காக அருணந்தி சிவாச்சாரியார் நூல்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் சைவ சித்தாந்த அறிவு இவருக்கு வாய்க்கப்பெற்றது. இத்துறையே தனது துறையாகக் கொண்டு அத்துறையில் வல்லமையும் சான்றாண்மையும் எடுத்துச் சொல்வதில் இனிமையும் கொண்டு விளங்கினார்.

மயிலம் கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில் மயிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழகத்தின் பகுதிகளிலும் மிகச் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராக விளங்கினார். இவரின் அறிவை வளவனூரில் கி.வா. ஜகந்நாதன் என்ற தமிழறிஞர் உணர்ந்து பட்டிமன்ற மாமணி என்ற பட்டத்தை வழங்கினார்.

மேலும் இவர் விழுப்புரத்தைத் தன் கல்வித் தலைநகராகக் கொண்டு நூற்றுக்கணக்கான தமிழாசிரியர்கள் பட்டக்கல்வி பெறத் துணைசெய்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழி தமிழாசிரியர்கள் பி.லிட் பட்டம் பெற்று தம் பணியில் உயர அவர் ஆற்றிய பணி இன்னமும் பல குடும்பங்களில் அவரின் புகழ் நிலைத்து நிற்கிறது.  ஆசிரியர்களுக்காக இவர் எளிமையான அளவில் இலக்கண இலக்கியங்களைக் குறிப்பேடுகளாகத் தயாரித்து வழங்கினார். தொல்காப்பியம், நன்னூல், புறப்பொருள் வெண்பா மாலை, தண்டியலங்காரம், ஒப்பிலக்கியம், இக்கால இலக்கியம், இடைக்காலஇலக்கியம் நம்பி அகப்பொருள் போன்ற பல பாடங்களுக்கு இவர் குறிப்பேடுகள் தயாரித்தார். இக்குறிப்பேடுகளை அக்காலத்தில் இவரின் துணைவியார் அழகம்மை தட்டச்சு செய்து தர சைக்ளோஸ்டைல் அமைப்பில் இவர்களே படி எடுத்து வழங்கினார். அதனோடு பாடமும் வார இ’றுதி நாட்களில் நடத்துவார். இதன்வழி தமிழ்க்கல்வி பெறுக இவரின் உழைப்பு பயன்பட்டது.

மயிலம் முருகனுக்கு ஜனவரி 26 ஆம் படிவிழா நடத்தப்படும். அதனை நடத்திவந்த பாலதுறவி இராமதாசருக்கு இவர் உதவிபுரிந்தார். தன் வீட்டில் பல அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கி தன் வீட்டை அன்னசத்திரமாக ஆக்கிய கொடையாளர் இவர். பாலதுறவி இராமதாசருக்கு மணிவிழாவைச் சிறப்பாக இவரும் இவரின் நண்பரும் வீரபத்திரனும் நடத்தினர். மேலை மங்கலம் என்ற ஊரில் இவ்விழா நடந்தது. அவ்வூரில் இன்னமும் பாலதுறவி இராமதாசர் மடம் நடைபெற்றுவருகிறது.

அருகிருந்த பாண்டிச்சேரி அன்பர்களுடனும் நகரத்தார்களுடனும் பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்கள் நட்பு பாராட்டினார். பாண்டிச்சேரியில் நகரத்தார் சங்கம் திறம்பட நடக்க இவரின் செயல்பாடுகள் உதவின. பாண்டிச்சேரியிலும் தமிழாசிரியர்கள் பட்டப்படிப்பு பெற இவர் உதவினார். அங்கும் ஒரு  மையம் செயல்பட்டது. இவ்வாறாக பதினெட்டு ஆண்டுகள் அதாவது ஒரு கன்னிப்பருவம் மயிலம் திருத்தலத்தில் இவரின் சைவத்தொண்டும் தமிழ்த்தொண்டும் நிகழ்ந்தன.

இதனைத்தொடர்ந்து பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்குத் துணைப் பேராசிரியர் பதவிக்கு இவர் விண்ணப்பித்தார். அப்போது இவரின் திறனை அறிந்த மூதறிஞர் வ.சுப. மாணி்க்கம் அவர்கள் நகரத்தார் இளைஞர் இவர் மேலைச் சிவபுரி கல்லூரி முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று தேர்ந்து அரசின் வழி தனி ஆணை பெற்று மேலைச்சிவபுரிக்கு அழைத்து வந்து முதல்வர் இருக்கையில் அமர வைத்தார். இவர் அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் உதவி  புரிந்தார். உடனுக்குடன் நல்லதைச் செய்து அக்கல்லூரியை பல மாணவர்கள் படிக்கும் நிலைக்கு உயர்த்தினார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் படித்த ஒருவரே அங்கு முதல்வராகப் பதவி ஏற்று அக்கல்லூரியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றது இவருக்கும் இக்கல்லூரிக்கும் கிடைத்த பொற்காலம் ஆகும்.

பதினாறு ஆண்டுகளில் அக்கல்லூரியை முனைவர் பட்ட ஆய்வு மையமாக இவர் வளர்த்தார். மேலும் தமிழோடு பிற பட்டங்களையும் சுயநிதிப்பிரிவாகத் தொடங்கி வளர்த்தவர் இவரே. கல்லூரிக்கு இருந்த இடங்களைக் கண்டறிந்து கல்லூரியில் இருந்துச் சற்று தூரம் இருந்த இடத்தில் நிலையான அழகான கட்டிடங்களைக் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து கட்டினார். ஆண்டுதோறும் ஆண்டுவிழா, பட்டமளிப்பு விழா பெருங்கோலாகலத்துடன் நடந்திட இவர் வழிவகுத்தார்.  பல்லாயிரம் மாணவர்கள் இவரிடம் பயின்ற முத்திரை கொண்டுத் தற்போது பெரும் பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், நல்லாசிரியர்களாகவும் விளங்கிவருகின்றனர். இவரின் காலத்தில் படித்த அனைத்து மாணவர்களும் தமிழ்ப் பணியாற்றும் நற்பேறும் பெற்றுள்ளனர்.

கல்லூரியின் முத்துவிழாவினைச் சிறப்பாக நடத்தியவரும் இவரே. பழைய மாணவர் கழகத்தை உருவாக்கி அதன் வழி பல முன்னேற்றங்களைக் கண்டவரும் இவரே. இப்பணிகளுடன் பழ. முத்தப்பன் அவர்கள் நூல் எழுதும் பணிகளையும் செய்தார்.

இவர் அவ்வப்போது பல நூல்களை எழுதினார். பல நூல்களுக்கு உரை எழுதினார். திருமுறைகளில் அகக்கோட்பாடு, சிந்து இலக்கியம் போன்ற நூல்கள் மயிலம் மண்ணில் அச்சேறியவை. இவரின் முனைவர் பட்ட நெறியாளரான பெரும்புலவர் ச.வே. சுப்பிரமணியனாரிடம் இவர் பேரன்பு கொண்டவர். அவரின் வழி இவரின் பல நூல்கள் வெளிவந்தன. அருணந்தி சிவாச்சாரியாரின் அந்தாதி இலக்கியங்கள், அருணந்தி சிவாச்சாரியர் நூல்கள் ஓர் ஆய்வு ஆகிய நூல்கள் அவரின் வழி வெளிப்பட்டன. இதில் பின்னுள்ள நூல் திருப்பதி தேவஸ்தான நிதி வழி வெளியிடப்பெற்றது.

முத்துவிழா கண்ட முதல்வர் முத்தப்பன் தன் பணி நிறைவைச் செம்மையுடன் முடித்துக்கொண்டுத் திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரிக்கு முதல்வாராக ஆனார்.தன் இருக்கையை திருச்சிராப்பள்ளிக்கு மாற்றிக்கொண்டு அனுதினமும் அக்கல்லூரியின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். குறைந்த நிதிச் செலவில் அக்கல்லூரியை வளர்த்த பெருமை பேராசிரியருக்கு உண்டு. இக்கல்வி நிறுவனத்தைப் பத்தாண்டுகள் பேணிக் காத்தார். அதன்பின் இல்லத்தில் இருந்தே தமிழ்ப் பணிகள் தொடங்கின.

திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த வகுப்புகளுக்கு இவர் ஆசிரியராக ஆனார். விழுப்புரத்தில் சனி ஞாயிறுகளில் தமிழ்ப்பணி செய்த அதே நிலை இப்போது இவருக்குக் கிடைத்தது. சனி ஞாயிறுகளில் சேலம், ஓசூர், சிதம்பரம்,நெய்வேலி, லால்குடி, விழுப்புரம், மயிலாடுதுறை போன்ற மையங்களுக்கு இவர் சைவ சித்தாந்த ஆசிரியராக விளங்கினார். மேலும் சிங்கப்பூர் ,அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு இவரின் சொற்பொழிவுகள் இணையவழிச் சென்றன. சைவசித்தாந்தத்தில் துறைபோகிய மிகச் சிறந்த தத்துவவாதியாக இவர் விளங்கினார். சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் அனைத்துக்கும் ஒரே தொகுப்பாக இவர் எழுதிய உரை இன்னமும் பல நாட்டு அன்பர்களில் நெஞ்சத்தில் இவரை குடியிருக்க வைத்துள்ளன.

ஞானாமிர்தம், சிவஞான சித்தியார் பரபக்கம், திருக்கோவையார், அழகர் கிள்ளைவிடு தூது, காந்தி பிள்ளைத்தமிழ், கல்லாடம், உதயண குமார காவியம், நீதி நெறிவிளக்கம், திருத்தொண்டர் திருவந்தாதி, திருவிளையாடற்புராணம் (3 தொகுதிகள்), சேக்கிழார் பிள்ளைத்தமிழ், கந்தபுராணம் (4 தொகுதிகள்) போன்ற இவரின் உரையால் சிறந்தன. இவர் மேலும் பெரிய புராணம், ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் உரை வரையும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார்.அவை ஓரளவில் முடியும் தருவாயில் உள்ளன.

இவை தவிர பல அறக்கட்டளை சொற்பொழிவுகளை பேராசிரியர் நிகழ்த்தியுள்ளார். காரைக்குடி கம்பன் கழகத்தின் வாயிலாக இவர் பேசிய பேச்சு கம்பனில் நான்மறை என்ற நூலாக வெளிவந்தது. கோவை இலக்கியம் இராமசாமி தமிழ்க் கல்லூரியில் அறக்கட்டளைப் பொழிவாக அமைந்து நூலாகியது. இவ்வாறு நாளும் நாளும் தமிழ்ப்பணி ஆற்றிவந்தவராக பேராசிரியர் பழ. முத்தப்பன் விளங்கினார்.

இவர் குன்றக்குடி அடிகளார் அவர்களிடம் நெருங்கிப் பழகியவர். அவரால் தமிழாகரர் என்று சேக்கிழாரால் சம்பந்தர் பெருமான் பெற்ற பட்டத்தை இவர் பெற்றவர். மேலும் இவர் சிந்தாந்தச் செம்மணி, சிவஞானச் செம்மல், மேகலை மாமணி, சேக்கிழார் விருது, தமிழ் மொழிச் செம்மல், சிவஞானக் கலாநிதி, கற்பனைக்களஞ்சிய நம்பி, தொல்காப்பியச் செம்மல், சிவநெறிச்செம்மல் சிந்தாந்தக் கலைச்செல்வர் போன்ற பட்டங்களை ஏற்றுள்ளார்.

தான் படித்த கல்லூரியில் முதல்வர் பணியாற்றிய பெருமை உடைய பேராசிரியர் பழ. முத்தப்பன் தான் பயின்ற ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பள்ளியின் செயலரா எட்டாண்டுகள் விளங்கினார். சரசுவதி சங்கம் என்ற நூற்றாண்டு காண உள்ள அமைப்பின் செயலராக விளங்கி வந்த இவர் அவ்வமைப்பின் வழியாக நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டார். ஸ்ரீ சரசுவதி வித்தியாசாலை கல்வி நிறுவனங்கள் அழகான நிலையாக கட்டடங்கள் பெற தன் நிதியை வழங்கியும், புரவலர்கள் பலர்தம் நிதிகளைப் பெற்றும் இவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் நிலைத்து நிற்பவை. எட்டு ஆண்டுகளில் எவரும் எட்டமுடியாத சாதனை இதுவாகும். இக்கல்வி நிறுவனங்கள் கல்வி வளர்ச்சி பெறவும் சிறப்பு இயங்கவும் நாளும் சிந்தனை செய்தவர் இவர். இக்கல்வி நிறுவனத்தில் நூற்றாண்டு விழா காண பெரும் ஆவல் கொண்டிருந்த நேரத்தில் இவர் இறைநீழல் அடையவேண்டி வந்தது பெருத்த இழப்பாகும். இக்கல்வி நிறுவனத்தில் அருள்மிகு சரசுவதி கோயிலை நிர்மானித்து நாளும் கல்விநலம் சிறக்கப் பாடுபட்டவர் இவர் ஆவார்.

உறையூர் திருவாதவூரர் திருவாசக முற்றோதல் குழுவின் தலைவராக விளங்கிய இவர் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் திருவாசக முற்றோதலை நடத்தி உள்ளார்.

          தன் தாயை வணங்கி இவர் தொடங்கும்

உதிரத்தின் உறவோடு உலகத்தில் எனையீன்று உறவாட விட்டதாயே

முதிராத மொழியாலே முத்தமிழை நான் பேச முன்னின்று காப்பாய் நீயே

உள்ளத்தில் உள்ஊறும் அன்போடு எனை வாழ்த்தி உயரத்தில் ஏற்றுதாயே

நற்றாயே இலக்குமியே எங்கேனும் தவறென்றால் நீபொறுப்பாய் இன்றுதாயே

என்ற பாடல் பலரது உள்ளங்களில் நீங்காது நிலை பெற்று இருக்கும். பல மாணவர்கள் அவர்களை அறியாமலேயே இந்தப்பாடலை மனனம் செய்து தற்போது தங்களின் பேச்சினில் பேசி வருகிறார்கள்.

செம்மொழி மத்திய நிறுவனம் சார்பில் இவர் செய்த ஆய்வுத்திட்டம் சங்க இலக்கியங்களில் சைவ சமயக் கூறுகள் என்பது சைவ சமயத்தின் ஆழத்தை, பழமையை உலகுக்குக் காட்டியது.

          காலை எழுந்தவுடன் படிப்பு, அதன்பின் அதனை எழுத்தில் வடிப்பு,

          முற்பகலில் திருவாசக முற்றோதல்,

          பிற்பகலில் இலக்கிய உரையாடல்

          வார இறுதியில் சைவ சித்தாந்த சாத்திரப் பேச்சு

என்று வாழ்க்கையைப் பழக்கப்படுத்திக் கொண்டவர் பேராசிரியர் பழ. முத்தப்பன். தன் எழுபத்தொன்றாம் அகவை நிறைவைச் சாக்கோட்டையில் சைவப் பெருவிழாவாக நிகழ்த்தியவர். தன் 80 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட பல்வேறு திட்டங்கள் வகுத்து இருந்தார்.

தன்னுடைய இல்லக்கடமைகளிலும் சிறந்து விளங்கினார். தன் குடும்பத்தார் வழிவழியாகச் செய்துவந்து நடுவில் மறைந்துபோன பல பணிகளை அவர் மீட்டு எடுத்தார். புதுவயல் மேலப்பெருமாள் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா, சாக்கோட்டையில் வேதபாடசாலை அமைந்த இடத்தில் தற்போது அறச்சாலை, தன் முன்னோர்கள் வைத்திருந்த செங்கணாத்தி கிராமத்தில் பிள்ளையார் கோயில் குடமுழுக்கு, காமாட்சியம்மன் கோயில் திருவிழா போன்றனவெல்லாம் அவரின் மீட்டெடுத்த விழாக்கள் ஆகும்.

இவ்வாறு தக்க இல்லறத்தானாகவும், நல்லறத்தானாகவும், சைவ சித்தாந்தியாகவும், உரையாசிரியராகவும், நூலாசிரியராகவும், கவிஞராகவும், ஆசிரியராகவும், முதல்வராகவும், அமைப்புகளின் தலைவர், செயலராகவும், வழிகாட்டியாகவும், நெறியாளராகவும், கொடையாளராகவும், பேச்சாளராகவும் பன்முக ஆற்றல் பெற்று விளங்கியவர் முனைவர் பழ. முத்தப்பன். அவர் 19-9-2021 அன்று இறைநீழல் அடைந்தார் என்ற செய்தி சைவ உலகிற்கும், தமிழகத்திற்கும் பெருத்த இழப்பு என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: