திங்கள், மே 21, 2018

அறிவை விடச் சிறந்தது அறம்



siragu friends2
மனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக்க வழி சொல்லுகிறது.  இந்தப் பகுத்தறிவினைக் கொண்டு மனிதன்  ஆக்கங்களையும் உருவாக்கலாம். அழிவுகளையும் உருவாக்கலாம்.
ஆக்க அறிவினை விட அழிவு அறிவினால் தான் மனித உலகம்  பாழ்பட்டு வருகிறது. அணுவைப் பிளக்கலாம் என்ற அறிவு மெச்சத்தக்கது. ஆனால் அதனைக் கொண்டு அணுகுண்டு தயாரித்து மனித குலத்தையே அழிக்கலாம் என்பது எவ்வளவு நாசவேலை. எனவே அறிவு என்பது அற்றம் காக்கும் கருவியாக அமையவேண்டும். அற்றம் தரும் கருவியாக அமைந்துவிடக் கூடாது.
அறிவு நல்ல நிலையில் செயல்பட வேண்டும். அதற்கு என்ன வழி. நல்ல அறச்சிந்தனைகளைக் கண்டும், கேட்டும், ரசித்தும், விவாதித்தும் அறிவிற்கு அறத்தை உறுதுணையாக ஆக்க வேண்டும். அறமற்ற அறிவு பாழ்.
இன்னா செய்யாமை என்ற ஓர் அறம் இன்றைய மனித குலத்திற்குத் தேவையான அறமேம்பாட்டுச் சிந்தனையாகும். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை என்பதே இன்னா செய்யாமை. ‘‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே”, ”வாழு, வாழவிடு” என்று மக்கள் மொழிகளில் இதனை எளிதாகச் சொல்லிவிடலாம்.
அறிவின் வழி அறம் நிற்பதை விட அறத்தின் வழியில் அறிவு செயல்பட வேண்டும். இதனையே வள்ளுவர் விரும்புகிறார். அதிகாரிகள், மேலாளர்கள், மேலாண் பதவியில் இருப்போர்க்கு இன்னா செய்யாமை இனிய அதிகாரம். பழிக்குப் பழி வாங்கும் எண்ணம்  உடையவர்கள் இந்த அதிகாரத்தைப் படித்துவிட்டால் பழி இன்றி இனியவழி சேருவார்கள்.
ஒருவர் குற்றம் அற்றவர் என்று சொல்லப்பட வேண்டுமானால் பிறர்க்கு இன்னாதனவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும். இக்கருத்து சரியே. ஆனால் இன்னாதவை எவை என்று எப்படி அறிவது.
தனக்கு எதெல்லாம் நடக்கக் கூடாது என்ற நினைக்கிறோமோ அதனை எல்லாம் மற்றவர்களுக்கு நடந்துவிடக் கூடாது அல்லது நடத்திக் காட்டிவிடக் கூடாது என்பதை காட்டும் அறமே இன்னா செய்யாமை என்ற அறமாகும்.  இதனைத் தெளிவுபட
            ‘‘இன்னா எனத் தான் உணர்ந்தவை துன்னாமை
            வேண்டும் பிறன்கண் செயல்” (316)
என்னும் குறளில் வள்ளுவர் விளக்குகிறார்.
இன்னாதன எனத் தான் உணர்ந்தனவற்றை மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதே இன்னா செய்யாமை என்ற அறம் என்று வரையறுக்கிறார் வள்ளுவர்.
ஒருவன் மற்றவர்க்கு இன்னாதன செய்கிறான் என்றால் அது திட்டமிட்டுச் செய்யப்படுகிற ஒன்று. முதலில் இன்னா செய்யவேண்டும் என்ற கருத்து அவன் மனதில் இடம் பெறுகிறது. அதனை அவன் தக்க முறையில் திட்டமிட்டுச் செயலாற்றிட வேண்டும். அதன்வழி மற்றவரைத் துன்பப்படுத்திட வேண்டம். அதன்பின் அவன் பிறர் துன்பம் கண்டு மகிழவேண்டும். இவ்வாறு கருத்து, செயல் திட்டம் போன்றனவற்றை உருவாக்கி ஒருவருக்குத் தீங்கு செய்ய முற்படுகிறார்.  இவ்வாறு திட்டம் போட்டவரின் செயலால் துன்பம் பெற்றவர்  அத்தீங்கை ஏற்படுத்தியவருக்கும் துன்பம் தராமல் இருப்பதே இன்னா செய்யாமை என்ற அறத்தின் உயர்வாகின்றது. தன்  துன்பத்தை மற்றவரிடம் செலுத்திவிடாமல் காப்பவரே இன்னா செய்யாமை அறத்தின் வேராக விளங்க முடியும்.
அவர் திட்டமிட்டு எனக்குத் தீங்கு செய்தார் என்று எண்ணும் எண்ணமே ஒருவனை இன்னாதனவற்றைச் செய்துவிடும். ஆகவே துன்பத்தையும், துன்பம் தந்தவரையும் மனதால்  எந்த காலத்திலும் எந்த இடத்திலும் நினைக்காமல் இருந்தால் மட்டுமே இன்னா செய்யாமை என்ற அறத்தைக் காக்க முடியும்.
‘‘எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை” (317)
அப்படியானால் துன்பம் வந்த நிலையை மறந்து  வாழ்பவரின் வாழ்வே இனிமை உடையது என்பது வள்ளுவர் காட்டும் நல்வழியாகின்றது.
தன்னை வருத்தியவர்களுக்கு இன்னாதனவற்றை ஒருவன் செய்தான் என்றால் அதனால் அவன் பல கொடுமைகளை அனுபவிக்க நேரிடும். நமக்கு இன்னா செய்தவர் நாண நல்லனவற்றைச் செய்தலே இவ்வறத்தின் பாற்படும்.
இவ்வாறு இன்னா செய்யாமல் இருக்கச் சொல்லும் வள்ளுவர் இன்னாதவற்றைத் திட்டமிட்டுச் செய்து துன்பம் தந்து மகிழும் உள்ளமுடையோரைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லையா என்றால்,  அதற்கும் ஒரு குறள் பதில் சொல்கிறது.
           ‘‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
            பிற்பகல் தாமே வரும்” (319)
பிறருக்குத் திட்டம் போட்டுத் தீமை செய்கிறவன் செய்து கொண்டே இருக்கிறான் என்றால் அவனுக்குத் திட்டமிடாமலே தானாகவே இன்னாதன  வந்துசேரும். முற்பகலில் திட்டம் போட்டால் பிற்பகலில் திட்டம் போடாமலே தீமை ஏற்படுத்தியவனுக்குத் தீமை வந்துசேரும் என்ற வள்ளுவரின் கோட்பாடு தீமை செய்பவர்களைக் கண்டால் வள்ளுவருக்குப் பிடிக்காது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
மனிதர்களுக்கு இன்னாதது நோய்கள் தான். நோய் என்பது உடலுக்கு வேறான ஒன்றில் இருந்து வருவது. எனவே திட்டமிட்டுச் செய்யப்படும் துன்பமும் நோய் போன்றதே என்கிறார் வள்ளுவர். பிறருக்கு நோய் தருபவருக்கும் அவர் அறியாமலே அந்நோய் வந்து சேர்ந்துவிடுகிறது. பிறரை வருத்தும் நோய் செய்யாதவர்கள் தானும் நோய்வாய்ப்படாமல் காக்கப்படுவர். எனவே இனிமையைச் செய்க. இன்னாதவற்றைச் செய்யாதிருங்கள் என்கிறார் வள்ளுவர். இவ்வதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறிக்கத்தக்க குறள்.
            ‘‘அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
            தன்நோய்போல் போற்றாக் கடை” (315)
என்ற குறளில் அறிவை விட சிறந்தது இன்னா செய்யாமை அறம் என்கிறார் வள்ளுவர். அறிவு ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். ஆனால் இன்னா செய்யாமை என்கிற அறம் ஆக்கம் மட்டுமே தரும். அதனைப் பின்பற்றுபவர்க்கு அழிவே தராது.
அறிவு இருந்தும்  என்ன பயம்? பிறர் துயரத்தைத் தன் துயரமாகக் கருதி  அதனை நீக்கப் பாடுபடாத அறிவினால் என்ன பயன்? அறிவாளிகளால் பயனில்லை. இந்த உலகிற்கு அறச் சிந்தனையாளர்களால் மட்டுமே பயன்! அறச்சிந்தனையுடன் கூடிய அறிவே பயன்மிக்கது என்ற அறநெறிமேம்பாட்டை இந்தக் குறளின் வழி காட்டுகிறார் வள்ளுவர். இதனை அறிந்து செயல்படும் நிலையில் உலகம் இனியதாய்  அமையும்.


கருத்துகள் இல்லை: