வியாழன், ஜனவரி 26, 2017

இணையமும் நவீன இலக்கியப் போக்குகளும்

     தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது.
      சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும்  வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் காரணமாக இணையாத தமிழ்உள்ளங்கள் இணைந்து கரம் கோக்கும் புதுஉலகம் பிறந்துள்ளது.
சவாலே சமாளி
      இருப்பினும் இணையத்தின் வளர்ச்சி ஒரு மூடுபொருளாகவே இருக்கிறது. இதற்கான காரணம் யாதென ஆராய வேண்டும். முக்கியமாக இணைய எழுத்தாளர்கள் தங்களை, தங்களின் தகவல்களை வெளியிடாமை அல்லது வெளிப்படுத்தாமை என்பது முக்கியமான காரணமாக அமைகின்றது. தம் எழுத்துகளை இணைய எழுத்தாளர்கள் கொண்டாடாமையும் ஒரு காரணம். நூல் வெளியீடு, பாராட்டுவிழா, விருதளிப்பு எதுவும் இணைய எழுத்திற்கு இல்லை என்பது மிக முக்கியமான காரணம். யாதாவது ஓர் அமைப்பு இணைய எழுத்துகளைப் பரிசளித்துப் பாராட்டி வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் இக்குறை நீங்கும். இணைய எழுத்துக்கான தனித்தன்மை எதுவும் இல்லை என்பது இன்னுமொரு குறை. இணையத்தி்ல் எழுதி அச்சாக்குவது அல்லது அச்சாக்கி இணைய எழுத்தாக்குவது என்ற நிலையில் இணைய எழுத்திற்கான தனித்தன்மை இழக்கப்பெறுகிறது. இற்றைப் படுத்தப்படாமை என்பதும் மற்றொரு குறை. வலைப்பூ, முகநூல். இணைய இதழ், என்று பல பரிணாமங்களிலும் இணைய எழுத்தாளர்கள் கால்பதிக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றை இற்றைப்படுத்துதல் மற்றதை விடுதல் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இணைய எழுத்து என்பது ஒற்றைத் தன்மை உடையது அன்று. உடனுக்குடன் பதில் அல்லது விமர்சனம் அல்லது தாக்குதல் பெறத்தக்கது. இதன் காரணாக நேரடித் தாக்குதல் நேர வாய்ப்புண்டு. இதனைத் தாண்டி இணைய இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும். உருப்பட நூல்கள், இணைய நூல்கள், அகராதிகள் போன்றவற்றை இணையம் அளிக்க வேண்டும். பழமையைச் சேகரிக்க வேண்டும். புதுமையைப் புகுத்த வேண்டும். நிகழ்காலத்திலும் நீந்த வேண்டும். இந்த வித்தைகளைக் கற்றவர்கள் இணைய எழுத்தில் நீந்த இயலும். இணையம் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. எழுத்து என்பது மனம் சார்ந்தது. மனம் இருப்பவருக்குத் தொழில்நுட்பம் காலை வாருகிறது. நுட்பம் அறிந்தவருக்கு எழுத்துச் செம்மை தவிக்கிறது. ’நீச்சல்காரன்’ தன் தமிழி்ல் தவறுகளைக் குறைக்கவே சொல்திருத்தியை உருவாக்கிக்கொண்டதாக ஒரு பேட்டியில் குறிக்கிறார். நுட்பம் தெரியாதவர் எத்தனை மாதம் யாரிடம் பயிற்சி பெறுவது?
      மேலும் பெரிய பெரிய அச்சு ஊடக வெளிப்பாடுகள் இணையத்திலும் தனக்கென தனித்த நிலையில் இடம்பிடித்து வைத்திருக்கின்றன.  அச்சு ஊடக எழுத்தாளுமைகளும் இணையத்தில் நிலைக்கப் பயிற்சி பெற்றுவிட்டன. கிடைத்த பெருவெளியையும் வாடகைக்கு விட்டுவிட்டு இணைய உலகம் இழந்தது அதிகமாகத் தெரிகிறது.
      இணையத்தில் எழுத்தாளர்களே வாசகர்கள். வாசகர்களே எழுத்தாளர்கள். எழுத்தின் தகுதியும் வாசகத் தன்மையின் தகுதியும் மிஞ்சாமல் சென்று கொண்டிருப்பது மற்றொரு தடை. எழுத்தின் வாசனை கூட வேண்டும். வாசக மனப்பாங்கு ஒழிய வேண்டும்.
      இவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையில் நல்லதமிழ் வளர்க்க நான்கு பேர்கள் இல்லை…இல்லை நாலாயிரம் பேர்கள் இணையப் பெருவெளியில், பொதுவெளியில் உலா வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மதிப்பிட அல்லது ஒருங்கிணைக்க இந்தக் கட்டுரையாளனுக்கு இன்னும் தொடர்ந்து இயங்கும் வாய்ப்பு வரவேண்டும்.
இணைய எழுத்தின் தொகை
      வலைப்பதிவர் சந்திப்புகள் அபூர்வமாக எங்கேனும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு குறிக்கத்தக்க ஒரு முயற்சி. இதில் மொத்தம் 331 வலைப்பதிவர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றது. இணைய எழுத்தாளர்கள் முன்னூறு பேர் கொண்ட தமிழ்க்குழுமத்தை அது கொண்டு கூட்டுகிறது.
      மின்தமிழ் மடல்குழுமம் ஏறக்குறைய ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ஒருங்கிணைக்கிறது. இயக்கங்களை ஒருங்கு கூட்டுகிறது.
      தமிழ்மணம். திரட்டி போன்ற வலைப்பூ அரங்கங்கள் தினம் தினம் பலநூறு இடுகைகளை ஒன்று சேர்க்கின்றன.
      விக்கிப்பீடியா ஏறக்குறயை 750 தமிழ் படைப்பாளிகளை அடையாளப்படுத்துகிறது.
      இவற்றின் வழியாக இணையத்தில் எழுதுபவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான நிலைக்களன்கள் கிடைத்துள்ளன.
இணையக் களங்கள்
      இணையக் களங்கள் பல திறத்தினவாகும். வலைப்பூக்கள் (பிளாகர்), இணைய இதழ்கள் (இன்டெர்நெட் மேகசீன்ஸ்), இணையக் குழுமங்கள் (குருப்ஸ்), மின்மடல் குழுக்கள் (இ மெயில் குருப்ஸ்), முகநூல் பதிவுகள். (பேஸ்புக்), கட்செவி (வாட்ஸ்அப் குழுக்கள்), டிவிட்டர் போன்ற பல இணையக் களங்கள் தற்போது விரிந்து வருகின்றன. ஒன்றுக்குள் ஒன்று இணையும் தொடுப்புகள் இவை அனைத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்துவிடுகின்றன.
      ஓர் எடுத்துக்காட்டிற்கு வரலாறு.காம் என்ற இணைய இதழை எடுத்துக்கொள்வோம். மிக முக்கியமான அச்சு ஊடகத்தினால் கொள்ளை போகாத பழைய தமிழகத்தின் நினைவுச் சுவடுகளைப் பதிவாக்கி ஆராயும் இதழ்தளம் இதுவாகும். வரலாற்று ஆய்வறிஞர் இராசமாணிக்கனார் வழியில் அவரின் புதல்வர் திரு கலைக்கோவன் அவர்களின் சீரிய வழிகாட்டலில் கமலக்கண்ணன் போன்றோரின்  இணைய உதவியுடன் இயங்கும் இதழ்தளம் இதுவாகும். நேரில் சென்று களஆய்வு செய்து உண்மையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த ஆவணப் பெட்டகம் இதுவாகும்.
      2004ஆம் ஆண்டுவாக்கில் இணையப் பிரவேசம் கண்ட இத்தளம் தனக்கென பல தொடுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. இதழாக்கம் மிக முக்கியமான மையப்பணி என்றாலும் பழைய இதழ்களைச் சேகரித்தல், காணொளிக் காட்சிகளை இணைத்தல், நிகழ்வுகளைப் பதிதல், முகநூல் தொடுப்பு, ஆய்வாளர்சார் தனித் தொடுப்புகள் என்று பல்வேறு இணைய இணைப்புகளை இதனுள் கொண்டுவந்து பழந்தமிழர் பண்பாட்டிற்கு வலிமை சேர்க்கப்படுகிறது. இதனுள் வரலாற்று அறிஞர்கள் கலைக்கோவன், நளினி, குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற ஆய்வறிஞர்களும், இளம் ஆய்வாளர்கள் பலரும் எழுதி வருகின்றனர்.  ஆனால் இதற்கான அங்கீகாரம், மக்கள் கவனிப்பு என்பது எவ்வளவு விழுக்காடு என்று ஆய்ந்தால் அதன் அளவு பெரும்பாலும் ஐம்பது விழுக்காட்டை எட்டாது. பணி செய்பவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். கவனியாதவர்கள் கவனியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
    தமிழக இணைய இதழ்களான திண்ணை, முத்துக்கமலம், வல்லமை போன்றன தமக்கான பணிகளைச் செய்துகொண்டே இருக்கின்றன. அதற்கான வாசகர்கள் எவ்வளவு என்பது எண்ணிக்கை அளவில் குறைவே என்பதில் வருத்தம் எழத்தான் செய்கிறது.
 பதிவுகள், சொல்வனம், சிறகு, தங்கமீன், தடாகம், வல்லினம், வார்ப்பு போன்ற அயல்நாடுசார் இணைய இதழ்கள் அயலகத் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்கின்றன. இருப்பினும் இந்த இதழ் தயாரிப்பு, இணையச் செலவு இவற்றிற்கு உதவும் உயர்ந்த உள்ளங்கள் எங்கும் இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ’விலையில்லா’ (தமிழகத்தின் நடையில் இலவசம் என்பதை விலையில்லா என்றே குறிக்கப்பெற வேண்டும்) இதழ்களின் விலைமதிப்பில்லா சேவை இதழாசிரியர்களின் நேரத்தை, பணத்தை, மூளையை எடுத்துக்கொள்கின்றன. கிடைத்தது என்ன என்பதற்கான பதில் எதுவும் இல்லை. விலையில்லாமல் இவற்றை விலைக்குக் கொண்டுவந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஆனால் அச்சுஊடகப் பேரரசுகளான குமுதம், ஆனந்தவிகடன் ஆகியனவற்றை இணையத்தில் விலையில்லாமல் வாசிக்க இயலாது. வாழ்க தமிழ்ச்சமூகம்!
இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளைப் பெரும்பாலும் இரண்டு வகையாகப் பகுத்துக்கொள்கின்றனர். ஒன்று விமர்சனப்படுத்துவது. மற்றொன்று சொந்தப்படைப்பு. விமர்சனப்படுத்துவது என்பதில் பார்த்த படம், படித்த புத்தகம், அரசியல் நிகழ்வுப் பகடி போன்றன அமைகின்றன. இவையே இற்றைக்கால இணையக் களன்களில் அதிகம். சொந்தமாக எழுதுதல் என்பது படைப்புலகும் சார்ந்தும் அமைகிறது. திறனாய்வு சார்ந்தும் அமைகிறது. இப்பகுதி சற்று பின்தங்கியே உள்ளது.
      இந்த இன்னல்களையும் கடந்து இணையத் தமிழ் உயிர்வாழ்கிறது. அதன் ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதிவேகம் அதைவிட முக்கியமானது.
இணையத்தில் பொதுவான எழுத்து
      இணையத்தில் பொதுவான எழுத்தின் தன்மையை அறிந்து கொண்டபின்னே அதன் நவீனத்துவத்தை அறிந்துகொள்ள இயலும். தமிழ் இணையத்தின் முக்கியப் புள்ளிகள் பலர். இக்கட்டுரையாளர் அறிந்த சிலரை இங்கு அறிமுகம் செய்வது இணையம் தாண்டிய வெளியுலகிற்குப் புதிதாக இருக்கலாம்.
அறிவியல் தமிழ்
      கனடாவில் வாழ்ந்து வரும் மதுரை திருமங்கலத்துக்காரரான ஜெயபாரதன் அவர்கள் அணுசக்தி விஞ்ஞானி ஆவார். எண்பதை நெருங்கும் வயதுடைய அவர் அறிவியல் பணிகளை செய்துகொண்டே தமிழில் அறிவியல் செய்திகளைத் தரும் நிலையில் தன் படைப்பாக்கப் பணிகளை இணையத்தின் வழியாகச் செய்து வருகிறார்.  நெஞ்சின் அலைகள் என்ற இவரின் வலைப்பூ குறிக்கத்தக்க அறிவியல் தமிழ்ப்பணியைச் செய்து வருகிறது. திண்ணை, பதிவுகள் ஆகியவற்றில் இவருக்கென்று தனித்த இடம் உண்டு. இவருக்கென்று தனித்த வாசகர்கள் உண்டு.
பதிவுகள் இணைய இதழ்
      2000ஆம் ஆண்டு முதல் கனடாவில் இருந்து வெளிவரும் பதிவுகள் இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் குறிக்கத்தக்க ஒரு படைப்பாளி. நாவல்கள், கதைகள் போன்றவற்றை எழுதுவதுடன், சிறந்த கட்டுரைகளையும் இவர் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் இணைய உலகில் பதிவுகள் இதழில் கிடைக்கின்றன.
தமிழ் மரபு அறக்கட்டளை
      டி.எச்.எப். என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் தமிழ்மரபு அறக்கட்டளை பல்வேறு தமிழாக்கப்பணிகளைச் செய்துவருகிறது. குறிப்பாக இதன் நிறுவனர் மலேசியா கண்ணன் அவர்கள் வைணவ இலக்கிய ஈடுபாடு மிகுந்தவர். இவரின் ஆழ்வார்க்கடியான் மிகச்சிறந்த வைணவ இலக்கிய வலைப்பூவாகும். தமிழ்மரபு அறக்கட்டளையின் வளமார் பணிகளுக்கு இவர் மூலகாரணம்.
      திருமதி சுபா (சுபாஷிணி) அவர்கள் ஜெர்மனியில் இருந்து தமிழகம் வந்து பல தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடி மின்தமி்ழ் வளர்ப்பவர். இவர் பல வலைப்பூக்களை வைத்துள்ளார். சுபாஸ்டிராவல் வலைப்பூ இவரின் பயணங்களைப் பதிவு செய்வது. இதுபோல் நூல் விமர்சனங்களுக்கு ஒரு வலைப்பூ, உலகப்பண்பாடு சார்ந்து ஒரு வலைப்பூ போன்றனவற்றை இவர் வைத்துக்கொண்டுள்ளார்.
      தமிழ் மரபு அறக்கட்டளை,  சுவடி மின்னாக்கம், நூல் மின்னாக்கம், மரபுக் காப்பகம் போன்ற பல பணிகளைச் செய்துவருகிறது. பிரித்தானிய நூலகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் ஒத்திசைவினைப் பெற்றுள்ளது.
      இதன் வழியாகத் தமிழ்மரபு அறக்கட்டளை குறிக்கத்தக்க வளமார் பணிகளைச் செய்து வருகிறது என்பது பரவலாக்கப் பெறவேண்டியது.
தமிழக இணைய எழுத்தாளர்கள்
      தமிழகம் சார்ந்த வலைப்பதிவர்கள் பலர் எண்ணத்தக்கவர்கள். திண்டுக்கல் தனபாலன், தேவகோட்டை கில்லர்ஜி, புதுக்கோட்டை முத்துநிலவன், தஞ்சை ஜம்புலிங்கம், ஈரோடு கதிர், ஆதிமூலகிருஷ்ணன், செல்வேந்திரன், கார்க்கி, பட்டர்ஃப்ளை சூர்யா, அப்துல்லா, வடகரை வேலன், சஞ்சய் காந்தி, வெயிலான், நாடோடி இலக்கியன், மோகன் குமார், முரளிக்குமார் பத்மநாபன், ஜெட்லி, ஜெய், ஹாலிவுட் பாலா, தராசு இவர்களுடன் கைகோக்கும் பெண் பதிவர்கள் தேனம்மை லக்ஷ்மணன், சும்மாவின் அம்மா, தமிழ்நதி, ரம்யா, வித்யா, லாவண்யா, கலகலப்ரியா, ரோகிணி, ராஜி, விஜி, சந்தனமுல்லை, ப்ரியா, மேனகாசாத்தியா, அனாமிகா, ஹுஸைனம்மா, ராமலட்சுமி  போன்றோர் குறிக்கத்தக்கவர்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் வரிசையில் மு. இளங்கோவன் (புதுச்சேரி), ந. இளங்கோ (புதுச்சேரி), எம்.ஏ சுசீலா (மதுரை), கல்பனா சேக்கிழார் (அண்ணாமலை நகர்),  எஸ். சிதம்பரம் (காந்திகிராமம்), மணிகண்டன் (திருச்சி), குணசீலன் (காரைக்குடி) போன்றோர் குறிக்கத்தக்கவர்கள்.
      இவ்வாறு பொதுவான நிலையில் இணையத் தமிழை இயக்கும் இவர்கள் தாண்டி நவீன இலக்கியத்திற்கு வழிவகுக்கும் இணைய இணைப்புகள் உண்டு. அவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் மையம் ஆகின்றது.
நவீன இலக்கியப் போக்கும் இணையமும்
      இலக்கியம் ஏதேனும் ஓர் இயக்கம் சார்ந்தே இயங்குகிறது. தற்போது பின்நவீனத்துவ காலம் என்று இலக்கியத்திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். பின்நவீனத்துவப் போக்கு கி.பி. 1950 முதலே தொடங்கிவிட்டது என்று கருதப்படுகிறது.
      பின் நவீனத்துவ இலக்கியம் என்பது கட்டுடைப்பு இலக்கியம். இதற்கு வாகானது இணையதள எழுத்து. ஒரே தளத்தில் கவிதை எழுதலாம். கதை எழுதலாம். பயணம் செல்லலாம். புகைப்படம் ஒட்டலாம். குறும்படம் சேர்க்கலாம். இந்நிலையில் ஒரே மையத்தை நோக்கிப் பயணிக்காத எழுத்து உலகம் இணைய உலகம். இது பின்நவீனத்துவ போக்கிற்கு மிகப் பொருந்துவது.
       பின் நவீனத்துவம் என்பதை மையத்தை சிதறடித்தல், ஒழுங்கை குலைத்தல், யதார்த்த மீறல், எதிர்நிலையாக்கல், கேள்விகளால் துளைத்தல், கேலிசெய்தல், பன்முகமாய்ப் பார்த்தல், சொற்களால் விளையாடுதல், அதிர்ச்சிகளைத் தருதல், கனவுநிலையில் மொழிதல், பேசக் கூடாதனவற்றைப் பேசுதல் என்ற நிலையில் நோக்கியாக வேண்டும். பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம் போன்றன பின் நவீனத்துவ சிந்தனை பெற்ற இயங்கள் ஆகும். இவை தமிழ்உலகில் தற்போது ஆட்சி புரிந்து வருகின்றன.
      இணையத்திலும் பின்நவீனத்துவப் பாதை திறக்கப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்வுகள் போன்ற பல தளங்களிலும் கட்டுடைப்பு நிமிடந்தோறும் நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
      பின் நவீனத்துவப் போக்கின் சாயல் தெரிந்தோ தெரியாமலோ படைப்பு உலகிலும், திறனாய்வு உலகிலும், நடைமுறை வாழ்விலும் என மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தே வருகின்றன. இவற்றை ஏற்றே ஆக வேண்டும்.
சிறுகதை
      இணையத்தில் சிறுகதைகளுக்குத் தனித்த இடம் உண்டு. சிறுகதைகள்.காம், அழியாச்சுடர், எழுத்து போன்ற தளங்களில் பல எழுத்தாளர்களால் சிறுகதைகள் எழுதப்பெற்று வருகின்றன. ஆயிரத்து நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகளைக் கொண்டுள்ளது சிறுகதை.காம் என்ற தளம். இத்தளம் தற்போது கட்டணம் செலுத்தினால் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளது.
      தமிழ்ச்சிறுகதையை தமிழ்நாட்டுச் சிறுகதை, இலங்கைச் சிறுகதை, மலேசியச் சிறுகதை, சிங்கப்பூர் சிறுகதை, ஆஸ்திரேலியா சிறுகதை என்று இனம்பிரித்துக் காணமுடியாமல் ஒரு குடைக்குள் அடக்கியிருக்கிறது இணையம்.  இது அமைதியாக நடந்து வரும் பெருவெற்றி.
      இக்கால இணையச் சிறுகதைகளின் தன்மையை அறிந்துகொள்ள சில சிறுகதைகளை ஆராயவேண்டியுள்ளது. கேபிள் சங்கர் எழுதிய ரமேஷும் ஸ்கூட்டிப்பெண்ணும் கதை சற்று மாறுதலானது. ரமேஜஷ் யாருக்கும் உதவாத யாருக்கும் செலவு செய்யாத கஞ்சத்தனம் கொண்டவன். அவனை அலுவலகம் முடித்தவுடன் தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார் அவர். நடுவழியில் ஒரு ஸ்கூட்டியை கிளப்பமுடியாமல் நிற்கிறாள் ஒரு இளம்பெண். நேரம் இரவு நடுநிசியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரமேஷ் அவரை வண்டியை நிறுத்தச் சொல்லி அப்பெண்ணின் வண்டியைக் கிளப்ப முயற்சிக்கிறான். எரிபொருள் இல்லா நிலையில் அவரின் வாகனத்தில் உள்ள எரிபொருளை ஸ்கூட்டிக்கு மாற்றி அப்பெண்ணை வீடுபோக வழி செய்கிறான். ரமேஷ் செய்த இந்தக் காரியத்தால் நான்கு கிலோமீட்டர் அவரும் அவனும் அவர்களின் வண்டியைத் தள்ளிக்கொண்டே வந்து எரிபொருள் நிரப்பினார்கள். ரமேஷுடம் அவர் கேட்டார்… இளம்பெண் என்றால் வலிய வந்து உதவுவீர்களா என்று. அதற்கு ரமேஷ் சென்னா பதில் கதையின் திருப்புமுனையாகிறது. சார்…. இதேஇடத்தில் பல கற்பழிப்புகள் நடந்திருக்க….என் காதலியை நான் இதே இடத்தில் இழந்திருக்கிறேன். இந்தப் பெண்ணை இழந்து இன்னொரு காதலன் தவிக்கக் கூடாது என்றுதான் செய்தேன் என்றான். இதுவரை இது கதை. இதன் பின்குறிப்பாக ஒன்று தரப்பெறுகிறது. நண்பர் ராஜ் சொன்ன ஒரு சம்பவத்தின் தாக்கத்தில் எழுதியது என்பதே நவீனத்துவத்திற்கு இணையச் சிறுகதை நகர்கிறது என்பதற்கு அடையாளம். (கேபிள் சங்கரின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.)
      க. முருகதாசன் எழுதிய ’ஒரு திருடனும் அவனின் காதலியும்’ என்ற கதை இலங்கை புலம்பெயர் எழுத்து சார்ந்தது. ராஜேஸ்வரன் சந்திரகௌரி ஆகிய இருவரும் பால்யகால நண்பர்கள். அவர்கள் எதிர்பாராத விதமாக இலண்டனில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களின் பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது ராஜேஸ்வரன் சந்திகௌரியின் பென்சில் ஒன்றைத் திருடிவிட இதன் காரணமாக அவனுக்குள் ஒரு திருடன் மறைந்திருந்தான். அதனை ஈடுசெய்ய சந்திரகௌரியின் பிறந்தநாள் அன்று ஒற்றை மஞ்சள்நிறப் பென்சிலை வழங்கி அதனுள் தான் செய்த திருட்டுத்தனத்தையும் எழுதி மன்னிப்பு கேட்டிருந்தான். அவள் அதனைப் பெற்றுக்கொண்டு கவனமாகக் கடிதத்தைப் படித்துவிட்டு அவனை அணைத்து அவள் ஒரு கடிதம் தந்தாள். அது 1966ஆம் ஆண்டு எழுதப்பெற்றது. ராஜேஸ்வரனுக்கு அவள் எழுதிய பழைய காதல் கடிதம் அது. ராஜேஸ்வரன் அக்கடிதத்தைப் படித்துவிட்டு அவளின் தோழியிடம் கேட்டான் இன்னும் சந்திரகௌரி திருமணம் செய்து கொள்ளவில்லையா என்று. அத்தோழி ஆம் என்றாள். இதன் பிறகு நடந்ததை நடப்பதை வாசகர் தாமே அறிந்து கொள்ளட்டும். (அக்னிக்குஞ்சு இதழில் வெளிவந்த கதை.)
      ஒருபக்கக் கதைகள், சிறு சிறுகதைகள் என்பனவாகவும் இணையத்தில் எழுதப்பெறுகின்றன. எழுத்து இதழில் பல சிறுசிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பெண் தன் கணவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். உடல்நலம் தேறி தன் கணவரை வீட்டுக்கு அழைத்துவரும் நிலையில் மருத்துவர் சில ஆலோசனைகளை வழங்கினார். உங்கள் கணவருக்கு ஓய்வு தேவை. சில தூக்க மாத்திரைகளைத் தந்துள்ளேன் என்றார் மருத்துவர். மனைவியும் அவற்றை வாங்கிக்கொண்டுக் கிளம்ப முயன்றபோது மருத்துவர் சொன்னார் இந்தத் தூக்க மாத்திரைகள் உங்களுக்கு என்று … இதனை ஆடிட்டர் செல்வமணி பதிந்துள்ளார்.
      இவ்வாறு தமிழ்ச்சிறுகதையின் நவீனப் போக்குகளுக்கு இணையம் வழி வகுக்கிறது. பல்லாயிரம் கதைகள் எழுதப்பெற்று வருகின்றன. அவற்றைக் காணவும் ஆராயவும் படிக்கவும் நிறைய நேயர்கள் தேவை.
இணையதளம் உலாவும் கவிதைகள்
      வார்ப்பு என்ற இணையக் கவிதை இதழ் வாரந்தோறும் புதிய புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் இணைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இணையத்தில் எழுதுபவர்கள். அவர்களின் கவிதைகள் இணையதளக் கவிதைக்களத்தில் முன்னிற்பனவாகும். நளாயினி தாமரைச் செல்வன் எழுதிய சிறுகவிதைகளில் நவீனத்துவச் சிந்தனை இருக்கிறது.
தலையில் காக்கா எச்சம்.
தற்செயல் நிகழ்வு.
தடை தாண்டு.
***
மழையில் நனை.
வழிநீர் கரை.
புதிதாய்ப் பிற.
பழைய மரபில் இருந்து விடுவித்துக் கொண்ட சிறுகவிதைகள் இவை. சிபிச் செல்வன் என்பவர் சில பின்நவீனத்துவக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தன் தளத்தில் தந்துள்ளார்.
பின் நவீன கவிதைகள் – ஆங்கிலம் வழியாகத் தமிழில் : சிபிச்செல்வன்
தருணம் :   பெண் / ஆண்
மூலம்: வங்காளம் : ரத்தின் பந்தோபாத்யாய
ஆங்கிலம் வழி: அனுஸ்ரீபிரசாந்த்
மனைவியின் தினசரிப் பழக்கங்கள்
இனிமேல்
( ஆகையால்/எடுத்துக்காட்டாக/மேலும் )
காலையில் கோல்கேட்
மெல்லிய பிரிட்டானியா
சார்மினார்
நீலநிற ஜீன்ஸ்
சீர்ப்படுத்த முடியாத பெருங்குடல் வீக்கம்
சாலையில் வலது இடது புறங்களைப் பார்த்துவிட்டு கடந்துபோதல்
***
வரிக்குதிரை. போக்குவரத்து நெரிசல். வரிக்குதிரை
கடந்து கொண்டிருக்கிறது வரிக்குதிரை கடந்துகொண்டிருக்கிறது வரிக்குதிரை
கடந்துகொண்டிருக்கிறது வரிக்குதிரை
அந்த வரிக்குதிரை குளிர்கால சூரியத் தடுப்பிற்காகத் தொப்பி போட்டு
உல்லாச பயணம் மேற்கொள்கிறது
மிருகக்காட்சி சாலையில்
ஒவ்வொரு வருடமும்……
இத்யாதி
தொடர்பற்றுத் தொடரும் இத்தகைய கவிதைகளின் இணைவற்ற போக்கே பின்நவீனத்துவப் போக்காகின்றது, நிசப்தம் அறக்கட்டளை அமைப்பில் செயல்படும் வ. மணிகண்டன் எழுத்தாளர், பொறியாளர், சிந்தனையாளர். அவரது தளத்தில் பின்வரும் ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது. இதன் நவீனத் தன்மை அசல் நகல் குழப்பத்தில் வாசகனைத் தடுமாற வைப்பதை உணர முடிகின்றது,
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்
வித்வான் ஷண்முகசுந்தரம் ஒரு தவில் கலைஞர்
அவர் எல்லோராலும் முட்டாளாக
மதிக்கப்படுபவரென்றால் அது மிகையாகாது
குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாலண்ணன்
எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும்
ஒரு அடி பிந்திவிடுவது ஷண்முகத்தின் வழக்கம்
அப்போதெல்லாம் பாலண்ணன் லாவகமாக
நாதஸ்வரத்தில் ஒரு இடியிடிப்பார்
சிலர் இவரை ‘தனித்தவில் கலைஞர்’ என்றும்
நகைச்சுவையாகக் கூறுவதுண்டு
அன்று மாவட்ட எல்லையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி
வாசித்துக் கொண்டிருந்த நூறு வித்வான்களில்
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்
ஒன்று, முதலாக இருந்தார்
அல்லது
கடைசியாக இருந்தார்
நிகழ்ச்சி முடிந்து
செம கடுப்பில்
அவரை அம்போவென கைவிட்டுக் கிளம்பினர்
தான் ஒரு முட்டாள் என்பதையறியாத
ஷண்முகசுந்தரம்
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
நெடுஞ்சாலையில் நடக்கிறார்
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி
வருகிறீர்களா என்று கேட்டார்
அப்போது
ஸ்ரீமான் ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.
இதனை எழுதியவர் கவிஞர் கண்டராதித்தன். இவரின் கவிதையை அதன் நவீனத்தன்மையை வ. மணிகண்டன் வியந்துள்ளார்.
      இணையக் கவிதைகள் பல பெரும்பாலும் பழைய பாடுபொருள்களை உடையன என்றாலும் நவீனத்தன்மையைத் தொட்டுப்பார்க்கும் கவிதைகளும் களத்தில உள்ளன.
பின்நவீனத்துவத் திறனாய்வுகள்
      இணையத்தில் பெண்ணியம், பெரியாரியம், பொதுவுடைமை என்ற நிலைகளில் பல நவீனத்துவ இயத் திறனாய்வுகள் கோலோச்சுகின்றன. இணையத்தில் கிடைக்கும் பேரா பூரணச்சந்திரன், பேரா தமிழவன், பேரா அ. இராமசாமி, அ.மார்க்ஸ், ஜமாலன் ஞானி போன்றோர் தம் எழுத்துகளில் பின் நவீனத்துவப் போக்குகள் காணப்படுகின்றன. பெண்ணியம் சார்ந்து பல இணைய எழுத்துகளை பெண்ணியம் இதழ் வெளிப்படுத்தி வருகிறது. கட்டு்ரைகள், செவ்விகள், செய்திகள் என்று பெண்ணியச்சார்பில் இயங்கும் பெண்ணியம் தளம் குறிக்கத்தக்கது.
      பெரியாரியக் கொள்கைகளை விளக்கும் குடியரசு, தமிழ் ஓவியா போன்றன பின் நவீனத்துவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. மார்க்சிய கொள்கைகளை முன்னெடுப்பதில் ந. ரவீந்திரனின் எழுத்துகள் கவனிக்கத்தக்கன. உளவியல் ஆய்வுகளில் சி.மா இரவிச்சந்திரனின் தளம் முக்கியமானது. இவற்றின் வழியாக பின்நவீனத்துவம் பற்றியும் அதனை ஆராயப்புகுத்தும் பயிற்சி குறித்தும் அறிந்துகொள்ள முடிகின்றது.
      மொத்தத்தில் இணைய எழுத்து என்பது முன்னுக்கும் பின்னுக்கும் வலதிற்கும் இடதிற்கும் வாய்ப்பளிக்கும் ஒளிவுமறைவற்ற கணினித் திரையாகின்றது. இதன் பின்னுள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்தத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை. அவர்கள் வெளிப்பட வேண்டும். பழையதை பதிவு செய்யும் முன்னவர்கள் ஒருபுறம் இருக்க, நவீனத்தை நோக்கித் தமிழைநகர்த்த இணையத்தால் மட்டுமே இயலும். இந்தக் கருவியைச் சரியாக பயன்படுத்தவேண்டும். ஒரு நூலை அச்சாக்க ஒரு அச்சகம் வேண்டும். அதனை வெளியிட வெளியீட்டு நிறுவனம் வேண்டும். வண்ண அச்சு என்றால் கூடுதல் செலவு. இது எதுவுமில்லாமல் நாளும் எழுதக் கிடைத்த அற்புத வெளி இணையம். நவீனத்தை நோக்கி இன்றைய நிமிடத்தை நகர்த்துவோம். இணையத்தில் இணைவோம்.

நன்றி   வல்லமை இணைய இதழ் 

கருத்துகள் இல்லை: