செவ்வாய், டிசம்பர் 17, 2013

பாரதி விழாவும் கவிதைப் பயிலரங்கமும்சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியின் தமிழாய்வுத் துறையின் சார்பாக 11-12-13 அன்று பாரதி விழா கொண்டாடப் பெற்றது. காலை 10.00 மணியளவில் மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மெ. பன்னீர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவிற்கு திருமதி தமிழரசி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு  நிகழ்ச்சி புகழ் திரு தேவகோட்டை ராமநாதன் அவர்கள் பாரதியின் படைப்புகள் குறித்தும், பாரதியின் தேசியப் போராட்டம் குறித்தும் பேசினார்.  திருமதி மலர்க்கொடி அவர்கள் நன்றியுரையாற்ற காலை நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது.

     மதியம் தமிழாய்வுத் துறையின் இரண்டாம் சுழற்சி மாணவர்கள் பங்குபெற பாரதி விழாவின் இரண்டாம் நிகழ்ச்சி தொடங்கியது. முனைவர் அ.பாண்டி அவர்கள் வரவேற்புரையாற்ற மீளவும் திரு தேவகோட்டை இராமநாதன் அவர்கள் பாரதியும் மற்ற கவிஞர்கள் குறித்தும் அவர்களைப் பாரதியோடு ஒப்பிட்டும் பேசினார்.

கவிதைப் பயிலரங்கம்
     12-12-13 அன்று கவிதைப் பயிலரங்கம் திரு புதுக்கோட்டை முத்துநிலவன் அவர்களால் தமிழாய்வுத் துறையில் நடத்தப் பெற்றது. இதற்குப் பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
     காலை 11 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மூன்று பிரிவுகளாக நடந்தது. முதல் இருபது மணித்துளிகள் கவிஞர் முத்துநிலவன் கவிதைகள் குறித்தும், எவை கவிதையாகும் என்பது குறித்தும் எவை கவிதையாகாது என்பது குறித்தும் பேசினார்.
     இதன்பின் மாணவர்களுக்குச் சில தலைப்புகள் வழங்கப்பெற்றன. மழை, பெண்பாடும், பண்பாடும், ஏழாம் அறிவு ஆகிய தலைப்புகள் தரப்பெற்றன.
     இதனுள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டுச் சிறப்புடன் கவிதை வரைந்தனர். அக்கவிதைகளில் சில பின்வருமாறு.

     மேகத்தை யார் திட்டியது
      இப்படிக்
     கண்ணீர வடிக்கின்றது
-    ஆ. அய்யாச்சாமி
தாயிடம் கிடைத்தது பாசமழை
தந்தையிடம் கிடைத்தது அன்புமழை
நண்பனிடம் கிடைத்தது நட்புமழை
வானமே! உன்னிடம் இருந்து மட்டும்
கிடைக்கவில்லை தண்ணீர் மழை
விழுவதோ விவசாயிகள் கண்ணீர் மழை
-    ஜி. வாசுமுத்து
பெண்பாடும் பண்பாடும்

பத்துமாதம் சுமந்து
பெற்றெடுத்த என்
பத்திரமாற்றுத் தங்கத்தை
பத்திரமாகப் பார்த்திருப்பாய் என்று
உனக்கு
என் பெண்ணை மணம் முடித்தேன்
ஆனால்……
பத்தாம் மாதம்
தாய்வீடு வந்தாள்
பிரசவத்திற்காக

தங்கத்தைச் சிகரெட்டால்
சுட்டு சுட்டு……
பத்துக் கூட போட இடமில்லை.
-    ம. கனிமொழி
வானத்துக் கணவன்
வரதட்சணைக் கொடுமையால்
பூமித்தாயிடம் ஓடிவரும்
மேகத்துப் பெண்களின்
கண்ணீர்த் துளிகள்.
-    ர. ஜான்சி ராணி
-    பிஎ. தமிழ் மூன்றாம் ஆண்டு.
மேகங்கள் மேடை போட
மின்னல் என்னும் விளக்கெரிய
இடி இன்னும் மத்தளம் கொட்ட
இன்பமாக பூமியை நோக்கி
ஆடி வருவதே மழை
ஆனந்தப் புன்னகையுடன்
மக்களை மகிழ்விக்கின்றது
-    என். முத்து மணிகண்டன்
-    பிஏ. முதலாம் ஆண்டு
மழை
 நீ
 வந்தபின்புதான்
உழவனுக்குக் கூடத் தெரிகிறது
 மண்ணின் வாசனை
-    மெ. பிரியங்கா


இக்கவிதைகளைப் படைத்த மாணவர்களுக்குப் பணப்பரிசினைத் தந்து வாழ்த்தினர், பேராசிரியர் து. ஸ்டாலின், பேராசிரியர் தமிழரசி, பேராசிரியர் விஸ்வநாதன், பேராசிரியர் மலர்க்கொடி

இதன்பிறகு மாணவர்களின் கவிதைகள் குறித்தும் கவிதைகளின் நற்பண்புகள் குறித்தும் மீளவும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் உரையாற்ற காலை அமர்வு சிறப்புடன் நிறைவுற்றது.

           மதியம் இரண்டாம் சுழற்சி மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கம் தொடர்ந்தது. இதுவும் மூன்று நிகழ்வுகளாக நடந்தது.
     இந்நிகழ்விலும் மாணவ மாணவிகள் கவிதைகள் பல படைத்தனர்
ஏய் மழையே
எங்கே சென்றாய்
மாதம் மும்மாரி பொழிந்த நீ
இப்போது மூன்றாண்டுக்கு ஒரு மாரி
பொழிய மறுக்கிறாய்
நீ ஒரு துளி தந்தாலும்
அதை வைரமாய்  ஏற்கும் எம்பூமி
நீ வந்தால்
பூக்கள் வரவேற்கும்
வயல் பசுமை காணும்
குளிர் காற்றுவீசும்
உன்னை எதிர்பார்த்து
எதிர்பார்த்து
கண்ணீர் முத்துகள் வீழ்கின்றன
மண்ணில்
 எப்போது நீ வருவாய் மழையே!
-    ச. ஜெயக்கொடி
மிகச்சிறப்பாக நடந்த இவ்விழாவில் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக