செவ்வாய், செப்டம்பர் 06, 2011

மதுரை புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாளில் விசாரணை அரங்கம் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி


பதிலளி
"இளைய சமுதாயத்தினருக்கு சரியான பாதை தேவை'

First Published : 05 Sep 2011 12:16:21 PM IST


மதுரை, செப். 4: இன்றைய இளைய சமுதாயத்தினரின் நிலை கவலை அளிப்பதாகவும், அவர்கள் சரியான பாதையில் செல்வதற்கான வழிவகையை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற விசாரணை அரங்கில் நடுவர் சேதுபதி முடிவை அறிவித்தார்.

மதுரையில் நடைபெறும் 6-வது புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை 2-ம் நாள் நிகழ்ச்சியாக இளைய சமுதாயம் எங்கே போய்கிறது என்ற தலைப்பில் விசாரணை அரங்கம் நடைபெற்றது. இதில், முனைவர் சேதுபதி நடுவராக இருந்தார். இளைய சமுதாயம் சீரழிவுப் பாதையில் செல்கிறது என்ற தலைப்பில் முனைவர் பழனியப்பன் பேசியது: "இன்றைய இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக செல்போன் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் இருக்கின்றனர். பிஞ்சிலேயே வெம்பிப் போனவர்களாக வளர்கின்றனர். வயதுக்கு மீறி உழைக்கிறார்கள், வயதுக்கு மீறி சிந்திக்கிறார்கள். ஆனால், வயதுக்கு மீறி வாழ்வார்களா என்பது தெரியவில்லை. இளைஞரிடையே தற்போது கலாசார வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இளைஞர்களை குறிவைத்தே வெளிநாட்டினர் தற்போது பண்பாட்டை சீரழிக்கும் படையெடுப்பை நடத்தி வருகின்றனர். பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாடுகளில் பணியாற்றி, பண்பாட்டையும், மொழியையும் மறந்தவர்களாக வாழ்கிறார்கள் என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முனைவர் குறிஞ்சிவேந்தன் பேசியது: "நூறு இளைஞர்களை என்னிடத்தில் தந்தால் புதிய இந்தியாவைத் தருகிறேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். இன்றைக்கு 1,000 இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் ஆனாலும் ஒரு விவேகானந்தர் கிடைப்பாரா? இளைஞர்களை வழிநடத்த தற்போது நல்ல தலைவர்கள் இல்லை. ஆனாலும் இதற்கிடையே தேசபக்தி உணர்வு மிக்கவர்களாக இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்ற இளைஞர் கூட்டத்தினரை வைத்து நாம் முடிவு செய்யலாம். அவர்கள் விதியை மாற்ற வீதியில் திரண்டனர். இன்றைக்கு ரத்த தானம் என்றால் நீண்ட வரிசையில் நிற்பவர்கள் இளைஞர்களே. உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இளைஞர்கள் பங்கே அதிகம். வெளிநாட்டில் வேலை செய்து அந்நியச் செலவாணியை ஈட்டும் சக்தியாக இளைஞர்கள் உள்ளார்கள் என்றார்.

இதையடுத்து, இளைஞர் சரவணப்பாண்டியன், மாணவி முருகலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் பெரியவர்கள். விதிவிலக்கை மட்டும் வைத்துக்கொண்டு பேசக்கூடாது. ஒருசில இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை வைத்து இளைஞர் சமுதாயத்தையே குறை சொல்லக்கூடாது.

அதேபோல், பெற்றோர் நாங்கள் என்னவாக வரவேண்டும் என்று விரும்புவதை சுமையாகக் கருதவில்லை. பல்துறைகளிலும் இளைஞர்களால் சாதிக்க முடியும் என்று தெரிவித்தனர். முடிவில் நடுவர் சேதுபதி பேசுகையில், தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள், இரவு பகல் என்று பார்க்கவிடாமல் இளைஞர்களை சீரழிவுப் பாதைக்குக் கொண்டுசெல்கின்றன. செல்போன் உள்ளிட்ட நவீன கருவிகளால் ஆள்பட்டுக் கிடக்கிறார்கள். போராடக் கற்றுத் தருவது கல்வி என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தற்போது மனப்பாடக் கல்வியே மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகவே மாணவர்கள் உள்ளனர். உறவு முறைகளை அவர்கள் தெரிந்துவைத்திருக்கவில்லை. எப்போதும் கணினி, செல்போன் என்ற உலகத்திலேயே வாழ்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற கல்வி முறை மாறவேண்டும். அதற்கு ஆள்பட்டுள்ள இளைய சமுதாயத்தினரின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இதற்குத் தீர்வு, சம்பாதிப்பதை விட இளைஞர்களுக்கு செலவழிப்பதையும் கற்றுத்தர வேண்டும். பெற்றோரின் கனவுகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நூல்கள் வெளியீட்டு விழா: முன்னதாக, தேவதச்சனின் "இரண்டு சூரியன்', வா.மு.கோமுவின் "சேகுவாரா வந்திருந்தார்', முனைவர் வெ.மு. ஷாஜகான் கனியின் "திரைப்படக் கலை', "ஈழத்து நாட்டார் பாடல்கள்' தொகுப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் வரவேற்றார். எழுத்தாளர்கள் மு.ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், சுகுமாறன், ந.முருகேச பாண்டியன், எஸ்.அர்ஷியா ஆகியோர் பேசினர். புத்தகங்களின் முதல் பிரதியை சேது.சொக்கலிங்கம், சமயவேல் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

மக்கள் கண்காணிப்பகம் சார்பில்...: புத்தகத் திருவிழா 2-ம் நாளில் தமிழகத்தின் மனித உரிமைகள்-2009, உரிமைகள் கொண்டாடுவோம், தமிழகத்தின் மனித உரிமைகள்-2010, சல்வா ஜூடும் புரட்சிகரத் தீர்ப்பு ஆகிய 4 புத்தகங்கள் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன
நன்றி தினமணி

கருத்துகள் இல்லை: