திங்கள், செப்டம்பர் 05, 2011

சித . சிதம்பரம் அவர்களின் பூம்புகார் கவிதைகள் பரப்பும் புதுமணம்

சித. சிதம்பரம், பூம்புகார்க்கவிதைகள், முருகப்பன் பதிப்பகம், பழனியப்ப விலாசம், 48. முத்துராமன் தெரு, முத்துப்பட்டணம், காரைக்குடி, 630001- 2011 ஆகஸ்டு, விலை ரு. 60

கவியரங்கம் என்ற கலைவடிவம் மிக்க ஆளுமை உடையதாக சென்ற இருபதாண்டுகளுக்கு முன்னர் அதாவது கவியரசு கண்ணதாசன் காலத்தில் விளங்கியது. மக்கள் முன்னிலையில் கவிதையைப் படைத்து அவர்களின் கைத்தட்டலில் பெருமை பெற்ற சிறப்பினை கவியரங்கங்கள் பெற்றன. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் ஊடகங்களிலும் இவை நடைபெற்றுப் பெருமை சேர்த்தன.

ஏறக்குறைய மேடைப் பேச்சின் சாயலுடன் மேடையில் உள்ளோரை, எதிரில் உள்ளோரை அழைத்து அவர்களின் கவனத்தையும் இழுத்து கவிதை படைக்கும் நேர்த்தி மிக்க கலைவடிவம் கவியரங்கமாகும். தமிழைப் பாடுதல், தலைவரைப் பாடுதல், உடன் பாடுவோரைப் பாடுதல், வந்திருந்தோரைப் பாடுதல் என்ற மரபுசார் வடிவமைப்புகளைத் தாண்டித் தலைப்பிற்கேற்ற கவிதை படைத்து, அதனை திறம்பட சொல்லி மகிழ்விக்க வேண்டிய கடப்பாடு கவியரங்கக் கவிஞனுக்கு உண்டு.

இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் நூலை அரங்கேற்றும் மரபு போன்ற நிலைப்பாட்டை உடையது கவியரங்கம் என்ற அமைப்பு. உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்வான மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவுடையார் கோயிலில் அக்கோயிலின் புராணத்தை அரங்கேற்றிய செய்தியை உ.வே.சா தன் என் சரிதம் என்ற தன்னூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கவியர்டங்கக் கவிதைகளுக்கு என்று தனித்த இலட்சணங்களும் உண்டு. எளிமை நடை, சொல் விளையாட்டு, சொற்செட்டு முதாலன பல இலட்சணங்கள் அதற்கு உண்டு. அதில் இருந்து மீறாமல், மீற முடியாமல் கவியரங்கக் கவிதைகள் வளர்ந்து வந்துள்ளன.

புதுக்கவிதையின் நுழைவு அரங்கக் கவிதைகளையும் விட்டுவைக்கவில்லை. புதுக்கவிதை நடையிலேயே தமிழ்ப்புலவர்கள் கவிதைக் கலையை ஆக்கத் துணிந்துவிட்டனர். எப்போதாவது மரபு சார் விருத்தங்களைக் காது குளிரக் கேட்க முடிகிறது. இந்தச் சூழலில் மரபின் தெரிப்புகளுடன் புதுக்கவிதைக் கலப்புடன் வெளிவந்துள்ள ஒரு நூல் பூம்புகார்க் கவிதைகள் என்ற நூலாகும்.

கவிஞர் சித. சிதம்பரம் அவர்கள் படைத்துள்ள இந்த நூல் பூம்புகாரில் தொடர்ந்து அவர் கவியரங்கேறிய காலத்தில் பாடப்பட்டன. பூம்புகாரைத் தொடர்ந்து காரைக்குடி கம்பன் கவியரங்கம் போன்றவற்றில் அவர் பாடிய கவிதைகளும் இதில் காற்றில் கலந்து சென்றுவிடாமல் பதிவாக்கப் பெற்றுள்ளன. பூம்புகார் பற்றியும், பூம்புகாரில் எழுந்த காப்பியமான சிலப்பதிகாரம் பற்றியும் எழுந்த தலைப்புகளில் கவிஞர் படைத்த கவிதைகளின் தோரணம் இந்நூல்.

இதனுள் காவிரியாறு, நெடுஞ்செழியன்,கோவலன் என்ற சிலப்பதிகாரம் சார்ந்த கவிதைகளும், ஒன்று, நான்கு என்று எண் சார்ந்த கவிதைகளும், நகரத்தார் மகன், மாற்றூர் என்ற சமுகம் சார்ந்த கவிதைகளும், கம்பன் இன்று வந்தால் பாட்டாளியாவன் என்ற கவிதையும் காது, நெருப்பு என்ற தலைப்பிலான கவிதைகளும் கலந்து இனிக்கின்றன.

கவியரங்கங்கள் இன்னும் பல வைக்கப் பெற்றால் எத்தனை கவிஞர்கள் தோன்றுவார்கள். எத்தனைக் கவிதைகள் தோன்றும். இனிமேல் வருமா கவியரங்கத்திற்கு ஒரு வசந்த காலம் என்ற எண்ணத்தை இந்தத் தொகுதி ஏற்படுத்தி நிற்கிறது.

இந்தக் கவிதைத் தொகுப்பில் தன்னை ஆங்காங்கே கவிஞர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அத்தனையும் உண்மை கலந்து அவர் நிற்கும் இடங்களாகும்.

அடிப்படை வாழ்க்கைக்கும்
அகப்படை வாழ்க்கைக்கும்
தொழில் கூட்டு முதலீடு கடன்
பொருளாதார போதிப்புகள்
புதிய புதிய சாதிப்புகள்
வயிற்றிற்காக மனசை
விற்கமுடியாமல்
வாழ்க்கை முடிய பாதிப்புகள்

முப்பத்திநான்கு வயது
தழும்புகளைத் தாங்கிக் கொண்டு
வரும்புகழை வாங்கிய நேரம்
என் கட்டிலுக்குக் கால் ஒடிந்தது
ஒற்றையானேன்

காதலை நனைந்த நாட்களைத் தாண்டி
காமம் நிறைந்த பொழுதுகளை விரட்டி
பசித்த பொழுதில் தண்ணீர் அருந்தி
சமரசம் புரியாமல் சாகசம் செய்யாமல்
தகுதியாகலே தான் அடைந்த தலைமை நாற்காலி

(பக்.4344)
என்ற கவிதைக்குள் கட்டுண்டு கிடக்கும் அகவாழ்வின் துயரம், அதை ஆற்றிக் கொண்ட விவேகம் இத்தனைக்கும் மேலாயக் கவிதை ஊற்றெடுக்கும் உள்ளம் என்று இவற்றை ரசிக்கையில் படிப்போர் உள்ளம் கவிஞரைத் தொடுகின்றது.

அரங்கக் கவிதைகளைத் தான் புதுக்கவிதைகளாய் வடிப்பது பற்றிக் கவிஞருக்கு ஒரு கவலை வந்திருக்கிறது. மரபு சார் கவிவாணர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கையில் இந்தக் கவலை வரவேண்டிய ஒன்று தான்.

அரசி என்றழைக்கப்படும் கவிவாணர் தலைமையில் பாடப்பட்ட கவிதையில் இதுபற்றிக் கருத்தறிவிக்கிறார் கவிஞர்.

நீங்கள் மாவுத்தன்
மரபு யானையைக் கட்டி வைக்கிறீர்கள்
நானோ ராவுத்தன்
புதுக்கவிதைக் குதிரைக்குப்
பொட்டுவைக்கிறேன் அதையும்
உங்கள் காலைத் தொட்டு வைக்கிறேன் (ப.28)
என்ற நிலையில் புதுக்கவிதையின் புதுவேகத்திற்கு குதிரையை ஒப்புமையாக்கியிருப்பதையும், மரபின் ஓட்டத்திற்கு யானையின் வலிமையையும் அதன் வேகத்தையும் பொருத்தியிருப்பது சரியான வேறுபாடாகின்றது. யானையாய்க் கவிதை அசைந்து வந்தால் என்ன, குதிரையாய்க் கவிதை பறந்து வந்தால் என்ன அதன் அழகிற்கு, அதன் ரசிப்பிற்கு ஏங்கி நிற்கவேண்டும் வாசகன். அந்த ஏக்கத்திற்கும் ரசிப்பிற்கும் உரியனவாக இவரின் கவிதைகள் நிற்கின்றன என்பதில் ஐயமில்லை.

இவரின் கவிதைக்குள் சொற்களின் அடுக்கைச், சொற்களின் பொருள் சேர்க்கையைப், பொருள் மாற்றத்தை நிறைய காணமுடிகிறது. புகார் என்ற சொல்லும், மாற்றூர் என்ற சொல்லும் எப்படியெல்லாம் நின்று பரிணமிக்கறது என்பதைப் பின்வரும் சான்றுகள் காட்டும்.

பூம்புகாரே புராதன நகரே
வெளிப்பகைவர் உட்புகார்
உன் நிலத்தார் வெளிப்புகார்
புகார் என்னும் பெயர்
பூண்ட தன்மையைப்
பண்டைய இலக்கியம்
பறைகள் சாற்றும்

ஆனால்
புகார் என்னும் புகழுடை உன் நாமம்
கடந்த காலத்தில் கறைபட்டுப் போனதே
புகார் மீதும் புகார் வந்ததே (ப.20)

என்ற கவிதை புகார் மீது புகாரை அள்ளி வீசுகின்றது.

கூற்றுதனை மாற்றூர், கொடுமையினை மாற்றூர்
ஏற்றமுன் தீவினையை எரித்தே மாற்றூர்
ஊற்றூரும் நீராகி உயிர்காக்கும் மாற்றூர் (ப.47)

இப்படிச் சொல்லுக்குள்ளே சோதி மிக்க நவகவிதையை எடுத்தியம்பும் இவரின் வரையறைகள் இன்னும் மகிழ்விப்பன.

இவர் மகனுக்குத் தரும் வரையறையாக

மகன் நான்
பெற்றவர்கள் பிரதிநிதி
தந்தைக்கு அந்தாதி
ஆண் எனும் சந்ததி (ப. 61)
என்ற கவிதை அமைகின்றது.

இன்னும் சற்று ஒருபடி மேலே சென்று இந்த மகன் கவிதை பெற்றோரின் பேரின்பத்தைப் பாடுகின்றது.

நான் சம்பாதித்தால் அவர்கள்
பெட்டி நிறைகிறது
நான் தளிர்க்கையில் அவர்கள்
பூக்கிறார்கள்
நான் உழைக்கையில் அவர்கள்
வேர்க்கிறார்கள்

என்ற இந்த மகனின் உயர்வும், அதற்கும் பெற்றோர் தரும் மதிப்பும் இருக்கும் குடும்பங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க்கையின் கணக்கைக் கவிஞர் பின்வருமாறு பிரதி எடுக்கிறார்.

கீழ்ப்புள்ளி பூமி
மேற்புள்ளி சாமி
கீழ்ப்புள்ளி உழைப்பு
மேற்புள்ளி சிறப்பு
கீழ்ப்புள்ளி புத்தி
மேற்புள்ளி வெற்றி ( ப. 85)

என்ற வாழ்க்கைக் கணக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் காற்புள்ளியாகவே கணக்கெடுக்கிறது. முழுப்புள்ளி எப்போது ஆவோம் என்பதுதான் இந்தக் காற்புள்ளி தரும் எதிர்பார்ப்பு மகத்துவம்.

சில சொற்களுக்குக் கவிஞர் பொருளெழுதி பெருமை கொள்ளுகின்றார்.

காது ஒரு சித்திர வடிவம்
புள்ளி வைக்கா கேள்விக்குறிபோல்
புலப்படும். கேள்வி அதனால்தான் பெறப்படும் (ப. 52)

என்று காதிற்குப் பொருள்தருகிறார் கவிஞர்.

தாய்க்கு அவர் தரும் பாருள் சித்திரா பௌர்ணமி வானத்தில் சிரித்துக் கிடக்கும் சந்தனப் பொய்கை (ப. 57) என்பது படிக்கப் படிக்கச் சுவை கூட்டுவது.

தாயையும் தந்தையையும் பற்றிய இன்னொரு கவிதை படிக்கப் படிக்கச் சுவை கூட்டுவதாகும்.

நான்குவிழிச் சந்திப்பில் நான் பிறந்தேன்.
வாங்கினாள் தாய் வழங்கினார் தந்தை
தாங்கும் வயிற்றில் தவமாய்க் குடிபுகுந்தேன் (ப.39)
இவ்வாறு இவரின் கவிதைகள் எங்கு தொட்டாலும் சொற்களில் சுவை பிறக்கச் செய்கின்றன.

நகரத்தார் சமுகத்தவர் பற்றிய இவரின் கவிதைப் பதிவு ஒன்று அழியாப் பதிவாக விளங்குகின்றது.

தனவணிகர் பண வணிகர்கள்
முளை இவர்களுக்கு முலதனம்
கணக்கு இவர்களின் கைத்துணை
கருக்கடை இவர்களின் கை நேர்த்தி
அக்கறை இவர்களது ஆயுதம்
அர்ப்பணிப்பு இவர்களின் போர்முறை
இணக்கம் இவர்களின் திட்டம்
ஈட்டலும் பெருக்கலும் சட்டம்
ஈகையும் காத்தலும் உச்சம்
விலாசம் தான் இவர்களுக்கு வெளிச்சம்
(ப. 59)

இக்கவிதையை நகரத்தார்கள் தமக்கான கவிதையாக வரித்துக் காள்ளலாம். சட்டங்களாக எழுதி மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

இத்தனைக் கவிதைகளை எடுத்தியம்ப வைத்த அரங்கங்களுக்கு மிக்க நன்றி. அதனைப் பதிவாக்கிய கவிஞருக்கும் மிக்க நன்றி.

காலக்கணக்கன் கணக்கை முடித்தாலும்
கவிதைக் கனத்தில் காலத்தை முறிப்பேன் (ப. 45)

என்ற இவரின் ஆழமான கவிதை நேசிப்பு வரிகள், சாதிப்பு வரிகள் இன்னும் சாதிக்கும் என்பதற்கு இன்னும் பல நூல்கள் வரும் என்பதே சாட்சி.

எடுத்துக் கொண்ட பொருளை எள் முதல் பனை வரை பார்த்துத் தேறும் கவிதை வடிக்கும் கவிஞரின் வெற்றி மிக்க கவிதைப் படைப்புகளில் இதுவும் ஒன்றாக அமைகின்றது.

கருத்துகள் இல்லை: