திங்கள், பிப்ரவரி 14, 2011

செம்மொழி இலக்கியங்களில் கடல் சூறாவளியும், கடலழிவில் இருந்து மீளுதலும் ஆன குறிப்புகள்


செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றின் வழியாகக் கடல்புறத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் வாழ்நிலையை அறிந்து கொள்ள முடிகின்றது. கடலோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு, கடல்படு பொருள்கள் கொண்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை, கடல் வாழ்வின் சவால்களில் இருந்துத் தங்ளைத் தற்காத்துக் கொண்டமை முதலான பல வாழ்முறைகளைச் செம்மொழி இலக்கியங்கள் அறிவித்து நிற்கின்றன.

தலைவன் தலைவியைச் சந்தித்துவிட்டுத் தேரேறிச் செல்கின்றான். அவ்வாறு அவன் தேரில் ஏறிச் செல்லும் காட்சி பெருங்கடற்பரப்பில் பரதவர்கள் கப்பல் ஏறிச் செல்வது போல இருந்தது என்று கடல்வழியையும், நில வழியையும் ஒருங்கு வைத்துக் காண்கிறது ஒரு அகநானூற்றுப்பாடல்.

சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த

கடுசெலல் கொடுந்திமிழ்போல

நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே! (அகநானூறு.330)

என்ற இப்பாவடிகளில் "கடுசெலல் '' என்ற சொற்பகுதி பெருங்கடலில் செல்லும் பயணம் எளிய பயணம் அன்று கடுமை வாய்ந்த பயணம் என்பதை எடுத்துரைக்கின்றது.

மேலும் தமிழன் கடற்பகுதிகளில் எவ்வெவ் தொழில்கள் செய்தான் என்பதைப் பின்வரும் பாடல் உணர்த்துகிறது.

அவனொடு

இருநீர் சேர்ப்பின் உப்புடன் உழுதும்

பெருநீர்க்குட்டம் புணையோடு புக்கும்

படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்

தருகுவன் கொல்லோ தானே (அகநானூறு 280)

வரிய நிலையுடைய தலைவன் செல்வ வளம் மிக்கத் தலைவியைக் காதலிக்கிறான். இதன் காரணமாக அவளை அடைய வழி எவ்வாறு என்று தேடுகிறான். இதற்கு ஒரு வழியாக அவன் தலைவி வீட்டில் தொண்டுகள் பல செய்ய முற்படுகிறான். குறிப்பாக தலைவியின் தந்தைக்கு அருகில் இருந்து அவருடன் இணைந்து நன்முறையில் பணியாற்றுகிறான். இந்தக் காரணம் கருதியாவது தன்மகளை தொண்டு செய்யும் தலைவனுக்கு தந்துவிடானா என்பதுதான் தலைவனின் ஏக்கம்.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள "பெருநீர்க்குட்டம்'' என்ற குறிப்பு கடலைக் குறிப்பதாகும். அதனுள் புணையோடு புக்கும் என்பதனால் தலைவியின் தந்தையோடு இத்தலைவன் பெருங்கடலில் சென்று மீன்பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்தும் (படுத்தும்), பணிந்தும், பக்கத்திலேயே இருந்தானாம். இதன் காரணமாகவாவது தலைவியின் தந்தை, தலைவியைத் தந்து நிற்கமாட்டானா என ஏங்குகிறான் இத்தலைவன்.

இப்பாடலின் வழியாகத் தமிழர்களின் கடல் தொழில்களில் உள்ள கடுமை தெரியவருகிறது. இக்கடுமையோடு பற்பல தடைகளையும் தமிழர்கள் கடல் தொழிலில் அனுபவித்துள்ளனர். (அனுபவித்தும் வருகின்றனர்)

. . . திண்திமில்

எல்லுத் தொழில்மடுத்த வல்வினைப் பரதவர்

கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புஉடன்

கோள்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை

தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு

முன்றில் தாழைத் தூங்கும் (அகநானூறு 340)

இப்பாடலில் மீன் தொழில் செய்யச் செல்லும் தமிழர்க்கு ஏற்பட்ட தடைகள் பல காட்டப் பெற்றுள்ளன. பரதவர்கள் மீன் பிடிப்பதற்காக வலை கட்டி வைக்க அந்த வலையையே வேகம் கொண்டச் சுறா மீன்கள் அழித்துவிடுகின்றன என்ற குறிப்பு கிடைக்கின்றது.

இவ்வகையில் கடல்புற வாழ்வில் பல இடைஞ்சல்கள் உள்ளன என்றும் அவற்றைக் கடந்து மேலாண்மை செய்து தமிழன் அக்காலத்திலேயே வாழ்ந்துள்ளான் என்பது தெரியவருகிறது.

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உறவோன் மருக'' (புறநானூறு: 66)

என்று புறநானூறு கரிகாலனைப் போற்றுகின்றது. அதாவது கடலில் கப்பல் செலுத்தி காற்றை வசப்படுத்தியவரின் மருமகன் கரிகாலன் என்று இப்பாடல் அவனைப் புகழ்கிறது. கரிகால் பெருவளத்தான் காலத்தில் திருந்திய கடல் வாணிப முறை இருந்தது என்பது தெரியவருகிறது.

மேற்கருத்தை உறுதி செய்யும் வண்ணமாகக் கரிகாலனின் பட்டினமான காவிரிப்பூம்பட்டிணத்தில் கடல் படு பொருள்களும், நிலம் படு பொருள்களும் வந்து குமிந்திருந்த நிலையைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் பாடியுள்ளார்.

" நீரின் வந்த நிமிர் பரிப்புரவியும்

காலின் வந்த கருங்கறி முடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலை பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகின்

(பட்டினப்பாலை 183193)

மேற்கண்ட பாடலில் காவிரிப்பூம்பட்டிணத்தில் வந்திறங்கியிருந்த, ஏற்றமதியாகவிருந்தப் பொருள்களின் பட்டியல் எடுத்துரைக்கப் படுகிறது.

அமைதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் கடல் பரப்பு சீறி எழுகின்றபோது பேரழிவு ஏற்பட்டுவிடுகின்றது. இந்தப் பேரழிவுகளில் இருந்து மீட்டெழவேண்டிய ஆற்றலை, சவாலை மனித இனம் பெற்றுய்ய வேண்டியிருக்கிறது. இப்பேரழிவுகளில் இருந்து மனித குலத்தைக் காக்க பல்வழிகளில் போராட வேண்டியிருக்கிறது. தற்போது பேரழிவுத் தடுப்பு மேலாண்மை என்ற புதிய மேலாண்மைப்புலம் உலக அளவிலும், இந்திய அளவிலும் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேலாண்மை அமைப்பு மாநிலங்கள் அளவிலும் செயல்பட்டுவருகின்றது.

பேரழிவு என்பதை " மனிதர்களால் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு பேரழிவுகளை உண்டாக்கும் பெருத்த உயிர் மற்றும் பொருள்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்தும் சூழ ல் '' என்று விளக்கிக் கொள்ளலாம்.இதனை இருவகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகள் என்பது ஆகும். இதனுள் கடல்கோள், நிலச்சரிவு, பூகம்பம், புயல் போன்றனவற்றைக் கொள்ளலாம். மற்றது மனிதன் ஏற்படுத்துவதாகும். இதனுள் போர் அழிவுகள், இராசயனப் பொருள்களினால் ஏற்படும் அழிவுகள், அணுகுண்டு கதிர்வீச்சு போன்றவற்றால் ஏற்படும் சீரழிவுகள் போன்றனவற்றை இதனுள் அடக்கலாம்.

செம்மொழி இலக்கியங்களில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட சீரழிவுகளையும், அதனைத் தடுக்கும் முறைகளையும், அதிலிருந்து மீண்ட முறைகளையும் காணமுடிகின்றது.

கடல் சூறாவளி

கடலில் ஏற்படும் புயல் போன்றவற்றால் பல அழிவுகள் ஏற்படுகின்றன. கடலில் வீசும் சூறாவளியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதுரைக் காஞ்சியில் ஒரு குறிப்பு இடம் பெற்றுள்ளது.

பனைமீன் வழங்கும் வளைமேற்பரப்பின்

வீங்கு பிணி நோன்கயிறு அரீஇ இதைப் புடையூ

கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்

கடுங்காற்று எடுப்ப கல்பொருது உரைஇ

நெடுஞ்சுழி பட்ட நாவாய் போல

இருதலைப் பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து

கோலோர்க் கொன்று மேலோர் வீசி

மெனபிணி வன்தொடர் பேணாது காழ் சாய்த்து

கந்து நீந்து உழிதரும் கடாஅ யானையும்

அம்கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து

(மதுரைக் காஞ்சி 375385)

என்ற இந்தப் பாடல் அடிகளில் இயற்கைப் பேரழிவான கடல் சூறாவளி தந்த அழிவுகளும், மன்னன் நடத்தியப் போரின் அழிவுகளும் ஒப்பு நோக்கப் பெற்றுள்ளன.

குறிப்பாக பனைமீன் என்ற வகை சார்ந்த மீன்கள் உலவும் கடற்பரப்பில் பெருங்காற்று வீசியது. இதன் காரணமாக மரக்கலங்களின் மேலே கட்டப் பெற்றிருந்த பாய்மரச் சீலைகள் கிழிந்து வீழ்ந்தன. காற்று நான்கு பக்கங்களிலும் பெருமளவில் வீசியதால் பாய்கள் கட்டப் பெற்றிருந்த மரங்கள் கூட முறிந்து வீழ்ந்தன. நங்கூரக் கல் கயிற்றுடன் மோதிப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக கடலில் சென்ற கலங்கள் அசைந்து ஆழச் சுழியில் அகப்பட்டு அழிந்தொழிந்தன. இத்தோற்றத்தைப் போல போர்க்களத்தில் யானைகள் அழிவைச் செய்தன. யானைகள் தாங்கள் கட்டப் பெற்றிருந்த முளைக் கம்புகளைச் சிதைத்து, இரும்புச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு யானைகள் அழிவைச் செய்ய கிளம்பினவாம்.

இவ்விரு காட்சிகளின் வழியாக மதுரைக் காஞ்சி இயற்கைச் சீரழிவு, போர்ச்சீரழிவு இரண்டையும் ஒருங்கு காட்டியுள்ளது. இவற்றின் இழப்புகளையும் பதிவு செய்துள்ளது. இவற்றைத் தடுத்திட வேண்டும் என்ற எண்ணம் படிப்பவர் மனதில் ஏற்படும் வண்ணம் அழிவுகள் தமிழ் இலக்கிய நெறிப்படி மிக்க அழுத்தம் கொடுத்துச் சொல்லப்பெற்றுள்ளன. அதாவது உயிரளபடை என்ற நிலையில் அழுத்தம் கொடுத்து நீட்டித்துச் சொல்ல வேண்டிய நிலையில் அழவுகளை மதுரைக் காஞ்சி சுட்டிக்காட்டியுள்ளது.

"அரீஇ, உரைஇ '' ஆகிய சொற்கள் அழுத்தம் மிக்க சொல்லிசை அளபெடை சொற்களாகும். அழிவின் விளைவுகள் கருதி இதைப் பாடவந்த மாங்குடி மருதனார் அழிவு அழுத்தம் கருதி சொற்களை அழுத்தத்துடன் இப்பாடலில் படைத்துள்ளார் என்பது கருதத்தக்கது.

மேலும் மதுரைக் காஞ்சி என்ற செம்மொழிப் பனுவல் பாடப்பட்டதன் நோக்கமே நிலையாமை உணர்த்துதலே ஆகும். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு வீடுபேற்றைப் பற்றி அறிவுறுத்தவும், போரின் மீது அவன் கொண்டிருந்த பெருவிருப்பைத் தடுக்கவும் மதுரைக் காஞ்சி பாடப் பெற்றுள்ளது.

...வல்பாசறை

படுகண் முரசம் காலை இயம்ப

வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த

பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்

கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்

திரை இடு மணலினும் பலரே உரைசெல

மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே''

( மதுரைக் காஞ்சி 231238)

என்ற பகுதியில் போர்செய்து ஒழிந்த மன்னர்கள் கடல் மணலை விடப் பெரிய அளவினர் என்று ஏளனக் குறிப்பு விளங்கச் செய்யப்பெற்றுள்ளது. உயிர்க்கொலைகளை மிகுவிக்கும் போரினைப் பற்றிய ஏளனக் குறிப்பு இதுவாகும். இப்போர்த் தொழிலை விடுத்து நிலைத்த அருள்வழியைத் தேடு என்பது மதுரைக்காஞ்சிப் பாடலின் அடிக்கருத்தாக விளங்குகிறது.

கப்பல் அழிவில் இருந்துத் தப்புதல்

கடலில் செல்லும் கப்பல் இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகின்றபோது அதில் இருந்து மீண்டெழுந்த மனித குல முயற்சியையும் செம்மொழி நூல்கள் பதிவு செய்துள்ளன.

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு

பலர்கொள் பலகை போல

வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிறையே

(நற்றிணை 30)

இப்பாடல் பரத்தையர்கள் பலரின் பழக்கத்திற்கு உரிய தலைவன் ஒருவனை இடித்துரைக்கும் போக்கில் தலைவி கூறிய பாடலாகும். அதாவது கடல்மரம் எனப்படும் கப்பல் கவிழ்ந்துவிட்டால் அதில் பயணித்தவர்கள் ஏதாவது கைக்குக் கிடைக்கும் பொருளைக் கொண்டுத் தப்பிக்க முயலுவர். அந்நிலையில் ஒரு பலகை கடலில் மிதக்கிறது. அந்தப் பலகையைப் பிடித்து உயிர் தப்பிக்க பலர் முன்னேறுவர். ஒரு பலகையைப் பிடிக்கப் பலர் முயன்றுக் கைப்பிடித்தல்போல தலைவனின் கைகளை பலராகிய பரத்தையர்கள் பிடித்ததாகத் தலைவி இடித்துரைத்துத் தலைவனின் இயல்பை இப்பாடலில் சுட்டுகிறாள்.

இதே நிலையில் ஆதிரையின் கணவனாகிய சாதுவன் மணிமேகலைக் காப்பியத்தில் கடலில் பலகை ஒன்றின் துணை கொண்டு உயிர்தப்புவான்.

"நளியிரு முந்நீர் வளிகளன் வௌவ

ஒடிமரம் பற்றி ஊர் திரையுகைப்ப ''

என்று மணிமேகலை இச்சூழலை விளம்பும். அவன் அவ்வாறு தப்பித்து வேறு ஓர் நிலப்பகுதிக்குச் சென்றுவிடுவான். நாகர் வாழும் மலை அதுவாகும். அங்கு அவன் நாகர்கள் பேசும் மொழி பேசி அவர்களின் அச்சுறுத்தலில் இருந்துத் தப்புவான்.

இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் கடல் அழிவுகளும் , அதில் இருந்து மீண்ட மனித குலத்தின் இயல்புகளும் எடுத்துரைக்கப்படுகின்றன.

ஊழி பெயரினும் தான்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்ப டுபவர் ( திருக்குறள் 989)

என்ற திருக்குறள் தமிழர்களின் பேரழிவு எதிர்ப்பிற்கான ஆணிவேரான குறள் ஆகும். ஊழி பெயர்கின்ற அளவிற்குத் துன்பம் வந்திடினும் தன்னிலை பெயராமல் இருப்பவர்களாக மனிதர்களை வளப்படுத்துவதற்கு, சான்றோர்களாக ஆக்குவதற்கு பேரழிவு மேலாண்மை உதவி வருகின்றது என்பது கருதத்தக்கது.

முடிவுகள்

இவ்வாய்வுக் கட்டுரையின் வாயிலாகப் பின்வரும் முடிவுகள் எட்டப்படுகின்றன.

பேரழிவுகள் அடிப்படையில் இயற்கைப் பேரழிவு, மனிதனால் உண்டாக்கப்படும் பேரழிவு என்று இரு வகைப்படும். இவை இரண்டும் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியன என்பதில் ஐயமில்லை. இவையிரண்டையும் ஒருசேரக் கருதி இவற்றைத் தடுக்க எழுந்த முதல் தமிழ்க்குரல் செம்மொழி இலக்கியமான மதுரைக் காஞ்சியின் குரல் என்றால் அது மிகையில்லை.

கடல் சூறாவளி பற்றிய குறிப்புகளையும், கடல் பேரழிவில் இருந்து மனிதன் தப்பிக்க முயலும் முயற்சிகளையும் தமிழ் இலக்கியங்களில் பரக்கக் காணமுடிகின்றது. மணிமேகலை, நற்றிணை, மதுரைக்காஞ்சி போன்றவற்றில் பேரழிவு தடுப்பு மேலாண்மை பற்றிய செய்திகள் காட்டப்பெற்றுள்ளன.

மதுரைக் காஞ்சியில் மனிதர்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகளைச் சுட்டும்போது அவற்றினைச் சொல்லழுத்தம் கொடுத்துக் காட்டியிருப்பது அழிவின் துயரத்தை சொல்லாலும் பொருளாலும் உணர்த்திக்காட்டுவதாக உள்ளது.

தொடர்ந்த மனித வாழ்வில் பேரழிவுகள் நடைபெற்று வந்துள்ளன. அதிலிருந்து மீண்டு மனிதஉயிர்களும், மற்ற உயிர்களும் எழுந்தே நின்றுள்ளன. இன்னும் எழுந்து நிற்பதற்கான மன, உடல் உறுதிகளை மனித உலகம் பெற வேண்டும் என்பதே பேரழிவு மேலாண்மையின் உயரிய நோக்கமாகும்.

பயன்கொண்ட நூல்கள்

1. சுப்பிரமணியன்.ச.வே.,(உ.ஆ), சங்கஇலக்கியம், எட்டுத் தொகை தொகுதிகள் 1, 2, 3 மணிவாசகர் பதிப்பகம், 2010

2. நாகராசன்.வி. (உ. ஆ) பத்துப்பாட்டு, நியு செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை, 2004
கருத்துரையிடுக