வியாழன், ஜனவரி 20, 2011

புதுக்கோட்டையில் தைப்பூச தீர்த்தவாரித்திருவிழா


புதுக்கோட்டையி்ல் தைப்பூச நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளாற்றங்கரையில் இருமருங்கும் மக்கள் வெள்ளமும் நடுவில் நீர் வெள்ளமும் நிறைய பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரி செய்தருளினர். வெள்ளாற்றின் கரையில் பூசத் துறை என்றே ஒரு துறை உள்ளது. புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் இருந்து தைப்பூச நன்னாளில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்துச் சிவன் கோயில்களின் தெய்வங்களும் ஒருங்குகூடி தீர்த்தவாரி செய்யும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இவ்வாண்டு 20.10.2011 நண்பகல் பன்னிரண்டரை மணி அளவில் இத்தீர்த்தவாரி விழா நடைபெற்றது. வெள்ளாற்றின் கரையின் ஒரு புறத்தில் திருமயம் சார்ந்த பகுதிகளின் தெய்வங்களும், மற்றொரு பகுதியில் புதுக்கோட்டை சார்ந்த பகுதிகளின் தெய்வங்களும் இருக்கத் தீர்த்தவாரி நடைபெற்றது. திருகோகர்ணம் , திருவேங்கை வாசல், புதுக்கோட்டை சாந்த நாத சுவாமி கோயில், திருமயம், கோட்டூர் ஆகிய ஊர்களில் இருந்துத் தெய்வ உருவங்கள் வந்திருந்தன. மக்களும் அதிக அளவில் கூடியிருந்தனர். குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அனைத்து தெய்வங்களி்ன் சார்பில் தீர்த்தவாரி கொள்ளும் சிறுதெய்வ உருவத்துடன் சிவாச்சாரியார்கள் ஆற்றில் முழுக மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி நடைபெற்றது. மேலும் ஒரே நேரத்தில் அனைத்துத் தெய்வங்களுக்கும் தீப ஆராதனை நடைபெற்றது.

மக்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர் பந்தல்கள், பசி தீர்க்க சர்க்கரைப் பொங்கல் வழங்கப் பெற்றது. ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்த காட்சி மிக இனிமையாக இருந்தது. சிறுபிள்ளைகள் ஆற்றைக் கடந்து ஒரு புறத்திலும் மறுபகுதியிலும் உள்ள தெய்வங்களை வணங்கச் சென்ற காட்சி அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தது. மனம் கொள்ளை கொள்ளும் அற்புதப் பெருவிழா தைப்பூச விழா என்றால் அது மிகையாகாது.
கருத்துரையிடுக