திங்கள், ஜனவரி 04, 2010

நுகர்வு கலாச்சாரமும் அதற்கு வள்ளுவர் தரும் மாற்றும்


தற்கால உலகிற்குப் பல பெயர்களை முன்மொழியலாம். அவசர உலகம், இயற்கையைப் பாழாக்கும் உலகம், மரபுகளைப் புறந்தள்ளும் உலகம், நுகர்வு உலகம் இப்படிப் பல பெயர்களை அதற்கு வழங்க இயலும். குறிப்பாக நுகர்வு கலாச்சாரம் என்ற பெரும் சிக்கல் இன்று இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. உலகிலும், உலக மக்களிடத்திலும் நுகர்வுத் தன்மை அதிகமாகி வளர்ந்து வருகிறது.
பல பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. அவை பல நாட்டின் தயாரிப்புகளாக நம் நாட்டிற்குள் அடியெடுத்து வைக்கின்றன. அவற்றை நண்பர்கள், சுற்றியிருக்கிற சொந்தங்கள், அருகிருக்கின்ற வீட்டார் வாங்குகின்றனர். இதன் காரணமாக இந்த வசதியை நாமும் பெற விழைகிறோம். நமக்குத் தேவையில்லாதவற்றைக் கூட நாம் வாங்கிடப் பொருள் செலவு செய்கிறோம். வாங்கியபின் அதனைப் பயன்படுத்தக் கூட நேரமில்லா சூழலில் நம் வீட்டிலும் அப்பொருள் இருக்கிறது என்ற நினைவு முழுமையைக் கொண்டுவருகிறது. இருந்தாலும் இந்த முழுமை வந்து சேர்ந்து சுவடு முடிவதற்குமுன்பே அதாவது இரண்டு வார, அல்லது இரண்டு மாத காலத்திற்குள் அதே வசதியை மேம்படுத்தித் தருகிற மற்றொரு படைப்பு சந்தைக்கு வந்துவிடுகிறது. "நீங்கள் இன்னும் இதற்கு மாறவில்லையா '' என்ற விளம்பரம் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகரச் செய்கிறது.
ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னதாக ஒரு பொருள் கெட்டுப்போனால் அதனைச் சீர் செய்யவே முதலில் எண்ணுவோம். சீர் செய்ய ஆளும் இருந்தார்கள். பல முறை சீர் செய்யப் பட்ட வானொலியில் பாடல் கேட்கும் காலம் அந்தக் காலம். பலமுறை சீர் செய்யப் பட்ட கடிகாரத்தில் மணி பார்க்கும் காலம் அந்தக்காலம். ஆனால் இப்போது சீர்கெட்டுப்போன பொருட்களைத் தூக்கி எறிந்து விடுகிற நிலமை வந்தாகிவிட்டது.
வணிகர்கள் வணிகம் பெருகிட பழைய பொருளைத் தந்துவிட்டு புதிய பொருள்களை மாற்றித்தருகிறார்கள். வாங்கும் சக்தியைப் பெருக்க சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் இது. கெட்டுப்போன எந்தப் பொருளையும் சீர் செய்ய ஆளும் கிடைப்பதில்லை. மேலும் சீர் செய்யப் போகையிலேயே புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள் என்ற அறிவுரையையும் சொல்லத் தயாராகி விட்டார்கள்.
மெல்ல மெல்ல மாதம் தோறும் செலவுகளைப் பெருக்கி, வசதிகளைப் பெருக்குவதான இந்த மாயையில் தற்கால உலகம் தவித்துக் கொண்டு இருக்கிறது. இதுவே நுகர்வுக் கலாச்சாரத்த்ல் மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டு ஆகும்.
இதனடிப்படையில் நோய்வந்து நலிந்து போன குழந்தை, மனைவி, தாய், தந்தை, பாட்டி எல்லோரையும் ஓரங்கட்டிவிடவே எண்ணம் தோன்றும். பொருள்களுக்கு ஏற்பட்ட நிலையே மனிதர்களுக்கும்.
பயன் உண்டோ இல்லையோ வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் மாய வலைக்குள் இப்போது உலகம் சிக்கிக் கொண்டிருக்கிறது. பயன் ஒன்றை மட்டுமே கருதி இந்த உலகம் வேகமாக முன்னேறிவருகிறது. பயனற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அல்லது அவர்களை ஒதுக்கியாக வேண்டிய கட்டாயம் வந்தாகிவிட்டது.
மேற்காட்டிய செய்திகள் மனிதருக்கும் பொருளுக்குமான தொடர்புகள் என்று வகை பிரித்துக் கொள்ளலாம். மனிதருக்கும் மனிதருக்குமான உறவுகளும் இவ்வாறே இருக்கின்றன. மனிதர்கள் சிரிக்க, பேச, மகிழ மறந்து போய் ஓடுகிறார்கள். ஏன் இந்த ஓட்டம். எந்த வேலையை முடிக்க... எந்த வேலையும் முடிவடையப் போவதில்லை. இருந்தாலும் இந்த ஓட்டம் எதற்காக.
கொஞ்ச நேரம் கிடைத்து யாரிடமாவது பேச முனைந்து விட்டால் அவர் நம்மிடத்தில் இருந்து என்ன கிடைக்கும், இவரோடு பேசுவதால் எதாவது பணம் வருமா என்ற நோக்கத்திலேயே பேசுகிறார், பழகுகிறார், சிரிக்கிறார். அப்படி எதுவும் பணம் கிடைக்காது என்று தெரிந்துவிட்டால் எதாவது தகவல் கிடைக்குமா.. அதை எதையாவது திரித்து, மாற்றிக் காட்டி யாரையாவது பழிவாங்க இயலுமா அல்லது யாரையாவது குற்றம் கூற முடியுமா என்ற நோக்கம்தான் இப்போதைய மனித பழக்கத்தில் மிஞ்சிக்கிடக்கிறது. கடை முதலாளி கடைக்கு வருபவரிடம் பேசுகின்ற பேச்செல்லாம் வியாபார நோக்கமுடையதாக இருப்பதைப்போல இந்த நுகர்வு உலகத்தில் ஒவ்வொருவரும் வியாபார ரீதியாக பரிமாற்றங்களைப் பரிமாறிக்கொள்ளவே விரும்புகின்றனர்.
ஒரு நிகழ்வுக்கு ஒருவரை அழைத்தால் அழைத்த அந்த ஒருவர் பின்னால் நடக்கப் போகும் ஒரு நிகழ்விற்கு இவரை அழைத்தாக வேண்டும். ஒரு நிகழ்விற்கு வந்து மொய் வைத்துவிட்டுப்போய்விட்டால் அடுத்து அவரின் வீட்டிற்கு இவர் மொய் எழுதினால்தான் கணக்குச் சரியாகும். ஒருவருக்கு ஒருவர் பாராட்டு விழா நடத்திவிட்டால் பின்னாளில் பாராட்டுப் பெற்ற மனிதர், பாராட்ட முன்வந்தவரைப் பாராட்ட வேண்டிய கடப்பாட்டிற்கு ஆளாகியே ஆகவேண்டும். ஒருவரின் பெருமை கூறும் எழுத்துச்சீலைகளைப் பொது இடங்களில் வைத்துவிட்டால் அதற்கு அவர் பின்னாளில் தக்க நிலையில் சமம் செய்தே ஆகவேண்டும். கொள்வதும், கொடுப்பதுமான உலகத் தொடர்பு இதுவாகிவிட்டது.
தரப்படும் பரிசுகள், பாராட்டுகள் முதலியனவற்றின் நிலை இன்னமும் மோசம். பரிசுகள், பாராட்டுக்கள் தேவைப்படுபவர்க்கு விற்கப்படுகின்றன. அல்லது வாங்கப்படுகின்றன. விருதுகளும், பட்டங்களும் இனிமேல் வழங்கப்படாமல் இருப்பதே நல்லது. இதுபோலவே அனைத்துத் தரப்பு மக்களும் பழகிவிட்டார்கள். இவ்வாறு மெல்ல மெல்ல அனைத்துத் தரப்பாரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டன. அவ்வெதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது ஏமாற்றமே மிஞ்சுகின்றன. ஏமாற்றத்தின் உச்சத்தில் வாழ்க்கையில் வெறுமை புலப்படும்.
இனி தந்தை, தாய், மகன், மகள் உறவுகள் கூட கைமாறு கருதியே வாழ்க்கையை வாழவேண்டி வந்துவிடும். இச்சூழலில் உண்மையான நட்பு, தோழமை எப்படி வளர்ப்பது, இனம் காண்பது என்ற கேள்விக்குப் பதில் தேட வேண்டியிருக்கிறது.
பாரதி கண்ணனைத் தோழனாகக் கொண்டதன் நோக்கம் தனக்கு இணையான ஒரு தோழன் நடப்பு வாழ்க்கையில் கிடைக்காமல் போனதன் ஏமாற்றம்தான் என்றால் அது மிகையில்லை. இதுபோல ஒரு கனவுத் தோழனை, கற்பனை நண்பனை மட்டுமே நாம் தரிசிக்க முடியுமோ. . உண்மை நண்பனைக் காட்டும், கொண்டு தருகிற வழி எது என்றுச் சிந்தித்தால் வள்ளுவப் பெருந்தகை வழிகாட்டுகிறார்.
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். (குறள் 813)
இந்தக் குறளில் முவர் ஒரே நேர்நிலையில் வைத்துப்பார்க்கப் படுகின்றனர்.
கள்வர், பெறுவது கொள்வார், உறுவது சீர்தூக்கும் நட்பினர் என்ற முவரும் தீ நட்பிற்குச் சான்றுகள் என்கிறார் வள்ளுவர். கள்வருடன் விரும்பி நட்புக் கொள்ளக் கூடியவர்கள் எவருமில்லை. கொடுக்கின்ற பொருளை எண்ணியே நம்மிடம் வருகின்ற நண்பர்கள், இவரோடு பழகினால் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்தே வருகின்ற நண்பர்கள் ஆகியோரும் கள்வருடன் வள்ளுவரால் ஒப்பு வைக்கப்படுகின்றனர்.
தானே உழைக்காது பிறர் உழைப்பை, பிறர் செல்வத்தை எடுத்துக் கொண்டு வாழ்பவர்கள் கள்வர்கள். அவர்கள் போலவே பயன்கருதி நட்பு பாராட்டும் நண்பர்களும் தன் உழைப்பில் வாழாது பிறரைச் சார்ந்து, பிறர் செல்வத்தை விரும்பி வாழ்கின்றனர். எனவே அவர்கள் கள்வருக்கு நேராக வைக்கத் தக்கவர்கள்.
நண்பர்களின் நோக்கத்தை அறிந்து கொண்டு அவர்களைத் தோழமை பாராட்டிக் கொள்ளவேண்டும் என்பது வள்ளுவப் பெருந்தகையின் வழிகாட்டுதலாகும்.
குறிப்பாக "பெறுவது கொள்வார்'' என்பதற்கு விலைமகளிரை விளக்கமாக அனைத்து உரையாசிரியர்களும் கொள்ளுகின்றனர். இதனை உற்று நோக்கினால் கொடுப்பது கொள்வார் ஆடவரில் இருப்பது இல்லையா? என்ற கேள்வி எழும். எனவே இத்தொடருக்கு மனிதர்கள் எனப் பொதுவாகக் கொள்வதே பொருத்தம்.
வாழ்கின்ற வாழ்க்கையில் கிடைப்பதை எண்ணியே வரும் காக்கைக் கூட்டத்தை கடிந்து ஒதுக்கி, நல்ல நண்பர்களைப் பெற்றால் இந்த வணிக உலகை, நுகர்வு உலகை நிமிர்த்த இயலும். இதற்கு வள்ளவமும் வழிகாட்டுகிறது. தகவல் திரிப்பையும், தேவையற்ற பொருள்களை வாங்குவதைத் தவிர்த்தலும் இன்றைய இக்கட்டுகளில் இருந்து மக்களை விடுவிக்கும். நுகர்வின் ஆதிக்கத்தைக் குறைத்து இயல்பை, மனிதப் பண்பை மிகுவிக்க உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: