ஒவ்வொரு படைப்பும் தன் காலச் சமுகச் சூழலை உளப்படுத்தியே வெளிப்படுகின்றது. படைப்பிலக்கியங்கள் தன் காலத்தின் இலக்கியப் பதிவாக விளங்குவதற்கு இந்தப் பண்பே தலையாய காரணமாக அமைகின்றது. ஒருவரிப் படைப்பானாலும், அல்லது அதைத்தாண்டிச் சிலவரிகள் கொண்ட படைப்பாயினும், சில காண்டங்கள் கொண்ட படைப்பாயினும் இந்தச் சமுக வெளிப்பாட்டுத்தன்மை குறிக்கத்தக்க வலிமையை அவ்வவ்விலக்கிய வடிவத்திற்குத் தந்துவிடுகின்றது.
விரக்தியையும், ஒரு பக்கக் காதலையும் பாடி நிற்பன புதுக்கவிதைகள் என்ற விமர்சனம் பொய்யானது என்பதை புதுக்கவிதைகளும் நிருபித்து வருகின்றன. புதுக்கவிதைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வோரும் நிருபித்து வருகின்றனர்.
தமிழ்ப்புதுக்கவிதைகளில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு என்ற நூலினைக் கண்ணுறும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏறக்குறைய
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட புதுக்கவிதைத் தொகுதிகளை ஆராய்ந்து அவற்றில் இருந்து பெறப்பட்ட சுற்றுச்சூழல் சிந்தனைகளை, விழிப்புணர்வுகளை, சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் கேடுகளை, அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய முயற்சிகளைத் தெள்ளிதின் இந்நூல் ஆராய்ந்து எடுத்துரைத்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் முனைவர் மு. அருணாசலம் அவர்கள் கவிதைகளை ஆராய்ந்ததோடு தற்காலத்தில் சுற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள அரசின் கவனத்தையும் எடுத்துக் கொண்டு நூலை ஆக்கியுள்ளார்.
அரசும் சட்டங்களும் முயன்றாலும் மனித சமுகம் சுற்றுச் சூழலைப் பாழாக்கி வருவதை பல இடங்களில் வருத்தத்தோடு புதுக்கவிதைகள் பதிவு செய்துள்ளன.
ஞானசம்பந்தர் காலத்தில் ஆறாக ஓடிய கூவம் இன்று சாக்கடைச் சகதியாகிவிட்டது. "கூவம் நதிக்கரையில் திருவேர்குளம், இளம்பியன் கோட்டுர் என்னும் ஊர்கள் அமைந்துள்ளன. இங்குள்ள சிவன் கோயில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம். ஆலயங்கள் கூறும் இந்தவரலாறு நதியின் நூற்றாண்டு கால தொன்மையை நினைவு படுத்துகிறது..... நதிகளிலியே மிகவும் மாசடைந்த நதிகளில் முதலிடம் கூவத்துக்குத்தான் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று கூறுகிறது '' (பக் 37) என்று சரித்திர பின்னணி முதல் சமகால அறிவியல் பின்னணி வரையான செய்திகளுடன் புதுக்கவிதைகளின் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுக் கோணத்தினை இவ்வாய்வு செய்துள்ளது.
மண்ணை/ ஊடுருவிப் / புதுப்பிக்கும்/ மண்புழு/ பாலித்தீன் பை/ ஸ்பரிசத்தில் / மரணமெய்தியது/ (சுகன் பூங்சாலி) என்று பல நிலைகளில் சுற்றுச் சூழல் கேட்டை வலியுறுத்தும் கவிதைகளைக் கண்டு தேடி புதுக்கவிதைகளின் பாடுபொருளுக்கு ஊட்டம் கொடுத்திருக்கிறது இவ்வாய்வு.
காற்று மாசுபாடு, நீர்மாசுபாடு, அணுமாசுபாடு, பாலிதீன் மாசுபாடு போன்ற மாசுக்களின் கொடுமைகளைப் புதுக்கவிதைகள் வழியாகக் கண்டு இவ்வாய்வு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
நகர்மயமாதல், காடுகள் அழிதல், மரங்களின் அழிவு போன்றவற்றால் இந்தப் புவி பெற்றுள்ள வெப்பத்தின் அளவையும், அதனால் ஏற்படும் தீமையையும் கருத்தில் கொண்டு புதுக்கவிதைகள் நோக்கப் பெற்றுள்ளன.
குறிப்பாக அடிப்படையான பல சுற்றுச் சூழல் செய்திகள், இந்திய அரசியல் சட்டங்கள், அரசாங்க நடைமுறைகள் தேர்ந்து எடுத்துத் தரப் பெற்று அதன் வழியில் ஆய்வு சென்றிருப்பது நல்ல முறைமை. ஆய்வின் தரத்தையும், உலகின் தரத்தையும், புதுக்கவிதையின் தரத்தையும் முன்னேற்றும் நல்ல நூல் இதுவாகும்.
(தமிழ்ப் புதுக்கவிதைகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முனைவர் மு. அருணாசலம்., சிவகுரு பதிப்பகம்,7/10 கிழக்குச் செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை12. 2009, விலை. ரு. 200)
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக