சனி, மே 24, 2008

தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)


தமிழ் ஒரு மொழி மட்டும் அன்று. அது தமிழ் இனத்தின் அடையாளம். தமிழரின் பண்பாடு,கலை,அரசியல், நாகரீகம் முதலானவற்றின் ஒட்டு மொத்த கூட்டு அடையாளத்தின் பெயர் தமிழ். இந்தக் கூட்டு அடையாளம் பழமையால், செழுமையால், மரபால் உயர்வைத் தமிழர்க்குத் தந்து கொண்டுள்ளது. இதன்மூலம் உலகில் தனித்தன்மையைத் தனித்த அடையாளத்தைத் தமிழர் பெற்று வருகின்றனர். இந்த அடையாளம் என்றைக்கும் நிலைக்க வேண்டும் என்பது அனைத்துத் தமிழ் மக்களின் ஆவல்.
ஆனால் பல தலைமுறைகள் கடந்து காலவெள்ளத்தில் நீந்தி வந்திருக்கும் தமிழ்,இன்னும் நூறு ஆண்டுகளுக்குக் கூட நிலைத்து நிற்காது என்று ஆய்வுகள் தம் முடிவுகளை அறிவிக்கின்றன. தமிழின் தேய்மானம் தொடங்கி விட்டதோ என்ற ஏக்கத்தில் இக்கட்டுரை சில செய்திகளை முன்வைக்கிறது.
மொரிசியஸ், பிஜு தீவுகளில் ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். அவர்களோடு தமிழும் இருந்தது. இன்றைக்கு அங்கெல்லாம் தமிழர்களின் பரம்பரையினர் வாழ்கின்றனர். தமிழ் என்ற கூட்டு அடையாளம் கேள்விக்கு உள்ளாகி விட்டது.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழ்த் தேசங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள், பொருளாதார இருக்கங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழரை மூச்சு விட வைக்கும் என்ற பெருங்கவலை நாள்தோறும் எழுந்து எழுந்து மெலிவடைய வைக்கின்றது.
தமிழ்நாட்டில் இன்றைக்கு உள்ள குழந்தைகள் தாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஆங்கிலத்தில் உரையாடி மகிழ்கிறார்கள். தமிழ் கடினமான பாடங்களுள் ஒன்று என்று சொல்வது அவர்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
இனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்நெருக்கடியில் தமிழ் தேயத் தொடங்கி விட்டதாகத் தான் உணர முடிகிறது.
ஒரு தமிழகத் தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுவருகிறது. தமிழ்ப் பேசு, தங்கக்காசு என்ற பெயரில் நடக்கிறது அந்நிகழ்ச்சி. தமிழகத்தில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோக்கில் அமைக்கப் பட்டுள்ள நிகழ்ச்சி இது.
இந்நிகழ்வின் முதல் சுற்று தமிழைத் தவறின்றிப் படிக்க வேண்டும். கொடுக்கப்படும் தமிழ்ப்பகுதி பெரும்பாலும் நாற்பதாண்டு கடந்த புலவர் தம் தமிழ்ப்பகுதி. ஏறக்குறைய தனித்தமிழ்ப்பகுதி. அதனைப் படிப்பதற்குள் தமிழ் மக்கள் படும் பாடு பெரும்பாடு. நடுவராக இருப்பவர் பல தடங்கல்களுக்கு இடையில் இவர் தனக்கான தமிழ்ப்பகுதியைப் படித்து முடித்துவிட்டார் என்பதையே அடிக்கடி சொல்ல நேர்கிறது. இதன்மூலம் என்ன தெரிய வருகிறது. தமிழர்கள் தவறின்றித் தமிழ் படிப்பதைக் கூட தேய்மானத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள் என்பதுதான் தெரிய வருகிறது.
இப்போட்டியின் அடுத்த சுற்றுக்கள் பொருளற்றதாகவே எனக்குப் படுகின்றன. பொருளற்ற ஒரு தொடரைப் பத்து முறை சொல்லச் சொல்லி போட்டியாளரைக் குழந்தையாக்கி வேடிக்கை பார்ப்பது, ஆங்கிலச் சொற்களுக்கு மொழிபெயர்ப்பை வேண்டுவது, உரையாடலில் சில சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லமால் இருப்பது- இவ்வாறு நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர் தங்கக் காசு பெறுகிறhரே அன்றி தமிழை வளர்த்தாரா, வளர்ப்பாரா என்றால் கவலையே மிஞ்சும்.
மொழி என்பது மக்களின் பயன்பாட்டில் இருக்கும் வரை இறப்பை எட்டுவதில்லை. தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் தமிழ் மக்களின் பயன்பாட்டில் அது தேய்வு பெற்று வருகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
பேசும் பேச்சில், திரைப்படப்பாடல்களில் அளவுக்கு அதிகமாக வேற்றுச் சொற்கள் நுழைந்துவிட்டன. அவையன்றித் தமிழ் இனி தனித்து நிற்க இயலாது.
பண்பாட்டில் வேற்றுமைகள் பெருகிவிட்டன. தமிழர்களின் தனித்த பண்பாடு என்று தூக்கிப் பிடித்த விருந்து, விழாக்கள் எல்லாம் தேய ஆரம்பித்துவிட்டன. தமிழரின் கலைகளை வளர்க்க ஆட்கள் இல்லை. தெருக்கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து எல்லாம் தேய்ந்து போய்விட்டன. மானாடி-மயிலாடி அதற்கு தமிழரல்லா நடிகைகள் நடுநாயகமாக வீற்றிருந்து நடத்தும் நிகழ்வுகள் இப்போது தமிழகக் கலைச்சந்தையில் வீதி வீதியாக வலம் வரத் தொடங்கிவிட்டன.
தமிழ் இலக்கிய வகைமைகளில் ஒரு தேக்கம் தொடங்கி விட்டது. புதுப் புதிதாய் என்றைக்கும் இலக்கிய வரவுகளை ஏற்ற தமிழ்த்தாய் தேக்கத்தில் நிற்கிறாள்.கதை என்னும் வடிவம் - சிறுகதை, ஒருபக்கக்கதை, ஒரு நிமிடக்கதை, ஆறுவரிக்கதை அத்தோடு நின்று போய்விட்டது. கவிதை- மரபு, புது, ஐக்கூ, குக்கூ, சென்ரியு இத்தோடு தேங்கிவிட்டது. நாவல், குறுநாவல், பாக்கெட் நாவல் என சுற்றிச் சுற்றி அதே வந்து கொண்டிருக்கிறது. கட்டுரை புதுமையே பெறாமல் பூத்துப் போய்விட்டது.
காலம் காலமாய் தனிப்பாடல்,காப்பியம், காவியம், இனியது, இன்னாதது என்று வளர்ந்து வந்த தமிழ் உரைநடையில், உரைநடையால் சிக்குண்டு வளர வழி தேடிக் கொண்டிருக்கிறது. யாப்பு நிலையில் இனி கவிதை வடிக்க ஆளைத் தேட வேண்டும். அருணகிரிநாதர் சந்தம் எழுத ஆளே இருக்காது. ஏன் படிக்கவே ஆள் இருக்காது. பரணையில் பழைய இலக்கியங்கள் காணாமல் போய்விடும். நூற்றாண்டு காலமாக தமிழில் புதிய வகைமை எதையாவது தோற்றுவித்து இருக்கிறோமோ என்ற கேள்விக்கு எந்த இலக்கியவாதியிடமும் பதில் தற்போது இல்லை.
தமிழை வளர்க்க வேண்டிய அமைப்புகள் தொய்ந்து போய்விட்டன. தமிழகத்தில் அரசு நிறுவிய தமிழ் வளர்ச்சி நிறுவனங்களின் நிலை இன்னும் மேம்படுத்தப் பட வேண்டும்.
தமிழ்ப்பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) தமிழ் ஆய்வுகளுக்காக மட்டும் தொடங்கப் பெற்ற நிலை மாறி தற்போது அது அஞ்சல் வழியில் பல படிப்புகளை அறிமுகப்படுத்தி தன் பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ள முன்வந்துவிட்டது. தமிழ் வளர்ச்சித் துறை (தமிழக அரசு) கோப்புகளில் தமிழ் ஒப்பம் இருக்கிறதா என்று தன் மாவட்ட அதிகாரிகளை வைத்துக் கொண்டு சரிபார்ப்பதில் தன்நேரத்தைச் செலவு செய்து கொண்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்(சென்னை) பல புதிய வெளியீடுகளை தான் புதிதாய் இருக்கும் போது செய்தது. அதில் பணிபுரிவோர்கள் தங்களின் ஓய்வூதியத்திற்கே பக்கம் பக்கமாய் எழுதி அதனைப் பெறhமலே ஓய்வு பெற்றுவிட்டார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தன் எழுத்து உரு எது என்பதிலேயே குழப்பத்தை மேற்கொண்டுள்ளது. புதிதாக வந்துள்ள செம்மொழித் தமிழ் தமிழுக்காக முப்பது கோடி என்ற வரேவற்பு வாசகத்தோடு நின்று போய்விட்டது. அது சென்னைக்கு வரவேண்டும் என அதில் வேலை பார்க்கும் மூத்த ஓய்வூதியம் பெறும் தமிழறிஞர்கள் வேண்டுகோள் விடுத்த வண்ணமாக உள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கான இருக்கை, உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை என்று பல கனவுகளைத் தமிழ்ப்படிக்க வரும் மாணவர்களிடம் எடுத்துவிட்ட தமிழாசிரியர்கள் தங்கள் கனவெல்லாம் கால்வாசிகூட நிறைவேறாது என்று ஓய்ந்து போய்விட்டார்கள்.
இனியும் வேண்டாம் இந்தத் தொல்லை என்று தமிழைப் படிக்கவும், தமிழைப் பேசவும், தமிழை எழுதவும் மறக்க முயல்கிறார்கள் தமிழர்கள்- மாணவர்கள். பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் தமிழ் புணர்ச்சி விதிகளை கோனார் குறிப்பேட்டின் மூலமாக மனனம் செய்வதில் அந்த மாணவர்கள் நொந்து போகிறhர்கள். அத்தோடு தீர்க்கப் பெறுகிறது அவர்களின் தமிழ் ஆர்வம். அறிவில் கடைக்கோடியில் எதுவும் கிடைக்காமல் கிடைத்ததைப் படிக்க வரும் மாணவக் கூட்டம் தமிழை- பட்டப்படிப்பு நிலையில் தமிழை வளர்க்க முயல்கிறது.
இதையும் தாண்டி அஞ்சல் வழி தமிழ்ச்சேவையை உடனடியாக நிறுத்தும் ஆணை வரும் நாள் நன்னாள். அதில் படிக்க வருபவர்களின் நோக்கம் பணிமேம்பாடு பெறுவது. ஆசிரியப் பயிற்சி முடித்த இளம் ஆசிரியர்கள் தேர்வது தமிழ்ப்படிப்பைத்தான். ஏனெனில் அதுதான் கடினப்படாமல், பயிற்சி வகுப்பிற்குப் போகாமல் தேர்ச்சி பெற இயலும். இப்படிப் படித்தவர்கள் சில ஆண்டுகளில் தமிழ் ஆசிரியர்கள் ஆகிவிடும் கட்டாயம் வந்துவிடும். இவர்கள் தானும் படிக்காமல் தன்னிடம் படிக்க வரும் மாணவர்களையும் படிப்பிக்காமல் தமிழே தெரியாத உலகிற்கு இவர்களே வழிகாட்டி.
இவ்வாறு தமிழின் துறைதோறும் மலினம் பரவி விட்டது. உழைக்காமல் உணவு உண்ணும் துறையாக- தமிழ் தரம் கெட்டுப் போய்விட்டது.
இந்தக் கவலை விரக்தியால் அல்ல. வீறு கொண்டு தமிழ்ச்சமு்கம் எழ வேண்டும் என்பது கருதியே. இதைச் சொலவதன் மூலம் பல கேள்விக்கு நான் அல்லது என் கட்டுரை உள்ளானால் அதுவே நாளைய தமிழரின் உறக்கம் கலைந்த உன்னத நிலையாகும்.

2 கருத்துகள்:

இராம.கி சொன்னது…

அன்பிற்குரிய பழனி,

மிகவும் தேவையான ஒரு பதிவு. படித்தவர்கள் உறுதியாக உன் ஆதங்கத்தைப் புரிந்து கொள்வார்கள். இதே ஆதங்கத்தைப் பலகாலம் நான் இணையத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

இந்தக் குமுகாயத்தில் இருக்கும் பெரும்நோய்களில் தமிங்கிலமும் ஒன்று என்று புரிந்து கொள்ளாமலேயே பலர் இருக்கிறார்கள். இதன் உள்ளடக்கத்தை ஓர்ந்து பார்த்துத் தங்களால் ஆன முயற்சியைப் பலரும் மேற்கொண்டால் தமிழ் என்னும் மொழி அடுத்த பத்தாண்டுகளில் கொஞ்சமாவது நிலைக்கும். இல்லையென்றால் அது போயே போயிந்தி!

தமிழாசிரியர்கள் பலரும், வருமானம் கிடைக்கிறது என்பதற்காக, பட்டிமன்றம், கவியரங்கம், வழக்காடு மன்றம் என்று பொழுதை வீணே கழிப்பது கண்டு எங்களைப் போன்றோர் பெரிதும் வருந்துவது உண்டு. தமிழாசிரியர் என்பவர் மதிப்பிற்குரிய இடத்தை 1960 களில் பெற்றிருந்தார்கள். எண்பதுகளில் இருந்து ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியில் தமிழாசிரியர்கள் திரைபடம், தாளிகைகள், பொது இடங்கள் என எங்கும் கேலிப்பொருளராய் ஆகிப் போனது மிகுந்த வலியைத் தருகிறது.

இனியாவது, தமிழாசிரியர்கள் இந்தப் பொழுதைக் கழிக்கும் வேலையைக் குறைத்துக் கொண்டு, தங்களுக்கென்று இருக்கும் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து தமிங்கிலம் என்னும் புதுமொழி பரவாது தடுத்து, தமிழ் உணர்வைப் பரவலாய் ஊட்ட வேண்டும். [தமிங்கிலம் என்பது தமிழில் இருந்து கிளைக்கும் ஒரு புதிய மொழி என்றே நான் கொள்ளுகிறேன். மலையாளம் 400/500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது. இது நம் கண்களுக்கு முன்னால் எழுகிறது. அவ்வளவு தான் வேறுபாடு.]

உன்னைப் போன்ற இளம் இலக்கிய வாதிகள், தமிழ்ப் பேராசிரியர்கள் தமிங்கிலம் ஒழிப்பதில் முன் முனைப்புக் கொண்டு சென்றவிடம் எல்லாம் நோய்நாடி, நோய்முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி, வாய்ப்பச் செய்யுங்கள்.

உன் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அன்புக்குரிய ஐயா, வணக்கம்.
நான் மலேசியாவிலிருந்து இந்த மறுமொழியை எழுதுகின்றேன்.

தங்களின் கட்டுரையில் தமிழில் நிகழ்ந்துவரும் உள்வீழ்ச்சியைப் பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள். படித்து முடித்த வேளையில் மனதில் கவலைக் கப்பிக்கொண்டது.

தமிழ்ப் பிறந்த மண்ணிலேயே தமிழுக்கு இத்துணை வீழ்ச்சிகள் நிகழ்ந்துவருவது வேதனையிலும் வேதனை ஐயா!

கடல் கடந்து வாழும் மலேசிய மண்ணிலும் தமிழுக்கு எதிரான சில தாக்குறவுகளைச் சந்தித்தே வருகின்றோம். தமிழ் படுபாதாளத்தை நோக்கி மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது என்பது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும்.

எனினும், தமிழுக்கு ஆக்கமான பணிகள் உலகமெங்கிலும் உயிர்கொண்டுவிட்டன என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். தமிழுக்கு ஒருவேளை இது வீழ்ச்சி காலமாக இருக்கலாம். ஆனால், இதுவே அழிவுக் காலமாக இராது என்பது என்னுடைய நம்பிக்கை.

தமிழ் மீண்டும் எழுச்சி பெறும்! தமிழ் மீண்டும் உலகவலம் வரும்!

அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்