புதன், மே 07, 2008

சேவல் திருத்துவசம்

சேவல் திருமுருகனின் கொடியாகும். பெரும்பாலும் ஊர்திகளே கொடியாக இருக்கும் நிலையில் திருமாமுருகனுக்குக் கொடி வேறும் ஊர்தி வேறும் ஆயின. சேவல் 'கொக்கு அறுத்த கோமானே' எனத் தன் வாயால் எப்போது முருகப் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றது. கொக்கு என்பது மாமரம். அந்த மாமரமாக நின்ற சூரபதுமனை அழித்த கோமான் முருகன். அவ்வாறு அழிக்கும்போது தோன்றியன மயில் வாகனமும், சேவல் கொடியும். இவ்வகையில் தான் தூய்மையான நிலையையும், இறைவனின் திருப் பெயரையும் மறவாமல் கூறிக் கொண்டே இருக்கின்றது சேவல்.
இச்சேவல் கொடியை மையமாக வைத்து அருணகிரிநாதர் சேவல் விருத்தம் பாடியுள்ளார். பதினோரு பாடல்களை உடைய இப்பகுதி பயம் நீக்கும். ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு முதலியவற்றhல் ஏற்படும் ஏதங்களை விரட்டும் தன்மை வாய்ந்தது. எம பயத்தையும் போக்கும் வல்லமை இதற்கு உள்ளது. இவ்வகையில் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நிலையில் பெருமை பெற்றது சேவல் விருத்தம் ஆகும். இதனுள் பல அரிய கருத்துகளைத் தொகுத்து் வைத்துள்ளார் அருணகிரிநாதர்.
மாயை எனும் இருள் வயப்பட்டு உலகம் தூங்குகிறது. இம்மாயையை விரட்டி ஒளியின் வருகையை உலகிற்கு உணர்த்தும் அரிய பணியைச் சேவல் தினந்தோறும் செய்து வருகின்றது. இது நடைமுறை. இந்நடைமுறையைச் சைவ சித்தாந்தக் கருத்துடன் இணைத்து அருணகிரிநாதர் சேவலை வாழ்த்துகிறார்.
உலகில் அநுதினமும் வரும் அடியவர்கள் இடர் அகல உரிய பரகதி தெரியவே உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளியே கலகமிடும் அலகைக் குறள் மிகு பணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக் கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து சிற கைக் கொட்டி நின்று ஆடுமாம் (பாடல் .1)
எனச் சேவலின் ஆடலைத் தெரிவிக்கின்றார் அருணகிரிநாதர். இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளி நிற்கும் சேவலின் நிலை சித்தாந்த வயப்பட்டதாகும். உலகில் ஒரே இருள்தான் உண்டு. அவ்வாறு இருக்கையில் அருணகிரிநாதல் இருள்கள் என பன்மைப்படுத்திக் கூறுவதன் நோக்கம் என்ன என்றுச் சிந்தித்தால் அது விளங்கும். மாயை, கன்மம், ஆணவம் என்ற இருள்கள் கவிவதன் மூலம் நல்வினை, தீவினை என்ற இரு வினைகள் எழுந்து உயிரை நிலைபெறச் செய்யாது. ஆண்டவனை அடையச் செய்யாது அலைத்துக் கொண்டிருக்கின்றன என்ற கருத்தை உணர்த்துவதற்காகவே அருணகிரிநாதர் இப்பாடலில் இருள்கள் எனக் குறித்துள்ளார்.இவ்விருளைக் கெடுப்பது சேவல் என்று பெருமைப்படுத்தப் படுகிறது.

இச்சேவல் எம பயம் நீக்கும் என மற்றொரு பாடலில் காட்டுகின்றார் அருணகிரிநாதர்.
கரி முரட்டடி வலைக் கயிறு எடுத்து எயிறு பற் களை இறுக்கியும் முறைத்துக் கலகமிட்டு எமன் முன் கரம் உறத்துடரும் அக் காலத்தில் வேலும் மயிலும் குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வரக் குரல் ஒலித்து அடியார் இடரைக் குலைத்து முட்ட வருமாம் (பாடல் 3.)
என்று எமன் வருகையில் குரல் தந்து உயிர்களை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் பெருமை பெற்றதாகச் சேவல் விளணங்குகின்றது.
இச்சேவலை வணங்குவதால் பல நோய்களும் முருகன் அருளால் முகனடியார்களுக்கு ஏற்படாது. ஏற்பட்டாலும் வருத்தாது அவை ஒழியும் என உறுதி பட மற்றொரு பாடலில் அருணகிரிநாதர் காட்டுகின்றார்.
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம் மகோதரம் பெருவியாதி வாத பித்தம் சிலேற்பனம் குட்ட முதலான வல்ல பிணிகளை மாற்றியே சீறாத ஓராறு திருமுகம் மலர்ந்து அடியார் சித்தத்தில் இருக்கும் முருகன் சிலைகள் உருவிட அயிலை விடு குமர குருபரன் சேவல் திருத்துவசமே (பாடல் 7)
என்பதில் முயலக நோய் (காக்காய் வலிப்பு), வயிற்று வலி, குன்மம் (வயிறு உலைச்சல்), மகோதரம் (பெருவயிறு), பெருவியாதி (பால் வினை நோய்கள்) வாதம், பித்தம், சிலேட்டுமம், குட்டம் போன்ற வல்ல பிணிகளை மாற்றும் போக்கினை உடையது முருகப் பெருமானின் அருள். இக்காலத்தில் இப்பாடல் மிகு தேவையான பாடலாகும். ஏனெனில் நோயில்லா மனிதரில் உலகில் இல்லை. எனவே அனைவரும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இது என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு சேவலை வணங்கினால் ஏற்படும் நன்மைகள் இப்பதிகத்தில் அதிக அளவில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இச்சேவல் விருத்தத்தில் சம்பந்தர், பிரகலாதன் பற்றிய குறிப்புகளும் அருணகிரிநாதரால் காட்டப்பெற்றுள்ளன.
அரிய கொற்கையன் உடற் கருகும் வெப் பகையை உற் பனம் உரைத்து அதம் மிகவும் ஏதம் அமணரைக் கழுவில் வைத்தவரும் மெய்ப்பொடி தரித்து அவனி மெய்த்திட அருளதார் சிரபுரத்து அவதரித்து அமுதத் தினமணிச் சிவிகை பெற்று இனிய தமிழைச் சிவன் நயப்புற விரித்து உரை செய் விற்பனன் இகல் சேவல் திருத்துவசமே (பாடல்.3)
என்ற பாடலில் ஞான சம்பந்தப் பெருமான் சிரபுரத்தில் பிறந்த நிலை, பாண்டியனின் வெப்பு நோய் தீர்த்த வரலாறு, சிவிகை பெற்ற அருள் செயல், சிவன் நயப்புற தமிழ் பாடியமை ஆகியன நிகழ்வுகள் தொட்டுக் காட்டப் பெற்றுள்ளன. திருநீற்றுப் பதிகம் என்ற சொல் மாலையால் நோய் நீங்கிய தன்மை போல சேவல் விருத்தப் பாடல்களைப் பாடுவோருக்கும் நோய் நீங்கும் என்ற அடிப்படையில் இவற்றை இவ்விருத்தத்தில் அருணகிரிநாதர் கையாண்டிருக்க வேண்டும். எவ்வகை ஆயினும் சம்பந்தப் பெருமான் குழந்தையாக நின்று இறைவனைப் பாடியவர். முருகப்பெருமானின் குழந்தையும் நிலையும் இவரின் குழந்தை நிலையும் அருணகிரிநாதருக்கு மகிழ்வைத் தந்திருக்கின்றன என்பது உறுதி.

மற்றொரு பாடலில் பிரகலாதன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. குழந்தைகள் மீது ஆறா அன்பு உடைய நிலை மனிதர்களுக்கு உரியது. குழந்தைத் தெய்வங்கள் மீது தீராப் பற்று உடையவர் அருணகிரிநாதர் என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி செய்கின்றன.
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர சிங்கமாய் இரணியன் உடல் சிந்த உகிரில் கொடு பிளந்த மால் மருகன் சேவல் திருத்துவசமே (பாடல்எண். 6)
என்ற பாடலில் பிரகலாதனின் செயல் குறிப்பாகக் காட்டப் பெற்றுள்ளது.
இவை தவிர பல புராணக் கதைகளையும் இப்பகுதியில் நினைவு கூர்கிறார் அருணகிரிநாதர். அவற்றில் ஒன்று பின்வருமாறு,
தேன் ஆன மைக்கடலின் மீனானவற்கு இனியன் சேவல் திருத்துவசமே (பாடல். 5)
நந்தி தேவர் மீனாக மாறிய புராணச் செய்தி இங்கு நினைவு கூரப் பெற்றுள்ளது. ஒரு முறை கயிலையில் சிவன் உபதேசித்துக் கொண்டிருக்கும்போது உமை அருகிருந்த பொழிலில் உள்ள மீனின் மீது நாட்டம் செலுத்தினாள். இதனால் கோபுமுற்ற பெருமான் உமையை மீனவப் பெண்ணாகப் பிறக்கச் செய்தார். உடன் இருந்த நந்தியை மீனாகப் போகும்படி சபித்தார். மீனவத் தலைவன் மகளாக உமை பிறக்க எவர்க்கும் அகப்படா மீனாக நந்திதேவர் பிறந்தார். இவ்வகப்படா மீனைப் பிடிப்பவருக்குத் தன் மகளைத் தருவதாக மீனவத் தலைவன் போட்டி வைத்தான். அப்போது பெருமான் செம்படவனாக வந்து இருவரையும் ஏற்றhர் என்ற புராணக் கதை இங்கு அருணகிரிநாதரால் எடுத்துக் காட்டப் பெற்றிருக்கிறது.
இதுபோல தமிழின் பெருமையையும் அருணகிரிநாதர் இவ்விருத்தப் பாடல் ஒன்றில் காட்டியுள்ளார். முருகன் தமிழ்க் கடவுள். அகத்தியர்க்குத் தமிழ் உரைத்த கடவுள். சங்கம் ஏறிப் பாடல் ஏற்ற கடவுள். அவ்வகையில் முருகனின் தமிழார்வ நிலையைப் பின்வரும் பாடல் காட்டுகின்றது.
. . . புகழ்ச் செட்டி சுப்ரமணியன் செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி தித்திக்கும் முத்தமிழினைத் தெரியவரு பொதிகை மலை முனிவர்க்கு உரைத்தவன் சேவல் திருத்துவசமே (பாடல் 4)
என்ற பாடலில் செட்டி சுப்பிரமணியன் என முருகன் வணிக மரபு சார்ந்தவனாகக் காட்டப் பெறுகிறhன். மேலும் மொழி தித்திக்கும் முத்தமிழ் எனத் தமிழ் சிறப்பிக்கப் பெறுகிறது. பொதிகை மலை முனிவரான அகத்தியர்க்குத் தமிழ் உரைத்த செய்தியும் இங்குக் காட்டப் பெறுகின்றது. அவ்வளவு தமிழ்ச்சுவை உடைய முருகனின் கையில் இருப்பது சேவல் கொடி என்று கொடியைச் சிறப்பிக்கின்றார் அருணகிரிநாதர்.

அடுத்து முருகன் உறையும் இடங்களைப் பட்டியல் இடுகிறார் அருணகிரிநாதர்.
.. . குன்றுதோறாடல் பழனம் குலவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங் குன்றிடம் திருவேரகம் திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித் தெறித்திடும் செந்தில்நகர் வாழ் திடமுடைய அடியார் தொழு பழையவன் குலவுற்ற சேவல் திருத்துவசமே (பாடல் 9)
அடுத்த பாடலில் மயில் ஆடும் முறைமையை வியக்கிறhர்.
திகுடதிகு டதிதிகுட தகுட தித குடதிகுட செக்கண செக்கண எனத் திருநடனம் இடு மயிலில் வரு குமர குருபரன் சேவல் திருத்துவசமே (பாடல் 10)
நிறைவுப்பாடலில் முருகனின் திருப்பெயர்களைச் சொல்லி அருணகிரிநாதர் மகிழ்கிறhர்.
கனக மயில் வாகனன் அடல்சேவகன் இராசத இலக்கண உமைக்குஒரு சிகாமணி சரோருமுகச் சீதள குமார கிருபாகர மனோகரன் வேல் திருத்துவசமே.(பாடல் 11)
இப்பாடலில் மயில்வாகனன், அடல் சேவகன் (வலிமை மிக்க வீரன்), உமை சிகாமணி, சரோருக முகன் (தாமரை முகன்), சீதளன் (தன்மையான குணத்தவன்), குமாரன் ( இளமையானவன்), மனோகரன் (அடியார்க்கு என்றும் மகிழ்வைத்தருபவன்) என்று முருகனின் நாமங்களைப் பலபட பேசுகின்றார் அருணகிரிநாதர். இவ்வகையில் சேவல் விருத்தம் முருகனின் படைவீடுகள், முருகனின் மயில்வாகனச் சிறப்பு, முருகனின் நாமங்கள் முதலனவற்றை எடுத்துக் காட்டி அதன்வழி சேவல் கொடியை நினைவு படுத்திப் பக்தர்களைக் கலக்கத்தில் இருந்து விடுவிக்கின்றது.

கருத்துகள் இல்லை: