குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
முனைவர் மு. பழனியப்பன்
குற்றாலக் குறவஞ்சி படிப்பவரைக் கவரும் சிற்றிலக்கியம் ஆகும். இச்சிற்றிலக்கியம் குற்றாலநாதரைச் சிறப்பிக்கும் வகையில் வசந்த வல்லி, குறவன், குறத்தி ஆகிய பாத்திரங்களைக் கொண்டுப் படைக்கப் பெற்றுள்ளது. இப்படைப்பினுள் சைவ சமயத்தின் நிலைப்பாட்டினை உயர்த்திக் காட்ட, நிலை நிறுத்திக்காட்டப் பல முயற்சிகளை இதனைப் படைத்த திரகூடராசப்பக் கவிராயர் மேற்கொண்டுள்ளார்.
பன்னிரு திருமுறைகள் சைவ சமயத்தின் அழியா,அழிக்க முடியாச் சொத்துக்கள். அவற்றை வரைந்த தமிழ்த் தொண்டர்தம் தொண்டுகள் என்றும் நினைக்கத்தக்கன. இவர்களைக் காலம் காலமாக மக்கள் நினைந்துப் போற்றி வந்துள்ளனர். மேலும் அவர்கள் பாடிய இறைப்பனுவல்களையும் மக்கள் காலம் காலமாகப் பாடி வந்துள்ளனர். அவ்வழியில் இக்காலச் சைவ உலகமும் சென்று கொண்டிருப்பது இன்னும் பல நூற்றhண்டுகளுக்கு இறைத்தொண்டர்கள் பற்றிய செய்திகள், அவர்கள் பாடிய இறைப்பனுவல்கள் நடைமுறையில் இருக்கும் என்பதான நம்பிக்கையை வலுவூட்டுவதாக உள்ளது.
குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர் பல இடங்களில் திருமுறை பாடிய இறைத் தொண்டர்களின் பெருமையைப் போற்றியுள்ளார். இவரது இப்போற்றுதல்கள் பன்னிரு திருமுறை சிற்றிலக்கிய காலத்தில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதைத் தெளிவு படுத்து்வதாக உள்ளது. மேலும் சிற்றிலக்கிய காலத்தில் திருமுறைகள் ஓதப்பட்டு வந்தன என்பதனைக் காட்டுவதாகவும் உள்ளது. அவ்வகையில் இக்கட்டுரை குற்றாலக் குறவஞ்சியில் காணப்படும் திருமுறை வாணர்கள் பற்றியும் திருமுறைச் செய்திகள் பற்றியும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
குற்றாலக் குறவஹ்சியில் பல இடங்களில் சைவச் செய்திகளும், பன்னிரு திருமுறைகளும் எடுத்தாளப் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்தில் திரிகூடராசப்பக் கவிராயர் தேவார மூவர் முதலிகளுக்கும், மாணிக்கவாசகருக்கும் தனித்தனியே வணக்கம் பாடியுள்ளார். இவர் காலத்தில் நால்வர் என்ற அழைப்பு முறை இல்லை போலும். ஏனெனில் இவர் இரண்டு பாடல்களில் தனித்தனியாக மூவர் முதலிகளையும், மாணிக்கவாசகரையும் குறிப்பிட்டுள்ளளார்.
தலையிலே ஆறிருக்க மாமிக் காகத்
தாங்குகடல் ஏழழைத்த திருக்குற்றாலநாதர்
சிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்
செழித்த குற வஞ்சி நாடகத்தைப்பாட
அலையிலே மலை மிதக்க ஏறினானும்
அத்தியிலே பூவை அந்நாள் அழைப்பித்தானும்
கலையிலே கிடந்த பொருள் ஆற்றிற் போட்டு
கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே (1. 5)
என்ற இப்பாடலில் இறைவன் ஏழுகடல் அழைத்தத் திருவிளையாடலும், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தம் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன.
அப்பர் அலைகடலில் தூக்கி வீசப்பெற்ற போது அவர் கல்லையே தெப்பமாகக் கொண்டுக் கரையேறிய செய்தி, எலும்பு மட்டுமே இருந்த பூம்பாவையின் மிச்சத்தைக் கொண்டு அப்பெண்ணை உருவாக்கிய ஞானசம்பந்தரின் புதுமை, மணிமுத்தாற்றில் இட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் பெற்ற சுந்தரரின் தோழமை முதலியன இப்பாடலில் காட்டப் பெற்றுள்ளன. மூவர் முதலிகளின் சிறப்பான முச்செய்திகள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன.
இதற்கடுத்த பாடலில் அகத்தியரையும், மாணிக்கவாசகரையும் பணிந்து போற்றுகின்றார் திரிகூடராசப்பக் கவிராயர்.
தமிழுரைத்த முனியைப் பாடி
இத்தரையில் ஆத்துமம் விட்டிறக்கும் நாள்
சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம்
பித்தனடித் துணை சேர்ந்த வாதவூ
ரணடிகள் பேணுவோமே. (2.6)
என்ற இப்பாடலில் வாதவூரன் என்று மாணிக்கவாசகர் அவரின் பிறந்த ஊர்ச் சார்பாகக் குறிக்கப் பெற்றுள்ளார். இப்பாடலில் வாதம் என்பதனை நோயாகவும் கொண்டு பொருள் பெற இயலும். அதாவது இறுதிநாளில் வாதம், பித்தம், சிலேட்டுமம் வந்துப் பற்றிக் கொள்ளும். அவை ஏறாவண்ணம் பித்தனை நாடியவர் வாதவூர் சார்ந்த மாணிக்கவாசகர் என்ற குறிப்பு இங்கு நோக்கத் தக்கது. மேலும் இதனுள் அகத்திய முனிவரும் வணங்கப் பெற்றுள்ளார். இவரை அகத்தியராக அல்லாமல் திருமூலராகவும் கொள்ள இயலும்
நால்வர் பற்றிய செய்திகள் இப்பனுவலில் கடவுள் வாழ்த்துக்களாக இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளமை கொண்டு அத்தொண்டர்கள் மீது திரிகூடராசப்பக் கவிராயர் கொண்டிருந்த மதிப்பு தெரியவருகிறது. கடவுளர்களுக்கு வணக்கம் என்ற நடைமுறை இயல்பானது. ஆனால் தொண்டர்களையும் கடவுளர்களுக்கு ஈடாக வணங்கும் இவரின் நடைமுறை இவருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் தொண்டர்களையும் பெருமைப்படுத்துவதாக உள்ளது.
மற்றொரு இடத்தில் வசந்த வல்லி தூது விடுகிறாள். அத்தூதினைத் தக்க சமயம் பார்த்துச் சொல்லப் பாங்கியை அவள் வேண்டுகிறhள். அப்போது தக்க சமயம் எது என அவள் மொழிகிறாள். அப்போது குற்றால நாதர்க்கு நடைபெறும் நாள் வழிபாடுகளும்,சிறப்பு வழிபாடுகளும் வசந்தவல்லியால் கோடிட்டுக் காட்டப் பெற்றுள்ளன. எல்லா வழிபாடுகளின் போதும் மூவர் தேவராம் ஓதப்பெற்றுள்ளது .
நாலுமறைப் பழம் பாட்டும் மு்வர் சொன்ன திருப்பாட்டும்
நாலுகவிப்புலவர் புதுப்பாட்டும் சகியே
நீலகண்டர் குற்றாலர் கொண்டருளும் நிறைகொலுவில்
நீக்கமிலை எல்லார்க்கும் பொதுக்காண் சகியே(3.30)
என்று குற்றாலநாதர் முன்னிலையில் வேதங்களும், திருமுறைகளும் பேதமில்லாமல் ஒன்றாய் நின்ற செய்தி காட்டப் பெறுகின்றது.
மேலும் இதே பாடலில் தொடர்ந்து முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ளமுப்பொழுதும் திருமேனி தீண்டவார் வந்து நின்று முயற்சி செயும் திருவனந்தல் கூடிச் சகியே என்பதே அக்குறிப்பு ஆகும். இக்குறிப்பு ஏழாம் திருமுறை அல்லது பதினொன்றாம் திருமுறை அல்லது பன்னிரண்டாம் திருமுறை தந்தக் குறிப்பாகக் கூட இருக்க முடியும். ஏனெனில் சுந்தரர் இதனைத் தன் பாடலிலும், நம்பியாண்டார் நம்பி தன் பாடலிலும், சேக்கிழார் தன் பாடலிலும் கையாண்டுள்ளனர் என்பதை எண்ணும்போது கவிராயருக்கு இருந்த திருமுறை மதிப்பு மேம்பட்டுத் தோன்றுகிறது.
இறைவன் உலா வரும்போது திருமுறைகள் பாடப்படுவதனைக் கற்பனை கலந்துக் கவிராயர் பாடியுள்ளார். முரசுகள், உடுக்கைகள் போன்ற இசைக்கருவிகள் முழுங்கும் ஓசையால் எட்டுதிசை யானைகள் தன் காதுகளைப் பொத்திக் கொண்டன. பொத்திய அக்காதுகளைத் தொண்டர்கள் பாடிய தேவார இசை திறக்கச் செய்தது என்று கற்பனை கலந்துப் பாடலைப் படைத்துள்ளார் திரிகூடராசப்பக் கவிராயர்.
இடியின் முழக்கொடு படரும் முகிலென
யானை மேற்கன பேரி முழக்கம்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி
துதிக்கை யாற்செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்பல்லாண்டிசை
அடைந்த செவிகளும் துறக்க மூவர்கள்
வடி செய் தமிழ்த்திருமுறைகள் ஒரு புறம்
மறைகள் ஒருபுறம் வழங்கவே
என்ற இப்பாடலில் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டும் காட்டப் பெற்றுள்ளது. தமிழ்த்திருமுறைகள் என்று திருமுறைகளும் சுட்டப் பெற்றுள்ளன. மேலும் மறைகளுக்குச் சமமாகத் திருமுறைகளும் அக்காலத்தில் மதிக்கப் பெற்றமையும் காட்டப் பெற்றுள்ளது.
குறவன் பாத்திரமும் திருமுறை அறிந்த பாத்திரமாக வடிக்கப் பெற்றுள்ளது. அவன் பறவைகள் பிடிக்க வலை கட்டுகிறான். அவன் விரித்த வலையில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து் வீழ்கின்றன. இதற்குத் திருமுறை உவமை ஒன்றை எடுத்துக் காட்டியுள்ளார் திரிகூடராசப்பக்கவிராயர்.
கூடலை உள்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக்
கூடும் சமணரை நீடு கழுவேற்ற
ஏடேதிர் ஏற்றிய சம்பந்த மு்ர்த்திக்கன்று
இட்ட திருமுத்தின் பந்தல் வந்தால் போல
வெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும்
மீன்கொத்திப் புள்ளும் மரங்கொத்திப் பட்சியும்... ( 5. 9)
என்று சம்பந்தப் பெருமானுக்கு முத்துப்பந்தர் வந்ததுபோல பறவைகள் வந்தன என்று உவமை காட்டுகிறார் திரிகூடராசப்பக் கவிராயர். வானத்தில் இருந்து முத்துப்பந்தர் வந்த அதிசயம் இங்கு உவமையாக்கப்பெற்றுள்ளது. முத்துப்பந்தரும் பறவை போன்றே பறந்து வந்திருக்க வேண்டும்.
இவற்றின் மூலம் சிற்றிலக்கியக் காலத்தில் திருமுறைகள் பெற்றிருந்த ஏற்றம் தெரியவருகிறது. மரமெலாம் சிவவடிவம், கிளையெல்லாம் சிவவடிவம், சுளையெல்லாம் சிவவடிவம், வித்தெல்லாம் சிவவடிவம் எனப்பாடிய திரிகூட ராசப்பர் சைவத்தின் பெருமை நிற்க நல்லதொரு இலக்கியமாகக் குற்றhலக்குறவஞ்சியைத் தந்துள்ளார். அதனுள் புதைந்திருக்கும் சிவ உண்மை தேடுவார்க்கு மிக்க பயன் தரும். எண்ணிய எண்ணியாங்குப் பலன் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக