செவ்வாய், அக்டோபர் 03, 2006
திருவரங்குளம்
புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி செல்லும் தார்ச்சாலையில் உள்ள முக்கியமான இடம் திருவரங்குளம். திருவும், நீரும் நிறைந்து நிற்கிற இந்த ஊரின் குளக்கரையில் அருங்குளத்தார் -பெரிய நாயகி கோயில் அமைந்துள்ளது. இது சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் தெய்வ நகரம்.
அருங்குளநாதர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இவரைச் சுற்றிப் பரிவார தெய்வங்கள் உள்ளன. அவர்களுள் முக்கியமானவர் வீணையை ஏந்தி இருக்கும் தட்சிணாமூர்த்தி. வீணாதர தட்சிணாமூர்த்தி என்றே இவர் அழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் அணிவகுப்பு உள்ளது. இவற்றைக் கடந்து போகும் வழியில் ஒரு நினைவுக் கல் உள்ளது. அதில் ஓர் அரசன் குதிரையில் வர அவனைச் சுற்றி அவனின் பரிவாரம் வரும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இதன்மேல் தமிழ் எழுத்துக்களாலான இருவரித் தொடர் உள்ளது. அரசன் வருகையைக் குறித்ததாக இது அமைந்திருக்கலாம்.
வெளிப்புறத்தில் பெரிய நாயகி சன்னதி உள்ளது. கோயில் மேல் விதானத்தில் ஓவியங்கள் உள்ளன. இதில் ஓர் ஓவியம் பால் விற்பவர் ஒருவர் அருங்குளநாதரை வழிபடுவதாகவும், அவருக்குப் பின்னால் அரசன் நிற்பதாகவும், அதற்குப் பின்னால் தேவதரு நிற்பதாகவும் வரையப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு வாய்வழிக் கதை உள்ளது.
கோயில் தோன்றுவதற்கு முன்னால் இப்பகுதி காடாக இருந்ததாகவும், இவ்வழியே பால்விற்கப் போன ஒருவரின் பால் பாத்திரம் இந்தக் காட்டின் குறிப்பிட்ட பகுதியில் தினம் சிந்துவதாகவும் அந்த வாய்வழிக் கதை தொடங்குகிறது. இது ஏன் இப்படி நடக்கிறது என சந்தேகம் உற்ற அந்தப் பால் வியாபாரி ஒரு நாள் இந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கிறார். அப்போது கல் ஒன்று தட்டுப்பட அதன்மீது இவரின் தோண்டல்பட ரத்தம் கசிகிறது. உடனே பயமுற்ற அவர் ஊராரிடம் சொல்லி, கோயில் கட்ட வைத்தார் என்ற இந்தக் கதையின் சான்றாக மேல் விதானப் படம் அமைகிறது. இதன்பின்னர் அரசரும் வந்து வழிபட்டனர் என்பதாக அந்த நினைவுக்கல் பகுதியையும் சேர்த்தும் வருவித்துக் கொள்ளலாம்.
கோயிலின் ஒரு மூலையில் ஒரு கல்தூண் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பனைமரம். அதில் தொங்கும் பனம்பழங்கள், பக்கத்தில் ஒரு முத்தலை சூலம் ஆகியன வடிக்கப்பட்டுள்ளன. இதற்கும் ஒரு கதை உள்ளது. வேடன் ஒருவன் காட்டில் ஓர் அதிசய பனைமரத்தைக் கண்டானாம். அது தரும் பழங்கள் மற்ற பழங்களைவிட சற்று வேறுபட்டிருந்தனவாம். இதை உணர்ந்த அவன் இப்பழங்களை விற்க முடிவு எடுத்தான். குறிப்பிட்ட ஒரு செட்டியாரிடம் பழங்களைத் தினம் விற்றுத் தனக்குத் தேவையான அரிசி, பருப்பு, மிளகாய் முதலியவற்றைப் பெற்று வந்தான். இறுதியில் அந்தப் பனைமரம் இற்று விழப்போகும் நேரத்தில் ஒரு பழம் தந்தது. அந்தப் பழம் சற்றுச் சிறியதாகச் சூம்பிப்போய் இருந்தது. இதனை எடுத்த வேடன் இதனை உடைத்துப் பார்க்க ஆசைப்பட்டான். உடைத்துப் பார்த்தால் அந்தப் பழத்தில் முழுவதும் வைரம், வைடூர்யம் ஆகியன மாதுளம் பழ முத்துக்கள் போல இருந்தன. இந்தப் பழத்தின் மேன்மை அறிந்த வேடன் இதுவரை செட்டியாரிடம் தந்த பழங்கள் குறித்து யோசித்தான். ""ஓஹோ, இந்தச் செட்டியார் நம்மிடம் வெறும் உப்பு, புளி, மிளகாய் தந்து விட்டு பொன் பொருளை அள்ளிக்கொண்டார்'' என்பதாக உணர்ந்தான். அவரிடம் வேடனுக்காகப் பலர் சென்று நியாயம் கேட்டனர். இச்செய்தி ஊர் முழுவதும் பரவி அப்போதிருந்த அரசன் காதிற்கும் சென்றது. அரசன் வந்தான். பொன் பொருள் தரும் பொன் பனைமரத்தைப் பார்க்க விரும்பினான். எல்லோரும் சென்று பார்க்கும்போது அந்த மரம் இருந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்ததாம். இந்தச் சுயம்பு லிங்கத்திற்கு, பிறகு கோயில் கட்டப்பட்டதாம். செட்டியாரிடம் சென்று அரசன் பொன் பொருள் பற்றி விசாரிக்க அவர் இது என்னுடையது அல்ல என்பதால் நான் அவற்றை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்துள்ளேன். இதோ இவற்றை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினார். பொன் பனம்பழங்கள் அரசு சொத்தாயின. இக்கதைக்கு மேலே சொன்ன கல்தூண் சான்று கூறுகிறது.
இவ்வாறு வாய்வழிக் கதைகள் பல இக்கோயில் பற்றி உலவுகின்றன. பெரிய நாயகி பற்றியும் பல வாய்வழிக் கதைகள் உள்ளன. ஆசையாய் பெற்ற பெண்ணை கோயிலுக்குத் தருவதாகச் சொன்ன தாய் வார்த்தை மாறியதால் பெரியநாயகியாக அந்தப் பெண் தெய்வநிலை சேர்ந்தாள் என்பன போன்ற பல கதைகள் இந்த அம்மனுக்கும் உண்டு. இவற்றில் மெய் இல்லாமல் இல்லை. பொய் கலவாமல் இல்லை. இவை யுகம் தோறும் இறைவன் போலவே தொடரத்தக்கன.
கோயிலின் வெளி மண்டபம், இராச கோபுரம் முதலியன கோயிலின் பெருமைக்குச் சான்றாவன. அருங்குளநாதர் குளத்தின் கரையில் வீற்றிருப்பதால் குளத்தின் குளுமையும் அதன் அருளும் அவரிடம் எப்போதும் உண்டு. அருள் தருவதற்காகவும் பெறுவதற்காகவும், பெற வருபவர்கள் தங்குவதற்காகவும் பல சத்திரங்கள் இங்கு உள்ளன. இவற்றில் தங்கி நாமும் வழிபடலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
அன்பு நண்பரே,
அதுதான் எம் குலதெய்வம்.
வாயிலுக்கு நேர் எதிரே இருப்பது எங்கள் சத்திரம். இவையெல்லாம் எழுதி எம் நினைவை எங்கோ கொண்டு சென்றமைக்கு நன்றி
Dr.பழனியப்பன்,
நன்றாக எழுதியுள்ளீர்கள்...படங்கள் கிடைத்தால் இடவும் ...இன்னும் அருமையாக இருக்கும்...பலர் படிக்கவில்லை..பின்னூட்டமிடவில்லை என கவலைப்படாமல் எழுதுங்கள்....பின்னாளில் நமக்கே நல்ல ஆவணமாக பயன் படும்...எழுதுவதே முக்கியம்...பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக