திங்கள், மே 15, 2006

என் பெற்றோரின் மணிவிழா

வணக்கம்
என் பெற்றோரின் மணிவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.பலரும் வந்து நேரில் வாழ்த்துக்களைக் கூறினர்.மிக்க மகிழ்வாய் இருந்தது,சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள புதுவயலில் எம் பெற்றோரின் மணிவிழா சான்றோர்கள் போற்ற சுற்றம் போற்ற நடைபெற்றது.

மே 10ம் தேதி காலை திருவாசகம் + திருக்கோவையார் முற்றோதல் நடைபெற்றது. திருவாசகம் முற்றோதல் என்பது ஒரு கூட்டுப் பிரார்த்தனை போன்றது. அனைவரும் திருவாசகத்தை வாய்விட்டு பல மெட்டுக்களில் பாடுவது என்பது இந்நிகழ்ச்சி, இதன் மூலம் இல்லம் முழுவதும் திருவாசகம் மனம் முழுவதும் திருவாசகம் வாய்முழுவதும் திருவாசகம் நிறைந்தது

மாலை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நூல்கள் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது, இவ்விழாவில் முனைவர் ச.வே சுப்பிரமணியம், முனைவர் க.ப. அறவாணன் பேராசிரியர் மது. ச. விமலானந்தம் மற்றும் பல அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
என் தந்தையார் மாணிக்க வாசகர் அருளிய திருக்கோவையார் என்ற நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார். இதனை நூலாகத் தந்தவர்கள் உமா பதிப்பகத்தார் சென்னை இந்நூல் காதல் சார்ந்த நூல் என்பதால் இதனைச் சிலர் விலக்குவதும் உண்டு. ஆனால் தலைவி காதலிக்கும் காதல் இறைவன் வயப்பட்டது என்பது உறுதி. இதற்கு சைவசித்தாந்த முறைப்படி தத்துவ உரை கண்டுள்ளார் ஆசிரியர். இது சிறப்பு


அடுத்து நான் எழுதிய சி. கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன் என்ற நூல் வெளியிடப்பட்டது.பெரிய புராணத்திற்கு விரிவான உரை கண்டவர் சி.கே.சு இவரின் உரை 7 +2 தொகுதிகள் இதனுள் சுந்தரர் வாழ்வுப்பகுதிகள் மட்டும் எடுத்துக்கொள்ளப் பெற்று ஆராயப்பெற்றுள்ளது

அடுத்து நண்பர் சேதுபதி எழுதிய பைந்தமிழ்க் காவலர் பழ முத்தப்பனார் என்ற வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பெற்றது. இதில் எம் தந்தையாரின் வாழ்க்கைப் பகுதிகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

அடுத்தநாள் அறுபதாம் ஆண்டு மணிவிழா காலை முதல் உறவினர் சான்றோர்கள் கூட்டம்60 குடங்கள் அடுக்கி புனித நீர்க்கு மேலும் புனிதம் செய்யப் பெற்று அபிடேகம் செய்யப் பெற்றது.அடுத்து மங்கல அணி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, அடுத்து அனைவரும் ஆசி பெற்றனர்.மதிய உணவு என்று விழா இனிதே நடைபெற்றது,
வெளியிட்ட புத்தகங்களின் அட்டைகளை நீங்கள் காண்பதற்கான இதனுடன் தருகிறேன்.

கருத்துகள் இல்லை: