வியாழன், ஏப்ரல் 20, 2006

நம்பி வந்த வழியில் சேக்கிழார்



சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய இரு காப்பியங்களும் தமிழ்மண்ணில், தமிழர் வாழ்வைத்,தமிழர்க்குக் கூறுவனவாகத் தமிழரால் படைக்கப்பெற்றவை. இவை தமிழர் வாழ்விற்கும், பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும் உரைகல்லாக விளங்குவன.
சிலப்பதிகாரம் முத்தமிழ்க்காப்பியம். தமிழின் முதற்காப்பியம்.
புதுமையான இவ்விலக்கியவகையைச் செய்ய முற்பட்டபோது இளங்கோவடிகள், ஒரு திட்டமிடலை தனக்குள் வகுத்துக் கொண்டிருக்கவேண்டும். செவிவழிக்கதை, உண்மைக்கு மாறுபாடில்லாமல் சிலப்பதிகாரமாக எழுந்துள்ளது. தமிழகத்தின் முப்பகுதிகளையும் களமாக்கிக் கொண்டு, தமிழரின் ஒருங்கிணைப்பாக, தமிழரின் இலக்கியச் செம்மையாக இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.
சிலப்பதிகாரத்திற்குக் கூறிய செவிவழிக்கதை, உண்மைக்கு மாறுபாடில்லாமல் ஆக்கப்படல், தமிழரின் ஒருங்கிணைப்பு, தமிழரின் இலக்கியச் செம்மை ஆகிய அனைத்து கூறுகளும் பெரியபுராணத்திற்குப் பொருந்தும். ஒரு வரியில் சுந்தரர் வடித்ததை, ஒரு பாடலில் நம்பியாண்டார்நம்பி வழி மொழிந்ததை அடிப்படையாகக் கொண்டு, அடியார்தம் வாழ்விடங்களுக்குச் சென்று அவர்கள் பற்றிய வாழ்வைக் கேட்டறிந்துச் சேக்கிழார் செய்துள்ள இக்காப்பியமும் மிகச்சிறந்த திட்டமிடலைத் தன்னுள் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது.
சிலப்பதிகாரம் காப்பியத்தலைவர் ஒருவர் குறித்த தனிக்காப்பியம். ஆனால் பெரியபுராணம் ஒருவர் தழுவிய அறுபதிற்கு மேற்பட்டவரை உள்ளடக்கிய காப்பியம். இவ்வேறுபாடு சேக்கிழார் என்னும் படைப்பாளருக்குப் பலவித நெருக்குதல்களைத் தந்திருக்கும். இதன் காரணமாகவே காப்பியத்தலைமை குறித்த கருத்துவேறுபாடுகள் பெரியபுராணத்திற்கு ஏற்பட்டது. ஆனால் சேக்கிழார் தனது திட்டமிட்ட காப்பியப்படைப்புத்திறனாலும், கவிதைநலனாலும் படைப்பாக்கத்தில் தனக்கு நேர்ந்த பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.
தனக்கு முன்னால் நிகழ்ந்த காப்பியப் படைப்பாக்கங்கள், அவற்றின் காப்பியஅமைப்பு, காப்பியமரபு, இராமாயண படைப்பு நிகழ்தல் இவற்றினைக் கருத்தில் கொண்டு, அதே நேரத்தில் தன் பாடுபொருளை ஏற்றத்தாழ்வின்றி பாடவேண்டிய சூழல் சேக்கிழாருக்கு நேர்ந்துள்ளது.
சிலப்பதிகாரத்தின் செவிவழிக்கதையை அரசன் கேட்க, சீத்தலைச்சாத்தன் கேட்க, இளங்கோ கேட்க- உணர்ச்சிமயமாக இருந்தது. அதனால் அப்படைப்பாக்கத்திற்கு உணர்வுமயமான நேரடித்தன்மை உதவியது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒற்றை வரியில் அடையாளம் காட்டப்பெற்ற அடியார்கள், ஒரு பாடலால் அணிசெய்யப் பெற்ற அவர்கள் ஒரு காப்பியப்பகுதியாக மாறவேண்டிய, மாற்றப்படவேண்டிய காப்பிய திட்டமிடல் சேக்கிழாருக்கு வாய்த்தது.
முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றவேண்டும் என்ற நெறி ஒருபுறம், காப்பிய மரபு ஒருபுறம், இரண்டிற்கும் இடையில் அறுபத்துமூவரின் வாழ்வைக் குறைவின்றி வரலாற்று அடிப்படையில் தரவேண்டிய உண்மைத்தன்மை மற்றொரு புறம்- என்ற பல கோணச் சிக்கல்களுக்கு இடையில், ஒருகாப்பியத்தைப் படைத்து- அதனைத் திருமுறைகளில் ஒன்றாீக, பக்திக்குக் காட்டாகத் தந்துள்ள சேக்கிழார் இதற்காக மிகச் சிறந்த திட்டமிடலைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என்பது உறுதி. அதனை உரசிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
தொகை, வகை, விரிநூல்
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல்புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத்தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம் (பா.எ.146)
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன்(பா.எ.349)
என்பன சேக்கிழாரின் மொழிகள். இவற்றின் மூலம் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையை அடியொற்றி யாம் காப்பியம் செய்யப் புகுந்தோம் எனச் சேக்கிழார் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகின்றார். எம்பிரானின் சொந்தங்களான அடியார்கள் வரலாறு சுந்தரரால் சொல்லப்பெற்ற முறையிலேயே என்னால் சொல்லப்பெறுகின்றது எனவும் சேக்கிழார் இப்பாடல்களின்வழி அரிதியிட்டு உரைக்கின்றார்.
ஆனால் சுந்தரரால் குறிப்பிடப்பெறாத செய்திகளைக் கொண்ட பாயிரம், திருமலைச்சிறப்பு, திருநகரச்சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம், நிறைவாக அமைந்துள்ள வெள்ளானைச்சருக்கம், ஆகியன காப்பியத்திற்கு முன்னுரை, முடிவுரைப்பகுதிகளாகச் சேர்க்கப்பெற்றுள்ளன. இவை சேர்க்கப் பெற்றதற்கான காரணங்கள், எடுக்கப் பெற்ற மூலங்கள் எவையென ஆராய வேண்டியுள்ளது.
காப்பிய இலக்கணம் கருதி இவற்றைச் சேக்கிழார் இணைத்துள்ளார் என்பது உறுதி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் முற்ற மொழிவது பெருங்காப்பியம் என்பதால் இங்கு இவை சேர்க்கப் பெற்றுள்ளன என்பது தெளிவு. இருப்பினும் சுந்தரர் பாடாத இவற்றை எம்மூலம் கொண்டு, எதன் சான்றாகக் கருதி சேக்கிழார் இணைத்துள்ளார் என்ற வினாவை எழுப்பினால் அதற்குக் கிடைக்கும் விடை திருத்தொண்டர் திருவந்தாதி என்பதாக இருக்கும். பெரியபுராணத்தின் வகை நூலாகக் கருதப்பெறும் இந்நூல் பல வழிகளில் பெரியபுராணக் காப்பியக் கட்டமைப்பிற்கு உதவியுள்ளது. எனவே இவ்விரண்டின் அடிப்படையிலேயே சேக்கிழார், சுந்தரர் சுட்டாத சிலவற்றையும் இணைத்துள்ளார் என்பது உணரப்பெறுகின்றது.
காப்பிய இலக்கணம் கருதியவை
பாயிரம், திருமலைச்சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, திருநகரச்சிறப்பு முதலானவை காப்பிய இலக்கணமரபு கருதிப் படைக்கப்பெற்றவை. எனினும் அதனுள்ளும் சுந்தரர் சார்புச் செய்திகளே இடம்பெற்றுள்ளன.
திருமலைச்சிறப்பு
இப்பகுதி கயிலை மலையின் பெருமையாக விரிகின்றது. இதனுள் உபமன்னிய முனிவர் தென்திசையில் இருந்து ஒரு ஒளி புறப்பட்டு சிவஉலகம் போவதாகவும், அதுவே நம்பியாரூரர் சிவ இருக்கை சேரும் நிலை என்பதாகவும், அவரால் தென்திசை வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இதன்மமூலம் திருமலைச்சிறப்பென்பதும் சுந்தர் சிறப்பெனவே கருதத்தக்கதாக உள்ளது.
திருநாட்டுச்சிறப்பு
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகுஇல் சீர்நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்த் கூட்டம் நிறைந்துஉறை
குலவு தண்புனல் நாட்டு அணி கூறுவாம் (பா.எ. 50)
எனச் சுந்தரர் பாடிய தொண்டர் கூட்டம் உறையும் சோழநாட்டை நாட்டுச் சிறப்பாகச் சேக்கிழார் பாடியுள்ளார்.
திருநகரச்சிறப்பு
சுந்தரர் பரவையாரை மணந்த இடமும், அடியார் கூட்டம் உறையும் இடமும், திருத்தொண்டத்தொகை பாடிய இடமும் ஆன திருவாரூரைச் சேக்கிழார் திருநகரச் சிறப்பாகக் கண்டுள்ளார்.
இவை காப்பியக் கூறுகள் கருதி பெரியபுராணத்துள் இடம்பெற்றாலும், தொகை நூலான திருத்தொண்டத்தொகை வழி நடக்கும் முறைமை இவற்றுள் உள்ளமை குறிக்கத்தக்கது.
திருத்தொண்டர் திருவந்தாதி வழிப்பட்டவை.
நம்பியாண்டார் நம்பி படைத்த திருத்தொண்டர் திருவந்தாதி- பெரியபுராணத்திற்கு சேக்கிழாரால் வகை நூலாகக் கொள்ளப்பெற்ற சிறப்புடையதாகும். இநநூலிலிருந்துச் சேக்கிழார் காப்பியக் கட்டமைப்பிற்கான பல கூறுகளைப் பெற்றுள்ளார்.
திருத்தொண்டர் திருவந்தாதியில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தாதி வகை மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டு அமைக்கப்பெற வேண்டும். திருத்தொண்டர் திருவந்தாதி குறைவுபட்டுள்ளதே என்று எண்ணினால், நம்பியாண்டார் நம்பி சுந்தரரின் திருத்தொண்டத்தொகை- பதினொரு பாடல்களையும் தம் நூலுக்கு முன்னதாகக் கொண்டு நூறு என்ற எண்ணிக்கையை முழுமைப்படுத்தியுள்ளார் என்பதை உணர்ந்தால் குறை தேய்ந்து நிறைவு பெறும். இக்குறிப்பு இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும்.
சுந்தரர் வாழ்விணைப்பு
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என திருத்தொண்டத் தொகை நேரடியாக அடியார் வணக்கத்தில் தொடங்குகின்றது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியோ
தொண்டத்தொகை வகை பல்க மந்தாதியைச்
சொன்ன மறைக்குல நம்பி பொற்பாதம் துணை தி.தி. பா.எ.1.)
எனத் தொடங்குகின்றது. இப்பாடலில் திருத்தொண்டத்தொகைக்கு வகைநூலான திருத்தொண்டர் திருவந்தாதியைச் செய்த நம்பியாண்டார் நம்பியின் பொற்பாதங்களின் துணை வேண்டப்படுகிறது. அதன்பின் தில்லை வாழ் அந்தணர் பெருமை கூறப் பெற்று நூல் திருத்தொண்டத்தொகை வழி நடக்கின்றது.
தில்லை வாழ் அந்தணர் புராணத்திற்கு முன்னதாக சிலவற்றை இணைத்துக் கொள்ள இப்பாடல் சேக்கிழாருக்குத் துணைபுரிந்துள்ளது. மேலும் திருத்தொண்டத்தொகை, வகை ஆகியன எழுவதற்குக் காரணமான நிகழ்ச்சிகளை இவ்விடத்தில் வைத்து அதன்பின் அவை கூறும் அடியார் வாழ்க்கையைக் கூறுவதற்கான முற்கதையைக் கூறிடவும் இப்பாடல் துணையாகியுள்ளது.
தடுத்தாட்கொண்ட புராணம் என்ற பகுதியைச் சேக்கிழார் அமைத்துக்கொண்டு, அதனுள் சுந்தரர் வரலாற்றின் தொடக்கப் பகுதிகளைப் படைத்துள்ளார். தடுத்தாட்கொண்ட புராணம் -திருத்தொண்டத்தொகை பாடுதல் வரையான சுந்தரர் வாழ்வு நிகழ்வுகளை உள்ளடக்கியது என்பது இங்குக் கருதத்தக்கது.
தம்பெருமான் கொடுத்தமொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
செம்பொருளால் திருத் தொண்டத்தொகையான திருப்பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்
(பா.எ.348)
என்ற பாடல் மேற்கூற்றினுக்குச் சான்றாகும்.
பெரியபுராணத்தில் சுந்தரரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் மீண்டும் விரிவு பெறுகின்றன. சுந்தரர் ஏயர்கோனார்க்கும் அடியேன் எனக் குறிப்பிட்டு முடித்துவிட, அதனை விரித்த நம்பியாண்டார் நம்பி திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணி தவிர்ப்பானென்று உடைவாள் உருவி(தி.தி.பா.எ.35) எனப்பாடுகின்றார். இதன்மூலம் ஏயர்கோனுக்குப் பிணி தீர்க்கும் வரலாறு, அதனுடன் தொடர்புபட்ட சுந்தரர் வாழ்வு நிகழ்ச்சிகள் ஆகியன இவ்விடத்தில் காட்டப்பெறுவதற்கு சேக்கிழாருக்குக் களம் கிடைத்தது.
நிறைவுப் பகுதியான வெள்ளானைச் சருக்கமும்- நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியின் நிறைவுப்பாடலை அடியொற்றியதே ஆகும்.
. . . வாரூரரைச் சேரரை யல்லது நாமறியோம்
மானவ வாக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண்
வானவராலும் மருவற்கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே
(தி.தி.பா.எ.89)
என்ற பாடலின் விரிவே வெள்ளானைச்சருக்கமாகும்.
இவ்வாறு முழுமையான காப்பியமாக பெரியபுராணத்தை அமைத்துக்கொள்ள திருத்தொண்டர் திருவந்தாதி மிகுதியும் சேக்கிழாருக்கு உதவியுள்ளது என்பது தெளிவாகின்றது.
சுந்தரர் பெற்றோர்
சுந்தரர்தம் பெற்றோரான இசைஞானியார், சடையனார் ஆகியோர்க்குத் தனித்தனிப்பாடல்களைத் திருத்தொண்டர் திருவந்தாதி அமைத்துள்ளது. அதன்வழிப்பட்டு அவர்களையும் சேக்கிழார் தொண்டர் கூட்டத்துள் அமைத்துக் கொண்டு காப்பியம் செய்துள்ளார். இவர்களுக்குச் சேக்கிழார் ஒவ்வொரு பாடல்களை அமைத்துள்ளமை எண்ணற்குரியது.
சருக்கப் பிரிவினுக்கான அடிப்படை திருத்தொண்டர் திருவந்தாதியின் இறுதியில் திருத்தொண்டத் தொகைப் பாடல்களின் முதற்குறிப்புகள்- மறவாமல் இருப்பதற்காகத் தொகுத்துச் செய்யுள் வடிவில் தரப்பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு.
பணிந்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை, இலைமலிந்த,
அணித்திகழ் மும்மை, திருநின்றா, வம்பறா, வார்கொண்ட சீர்,
இணைத்தநல் பொய்யடிமை, கறைக்கண்டன், கடல் , , , ,
மணித்திகழ் சொற்பத்தர், மன்னிய, சீர்மறை நாவனொடே.
(தி.தி.பா.எ.88)
இதில் இடம்பெற்றுள்ள பாடல் முதற்குறிப்பு அகராதி சேக்கிழாருக்கு, முதற்குறிப்பாக மட்டும் தெரியாமல் அவை சருக்கத்தலைப்புகளாகவும் தெரிந்துள்ளன. சேக்கிழார், சுந்தரர் வழிப்படி அவரது ஒவ்வொரு பாடலிலும் காட்டியுள்ள அடியார்களை ஒவ்வொரு சருக்கத்தில் அமைத்துக்கொண்டு, சுந்தரர் மொழியையே அதற்குத் தலைப்பாகவும் ஆக்கிக்கொண்டமை அவரின் காப்பியத் திட்டமிடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
சுந்தரர் துதிகள்
திருத்தொண்டத்தொகையுள் ளஆருரன் ஆரூரில் அம்மானுக்காளே என ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன்னை உளப்படுத்திப் பாடுகிறார் சுந்தரர். இதன்மமூலம் பதினொரு இடங்களில் சுந்தரர் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பதினொரு வரிகளில் இடம்பெற்றுள்ள சுந்தரர்தம் குறிப்புகளை ஆங்காங்கே விரித்து பதினொரு பாடல்களாக திருத்தொண்டர் திருவந்தாதி வாழ்த்திச் செல்லுகின்றது. இவ்வழியில் விரிவைச் செய்ய வேண்டிய சேக்கிழார் பதினொரு இடங்களில் சுந்தரர் தம் கதையைப் பகுதி பகுதியாகச் சொல்லிச் சென்றிருக்கவேண்டும். இது படிக்கும் வாசகர்க்கு இடையூற்றை ஏற்படுத்தலாம் எனக் கருதி அவ்வவ் இடங்களில் சுந்தரர் துதியாக ஒரு பாடலைச் செய்து அதற்கும் அமைதி கண்டுள்ளார். இதன்மூலம் பெரியபுராணச் சருக்கங்கள் அனைத்தும் (தடுத்தாட்கொண்ட புராணம், வெள்ளாணைச் சருக்கம் நீங்கலாக) சுந்தரர் துதி கொண்டு நிறைவு பெற்றுள்ளன. பெரும்பாலும் காப்பிய உட்பிரிவுகள் கடவுள் வாழ்த்தோடு தொடங்கும். முடிவில் வணக்கங்கள் ஏதுமிராது. ஆனால் பெரியபுராணம் காப்பிய உட்பிரிவின் முடிவில் ஒரு வாழ்த்தோடு முடிவது புதுமையாகும்.
இவ்வாறு சேக்கிழார் தொகை, வகை நூல்களை உளப்படுத்தித் தன் விரி நூலை யாத்துள்ளார். பெரியபுராணத்தைப் பதிப்பிக்க விரும்புவோர் இவையிரண்டிற்கும் முதலிடம் தந்து பின்பு பெரியபுராணத்தைப் பதிப்பித்தால்தான் அப்பதிப்பு முழுமையும், நிறைவும் அடையும். இதனைத் தமிழ்ப்பதிப்பக உலகம் நினைவில் கொள்ளவேண்டும். இவற்றை உள்ளடக்கிய பல பதிப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் குறிக்கத் தக்கது சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பதிப்பு. இனியும் இம்முறை தொடரவேண்டும்

5 கருத்துகள்:

ENNAR சொன்னது…

சேக்கிழார் வரலாறு சுறுக்கமாக கொடுக்கமுடியுமா

palaniappan சொன்னது…

தங்களின் வாழ்த்திற்கு நன்றி

சேக்கிழார் வாழ்வுக் குறிப்பு

இவர் அநபாயச் சோழன் அவையில் அமைச்சராக விளங்கியவர். இவரின் ஊர் குன்றத்தூர் ( சென்னைக்கு அருகில் இவ்வூர் உள்ளது). சிதம்பரத்தில் இவர் திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தைப் பாட சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்ததாகக் கூறுவர். இவரைப் பற்றி மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். அதற்குப் பெயர் சேக்கிழார் பிள்ளைத் தமிழ். இதில் இவர் சேக்கிழாரை பக்திச் சுவை சொட்ட சொட்ட பாடிய கவிவலவ எனப் பாராட்டுகிறார்.

ENNAR சொன்னது…

இவரது குலம் கள்ளர் குலாமா? தெரிந்தால் சொல்லுங்கள்.
சேக்கிழார்: இவர் சங்கநூற் பயிற்சியுடையவர். 63 நாயன்மார்களது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘பெரியபுராணம்’ (திருத்தொண்டர் புராணம்) என்னும் நூலை இயற்றியவர். இவ்வாறு தலைப்பட்டிருந்ததனால் இப்புராணம் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு காப்பியம் எனச் சிலர் கூறுவர். இவர் இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராய் விளங்கியவர். அப்போது இவருடைய இயற்பெயர் ‘அருண் மொழித்தேவர்
என்பது சரியா சொல்ங்கள்

palaniappan சொன்னது…

சேக்கிழாரின் பெயர்களுள் ஒன்று அருண்மொழித்தேவர் என்பது சரி. மேலும் இவர் கள்ளர் மரபினர் அல்லர் என்பது நூல்களின் முடிபு. இவர் அநபாயச் சோழன் அவையில் இருந்தவர். கம்பர் காலத்தில் இருந்த குலோத்துங்கச் சோழனுக்கும் அநபாயன் என்ற பெயர் இருந்ததாகக் கூறுவர். அதனால் அநபாயன் என்பதில் சில சிக்கல்கள் உள்ளன.

ENNAR சொன்னது…

நல்லது நன்றி சார்