காரைக்குடி கம்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்குடி கம்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 29, 2013

கம்பக் காவலர் , கம்பன் அடிசூடி காரைக்குடி கம்பன் கழகச் செயலர் திரு பழ. பழனியப்பன் அவர்களின் எழுபதாம் ஆண்டு நிறைவினை ஒட்டி அவருடனான பழக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரை


அண்ணவர்க்கே சரண் நாங்களே!
முனைவர் மு.பழனியப்பன்.
தமிழாய்வுத்துறைத்தலைவர்,
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,
சிவகங்கை

கல்லூரியில் படிக்கும் காலங்களில் போட்டிகளில் கலந்து கொள்வது  என்பது மிகப் பெரிய சவாலும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த அனுபவமாகும். கல்லூரிக்குள் நடக்கும் போட்டிகளில் வெற்றிவாய்ப்பு எங்களுக்கே என்றாலும் மாவட்ட அளவில் , மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்பது என்பதில் வெற்றியும், வெற்றியை எதிர்நோக்கிய தோல்விகளும் சரிசம அளவில் வந்ததுண்டு.
எம்முடைய கல்லூரிக் காலத்தில் அதாவது 1990ஆம் ஆண்டுகளில், மாநிலஅளவுப் போட்டிகளை ஆண்டாண்டுதோறும் காலம் தவறாமல் நடத்துவதில் முக்கிய இடம் சென்னைக் கம்பன் கழகத்திற்கு உண்டு. மாநிலம் தழுவிய நிலையில் கட்டுரைப் போட்டிகளையும், பேச்சுப் போட்டிகளையும் நடத்தி நாடறிந்த அளவில் மாணவர்களை உருவாக்கும் அரிய பணியைச் சென்னைக் கம்பன் கழகம் செய்து வந்தது. அப்படி ஒரு வருடத்தில் ஒரு நாளில் மாநிலம் தழுவிய நிலையில் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக நானும் நண்பர் சேதுபதியும் சென்னையை நோக்கிப் பயணப்பட்டோம். எங்கள் இருவருக்கும் நட்பும், போட்டியும், தயாரிப்பும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பும் என்ற நிலையில் மிக்கப் பொருத்தம் இருந்தது.

     இருந்தாலும் சென்னை நகரம். நகரத்திற்கு உரிய பிரமாண்டம் நாங்கள் இறங்கியதும் எங்களைக் கொஞ்சம் பயமுறுத்தவே செய்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பயத்தைச் சொல்லிக்கொள்ளாமல் கட்டுரைப்போட்டி நடக்கின்ற பள்ளி நோக்கிச் சென்றோம். சென்னையில் யார் தெரிந்தவர்கள் என்று எண்ணிப் பார்த்து, எங்கு தங்கலாம் என்று எண்ணிப்பார்த்துப் பலவித தேடல் மனநிலையில் முதல்நாள் போட்டியில் கலந்து கொள்கிறோம். மெல்ல யார் போட்டி நடத்துகிறார்கள் என்று அறிந்து அவர்கள் சொல்லும் குறிப்பின்படி தங்குவதற்குத் தயாரானோம். போட்டிகள் அன்றைய தினம் முடிந்ததும் எங்களை மிக்க அன்புடன் தங்குமிடத்தில் இறக்கித் தங்க வைத்தனர். அதுவும் புது சூழல். உணவிற்குப் பக்கத்தில் உள்ள உணவகங்களும் சொல்லப்பெற்றன.. எங்களுக்கு நாள் படியும் வழங்கப் பெற்றது. அந்த நாள்படிக்கு ஏற்ப எங்கள் உணவுத்திட்டம் அமைந்து அதிலிருந்து மீறாமல் இருப்பதில் நாங்கள் இருவரும் கெட்டிக்காரர்கள் என்பதை நிரூபித்த வண்ணம் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டோம்.
 தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் நடைபெறும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு போதுமான அளவிற்குச் செய்தோம்.
     சில நாள்கள் இடைவளி விட்டுப் பேச்சுப் போட்டிகள் அணிவகுக்கும். இந்த இடைவெளியில் சென்னையில் தெரிந்தவர்கள் வீட்டில் அடைக்கலம் புகுந்துப் பின் மீளவும் சென்னைக் கம்பன் கழக விருந்தினர்களாகி போட்டியாளர்கள் என்ற தொனியில் பெருமைப்படுவோம். பேச்சுப் போட்டிக்கு மிகப் பெரிய அரங்கம் எங்களுக்குக் காத்திருக்கும். ராணி மெய்யம்மை அரங்கம்... இதில் பேச வேண்டும், கேட்பதற்கு வந்திருந்தப் போட்டியாளர்கள் இருப்பர். மூவர் நடுவர்களாக இருப்பர். இந்த நடுவர்கள் யார் யார்  என்று அறிந்து கொள்வதே எங்களுக்கு மிகப் பெரிய வேலை. ஒருபோட்டிக்கு எழுத்தாளர் பாலகுமாரன் வந்திருந்தார். எங்களை எங்களாலேயே நம்ப இயலவி்ல்லை.
பேச்சுப் போட்டிகளும் தொடர்ந்து காலை ஒன்று மாலை ஒன்று என்று நடப்பதால் தயாரிப்புச்சிக்கல் எங்களுக்கு ஏற்பட்டது. அதைவிட சென்னை மாநகரம் சார்ந்த மாணவர்கள் வந்தார்கள், வென்றார்கள் என்று சென்றுவிட.... தங்கித் தமிழ் வளர்க்கும் நாங்கள் வீட்டு நினைவுகள் ஒருபுறம், வரப் போகிற பேச்சுப் போட்டி நடுவர்களைக் கவரவேண்டும் என்ற நினைவு ஒருபுறம் என்று சிரமப்படுவோம்.

     சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டியில் நான் பேசிவிட்டு வந்து என் இடத்தில் அமர்ந்தேன். சிலப்பதிகாரத் தலைப்பில் மாதவியைப் பற்றிக் குறை சொல்லும் வகையில் என் பேச்சு அமைந்திருந்தது. வந்து அமர்ந்ததும் நான் நன்றாகத்தான் பேசினேன் என்று மனம் சொன்னது. இருந்தாலும் என் பேச்சு சரியில்லையோ என்று போட்டிக்கு வந்திருந்த மாணவர்கள் கருதுவது எனக்குத் தெரிந்தது. இந்தச் சூழலில் நான் அமர்ந்திருந்த எட்டாவது வரிசை இருக்கையைத் தேடி வந்தது சிலப்பதிகாரத்தில் இந்த இந்த இடங்களைத் தொட்டுப் பேசியிருக்கலாம். என்று என் தோள்தட்டி அவர் பேசினார். எங்களின் மூன்றாண்டுகால சென்னை வரவிற்குக் காரணமாக இருந்த அந்தப் போட்டி அமைப்பாளர் திரு பழ, பழனியப்பன் அவர்கள்தான் அந்த அவர்.  

     போட்டி நடத்துவதில் அவர் காட்டிய நேர்த்தி, கண்டிப்பு, மேற்பார்வை இவற்றை எண்ணி வியந்து தள்ளிப்போய் நிற்கிற என்னைத் தொட்டு அவர் பேசிய பேச்சு இன்னும் மறக்கமுடியாமல் என் நினைவுச் சேமிப்புக்கிடங்கில் அழியாமல் நிலைத்து நிற்கிறது. அவருக்கு இருக்கும் பலதரப்பட்ட வேலைகளில் என் பேச்சையும் கவனித்துத் தொட்டு உணர்த்தும் தனிமனித அன்புத் தொடர்பாக அவரின் கரம் அன்று என் மேல் பட்டது.

     வீட்டிற்கு வந்தோம். கட்டுரைப் போட்டிகளில் பலவற்றில் நான் வென்றிருந்தேன். நானும் நண்பரும் சேர்ந்து வெள்ளிச் சுழற்கோப்பைகளைப் பெரும் வாய்ப்பினைப் பெற்றிருந்தோம். வெற்றி கூறி வெண்சங்கு ஊதிவந்த அந்த போட்டிகளின் வெற்றி அறிவிப்புகளும் ஓரழகு. அதில் வண்ணப் போனாக்களால் எங்களின் பெயரும் தரமும் குறிக்கப் பெற்றிருந்த நேர்த்தி கருதி என்னை வியப்பு சூழ்ந்தது. பரிசு பெறும் அந்த ஆகஸ்டுப் பொழுதில் சென்னையில் இறங்கிச் சென்னைக் கம்பன் கழக விருந்தினர்களாகிப் பரிசு பெற்றோம். நானும் நண்பர் சேதுபதியும் சீறாப்புராணத்திற்காக பெற்ற வெள்ளிக் கோப்பைப் பரிசு அடுத்த நாள் தினமணியில் முதல் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது. அதுதான் தலைப்புச் செய்தி. சாதாரண மாணவர்களைத் தலைப்புச் செய்திக்குள் கொண்டுவந்த இந்த வளர்த்தெடுத்தலுக்குக் காரணமானவர் அண்ணன் பழ, பழனியப்பன் என்பதிலும் அவர் வழி நடக்க சிற்சில பாதைகள் எங்களுக்குக் கிடைத்தன என்பதிலும் மகிழ்ச்சி.

     இதனைத் தொடர்ந்து காரைக்குடி கம்பன் விழாவில் பங்கேற்க எங்களை அண்ணன் அழைத்தார். ஒரு நிகழ்விற்குச் சென்ற நாங்கள், கம்பன் நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொள்ள சென்னைக் கம்பன் கழக முத்திரையே காரணம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கவிதைப்போட்டியில், பேச்சுப் போட்டியில் வெல்லும் நிலை பெற்று மகிழ்ந்தேன். பெரும்பாலும் நான் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெறுவதில்லை. எனவே எனக்குச் சென்னைக் கம்பன் அரங்கில் பேசும் வாய்ப்பு தள்ளிப்போகும். ஏனென்றால் போட்டியில் பங்கேற்று முதல்ப்பரிசு பெற்ற மாணவர்கள் பேசும் விவாதமேடை அக்காலத்தில் புதிய ஒன்றாக, கலகலப்பு நிறைந்ததாக விளங்கும். நான் கவிதைப் போட்டியில் வென்றதும் அதனை அடிப்படையாக வைத்து ஒரு விவாத மேடையில் கலந்து கொள்ளச் செய்யப் பெற்றேன். அவ்விவாத மேடைக்கு நடுவராக இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் விளங்கினார். எனக்கு பால சீனிவாசனுக்கு ஏற்பட்ட கருத்து மோதலை அன்று கண்டு ரசித்த இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் அவர்களின் நட்பு எனக்கு ஏற்பட அந்நிகழ்ச்சி முக்கியக் காரணம்.

     தொடர்ந்து காரைக்குடி கம்பன் மேடைகளில் அவ்வப்போது நான் கலந்து கொள்வேன். என் நிலையும் மாணவர் நிலையில் இருந்து உயர்தது. பேராசிரிய நிலையை எய்தினேன். இருந்தாலும் சென்னையில் முதன்முதலாகக் கண்ட பழ. பழனியப்பன் என்ற மனிதரின் தனிஆளுமைத்திறனுக்கு முன் என்றைக்கும் நான் மாணவன்தான். அன்றைக்கு இருந்த அதே கட்டுப்படும் மனநிலைதான் இன்றைக்கும் மாறாமல் என்னுள் இருக்கிறது.

     சென்ற ஆண்டு என்னை முன்னிறுத்தி கம்ப வானியல் என்ற தலைப்பில் நண்பர் சேஷாத்திரி அவர்கள் நிறுவியுள்ள அறக்கட்டளையில் பொழிவாற்ற வைத்தார். அப்பொழிவு நூலாக வருவதற்கும் அவரே முயற்சி செய்து தனி ஒரு நூலை நான் தர வழிவகுத்தவர் அண்ணன். தொடர்ந்து பவளவிழா நிகழ்வுகளுக்காக நான் அண்ணனுடன் உடனிருந்துச் செயல்பட நல்லூழ் கூட்டிவைத்தது. சிவகங்கை மண்ணிற்கு நான் மாற்றலாகி வந்ததும் நாட்டரசன் கோட்டைக்கு அருகில் நான் இருப்பதும் ஏதோ ஒரு காரணம் என்றால்  அந்த ஒரே காரணம் கம்பன் திருநாள் பவளவிழாதான்.   அது இயற்கையின் கூட்டுவிப்பு என்பதில் ஐயமில்லை.

     குகனொடும் ஐவரானோம். கம்பக் கவிச்சக்கரவர்த்த்தியே!  நடையில் நின்று உயர் இராமனே! உன்னைப் படித்தவர்கள் நீயாகவே மாறிவிடுவர். அண்ணனுடன் நாங்கள் இணைந்து கம்பக்குடும்பமானோம். இந்தக் கம்பக் குடும்பத்தில் நாங்கள் இணைய மீனும் தரவில்லை. தூதும் போகவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.அவரிடம் பெற்றனவே அதிகம். தந்தன குறைவு என்பது தன்னடக்கமல்ல. அதுவே உண்மை.

     கம்ப மேடைகளை உருவாக்குவதில், புதுமைகளைப் புகுத்துவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணன்தான். சென்னைக் கம்பன் கழகத்தில் இலக்கியச்சுற்றம் என்றொரு நிகழ்விற்கு அவர்கள் புறாக்களையும், கிளிகளையும் உயிருடன் கொண்டுவந்து ஒரு சோலையையே நிறுவியிருந்தார்கள். இப்படி ஒவ்வொரு நிகழ்வும் புதுமைப் பொலிவுடன் திகழ அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி தன்னிகரற்றது.  புதுமைக்குச் சென்னைக் கம்பன் கழகம் என்றால் மரபிற்குக் காரைக்குடிக் கம்பன் கழகம். காரைக்குடியில் மரபு மாறாமல் வெள்ளிக்குவளைத் தண்ணீர், பாதம் தொட்டு வணங்கும் கம்பனடிப்பொடி வணக்கம், இலக்கியவாணர்கள் அமர்ந்து கொள்ள விசைப்பலகை என்று இன்னமும் கட்டிக்காத்துவரும் காப்பிய மரபிற்கு அண்ணன் ஓர் அடையாளம்.
கம்பனை நினைந்து, கம்பனில் கரைந்து, கம்ப விரதம் எடுத்திருக்கும் கம்பனடிப்பொடி சீடர் கம்பன் அடிசூடி நூறாண்டு கண்டு கம்பன் திருநாளையும் வெற்றியுடன் விடுதலையாய் நாளும் நடத்தவேண்டும். மாதக்கூட்டங்களுக்கு அவர் படும்பாடு, ஆண்டுக் கூட்டங்களுக்கு அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை  சொல்லில் அடங்காதவை. அவரில்லத்து முற்றத்தில் அணில் பிள்ளைகளாய் நாங்கள் தொண்டு என்னும் பெயரில் பெயருக்குத் துணையாய் நிற்கிறோம. அவரின் கம்பத் தொண்டு இன்னும் பெருகி கம்பன் தமிழை வளர்க்க வேண்டும்.

     அண்ணனின் துணை ஆச்சி. அண்ணனின் செயல்பாடுகளில் இன்னமும் நேர்த்தியையும், ஒழுங்கையும் கூட்டிக் கொண்டே இருப்பது ஆச்சியின் பணி. எங்களின் அறிவை வளர்த்தவர் அண்ணனார். எங்களின் உயிரை, உடலைப் பேணுபவர்கள் ஆச்சி, வீட்டிற்குச் சென்றதும் எங்கள் குடும்பத்தின் சௌகரியத்தைக் கேட்டறிந்து,  எங்களுக்கு வீட்டு நினைவைத் தொட்டுக்காட்டும் தாயுள்ளம் நிரம்பியர்வகள் அவர்கள். மென்மையான பேச்சும், மலர்ந்த சிரிப்பும் அவர்களின் உயர்விற்குக் காரணங்கள்.
 எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எப்படியோ இணைந்து நாளும் நாங்கள் அவர்களையும், அவர்கள் எங்களையும் நினைந்து கொள்ளும் அன்பு சார் நிலைக்கு கம்பனே காரணம். அவனே மூல காரணன். அவனே அண்ணன். அண்ணவர்க்கே சரண் நாங்களே. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழிய கம்பக் குடும்பம்.

புதன், மே 25, 2011

காரைக்குடி கம்பன் கழக அறக்கட்டளை சொற்பொழிவு


காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி ஒன்று வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி சனிக்கிழமை நிகழ உள்ளது.

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன.

மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிற்து. சென்னை நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராக விளங்கும் முனைவர் ந. சேசாத்திரி அவர்கள் தன் தாயார் பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

இதுவரை கம்பன் ஆய்வு நிகழாத துறையில் சிறந்த அறிஞரைக் கொண்டு செய்யப்படும் இப்பொழிவு நூலகவும் அன்றே வெளிவருகிறது. வரும் ௪ ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு முனைவர் சொ. சேதுபதி அவர்கள் கம்பனைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்ந்து கம்பன் காட்டும் உலகு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் ஆழ்வார் அடியார் பரகாலன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்
கம்பன் மணிமண்டப அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வருகை தர வேண்டுகிறோம்.

புதன், மார்ச் 09, 2011

காரைக்குடி கம்பன் திருநாள்








கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து காரைக்குடியில் எழுபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா மார்ச் மாதம் 17 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழக அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொள்ளுகின்றனர்.
நிகழ்ச்சி விபரம் வருமாறு
மார்ச் 17 - கம்பன் மணி மண்டபம் காரைக்குடி மாலை 5.30மணி

தலைவர் சிவ சத்தியமூர்த்தி
வரவேற்புரை- கம்பன் அடிசூடி
தொடக்கவுரை- உயர் நீதி மன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்கள்
அறக்கட்டளை பொழிவுரை- ச. சிவகாமி - கம்பன் காட்டும் உறவும் நட்பும்
திருமிகு எஸ். என் குப்புசாமி, நா நஞ்சுண்டன் ஆகியோருக்குக் கம்பன் சீர் பரவியப் பெருமை கருதி பாராட்டப் பெறுகிறது.பாராட்டினைச் செய்பவர் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்

கம்பனில் திருமுறைகள் என்ற நூலும் இவ்விழாவில் வெளியிடப் பெறுகிறது. இந்நூலை எழுதியவர் பேராசிரியர் சபா. அருணாசலம் ஆவார்.

18.3.2011 அன்று மாலை 5.30 மணி
கம்பன் மணி மண்டபம்
இவ்விழா தனித்த சிறப்புடையது. அகவிழி (புறவிழிக்குறைவினை அகவிழியால் மாற்றுத் திறனாக்கிக் கொண்டவர்கள்) அறிஞர்கள் அரங்கமாக இது புதுமைபட மிளிர்கிறது. இப்படி ஒரு அரங்கம் தமிழகத்திற்கே புதுமை. முதன்மை. இவ்வரங்கின் தலைமை சென்னை நந்தனம் கல்லூரிப் பேராசிரியர் திரு. ந. சேசாத்திரி அவர்கள்
இவரின் கீழ் கம்பனில் பாத்திரமும், பாத்திறமும் ஓங்கி நிற்பது என்ற பொதுத்தலைப்பில் திரு. மா. உத்திராபதி சுமித்திரையே என்றும், திரு ஆ. நாராணசாமி விசுவாமித்திரரே என்றும் திரு. எம் துரை அவர்கள் குகனிலே என்றும் திரு. கு. கோபாலன் அவர்கள் வீடணனிலே என்றும் திருமதி சே. அன்னப் பூரணி அவர்கள் மண்டோதரியிலே என்றும் வாதிட உள்ளனர்.

19.3.2001 அன்று மாலை 5.30 மணி
கம்பன் மணி மண்டபம்
பட்டி மண்டபம்
நடுவர் கலைமாமணி சோ. சத்தியசீலன் அவர்கள்
பொருள் பாத்திரப் படைப்பில் கம்பனைப் பாடாய்ப்படுத்திய பாத்திரம்

கைகேயியே
திருவாளர்கள் த. இராஜாராம், செல்வி ம. சர்மிளா தேவி, மு. பழனியப்பன், கே. கண்ணாத்தாள்
வாலியே
திருவாளர்கள் அ. அறிவொளி. வீ. பிரபா, இரா. மாது, திருமதி ரேவதி சுப்பிரமணியன்

கும்பகருணனே
திருவாளர்கள் வே. சங்கரநாராயணன், செல்வி எஸ்.விஜி, இரா. இராமசாமி, சுமதிஸ்ரீ

என்ற நிலையில் பட்டி மண்டபம் நடைபெற உள்ளது.

20.3.2011
நாட்டரசன் கோட்டை
மாலை 5.30 மணி
கம்பன் அருட்கோயில்
தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்
வரவேற்புரை கண. சுந்தர்
நயம்மலி நாடக அணி - திரு. அ. அ ஞான சுந்தரத்தரசு
கலைமலி கற்பனை - திரு. சொ. சேதுபதி
இனிமைமலி சொல்லாட்சி திரு. மா. சிதம்பரம்
இறைமலி ஈற்றடி- செல்வி இரா. மணிமேகலை
நன்றியுரை திரு. நா. மெய்யப்பன்
அனைவரும் வருக கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்

திங்கள், மார்ச் 22, 2010

காரைக்குடி கம்பன் கழக எழுபத்தியிரண்டாம் ஆண்டுவிழா

கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் எழுபத்தியிரண்டாம் ஆண்டுவிழா வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். கம்பன் மணிமண்டபம் நோக்கி அன்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். நேரம் மாலை 5.30 மணி

27.3.2010

முதல்நாள் நிகழ்வில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை ஏற்கிறார். தினமணி நாளிதழின் ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றுகிறார். பழ. பழனியப்பன் நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுச் சொற்பொழிவினை முனைவர் பழ. முத்தப்பன் கம்பனில் நான் மறை என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார். இதே தலைப்பிலான நூல் அன்றே வெளியிடப் படுகிறது. இதனை உமா பதிப்பகம் செளியிடுகிறார்கள்

மேலும் இந்நிகழ்வில் முனைவர் சொ. சேதுபதி எழுதிய வரலாறு நடந்த வழியில் என்ற நூலும் வெளியிடப்படுகிறது. மேலும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.


மேலும் பள்ளத்தூர் பழனியப்பன் அவர்கள் எழுதிய யுத்த காண்ட கம்பராமாயண உரை நூல்களும் வெளிவருகின்றன.


இத்தோடு அன்று மதுரைக் கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீத்தாராமன் அவர்களும் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் புதுச்சேரி கம்பன்கழகத் துணைத்தலைவர் வி.பி. சிவக் கொழுந்து அவர்களும் பங்கேற்கிறார்கள்.

28.03.2010
இன்று திரு சோ. சத்தியசீலன் அவர்கள் தலைமையேற்கிறார்கள். தி. அருணாசலம் அவர்கள் எழுதிய உவமை சொல்வதில் உவமையில்லாக்கம்பன் என்ற நூலும், அ. அறிவு நம்பி எழுதிய செம்மொழி இலக்கியச் சிந்தனைகள் என்ற நூலும் வெளியிடப்படவுள்ளது.


இதில் திரு. தெ. ஞானசுந்தரம் அவர்கள் தீதும் நன்றும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்.


மேலும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்க்கை வரலாறு என்ற குறும்படம் திரையிடப்படவுள்ளது.


மேலும் இரவு மணி ஒன்பதிற்கு இராம நாடகம் என்ற தலைப்பில் திருமதி கௌசல்யா சிவக்குமாரின் இசைப் பேருரை நடைபெற உள்ளது.


29.03.2010
இன்று இளம்பிறை மணிமாறன் அவர்கள் தலைமையில் பட்டி மண்டபம் நடைபெற உள்ளது. மகளிர் பட்டி மண்டபம். தலைப்பு தரும நெறிநின்ற தம்பியரில் தலை நின்றவர் யார்? என்ற தலைப்பில் கும்பன் என்ற அணியில் ருக்மணி பன்னீர் செல்வம் அவர்களும் சித்ரா சுப்ரமணியம் அவர்களும், வீடணனே என்ற தலைப்பில் விசாலாட்சி சுப்பிரமணியம் அவர்களும் கவிதா ஜவகர் அவர்களும் பங்கேற்கிறார்கள்.


30.03.2010

இன்று நாட்டரசன் கோட்டையில் விழாநடை பெறுகிறது. இந்த விழாவில் அ. அறிவொளி அவர்கள் தலைமை ஏற்கிறார். இதில் கோ. சாரங்கபாணி, கண. சுந்தர் ஆகியோர் பேசுகின்றனர்.


இவ்வகையில் நடைபெறும் இனிய விழாவிற்கு அனைவரும் வருக.