செவ்வாய், டிசம்பர் 24, 2024

திருக்குறளும் செயற்கை நுண்ணறிவியலும

 மனித சிந்தனை வளத்தின் களஞ்சியம் திருக்குறள். திருக்குறளின் சிந்தனைகள் எக்காலத்திற்கும் ஏற்றவை. தேவையானவை. மனிதனில் உதிக்கும் அத்தனை சிந்தனைகளுக்கும் வழியும், வாய்ப்பும், தெளிவும் திருக்குறளில் உண்டு. தற்காலத்தில் கணினித் துறையின் புதிய சிந்தனை மற்றும் செயல் வளமாக விளங்கும் செயற்கை நுண்ணறிவியல் துறைக்கான  பல கூறுகளும் அத்துறையின் சிந்தனை மற்றும் செயல் நேர்த்திக்கும் வழிவகை காட்டுகின்றது திருக்குறள். திருக்குறளை இன்றைய செயற்கை நுண்ணறிவியல் துறையுடன் இணைக்கும் முயற்சியை ’’பண்டைய ஞானத்தை நவீனத் தொழில் நுட்பத்துடன்  ஒருங்கிணைத்தல்’’ என்ற நோக்கில்  எதிர்கொள்கிறது அத்துறை.

          மனிதன் சிந்தித்துச் செயல்படுவது போன்று, பல்வேறு கணினிச் செய்நிரல்களை உருவாக்கி, அவற்றைக் கணினியில் உள்ளீடு செய்து, அதன் வழியாக ஒரு இயந்திரத்தைச் சிந்தித்துச் செயல்பட வைக்கும் முறையினை செயற்கை நுண்ணறிவு என்று எளிமையாகச் சொல்லலாம். கேட்டல், பார்த்தல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் எனும் ஐம்புலன்களைக் கொண்டு மனிதன் செய்யக்கூடியப் பல்வேறு பணிகளை, மனிதன் உதவியின்றி ஒரு இயந்திரமேச் செய்திடச் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

          ‘‘மனிதன் சிந்தித்துச் செயல்படுவது போன்று, பல்வேறு கணினிச் செய்நிரல்களை உருவாக்கி, அவற்றைக் கணினியில் உள்ளீடு செய்து, அதன் வழியாக ஒரு இயந்திரத்தைச் சிந்தித்துச் செயல்பட வைக்கும் முறையினை செயற்கை நுண்ணறிவு என்று எளிமையாகச் சொல்லலாம். கேட்டல், பார்த்தல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் எனும் ஐம்புலன்களைக் கொண்டு மனிதன் செய்யக்கூடியப் பல்வேறு பணிகளை, மனிதன் உதவியின்றி ஒரு இயந்திரமே செய்திடச் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.’’ (விகடன்.காம்) என்ற  விளக்கம் எளிதில் செயற்கை நுண்ணறிவு பற்றிப் புரிந்து கொள்ள உதவும்.

          செயற்கை நுண்ணறிவியல் என்பது இயந்திரங்களுக்குச் சிந்தனை ஆற்றலை ஏற்படுத்தும் துறையாகும். மனித மூளையை மனிதனை வழி நடத்திச் செயல்பட வைக்கின்றதோ அது போல இயந்திரங்களை அவற்றினுள் சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டுவந்துத் தானாகச் செயல்பட வைக்கும் நடைமுறையே செயற்கை நுண்ணறிவியல் நடைமுறையாகும். ரோபாக்கள் தானாகச் செயல்படும் அளவிற்கு அறிவாற்றல் சிந்தனையாற்றல் பெற்றிருப்பது  இதற்கான எடுத்துக்காட்டாகும். இருப்பினும் அதற்கும் மேலாக அதாவது ரோபோக்களுக்கும் மேலாக  அதாவது மனிதத் துணையில்லாமல் சிந்திக்கும் ஆற்றலை இயந்திரங்களுக்கு வழங்குவதும் இயந்திரங்களைச் சிந்தித்துச் செயல்பட வைப்பதும்  இத்துறையாகின்றது.  ‘‘அறிவு அற்றம் காக்கும் கருவி ’என்று  வள்ளுவர் அறிவைக் கருவி என்றே கருதுகிறார். அறிவுக் கருவியை கருவிக்குள் அடக்குகிறது இன்றைய செயற்கை நுண்ணறிவியல். மனிதன் நுழைய முடியாத இடங்களிலும், மனித அறிவு செலுத்த முடியாத இடங்களிலும்  செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள் பயன்படுத்த முடியும். இவ்வறிவினை அதிநுட்பம் என்கிறது திருக்குறள்.  அறிவறிந்து ஆள்வினை உடைமை என்று  திருக்குறள்  செயற்கை நுண்ணறிவியலை எடுத்துரைக்கின்றது.

செயற்கை நுண்ணறிவின் வகைகள்

          செயற்கை நுண்ணறிவை மூவகைகளில் வகைப்படுத்துகின்றனர். பொதுவான நிலை, (General Artificial Intelligence, குறுவட்ட  நிலை (  Narrow Artificial Intelligence) உயர்மட்ட நிலை ( SuperArtificial Intelligence)என்ற நிலைகளில் இதன் வகை அமைகின்றது. பொதுவான நிலை என்பது பரந்து பட்டது. மனித அறிவு, செயல், சிந்தனைக்கு ஈடானது.  குறுவட்ட நிலை என்பது குறுகிய நிலையில் ஒரு துறை சார்ந்து, அத்துறையின் நுண்ணிய பகுதி  அதனால் பெறப்படும் பயன் ஆகியன கருதி அச்சிந்தனைத் திறத்தை மட்டும் உருவாக்குவது. முன்னது இன்னும் முழுமை பெற பல படிநிலைகள் உள்ளன. பின்னது தற்போது  செயல்படுத்தப்பட்டும் செயல்பாட்டுக்கும் வந்துள்ளது. உயர்மட்ட நிலை என்பது கருத்தளவில் தற்போது உள்ளது. இது மனிதச் சிந்தனை வளத்தைத் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும், நெருக்கடிகளைச் சாமாளிக்கவும்  ஆகிய பல் திறன் கொண்டதாகும்.

          செயற்கை நுண்ணறிவின் வழியாக

  1. சிறந்த இயந்திரங்களை உருவாக்கி அவற்றைத் தன் இயக்கம் உடையதாக்கி பலமுறை ஒரே செயலைச் செம்மையுடன் செய்ய வைக்கமுடியும். செயல்திறனில் தர உயர்வு, நேரக் குறைவு, உற்பத்தி செலவீனங்களைக் குறைத்தல், துல்லியமான விளைவு, உற்பத்தி அதிகரிப்பு  முதலிய நன்மைகள் விளையும்.
  2. செயற்கை நுண்ணறிவுத் தன்மையுடைய இயந்திரங்கள்,  தானே தகவல்களைப் பகுப்பாய்வு செய்து முன்னர் நடந்தவற்றை ஆய்ந்து  பயனாளர்க்குச் சிறந்ததை வழங்கும்.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல். (677)

செயல்களை வெற்றிகராமாக செய்துமுடிக்க நல்ல வழி முன்னர் செய்தவர்களின் நடைமுறைகளை உள்வாங்கி அதன் பின் செய்தல் ஆகும் என்கிறார் வள்ளுவர். இதுவே செயற்கை நுண்ணறிவுத் தன்மை உடைய இயந்திரங்களின் நடைமுறையாகக் கொள்ளப்படுகின்றது.

  • இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளவும் அதனைத் தாங்கி தகவல்களைப் பாதுகாக்கவும்  செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களால் முடியும்.
  • மருத்துவத் துறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், தன்னியக்கமுடைய சிகிச்சையை, அறுவைச் சிகிச்சையை வழங்க இயலும். பல உயிரினங்களை ஒரே நேரத்தில் காப்பாற்ற இயலும். புதிய மருந்துகளைக் கண்டறியமுடியும்.
  • கற்றலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்து தனித்தனியாக ஒவ்வொரு மாணவனையும் அருகமர்த்தி செய்முறை சார்ந்த  திறன் மிக்கக் கல்வியை வழங்க முடியும்.

இவ்வாறு பல்வகைத் திறன் கொண்ட தன்னியக்கமாகச் சிந்தித்து வினையாற்றும் கருவிகளைக் கண்டறிதலே  செயற்கை நுண்ணறிவியலின்  வளர்ச்சியாகும்.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் தன்மைகள்

 மனிதர்கள் பயன்படுத்திய இயந்திரங்கள் அவனால் இயக்கப்படும், நிறுத்தப்படும் தன்மை கொண்டவை. மனிதனால் இயக்கம் தொடங்கி வைக்கப் பெற்று இயந்திரத்தின் இயக்கம் குறிப்பிட்ட கால அளவு கருதி தானாக முடித்துவைக்கப்படும் கருவிகள் அடுத்த நிலையில் எழுந்தன.  தற்போது தானாகவே  தொடங்கி தானாகவே செயல்களை ஆற்றி அச்செயல்கள் வழியான பயனையும் விளைவித்து தானே நிறுத்திக் கொள்ளும் நிலையில் கருவிகள் வந்துவிட்டன.

மனிதர்களால் இயக்கப்படுவது கருவி. தானே இயங்குவது செயற்கை நுண்ணறிவுக் கருவி. வள்ளுவர் கருவிகளின் இயல்பை  செயற்கை நுண்ணறிவியலுக்கு ஏற்ப அறிவுறுத்துகிறார்

          ‘‘அரு வினை என்ப உளவோ கருவியான்

           காலம் அறிந்து செயின் –’’ (483)

என்ற குறளில்  கருவியைக் காலத்திற்கு ஏற்பச் செயல்படுத்தினால் வினைகள் எளியனவாக அமையும் என்கிறார் வள்ளுவர்.  மருத்தும், பயிரியியல், விண்வெளி ஆய்வு, சுரங்க ஆய்வு போன்றவற்றில் தற்போது செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.  காலம் அறிந்த கருவிகளை உருவாக்கும் துறையாக செயற்கை நுண்ணறிவுத் துறை விளங்குகிறது.

‘‘அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா

  கருவியான் போற்றி செயின்’’ – (537)

என்ற குறளில் பொச்சாவா கருவி  என்ற கருவியைக் குறிப்பிடுகிறார். பொச்சவாத கருவி என்பதற்கு  இடைவிடாத நிகழ்ச்சி, தப்பாத சூழ்ச்சியும் உடைய கருவி என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். தொடர்ந்து  ஒரே பணியைச் செய்வதில் சலிப்படையாமல் ஓரே நேர்த்தியுடன் திரும்பத் திரும்பச் செய்யும் பண்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிக்கு உண்டு. இதனையே இடைவிடாத நிகழ்ச்சி செயல்பாடு என்று கொள்ளவேண்டும்.  தப்பாத சூழ்ச்சி  கணினி நிகழ் நிரல்களைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். பொச்சாவாமை என்ற அதிகாரத்தைத் தனியாக வள்ளுவர்  இயற்றியுள்ளார். செய்யும் செயலில் ஆர்வக் குறை இல்லாமல் செயல்படுதல் , நெகிழ்வின்றிச் செயல்படுதல்  என்பதே பொச்சாவாத செயல்கள் ஆகும். இச்செயல்பாடு செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிகளின் அடிப்படைச் செயல் திறம் ஆகும்.

‘‘முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.’’ (676)

என்ற குறளில்   ஒரு செயலை தொடங்குதல் ,  செயலில் இடையூறுகள் வந்தால் அதனைத் தீர்த்தல்,  செயலை முற்றுப்பெற வைத்தல், பயனையும் வெளிப்படுத்தல் என்ற நிலையில்  வினை செயல்வகை அமைதல் வேண்டும் என்கிறது திருக்குறள். இவ்வினை செயல்வகை  செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளின் இயக்கத்திற்கும்  மிகவும் பொருந்தும்.

 திருக்குறள் செயற்கை நுண்ணறிவு

திருக்குறள் நூலிற்குச் செயற்கை நுண்ணறிவின் வழியாக பல நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன. திருக்குறளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு நோக்கும் இணையதளமும் உருவாக்கப் பெற்றுள்ளது. (https://www.thirukural.ai/)  இத்தளத்தில் திருக்குறள் குறித்த எக்கேள்விக்கும் விடை தரப்பெறுகிறது. கேள்விகளுக்கேற்ற பதிலைச் சொல்வதுடன் அதற்கான திருக்குறள்களும் அங்கு எடுத்துக்காட்டப்பெறுகின்றன.

மேலும் திருக்குறளைப் பகுப்பாய்வு செய்தல், உரைகளின் வழியாக உண்மையைப் பெறுதல், உலகளாவிய பார்வைக்குத் திருக்குறளை முன்னிறுத்தல், வாழ்க்கைக்குத் திருக்குறளின் கொள்கைகள் கொண்டு வழிகாட்டல் போன்ற நோக்கங்களிலும் இத்தளம் செயல்பட வாய்ப்புகளைத் தருகின்றது.

செயற்கை நுண்ணறிவின் எல்லை

செயற்கை நுண்ணறிவால் பல பயன்கள் ஏற்பட்டாலும் அதற்கும் எல்லை உண்டு. மனிதநேயம், காலத்திற்கு ஏற்றபடி நடத்தல், செயல்படல், பண்பாடு காத்தல், நல்லவற்றைப் போற்றல் போன்ற நிலைகளில் பெரும் சாவல்களை செயற்கை நுண்ணறிவியல் துறை எதிர்கொள்கிறது.

‘‘ செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து

  இயற்கை அறிந்து செயல் – (637)

என்ற திருக்குறள் உலக இயற்கையை அறிந்து செயற்கை நுண்ணறிவும் அதன் இயந்திரங்களும் செயல்படவேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கின்றது. இது அமைச்சியல் சார்ந்த திருக்குறள் என்றாலும் செயற்கை என்ற சொல் இடம்பெற்றுள்ள நிலையில் இக்குறள் நேரடியாக செயற்கை நுண்ணறிவியலுக்கு ஆகின்றது.

          நிகழ்கால உலகில் செயற்கை நுண்ணறிவியல் இயல்பான நடைமுறைக்கு வந்துவிட்ட துறையாக விளங்குகிறது. மேம்பட்ட தேடல், வழிமுறை நல்கும் தேடல்,  தகவல்களின் அடிப்படையில் பெறப்படுகின்ற தேடல் தேர்வு  என்று தகவல் தொழில் நுட்பத்தில் அதி நுட்பம்  காட்டுகின்ற துறையாக செயற்கை நுண்ணறிவியல் துறை அமைகின்றது. கணினி மொழி, நிரல்,  நிகழ்வு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மிகச் சிறந்த வளர்ச்சி செயற்கை நுண்ணறிவியலாகப் பரிணமித்துள்ளது.

முடிவுகள்

          மனிதனின் சிந்தனை ஆற்றல் தனித்தன்மை வாய்ந்தது. சிந்தனை வயப்பட்ட செயல்முறைகளைத் திட்பமுடன் செய்து வரும் துறை  செயற்கை நுண்ணறிவுத் துறையாகும். இத்துறையின் நோக்கம், அடிப்படை, பண்பு ஆகியன குறித்தும் திருவள்ளுவர் எண்ணியுள்ளார். திண்ணியமான அவரின் எண்ணங்கள் தற்கால தகவல் வளர்ச்சியின் உயர்ச்சியான செயற்கை நுண்ணறிவு சார்ந்தும் அமைந்துள்ளது என்பது  ஏற்கத்தக்க முடிவாகும். திருவள்ளுவர் அறிவு எனும் கருவியை நேர்த்தியாக, திட்பமுடன் தன் சிந்தனையுடன் செயல்படுத்தும் கருவி பற்றி எண்ணியுள்ளார். அவ்வெண்ணம் இன்றைய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளாக விளங்குகின்றன. செயற்கை என்பது உலகத்து இயற்கைக்கு ஒத்ததாக இருந்தால் மட்டுமே நன்மை செய்ய இயலும். மாறிடின் அக்கருவிகள் மனித இனத்தை அழிக்கும் நிலைக்குச் சென்றுவிடும். இயந்திர ஆட்சி நடைபெறும். இவ்வெச்சரிக்கையை முன்வைத்து செயற்கை நுண்ணறிவுத் துறையை நன்மையின் பக்கமாகவே வளர்த்து எடுத்துச் செல்லவேண்டும்

கருத்துகள் இல்லை: