வெள்ளி, டிசம்பர் 22, 2023

செல்வம் தரும் மந்திரம்

 

செல்வம் தரும் மந்திரம்

முனைவர் மு.பழனியப்பன்

                                                தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.

இராமநாதபுரம் மாவட்டம், 9442913985

மக்கள் நலமுடன் வாழ அருள் செல்வமும், பொருள் செல்வமும் மிகுந்த அவசியமாகும். அருளும் பொருளும் கிடைத்துவிட்டால் அளவில்லா இன்பத்தைப் பெற்றுவிடலாம். அருளையும், பொருளையும் வழங்குகின்ற கருணை கடவுளிடம் இருக்கிறது.  அதனை அளவில்லாமல் வழங்குகின்ற இடம் கோயிலாகின்றது. நல்ல நினைவுகளுடன், நல்ல பிரார்த்தனைகளுடன் கடவுளிடம் வணங்கி வேண்டினால்  அனைத்தையும் தருவதற்குக் கடவுள் தயாராக இருக்கிறார்.

            திருவாவடுதுறை கோயிலில் சம்பந்தர் பாடல்கள் பாடி தன் தந்தைக்கான செல்வத்தைப் பெறுகிறார். அந்தப் பதிகத்தின் முதல் பாடல்

            ”இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை  மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்

அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே ”

என்பதாகும். தருவது எனக்கு ஒன்று இல்லை என்றால் உன் அருளால் என்ன பயன் என்று கேட்டுப் பொன் பெறுகிறார் சம்பந்தர். இந்தப் பாடல் தொடங்கிப் பத்துப் பாடல்கள் பாடியபின் சம்பந்தருக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொன்பரிசிலை வழங்குகிறார் சிவபெருமான்.

            ஒரு சிறுவன் பசியோடு வீட்டில் கோபித்துக் கொண்டு  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துவிடுகிறான்.  மீனாட்சி அம்மனிடம்  நான் துறவு செல்லப் போகிறேன். எனக்கு இப்போது உணவு கிடைத்தால் அதுவே அதற்கான சம்மதம் என்று பேசுகிறான். மீனாட்சி அம்மன் கோயில் உள்ள சிவாச்சாரியார் அம்மனின் அருள் பிரசாதம் பலவற்றை அந்தச் சிறுவனுக்குத் தந்து செல்கிறார். அந்தச் சிறுவர்தான் ரமணமகரிஷி. இப்படி பலப்பல நிகழ்வுகள். செல்வத்தை அள்ளி வழங்கிடுவன ஆலயங்கள்.

            பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கற்பக மரமாக அனைத்துச் செல்வங்கயும் தரக் காத்துக் கொண்டு இருக்கிறார். வடதிசை பார்த்தமர்ந்த உலக அதிசய விநாயகர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். அவருக்கான கரங்கள் மூன்று மட்டுமே. ஐங்கரனாக வழிபடும் விநாயகருக்கும் முன்பான அருள்வடிவம் அவரின் தொன்மை உருவம். இப்பிள்ளையாரைப் பணியக் கண்ணதாசன் எழுதிய பாடல்

            அற்புதக் கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின்

நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின்

கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சிய திருக்கை சென்று

பொற்பதம் பணிந்து பாரீர்  பொய் இல்லை கண்ட உண்மை!

என்பதாகும். இந்தப் பாடலை நாளும் சொல்ல இப்பாடலின் சொற்களின் வழியாக புகழ், ஆனந்தம், பொருள், நலம் எல்லாம் பெருகும்.

            ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரமும் சகல செல்வங்களை அருளும் வல்லமை பெற்றது.        மகான்  ஆதி சங்கரர்  துறவு வாழ்க்கை ஏற்றபின்பு ஒவ்வொரு நாளும் பிச்சை எடுத்துத் தனக்கான உணவைப் பெற்று உண்டுவந்தார். ஒருநாள் அவ்வாறு அவர் பிச்சையெடுத்து ஒருவீட்டின் முன் நின்றார். அவ்வீட்டில் இருந்த வறுமை சொல்லில் அடங்காதது. ஆதி சங்கரர் பிச்சை  கேட்ட போது அவருக்கு அளிக்க ஒன்றுமே அவ்வீட்டில் இல்லை. வீட்டில் இருந்து வெளியே வந்த பெண் ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனி ஒன்றைப் பிச்சையாக இட்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஆதிசங்கரர் அவ்வீட்டின் வறுமை நிலையை உணர்ந்தார். அப்பெண்ணின் நல்ல குணத்திற்காக அங்கேயே மகாலட்சுமியிடம்  வேண்டிக் கொண்டு பொன்மழையைப் பெய்ய வைத்தார்.

            அவர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தைக் கேட்டு மகாலட்சுமி அங்கேயே பொன்மழை பொழிந்தாள் என்றால் அந்தப் பாடல்களில் அவ்வளவு சக்தி இருக்க வேண்டும் என்பதை உணரமுடிகிறது. இதனை நாளும் நாளும் சொல்லி வருபவர்களுக்கும் செல்வம் பெருகுகிறது. ஆதிசங்கரரின் சொற்களில் இருந்த சக்தி  பொன்மழையை வரவழைத்துள்ளது. சொற்களுக்குள் இவ்வளவு சக்தி இருக்க இயலுமா?  ஆதி சங்கரரின் தூய மனம், தூய்மையான ஒரு ஏழைப் பெண்ணிற்காக இரங்கி, வலிமை மிக்க வரம் போன்ற சொற்களினால் வேண்டுகின்றபோது அச்சொற்களில் இருந்து வெளிப்பட்ட அதிர்வலைகள்  எண்ணியதை முடித்து நிற்கின்றன.

            ஆதிசங்கரர் பதினெட்டுப் பாடல்களைப் பாடினார். இதனைக் கண்ணதாசன் பொன்மழை என்று இருபத்தோரு பாடல்களில் மொழிபெயர்த்துள்ளார். இன்னும் பலரும் இதனை மொழிபெயர்த்துள்ளனர். அந்தப்பாடல்களின் சக்தியை நாமும் சற்று உணர்வோம். நமக்கான அருள் பொருள் செல்வத்தைப் பெறுவோம். இக்கட்டுரையைப் படிக்கின்ற அனைவர் வாழ்விலும் நிச்சயம் செல்வம் மலரும்.

            திருமாலின் மார்பில் தங்கும் மங்கல தேவதையான லட்சுமிதேவியின் கடைக்கண்கள் எனக்கு அனைத்து மங்கலங்களையும் தரும். திருமாலின் முகத்தினை நாணத்துடன் நோக்கும் இலட்சுமி தேவியின் கடைக்கண்கள் எனக்கு ஐசுவர்யத்தைத் தரும். நாராயணனுக்கு மகிழ்ச்சியைத் தரும் இலட்சுமி தேவியின் பார்வை என்மீது நொடிப்பொழுது அமைந்தால் போதும்.  அரிதுயில் கொள்ளும் பெருமாளின் மீது அன்புப் பார்வை கொண்ட லட்சுமி தேவி எனக்கு சகல செல்வங்களைத் தரட்டும். கௌஸ்துபம் அணிந்த மார்பன் மீது ஆசைப் பார்வை கொண்ட லட்சுமி தேவி எனக்கு சர்வ மங்களத்தையும் தரட்டும்

மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபம் கொண்ட மார்பில் இந்திர நீல மணி ஹாரம் போல் விளங்குவதும், பகவானுக்கே காமத்தை கொடுப்பதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண்கள் எனக்குச் சகல செல்வங்களைத் தரட்டும். கைடபனை அழித்த மகாவிஷ்ணுவின் மார்பில் மின்னல்போல் விளங்கும் உலக நாயகி எனக்கு எல்லா நன்மைகளையும் தரட்டும். பாற்கடல் பெற்ற மகளான மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை  செல்வத்தைத் தருவதாக என்மீது பதியட்டும். நாராயணனின் பிரியையான லட்சுமிதேவயின் பாபத்தை நீக்கி பணத்தை மழையாக பொழியட்டும் என்ற இந்த எட்டாவது பாடல் பொன்மழை பொழிவதற்கான பொழிந்ததற்கான சான்றுகளை உள்ளடக்கியுள்ளது.  இப்பாடலின் ஆதிசங்கரர் பாடிய வடமொழி வடிவம் தமிழ் வரிவடிவமாக கீழே உள்ளது.

            ”தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்

அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|

துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்

நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ”

இதனைக் கண்ணதாசன் பொன்மழையில்

”அத்தனை முயற்சி என்ன அண்ணல் மாதேவி கண்ணில்

அருள்மழை வந்தால் போதும் அகம்புறம் முக்தி யாகும்!

இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா? தயக்கம் தாயே!

இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் நீயே!”

என்று பாடுகிறார்.

இவ்வாறு பதினெட்டு  பாடல்களில் லட்சுமி தேவியை வணங்கி வேண்டுகோள்களை வைத்து அவற்றைப் பெறுகிறார் ஆதி சங்கரர். எனவே அருள் வேண்டினாலும் பொருள் வேண்டினாலும் எது வேண்டினாலும் அவற்றை மந்திரச் சொற்களாக ஆக்கிக் கேட்க அவை நிறைவேறுகின்றன என்பதை உணரவேண்டும்.

 செல்வமீனாட்சி அரசாட்சி செய்யும்  முறையூர்

            முறையூர்  அழகு, செல்வம், மக்கள் வளம் நிறைந்த அருமை ஊர் ஆகும். இவ்வூரில் சகல செல்வங்களையும்  தருகின்ற மதுரை மீனாட்சி அம்மன்  சொக்கநாதருடன் கோயில் கொண்டுள்ளாள். அவளின் கடைக்கண் பார்வை கிடைத்தால் சகல செல்வங்களும் நம்மை வந்து சேரும். முறையூர் வரலாற்றுச் சிறப்பும், பழமைச் சிறப்பும், தெய்வீக ஆற்றலும் பொருந்திய ஊராகும்.           .

ஐந்துநிலை நாடு        

ஐந்து நிலை நாட்டின்  ஒரு பகுதியாக முறையூர் விளங்குகிறது.  பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு  கூளைப் பாண்டியன் என்பவன் மதுரை சார்ந்த பகுதிகளை ஆண்டுவந்தான். அப்போதுபொன்னமராவதியை ஆண்டு  பொன்னன் அமரன் என்ற இரு குறுநில மன்னர்கள் பாண்டிய மன்னர்களுக்குக் கப்பம் கட்ட மறுத்து தனியுரிமையோடு ஆட்சி செய்து வந்தனர்.

இதனால்  கூளைப் பாண்டிய மன்னன் பொன்னன் அமரன் ஆகியோரை அடக்க தென்காசிப் பாண்டியனான இரகுப்த பாண்டியனை அணுகினான். அப்பாண்டியன் தன் இரண்டாம் மனைவியின் மகன்களான,  பராக்கிரம பாண்டியன், மாமறை பாண்டியன், வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன் , செய வேழப் பாண்டியன் என்பவர்களைப் படையுடன் அனுப்பி வைத்து பொன்னன் அமரனைப் பணியச் செய்தான்.  இதன் காரணமாக இவ்வைந்து பேருக்கும்  பொன்னமராவதியைச் சுற்றியுள்ள  ஐந்நு நாடுகள் வழங்கப்பெற்றன.   இவர்களுக்கு முல்லை மங்கலம், கன்ன மங்கலம், சதுர்வேத மங்கலம், சீர் சேர்ந்த மங்கலம் ,  வேல மங்கலம் என்ற ஐந்து நாடுகள் வழங்கப்பெற்றன. இவையே ஐந்து நிலை நாடுகள்  எனப்பட்டன. இவற்றில் சீர்  சேர்ந்த மங்கலம் என்பது முறையூரைக் குறிப்பதாகும். விக்கிரம பாண்டியனுக்கு இவ்வூர் வழங்கப்பட்டதால் விக்கிரம பாண்டிய நல்லூர் என்ற பெயரும் முறையூருக்கு ஏற்பட்டது.  இவ்வாறு ஐந்து நிலை நாட்டின் ஒரு பகுதியாக முறையூர் விளங்கி வருகிறது.

            இவ்வூரில் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும்   அருள்மிகு அய்யனார் கோயில், பிள்ளையார் கோயில், பொன்னாண்ட கருப்பர் கோயில்  போன்றனவும் அமைந்துள்ளன. இவ்வூரில் உள்ள மீனாட்சி, சொக்கநாதர் கோயில் அருட் சிறப்பும், தெய்வீக நலமும் உடையது.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோயில் வரலாறு

            இக்கோயில் கி.பி. 1870 ஆம் ஆண்டில் திரு பெரி.  பழனியப்பச் செட்டியார் குடும்பத்தாரால் திருப்பணி செய்யப்பெற்றுள்ளது. இங்கு  திரு. பெரி. பழனியப்பச் செட்டியாருக்கும்,  சிவகங்கை மன்னர் கௌரி வல்லப முத்து வடுகநாத ராஜாவுக்கும்  சிலைகள் வைக்கப்ட்டுள்ளன. இக்கோயில்  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாக விளங்குகின்றது.  இக்கோயிலுக்கு 1975  ஆம் ஆண்டும், 1995 ஆண்டும் சிறப்புடன் குடமுழுக்கு விழாச் செய்யப்பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டாகிய இவ்வாண்டு குடமுழுக்குவிழா செய்யப்படுகிறது. புதிய இராசகோபுரத் திருப்பணி மண்டபப் பணிகள் தற்போது நடைபெற்றுள்ளன.

  வன்னியராஜன் கண்ட லிங்கம்

            இக்கோயில் கல்கோயிலாக உருவாவதற்கு முன்பே இங்குச் சிவலிங்கம் வைத்து பூசிக்கப்பட்டதாக ஒரு வரலாறும் உள்ளது. முன்பொரு காலத்தில் வன்னியராஜன் என்ற மன்னன் இவ்வூர் வழியாக வந்தபோது, மருதமரத்தின் அடியில், ஒரு சிவலிங்கம் இருக்கக்கண்டு அதனை எடுத்து  ஆலயம், மண்டபம், குளங்கள் ஏற்படுத்திக் கோயி்ல் உண்டாக்கியதாக செவிவழிக் கதை வழங்கி வருகிறது.  இதனால் இக்கோயிலுக்கு மருத வனச் சேத்திரம் என்ற பெயரும் உண்டு.

மதுரை மீனாட்சி ஆளும் முறையூர்

 இக்கோயிலுக்கு மதுரை மீனாட்சி அம்மன் வேண்டுதலின் பேரில் வந்து அருளாட்சி புரிகிறாள். வன்னியன் சூரக்குடியை ஆண்ட அரசன் ஒருவன் இவ்வூர் வழியாக மதுரைக்கு நாள்தோறும் சென்று மதுரை மீனாட்சியம்மனை வழிபட்டு வந்தார். அவரின் வயது முதிர்வு காரணமாக, போக்குவரத்துத் தடைகள் காரணமாகவும் அவரால் மதுரை சென்று வணங்க முடியாமல் போனது. அதனால் அவர்  மதுரை மீனாட்சி அம்மனிடம் வேண்ட அவ்வம்மன் முறையூரில் நானே இருப்பதால் அங்கு வந்து என்னைத் தரிசிக்கலாம் என்று அருளினாள். இவ்வகையில் மதுரை மீனாட்சியே முறையூரில் அருளாட்சி புரிகிறான். மதுரைக்குச் சென்று வழிபட்டால் என்ன பயனோ அதே பயன் இந்த மீனாட்சி  அம்மனை வணங்கினாலும் கிடைக்கும். இங்குள்ள மீனாட்சி மதுரை மீனாட்சி அம்மனுக்கு உரிய அனைத்து சிறப்புகளைப் பெற்றவள்.

            மாலைச்சாந்து ஆரம்  சரப்பளி பதக்கம்வைடூரியம் நுகர் சுட்டியும்

            மௌலி மணிமகுடம் புலாக்கு மூக்குத்தி திருமங்கிலியமும் சிமிக்கி

            ஒலைநவமணி விசிரி முருகுப் பட்டாங்கு ஆறையுயர்கங்கயம் மோதிரம்

            ஒட்டியாணம் மெட்டி பாடகம் தண்டை கொலுசு சொலிகிண்கிணிச் சரிகையால்

            சேலைஇரவிக்கை மணிந்து செங்குங்குமம் திலகமிட்டு விசித்ரமாய்ச்

            செகஜோதியாகச் சொலிக்கச் சிறப்புற்ற திவ்விய குண சிந்தாமணி

            வாலைஅனுகூலி திரிசூலி கிருபாலி உன் மைந்தனாம் எமையாளுவாய்

            மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி மதுரைநகர் மீனாட்சியே

என்ற மீனாட்சியம்மைப் பதிகப் பாடல் மீனாட்சி அம்மனை அணி அலங்காரங்களுடன் கண்டு மகிழ்கிறது. மீனாட்சியின் தலை முதல் பாதம் வரை அவள் அணிந்திருந்த அணிகளின் பெருமைகளைச்சொல்லி  வாலை நாயகியாக விளங்கும் மீனாட்சித் தாயை அருளச் சொல்லி வேண்டுகிறது. அலங்கார நாயகியாக வாலை நாயகியாக விளங்கும் மீனாட்சியை நாமும் போற்றி மகிழ்வோம்.

இலக்கிய வளமை

            முறையூர் இலக்கிய வளங்கள் பல பெற்ற ஊராகவும் விளங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு  அளவில் பால கிருஷ்ண கவிராயர் என்ற புலவர் காதற் பிரபந்தம், விஜய கும்மி, சித்திரக்கவி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். காட்டுப் புலவர் என்ற  சின்னையா என்ற மற்றொரு கவிஞரும் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர்.  இவர் பொன்னாண்ட கருப்பர் ஆனந்தக் களிப்பு, மீனாட்சி அம்மன் பதிகம், காத்தையனார்  அடைக்கலப் பதிகம், நாட்டியக் கும்மி . மோகனக் கும்மி ஆகியவற்றை இயற்றியுள்ளார்.

            இவ்வாறு முறையூர் சிறப்பான தலமாக, சகல செல்வங்களையும் தரும், எண்ணியதைத் தரும் திவ்ய தலமாக விளங்குகின்றது. இத்தலத்திற்கு வருகை தந்து முறையூர் மீனாட்சியை வணங்கும் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு எய்துவர் என்பது சிறப்பாகும்.         

கருத்துகள் இல்லை: