கி.ராஜநாராயணனின் மறைமொழி அழகியல்
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
கி.ராஜநாராயணன்
இனக்குழு சார்ந்த வட்டார இலக்கியங்களைப் படைத்து வெற்றி கண்டவர். இவரின் வட்டார மொழிப் பயன்பாடு என்பது பாசாங்கு
அற்றது. எளிமையானது. உண்மையானது. மக்கள் மொழி சார்ந்தது. இவரின் மொழியில் சொல்லப்பட
முடியாத நிகழ்வுகளும், சொற்களும், உடல் உறுப்புகளும், உடல் செயல்பாடுகளும் மிக நயமாக
மக்களின் நாகரீகமாகப் புரிந்து கொள்ளத்தக்க
அளவில் வெளிப்படுத்தப் பெற்றுள்ளன. இம்மொழி ஆளுமை என்பது தி.ராஜநாராயணன் எழுத்தின் தனித்துவம் ஆகும்.
இவரின்
சிறுகதைகளில், குறுநாவல்களில் இதற்கான எண்ணிலடங்கா எடுத்துக்காட்டுகள் குவிந்து கிடக்கின்றன. இவர் பதிவு செய்த மக்கள்
வாய் வழிக் கதைகளிலும் இதற்கான பல சான்றுகள் உண்டு. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற தொகுப்பில் உள்ள
கதைகளில் இந்த மறைமொழி அழகியல் நூல் முழுவதும் நிறைந்து கிடக்கின்றது. கி.ராஜநாரயணனின்
இக்கதைத் தொகுப்பு தவிர்ந்து பிறவற்றிலும் இவ்வழகியல் நிரம்பி நிற்கிறது. அவற்றில் குறிக்கத்தக்க சிலவற்றை எடுத்துக்காட்டி
அவற்றில் உள்ள மறைமொழி அழகியலை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
அழகியல்
இம்மானுவேல்
காண்ட், “அழகு என்பது தற்செயலான மற்றும் தனிப்பட்ட புலன் இன்ப நுகர்ச்சிகளைவிட மேன்மையானது.
மனித அங்கீகாரத்தின் மீது உயர்வானதொரு உரிமையும் இதற்கு உண்டு. இந்த அழகை அனுபவிப்பது
என்பது இயற்கையையும், இயற்கை வடிவத்திலுள்ள முறையையும் அறிதல் என்பதோடு உறவு கொண்டது1
என்கிறார். இவரின் கருத்துப்படி புலன் இன்பம்
தரும் நுகர்வு இன்பத்தைவிட மேலான இன்பத்தைத் தருவது அழகியல் நடை என்பதை உணர்ந்துகொள்ள
முடிகின்றது. கி. ராஜநாராயணனின் அழகியல் என்பது புலன் உணர்வு கடந்து அழகு உணர்ச்சி
உடையது என்பது அவரின் படைப்புகளை உள்நோக்கி ஆராயும் போது தெரியவருகின்றது.
பெண்ணின்
கன்னித்தன்மையும் மறைமொழி அழகியலும்
லட்சுமிக்குப் பருவம் வருவதற்கு முன்பே
ராஜா என்ற இளைஞனுடன் திருமணம் ஆகிவிடுகிறது.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின் லட்சுமி பருவ வயது அடைகிறாள். இந்நிலையில் அவளின் கணவன் ராஜா அவளைக்
காண வருகின்ற காட்சி வாசகர்களுக்கு பலவற்றை நினைவு படுத்தி நிற்கின்றது.
‘‘ஒரு தடவை நான் விடுமுறையில் ஊருக்குப்
போயிருந்தேன். அது உயர்நிலைப்பள்ளியின் கடைசி வருஷம். லட்சுமி ‘மனுஷி‘ யானதுக்குப் பிறகு அப்போதுதான முதலில் ஊருக்கு
வருகிறேன். என்னுடைய வீட்டுக்கு நாலு வீடுகள் தள்ளித்தான் அதே தெருவில் லட்சுமியின்
வீடும். வந்த காலோடு அவளுடைய வீட்டுக்குப் போனேன். அப்பொழுது காலை நேரம். ஈரத்துணியால்
அப்போதுதான் துடைக்கப்பெட்ட கொல்லம் செங்கல்லின்
மண்வாசனை இதயப் பைகளுக்குச் சுவாசிக்க இதமாக இருந்தது. பட்டக சாலையில் உள்ள பெஞ்சில் உட்கார்ந்தேன். மஞ்சக் கடம்பையில் அகலமான ஒரே பலகையில்
செய்யப்பட்டிருந்தது அந்தப் பெஞ்சின் மேல்பாகம். ..... என் எதிரே ஒரு மறைப்புப் பலகை.
வீட்டினுள் நடமாடுகிறவர்களுக்கும் இங்கிருக்கிறவர்களுக்கும் மத்தியில் ஒரு திரை. தரையை
ஒட்டி ஒரு முக்கால் அடி இடைவழி அதற்கு உண்டு.
மல்லிகைப் பூவும் மரிக்கொழுந்தும் கலந்த
வாசனை வந்தது. முதன் முதலில் அந்த வாசனையை நான் நுகர்ந்தது அந்த இடத்தில்தான். இந்தக்
கலவை மணத்தை நான் எங்கெல்லாம் நுகர நேருமோ அக்கணமே லட்சுமியின் ஞாபகம் வந்துவிடும்
எனக்கு.
வாசனையைத் தொடர்ந்து சரசரவென்று புதுப்பட்டின் உராய்தல் ஒலி கேட்டு நின்றது. அந்த மறைப்புப் பலகையின்
தரையிடைவழியில் ஒன்று சேர்ந்த இரண்டு பாதங்கள் காட்சியளித்தன. அவை
மஞ்சள் குளித்திருந்தாலும் நிற்பதால் பிதுங்கும் இரத்த ஓட்டத்தின் செம்மை நிறம் தெளிவாகத்
தெரிந்தது. மருதாணியின் கருஞ்சிவப்பு நிறத்தினால் கோலங்கள் பூண்டிருந்த அந்தப் பாதங்கள்... அரக்குச் சிவப்பில்
ஜரிகைக்கரை கட்டியிருந்த சேலையின் விளம்பு
லேசாகத் தெரிந்தது. கண்கள் இமைக்காமல் அந்த பாத தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.”2
என்ற விவரித்தலில் கண்கள் பார்க்கவேண்டியனவற்றைக் கடந்து காணக் கிடைத்த ஒவ்வொன்றையும்
பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை அறிந்து கொள்ள முடிகின்றது.
முதன் முதலில் பெரிய மனுஷியாகிய தன் மனைவியைப்
பார்ப்பதற்கு இவ்வளவு தவங்களைச் செய்து கடைசியில் அவளின் பாத தரிசனத்தை மட்டுமே கண்டு
நிறைவு பெற வேண்டிய காத்திருத்தல் நிலைக்குத் தள்ளப்படுகிறான் கணவன் ராஜா. எத்தனை பேருக்கு
இந்நிகழ்வு வாய்த்திருக்க முடியும்.
தன் மனைவியின் உடல் அழுத்தம் தாங்கள பாதங்களின்
சிவப்பு அழகு, அவற்றில் வரையப்பெற்ற மருதாணிக் கீற்று, தொட்டும் தொடாமலும் நிற்கம்
சிவப்பு அரக்கு சேலை. , மஞ்சள் அணிந்த கால்கள், மரிக்கொழுந்தும் மல்லிகையும் இணைந்த
வாசனை இவை ராஜா, லட்சுமி இவர்களுக்கு மட்டுமே் உணரத்தகுந்த அனுபவங்கள். மற்ற யாராலும்
இந்த அனுபவத்தை அனுபவிக்க இயலாத உத்தம இணைப்புகள்.
மேலும் அவள் மனுஷியானாள் என்பதைக் கூட
ஊர் வந்த பின்பு மட்டுமே ராஜாவால் அறிந்து கொள்ள முடிகின்றது. முன் கூட்டியே அறிவிக்கப்பட
வேண்டிய சொந்தம் ராஜா என்றாலும் அவனை ஒரு பொருட்டாகவே எண்ணாத லட்சுமி, ராஜா குடும்பத்தார்.
இப்படிப் பட்ட நிலையில் இந்தச் சூழலை விளக்கும் கி.ராஜநாராயணின் மொழி ஆளுமை பாசாங்கு
அற்றதாக உண்மை வயப்பட்டதாக அழகியல் கட்டமைப்பு உடையதாக விளங்குகிறது.
இதயப்பை எவ்வாறு சுவாசிக்க இயலும் என்ற
வினாவையெல்லாம் இந்த அழகியல் விவரிப்பில் கேட்டுவிட முடியாத அளவிற்குப் புலன் இன்பம்
கடந்த இன்பத்திற்கு அழைத்துச் செல்கிறார் கி.ராஜநாராயணன்.
கிடை நாவலில் படைக்கப்பெற்றுள்ள செவனியும் பருவம்
அடையாத பெண். அவளின் பருவ வயதடைதலை மறைமொழி அழகியலில் தருகிறார் கி.ராஜநாரயணன்.
‘தாகத்தால் அவள் நாக்கு வறண்டது. அந்தச்
சமயத்தில் சிகப்பு கடுக்கண் போட்ட முகமும்
உண்ண உண்ண நீர் சுரக்கும் சிவந்த உதடுகளும் கண் முன் வந்தது. பக்கத்தில் நின்ற
வன்னிமரத்தை நோக்கி எட்டு எடுத்து வைத்தாள்.அவளுடைய ‘அரையில்‘ வெதுவெதுப்பாக எதோ ஒன்று
இறங்கி வருவதுபோலத் தெரிந்தது. திடீரென்று பரவிய பச்சை இரத்தத்தின் வாடையால் செவனி
திடுக்கிட்டாள்.
அவளுடைய கண்கள் சமீபம் நூற்றுக்கணக்கான
பூச்சிகள் பற்பதைக் கண்டாள். அஞ்ஞா என் வார்த்தை
முழுஐமயாக வெளி வருவதற்குள்ளாகவே மயங்கி விழுந்துவிட்டாள்”3 என்ற விவரிப்பில்
ஒருபெண்ணின் பருவ வயது எய்தும் நிலையில் அவளுக்குள் நிகழும் உள,உடல் மாற்றங்களைப் பதிவுசெய்ய
முனைந்துள்ளார் கி.ராஜநாராயணன்.
அவளது அரை என்பது தகுதிப்பாடுடைய சொல்லாடல். அரை
ஞாண் கயிறு என்பது கட்டப்படும் இடம் அரைப்பகுதிதானே. ஆணுக்கும் பெண்ணும் அந்த அரைப்பகுதி
உண்டு என்பதால் அவளது அரைப்பகுதியில் சுரந்த இரத்தம் பற்றிக் குறிப்பிடுகிறார் கி.ராஜநாராயணன்.
வெதுவெதுப்பாக, பச்சை ரத்த வாடை, ஏதோ ஒன்று,
என்ற சொற்களில் காணலாகும் மறைமொழி அழகியல் வியக்கத்தக்கதாக உள்ளது.
பெண்மையும்
மறைபொருள் அழகியலும்
ஒரு காதல் கதை என்ற சிறுகதையில் இடம்பெறும்
லட்சமி மரபுகளுடன் வாழும் கட்டுப்பாடு நிறைந்த பெண்மணி. அவள் பேருந்தில் இணைந்து உட்கார்ந்து
செல்லும் தம்பதியர், தெருவில் கைகோர்த்து நடந்து போகும் தம்பதியர், கடற்கரையில் தோளில்
கைபோட்டுக் கொண்டு விளையாடும் தம்பதியார் போன்றோரைப்
பார்த்தாலோ, அவர்களின் நடப்பைக் கேட்டாலோ அவற்றை சிறு செம்புன்னகையால் விலக்கிவிடும்
பாங்குடையவள்.
அவள் தன் கணவன் ராஜாவின் நண்பன் ராகவன்,
மற்றும் அவன் மனைவி மேரி வாழும் இல்லம் சென்றபோது, திடுக்கிடுகிறாள்.
‘ என்ன இந்த வீட்டில் லஷ்மி களையே இல்லையே!
என்று என் (ராஜா) காதில் குசுகுசுத்தாள். யாவற்றுக்கும் சிகரம் வைத்தது போலிருந்தது
அவர்களுடைய படுக்கையறை. அந்த அறைக்குள் காலடி எடுத்து வைக்கவே மறுத்துவிட்டாள் லட்சுமி.
நல்லவேளை மேரியோ ராகவனோ பக்கத்தில் இல்லை.
அவளை அப்படித் திடுக்கிட்டுப் பின்னடையச்
செய்தது வேறொன்றும் இல்லை. படுக்கையறையில் இரண்டு கட்டில்களை நெருங்கிச் சேர்ந்தாற்போல்
போட்டு வைத்திருந்ததுதான்.
சை .... இது என்ன் வெட்கங்கெட்டத்தனம்
என்றாள். அதைப் பார்த்து இந்தப் படுக்கைகள் இரண்டும் இணை சேர்ந்து பகலிலும் கிடந்ததானது
பண்புக்குப் புறம்பான ஒன்றைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது போலும்.
ரொம்பநாள் வரைக்கும் அதைப் பற்றிச் சொல்லியும் நினைத்தும் சங்கடப் பட்டுக்கொண்டிருந்தாள்
இவள்”4
என்ற இந்த லட்சுமியின் நடப்பில் இரட்டைப்
படுக்கை என்பது மரபு மீறலாகக் கொள்ளப்படுகிறது. இரவில் இணைகின்ற தேவையின் போது பயன்படுத்தப்பட
வேண்டிய படுக்கைகள் எப்போதும் தயார் நிலையில் இணைந்து இருப்பதான முரண் லட்சுமிக்கு
மட்டுமல்ல இக்கதையைப் படிக்கும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றாகத் தான்
இருக்கமுடியும். ஆனால் தங்குமிடங்களில், படுக்கைகளே பிராதான இடங்களைப் பிடித்துக் கொண்டு
இருக்கும் நிலையில் வீடுகளிலும் அதன் எல்லையை விரித்து வைத்து இருக்கும் தமிழகச் சூழல் பண்பாட்டு மீறலை உடையது என்பதை இக்கதை நயமாகக்
காட்டி விடுகிறது.
இங்கு இரட்டைப் படுக்கை என்பது மறைமொழி
அழகியலாகும். அகம் சார்ந்த ஒன்றை வீட்டுக்கு வருவோர் அனைவருக்கும் காட்டும் பண்பாடு
நல்ல பண்பாடு இல்லை என்று லட்சுமி நினைக்கிறாள். இதனைச் சமுதாயம் இன்றைக்கு ஏற்றுக்
கொண்டுள்ளது என்பது எத்தகைய பண்பாட்டு் மாற்றமாகக் கொள்ளப்பட வேண்டியது என்பதை உணர்ந்து
கொள்ள முடிகின்றது,
இவ்வாறு மறைமொழி அழகயில் கி.ராஜநாராயணின்
படைப்பு அடையாளமாக விளங்குகிறது என்பதை அறியமுடிகின்றது.
முடிவுகள்
கி.ராஜநாராயணன் எழுத்துகள் வட்டாரத் தன்மை
வாய்ந்தன என்றாலும் அவை பண்பாட்டுச் சூழல் பொருந்தியன என்பது குறிக்கத்தக்கதாகும்.
மனுஷியான மனைவியின் வளர்ச்சியை மெல்ல மெல்ல அணு அணுவாக அறிந்து ருசிக்க வேண்டிய நிலையில்
கணவன் வளர்க்கப்படுகிறான். ஊருக்கு வந்ததும் மனுஷியான மனைவியைக் காண அவனுக்கு விடுதலை
இல்லை. அவளின் மென்மையை, வாசத்தை, இதய அறைகளுக்குள் அவன் அடைத்து அடைகாக்கிறான். இந்தப்
பொறுமை, இந்நிகழ்வில் சொல்லப்படுள்ள சொல்லாடல்கள் மறைமொழி அழகியல் வயப்பட்டனவாகும்.
செவனியின் உடல் மாற்றம் மிக நேர்த்தியாக
அவளின் வருத்தம் தொனிக்க மறைமொழி அழகியலாக கி. ராஜநாராயணனால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது.
இரட்டைக் கட்டில் வழியாக வெளிப்படுத்தப்படும்
பண்பாட்டு மீறல் அச்சொற்களைத் தாண்டி ஒரு குடும்பத்தின அக நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வகையில் கி.ராஜநாராயணனின் அழகியல் தனித்த
அழகியலாக மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்ட அழகியலாக அதாவது மறைமொழி அழகியலாக விளங்குகிறது என்ற முடிவைப்
பெற முடிகிறது.
சான்றாதாரங்கள்
1.
. மேற்கோள்,
தி.சு. நடராஜன், அழகியல்
அணுகுமுறை,
https://www.tamilvu.org/ta/courses-degree-d061-d0612-html-d0612333-23216
2.
கி.ராஜநாராயணன், ஒரு காதல் கதை,
ப. 112
3.
கி.ராஜநாராயணன், கிடை, ப. 50
4.
கி.ராஜநாராயணன், ஒரு காதல் கதை,
ப. 117
துணை
நூற்பட்டியல்
ராஜநாராயணன்.கி.ரா.,
கிடை, காலச்சுவடு, சென்னை
ராஜநாராயணன்,
ஒரு காதல்கதை, தமிழ் எண்ணிம நூலகம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக