திருக்கோவிலும் மடாலயமும் எழுப்பிய திருவுள்ளம்
- கனகு,
காரைக்குடி
கோவிலூர் ஆண்டவர் முத்துராமலிங்கர் வாழ்வில் பல்வேறு அற்புதங்களும்,
திருவிளையாடல்களும், அருள்மாட்சிகளும் நடைபெற்று வந்தன. ஆண்டவர் தன் குருவான ஸ்ரீ உகந்தலிங்கருக்கும்
அவரின் குடும்பத்தாருக்கும் வேண்டுவன அளித்து வந்தார். குருவிற்கு காணிக்கையாக நெல்
மூட்டைகளையும் வழங்கி அவர் அருள் பெற்றார். ஆண்டவரை நண்பர்களும், பக்தர்களும், சீடர்களும்,
பணிந்துப் போற்றி மகிழ்ந்து அவர் புகழ் பரவினர்.
கருட தரிசனம்
நல்லான் செட்டியார் ஒரு முறை கருடனைப் பார்த்த பின்பே உணவருந்த
வேண்டும் என்று எண்ணியிருந்தார். அவரிடத்தில் ”யாமே கருடன்! என்னைக் கண்டு கொண்டாய்.
இனி உண்ணலாம்” என்று ஆண்டவர் கூற அதனையும் தாண்டி நல்லான் செட்டியார் கருடனைத் தேடித்
தேடி அலைந்தார். கருடனைக் காணமுடியாமல், ஆண்டவரைத் தரிசித்து அவர் சொற்கள்படியே அவரே
கருடனாகி நிற்க இவர் தன் விரதத்தை முடித்துக்கொண்டார்.
குரு பரிபூரணம்
இவ்வாறு இருக்கும் காலத்தில் ஆண்டவரின் குருவான ஸ்ரீ உகந்த லிங்கர் 1970 ஆம் ஆண்டு, அதாவது வெகுதான்ய வருடம் பங்குனி மாதம் 26 ஆம் நாள் பரிபூரணம் அடைந்தார். தம் குருவின் பரபூரண நிகழ்வை பல அடியார் பெருமக்கள்,
ஆன்மீகப் பெருமக்கள் புடைசூழ நடத்தினார். இதன்பின் சிதம்பரம் கேணி மடத்தில் இருந்த
வீரபத்ரசாமியை பொருள்வைத்த சேரியில் இருக்க வைத்துத் தான் காரைக்குடிக்கு வந்து சேர்ந்தார்.
கன்னிகை சொன்ன அறிவுரையும் கோயில் பணி தொடக்கமும்
காரைக்குடியில் அடியார்களை அனுதினமும் சந்தித்து அவர்களுக்கு
ஞான வழி காட்டிவந்தார். ஆண்டவருக்கு அப்போது வயது இருபத்தோரு வயது நடைபெற்றது. கோவிலூர்
கொற்றவாளீசர் திருக்கோயில் மேம்பாட்டுப் பணி தொடங்குவதில் சிறு காலதாமதம் ஏற்பட்டது.
இந்நேரத்தில் ஆண்டவர் சுவாமிகள் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் ஒரு கன்னிப் பெண்
வருகை தந்து அவரின் தாயாரிடம் ‘‘ இன்னும் கோயில் பணிகள் தொடங்க வில்லையே ! விரைவில்
தொடங்கச் சொல்” என்று கூறினார்.
ஆண்டவர் சுவாமிகள் வீடு வந்து சேர்ந்தபோது இச்செய்தியை அவரின்
தாயார் சொல்ல உடன் கோயில் பணிகளைத் தொடங்கினார். பல நகரத்தார் பெருமக்களின் பொருளுதவியால்
கோயில் திருப்பணி தொடங்கப்பெற்றது. கொற்றவாளீசர் சன்னதி, அம்மன் சன்னதி, அநேக மண்டபம்
, இராச கோபுரம், விமானங்கள், வாவி, தடாகம், இராச வீதி போன்றனவற்றை ஆண்டவர் சுவாமிகள்
திட்டமிட்டுக் கட்டினார்.
ஆண்டவரின் வேண்டுகோள் கடிதத்திற்கு இரங்கிய இலுப்பை முனி
கோயிலுக்கு உரிய கொடிமரம் தேவைப்பட்டது. பல மரங்கள் பார்த்தும்
எம்மரமும் சரிவர அமையவில்லை. திருக்கோஷ்டியூருக்கு
அருகில் உள்ள ஏரியில் ஒரு பெரிய இலுப்பை மரம் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதனைக் கொண்டு
கொடிமரம் செய்ய முடிவானது. ஆனால் அந்த இலுப்பை மரத்தில் முனி ஒன்று குடியிருப்பதால்
அதனை வெட்ட வேண்டாம் என்று அவ்வூரார் தடுத்தனர்.
இதனை அறிந்த ஆண்டவர் சுவாமிகள் அந்த மரத்தில் ஒரு வேண்டுகோள்
திருமுகம் (கடிதம்) எழுதி வைத்தார். ‘இலுப்பை மர முனியய்யா! கொற்றவாளீசர் கொடிமரத்திற்கு
இம்மரம் தேவை என்பதால் வேறு மரம் பார்த்துக் கொள்ளவும்” என்றெழுதி அம்மரத்தில் எழுதி
வைத்தார். ஆண்டவர் சொல்லுக்கே வலிமை அதிகம்
என்றால் எழுத்திற்கும் இன்னும் வலிமை அதிகம் அல்லவா. இலுப்பை முனி அகன்றது. கொற்றவாளீசர்
கோயிலுக்குக் கொடிமரம் வந்தது.
இவ்வாறு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வர கோயில் திருப்பணிகளும்
சிறப்புடன் நிறைவேறி வந்தன.
மக்களுக்கு அறிவுரை
நாளும்
கோயில் பணிகளைப் பார்ப்பது, அனைத்து வேளைகளிலும் அம்மன், சுவாமி அபிடேகம் தீபம் பார்ப்பது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு
நல்லன சொல்வது என்று பணிகளைப் பட்டியலிட்டுக் கோயிலூர் ஆண்டவர் செய்துவந்தார். குறிப்பாக
மக்களிடத்தில் பக்தி பெருக வேண்டும். செப,
தபம் செய்ய வேண்டும். நால்வர் பாடல்கள் இசைக்கவேண்டும். நந்தவனம் அமைக்க வேண்டும்.
இவை செய்ய ஊருக்கு ஊர் மடாலயங்கள் அமைய வேண்டும் என்று நன்மொழிகளை நாளும் சொல்லி வந்தார்.
ஆண்டவர்
முத்துராமலிங்கர் வந்த பின்பே, நகரத்தார் வீடுகளில், ஊர்களில் மடம் உண்டானது. சிவாலங்கள்
மிகுதியும் உண்டானது. வாசிட்டம் படிக்கப்பட்டது. நால்வர் தமிழ் படிக்கப்பட்டது. இதுவெல்லாம் கோவிலூர் ஆண்டவரின் சிறப்புகளாக அமைந்தன. இவை இன்றும் கோவிலூர் மடாலயத்தின் சிறப்புக்களாக
இன்றும் அமைந்துள்ளன. என்றும் அமையும். ஆண்டவர் வழி சிறக்கும்.
கோயில்
பணிகள் பல சன்னதிகளை உள்ளடக்கி வளர்ந்தது. அதளக் கண்மாயில் வணங்க வருவார்க்கு ஏங்கி
நின்ற அகத்தீஸ்வரர் கொற்றவாளீசர் கோயிலுக்கு வந்து நாளும் பூசை பெற்றார். மறவன் கோட்டை
கைலாச நாதர், நித்யகல்யாணி அம்மையும் கொற்றவளீசர்
கோயிலுக்குள் வந்து அருள் புரிந்தனர்.
கோவிலூர்
அம்மன் சன்னதிக்கும், கொற்றவாளீசர் சன்னதிக்கும் இடையில் சிறு தெய்வப் பீடம் ஒன்று
இருந்தது. அதற்கு எருமையைப் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இடையில் ஏற்பட்ட இந்த
பீடத்தை நகர்த்திட ஆண்டவர் எண்ணினார். பணியாளர்களை ஏவி அப்பீடத்தை நகரத்த முயற்சி மேற்கொள்ளப்
பட்டது. பணியாளர்கள் பீடத்தை நகரத்த அஞ்சினர். கோவிலூர் ஆண்டவர் உயிர்ப்பலி கொள்ளும்
இப்பீடத்தை இங்கு இருந்து நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தானே முதன் முதலாக பீடத்தை
நகரத்தும் பணிக்கான முதலடியை எடுத்து வைத்தார். அதன் பின் பணியாளர்கள் பயமின்றிப் பீடத்தை
நகர்த்தினர்.
அப்பீடத்தின்
உயிர் கொள்ளும் சக்தியை அமைதியாக்க அப்பீடம் குளத்துள் இடப் பெற்றது. இருப்பினும் குளத்தில்
மூழ்கிய இளம் பெண்களை அப்பீட தேவதை ஆட்கொண்டு அவர்களை ஆட வைத்தாள். கோவிலூர் ஆண்டவர்
தெருவழியே நடக்கும்போது இப்பெண்களின் அவல நிலையைக் கண்டார். பின் மற்றொரு பீடத்தை கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் அமைத்து அங்கு அத்
தெய்வத்திற்கு இருப்பிடம் தரப்பெற்றது. ஊர் அமைதியானது. கோயிலும் உயிர்ப்பலி கொள்ளாத இடமானது.
அஞ்சாத பெருமாளும் அவரின் புற்றும்
ஆண்டவர்
ஒரு நாள் தூங்கும் பொழுதில் கனவில் சாளி என்ற ஊரில் உள்ள அஞ்சாத பெருமாள் தோன்றி தன் முதுகில் புற்று உள்ளது. அதனைத் தாங்கள்
மட்டுமே நீக்க இயலும் என்று கோரிக்கை வைக்கிறார். அடுத்த நாள் காலையில் நல்லான் செட்டியாரை
அழைத்து அவர் தொடர்புடை சாளி திருக்கோயிலைக் காண ஆண்டவர் புறப்பட்டார்.
நல்லான்
செட்டியாரை அழைத்து அக்கோயிலின் அய்யானருக்குப் பின் யாது உள்ளது எனக் கண்டுவரச் சொன்னார்.
நல்லான் குளிக்காமல் வந்துவிட்டேன் என்னால் இயலாது என்றார். உடன் ஆண்டவர் தானே தன்
காலால் ஒரு உதை உதைத்துச் சுற்றுச்சுவரைத் தள்ளிவிட்டார். அங்கே அய்யனாருக்குப் பின்பு பெரிய புற்று வளர்ந்திருந்தது. இது குறித்து நல்லான்
செட்டியாரிடம் கேட்டபோது, கல் தச்சன் ஒருவனுக்கு இக்கோயிலைப் புதுப்பிக்க பணம் தந்ததையும்
அவன் காலம் தாழ்த்துவதையும் சொன்னார்.
உடன் அந்தக்
கல் தச்சனை வரவழைத்து அவனிடத்தில் கனவில் கண்ட காட்சியை ஆண்டவர் உரைத்தார். இருப்பினும்
அவன் இன்னும் காலம் தாழ்த்தினான். அப்போது அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். காலம் தாழ்த்திய
நிலையில் அவனின் மனைவிக்கு கர்பத்தில் இருந்து செந்நீர் ஒழுகியது. பயந்துபோன கல் தச்சன்
ஆண்டவரிடம் வந்து நடந்ததைச் சொல்லி, அழுதான். ஆண்டவர் அருள் பார்வையால் மனைவி நலம்
பெற்றாள். கோயில் பணி நடைபெற்று முடிந்துக் குடமுழுக்கு ஆனது.
மடம் கட்டத் தொடங்கலும் திருநெல்லை அம்மன் பூசைப் பொருள்களைத்
தருதலும்
கோயில்
பணி விரைவாக நடந்து வந்தது. அதே நேரத்தில் மடத்தின் பணியையும் தொடங்க எண்ணம் கொண்டார்
ஆண்டவர். தன் இருபத்தோராம் வயது முதல் முப்பத்து நான்காம் வயது வரை கொட்டகைகளிலும்
ஒட்டுத் திண்ணைகளிலும் சத்திரங்களிலும் தங்கி வந்த ஆண்டவருக்கு நிலையான இடம் வேண்டும்
என்ற எண்ணத்தின் விளைச்சலே கோவிலூர் மடாயலம் கட்டுவதற்கான நோக்கமாக அமைந்தது.
அதற்காக நல்ல நாள் குறித்து கோவிலூர் திருமடத்தின் அடிக்கல்
நாட்டும் பணியை அவர் செய்தார். அதற்காக உரிய பூசை பொருட்கள் வாங்க இரு குழுக்கள் திருப்பத்தூர்
நோக்கியும், காரைக்குடி நோக்கியும் செல்ல இரு குழுக்களும் வரத் தாமதமாகின. அந்நேரத்தில்
கோயிலுக்குள் இருந்து, ஒரு பெண் தன் கரங்களில் பெரிய தாமரைப் பூவை ஏந்தி அதில் தேங்காய்,
மற்றும் பூசைப்பொருள்களைக் கொண்டுவர அவற்றை வைத்து அன்றைக்கு மடத்திற்கான பூசை நடைபெற்றது.
இதன்பின் அந்தப் பெண்ணைத் தேடினால் கிடைக்காத தூரத்திற்கு அவள் சென்றுவிட்டான். வந்தவள்
திருநெல்லை அம்மனே என்று எண்ணி மகிழ்ந்தனர்.
நல்லானுக்கு பாடம் சொல்லலும், தானே மெய்ப்பொருளாக நிற்றலும்
நல்லான்
செட்டியார் அவ்வப்போது ஆண்டவரிடம் பாடம் கேட்டு வந்தார். வேதாந்த சூடாமணியைக் கேட்க
வெள்ளத்திலும் அவர் நீந்தி வந்தார். அவ்வாறு வந்தவரை பாடம் கேட்டது போதும் ஆண்டவரே
மெய்ப்பொருளாகக் கொள்ளுவீர் என்று ஞானவழி காட்டினார்
ஆண்டவர்.
சில நேரங்களில் நல்ல சொல், நிமித்தம் கேட்க, காண நல்லான்
கொற்றவாளீசர் கோயிலுக்கு வருவதுண்டு. அவ்வாறு ஒரு நாள் வரும்பொழுது ‘ இனி இதுபோல நிமித்தம் கேட்க வேண்டாம். நாமே உமக்கு
அனைத்தும் சொல்வோம்” என்றார் ஆண்டவர். நல்லான் எப்போதும் போல ஆண்டவரை மீறிக் கோயிலுக்குச்
சென்று, பல நேரம் காத்திருந்து கௌலி கேட்டு வந்தார். ஆண்டவரிடம் வந்து இனி இதுபோல்
நடக்கமாட்டேன். தங்கள் சொல்லே எல்லாம் எனப் பணிந்தார்.
இவ்வாறு ஞான வழியும், திருக்கோயில் வழியும், மடாலய வழியும்
கோவிலூர் ஆண்டவரால் உருவாக்கம் பெற்றன.
(வளரும்)
------------------------------------------------------------------------------------------
கோவிலூர் கொற்றவாளீசர் பழைய படம், மடத்தின் படம், உள்ளே இருக்கும்,
மூர்த்திகள் படம் வைக்கலாம்.
கோவிலூர் கொற்றவாளீசர் கோயில் உள்ள காரைக்காலம்மையார் திருவுருவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக