குறளோவியத்தில் கூடா ஒழுக்க நெறிகள்
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்
தலைவர்
அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி
திருவாடானை
623407
இராமநாதபுரம்
மாவட்டம்
9442913985
திருக்குறள் என்பது வாழ்க்கைக்கான இலக்கணம். திருக்குறள்
என்னும் வாழ்விலக்கண நூலுக்குத் தகுந்த எடுத்துக்காட்டு தந்து அதனை ஓவியமாக்கித் தந்திட்ட
நலமான முயற்சி கலைஞர் கருணாநிதியின் குறளோவியம் ஆகும். திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று
முப்பது குறட்பாக்களில் தற்காலத்திற்கு அதிகம் தேவைப்படும் குறள் நெறிகளை ஓவியமாக்கி
படிப்பவர் மனதில் திருக்குறள் கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் முயற்சியைக் குறளோவியத்தின்வழி
கலைஞர் கருணாநிதி அவர்கள் கைக்கொண்டுள்ளார்.
அறிஞர் வ.சுப. மாணிக்கனார் குறளோவியத்தின் உரைப் பாங்கினை
சூழ்நிலை உரை என்று அளவிடுகிறார். தமிழகச் சூழலுக்கு ஏற்ற குறட்பாக்களைத் தேர்வு செய்து
அவற்றை விளக்கி, முன்னுரை பின்னுரை தந்து சூழ்நிலை உரையாக்கியுள்ளார் என்று வ.சுப.
மாணிக்கனார் குறளோவியத்தின் உரைத்தன்மையைப்
பற்றிக் குறிப்பிடுகிறார். ‘‘கலைஞரின் குறளோவியத்தில் பல புது நெறிகள் உள. ஒவ்வொரு
குறட்கு முன்னும் ஏற்ற சூழ்நிலை அல்லது பின்புலம் அமைத்துக் காட்டியிருப்பது முதற்சிறப்பு.
திருக்குறள் ஒரு நூலின் கிளையில்லை. அதுவே
முதல். மக்கள் வாழ்வியக்கத்தை அலசிப் பார்த்துக் குறளுருக் கண்டவர் வள்ளுவர். அவர்
கண்ட பல நிகழ்ச்சிகள் குறட்பிழிவாயின. இவ்வுண்மைப்படையை அறிந்த நம் கலைஞர் கருணாநிதியார்
கற்பனைானாலும், குறட்கேற்ற சூழ்நிலைகளைத்தொடுத்தும் அடுத்தும் கற்பாரை வழிப்படுத்துகின்றார்.
இத்தனி நெறி நோக்கிக் குறளோவியத்தைச் சூழ்நிலை உரை என்றும் கூறலாம்” (வ.சுப. மாணிக்கம்,
1986) என்பது அவ்வறிஞர் கருத்தாகும்.
அறத்துப்பாலில் எழுபத்தாறு குறள்பாக்களையும், பொருட்பாலில்
நூற்று முப்பத்தேழு குறட்பாக்களையும், இன்பத்துப்பாலில் நூற்று நாற்பத்தாறு குறட்பாக்களையும்
ஆக முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களை உள்ளடக்கி முன்னூறு குறள் ஓவியங்களை வள்ளுவர்
தீட்டியுள்ளார்.
திருக்குறளில் அறத்துப்பாலில் இருபது விழுக்காடு குறள்களையும்,
பொருட்பாலில் பத்தொன்பது விழுக்காடு குறள்களையும், காமத்துப்பாலில் அறுபத்தொன்று விழுக்காடு
குறள்களையும் கலைஞர் கருணாநிதி குறளோவியமாக
வரைந்துள்ளார். கலைஞர் கருணாநிதி காமத்துப்பால் குறட்பாக்களை அதிக அளவில் ஓவியமாக்கியுள்ளார்
என்பதை இவ்வெண்ணிக்கை உணர்த்துகிறது. மேலும்
அறத்துப்பால் குறட்பாக்களில் அதிக அளவில் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரக் குறட்பாக்கள்
ஓவியங்களாக ஆகியுள்ளன.
கலைஞர் கருணாநிதி அவர்கள் குறளோவியம் இரு பதிப்புகளாக வெளிவந்துள்ளன.
முதற்பதிப்பு வேலூர் திராவிடப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் இருபத்துநான்கு குறளோவியங்கள்
இடம்பெற்றிருந்தன. இதன்பின் இரண்டாம் பதிப்பில் முன்னூறு என்ற அளவில் இது வளர்ந்தது.
முதல் பதிப்பில் இருந்து இரண்டாம் பதிப்பில்
இல்லாமல் போன ஓவியங்களும் உண்டு. அவற்றில் ஒன்று மழித்தலும் நீட்டலும் என்ற தலைப்பிட்ட
கட்டுரை. அதுவும் கூடா ஒழுக்கம் அதிகாரத்தில் அமைந்த குறளுக்கான ஓவியம் ஆகும். வள்ளுவர்
முதல் பதிப்பிலும் இரண்டாம் பதிப்பிலும் கையாண்ட அறத்துப்பால் அதிகாரங்களில் கூடா ஒழுக்கம்
என்ற அதிகாரம் அவரின் மனதிற்குள் ஆழப் பதிந்து
சமுதாயத்திற்கு அதன்வழி நல்ல கருத்துகள் சொல்லப்பட வேண்டியுள்ளன என்ற நிலையில் அவ்வதிகாரத்தின்
ஐந்து குறட்பாக்களைக் குறளோவியமாக ஆக்கித் தந்துள்ளார். பாதிக்குப் பாதி என்ற அளவில் கலைஞர் கருணாநிதியின்
மனதில் நிறைந்த அதிகாரமாக கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் விளங்கியுள்ளது என்பதை இதன்வழி
உணரமுடிகின்றது.
‘‘கூடா ஒழுக்கம்” என்ற அதிகாரத்தினைக் கலைஞர் கருணாநிதி அவர்கள்
உள்வாங்கிய திறனையும் அதன் வழி தமிழ்ச்சமுதாயம் அகற்ற வேண்டிய கூடா ஒழுக்கத்தையும்
வெளிப்படுத்துவனவாக குறளோவியப் பகுதிகள் அமைந்துள்ளன. குறிப்பாக தமிழர்கள் விலக்க வேண்டிய
கூடா ஒழுக்க நடைமுறைகள் இவை என்று கலைஞர் கருணாநிதி சுட்டுக் காட்டுகிறார். இவ்வொழுக்கக்
கேடுகளைக் களைந்துவிட்டால் தமிழ்ச் சமுதாயம் இன்னமும் பண்பாட்டுத் தூய்மை பெறும் என்பதில்
ஐயமில்லை. கலைஞர் கருணாநிதி காட்டிய ஐந்து கூடா ஒழுக்க நெறிகளின் திறத்தை இக்கட்டுரை
எடுத்துரைக்கின்றது.
கூடா ஒழுக்கம் – அதிகார வைப்பு
அறத்துப்பாலில்
துறவறவியல் என்ற பகுப்பில் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் வைக்கப்பெற்றுள்ளது. அருளுடைமை,
புலால் மறுத்தல், தவம் என்ற அதிகாரங்களைத் தொடர்ந்து கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் அமைக்கப்பெற்றுள்ளது.
‘‘தாம் விட்ட காம இன்பத்தை உரன் இன்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற , அவ்வாறே கொண்டு
நின்று தவத்தோடு பொருந்தாததாய தீய ஒழுக்கம். அது விலக்குதற்கு, இது தவத்தின்பின் வைக்கப்பட்டது”
(பரிமேலழகர், 1300) என்று இவ்வதிகாரத்திற்கான
வைப்புமுறையைப் பரிமேலழகர் காட்டுகிறார். துறவியர்கள் தாம் துறந்து விட்ட காம இன்பத்தை
துறக்க இயலாமல் அவ்வின்பத்தில் மேலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் தீவொழுக்கத்தை விலக்குதல்
என்று இவ்வதிகாரத்திற்கான தலைப்பின் விளக்கத்தைப் பெறமுடிகிறது.
பெரும்பாலும்
கூடா ஒழுக்கம் என்பது துறவியருக்கு மட்டும் என்று கொள்ள இயலாது. அது தவறான நடத்தைகளை
விலக்கும் பொது முறைமை உடையது என்ற அமைப்பில் கலைஞர் கருணாநிதி இவ்வதிகாரத்தைக் கண்டுள்ளார்.
பசுத்தோல் போர்த்திய புலி
நல்லவனைப்
போன்று நடிக்கிற ஒருவனை நம்பி ஏமாறக் கூடாது என்ற பொதுக் கருத்தை முன்வைத்து, வள்ளுவர்
‘‘வலியில்
நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று” (273)
என்ற திருக்குறளைப் படைத்திருக்கிறார் என்று துறவிகளுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்குமான கூடா
ஒழுக்கமாக இக்குறளைக் காண்கிறார் கலைஞர் கருணாநிதி.
‘‘ஒருநாள்
மாலைப்பொழுது சாயும் நேரம். உழவன் வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு வாய்க்கால் வரப்புகளை
வகைப்படுத்த வயலின் பக்கம் வந்தான். காற்றிலாடும் முற்றாத பச்சைப் பயிர்களளை இருவிழியால்
கண்டு இன்பம் கொண்டான். வரப்போரம் நடந்து வந்தவன்,
திடீரென, ‘‘அய்யோ ! ’’ என்று அலறினான். அலறியவன்
அங்கு நிற்கவில்லை . கழனியைவிட்டுத் தெருவின் பக்கம் ஓடினான். ‘‘அய்யோ ! அய்யோ! என் கழனியை எல்லாம் புலி அழிக்கிறது பயிற்களையெல்லாம்
புலி மேய்கிறது. என்று கத்தினாள். ஊரார் ஓடிவந்து
கூடினர். ‘‘என்னடா வேடிக்கை? புலி பசித்தாலும்
புல்லைத் தின்னுமா? என்றார் ஒரு முதியவர். ‘‘அதோ என் பயிரைத் தின்னுகிறதே! ’’ என்று
அழுதான் உழவன் ! ஊரார் வயல்களை நோக்கி
ஓடினார் . உண்மைதான். புலி யொன்று பயிரை
மேய்ந்த கொண்டிருந்தது. ஆட்கள் கூட்டமாக வருவது
கண்டு புலி அவர்களை மிரட்டுவதுபோல் நிமிர்ந்து
நின்றது. ! அதை கண்டு, அச்சத்தால் நடுங்கியவர்கள் . ‘‘சரி ! சரி ! அதை ஒன்றும் செய்யாதீர்கள்
. மேய்கிறவரையில் மேய்ந்துவிட்டுப்போகட்டும். வயல் முழுவதையும் மேய அதற்கு வயிறுதான்
இடம் கொடுக்கமா?’’ என்று திரும்பிட முடிவு செய்தனர். அந்தக் கூட்டத்தில் அஞ்சா நெஞ்சர்களும்
இல்லாமற் போகவில்லை! அவர்கள் தங்கள் கைகளில் ஏந்திருந்த ஈட்டிகளையும் வேல்களையும் புலியை
நோக்கி வீசினர். புலி மிரண்டோடிக் கழனிக்குள்ளே சென்று, சேற்றில் சிக்கிக் கீழே விழுந்தது.
அஞ்சா நெஞ்சர்கள் விடவில்லை. அருகே சென்று பார்த்தனர். சேற்றில் விழுந்து கிடந்தது
உழவன் வீட்டு பசுமாடு! அதனருகே கிடந்தது ஒரு புலியின் தோல்! ” (கலைஞர் கருணாநிதி,
1986) என்று இக்குறளுக்கான ஓவியம் வரையப்பெற்றுள்ளது.
‘‘மனத்தை அடக்க முடியாத சில பேர் தாங்கள் தவறு செய்யும்போது
யாரும் அருகே நெருங்கி வந்து கடுக்க முடியாதபடி தவக்கோலம் பூணுவதுபோல இந்தப் பசு புலித்தோலைப்
போர்த்துக்கொண்டு பயிரை மேய்ந்திருக்கிறது” என்ற கருத்தை
இக்குறள் தரும் கருத்தாக கலைஞர் கருணாநிதி எடுத்துரைக்கிறார். மனத்தை அடக்க
முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு
ஒன்று புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும் என்று குறளுக்கு
இக்குறளொவியத்தை அடியொற்றியே கலைஞர் கருணாநிதி
அவர்கள் திருக்குறளுக்குத் தமது உரையை வரைந்துள்ளார்.
உடலை ஒரு போர்வையால்
போர்த்திக் கொண்டு, மனதை வஞ்சனையால் நிரப்பி வைத்துக்கொண்டு வாழும் மனிதர்களின் ஒழுக்கம் தேவையற்ற ஒழுக்கம்
என்பதை இவ்வோவியத்தின்வழி வெளிப்படுத்துகிறார்
கலைஞர் கருணாநிதி.
நெஞ்சில் துறவார்
நெஞ்சத்தில் துறவினைக் கொண்டவர்கள், வாழ்வில் துறவினைக் கொள்ளாமல் பற்றுகளை விடாமல் இருக்கும்
நிலையை இடித்துரைக்கிறது
நெஞ்சில்
துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின்
வன்கணார் இல் (276)
என்ற குறள். இக்குறளுக்கு ஓவியம் வரைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் ‘‘உண்மையிலேயே மனதாரப் பற்றுக்களைத் துறக்காமல்
துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட
இரக்கமற்றவர் யாருமில்லை” என்று கருத்துரைக்கிறார்.
இதற்காக
ஒரு துறவியின் வாழ்வினைக் களமாகக் கொள்கிறார். துறவி ஒருவர் அருவிப் பெருக்கென உரை
வழங்குவதில் வல்லவர். அவரின் பேச்சுரையைக் கேட்டு அனைவரும் மகிழ்வர். அவரின் உரையின்
மையம் யாரும் பற்றற்று இருக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறு அவர் பேசிவிட்டு தன் மடம்
சென்றார். அங்கு அறைக்கதவு ஒன்றைத் தட்ட அவ்வறையை ஓர் இளம் பெண் திறக்கிறார். அப்பெண்
அத்துறவியை ஆரத்தழுவி வரவேற்கிறாள். இதனை மறைந்து இருந்து ஒரு இளைஞன் காண்கிறான். அவன்
அவர் பேச்சுரையையும் கேட்டவன். அவரின் நடத்தையையும் இப்போது காண்கிறான். இரண்டிற்குள்ளும்
அவரின் முரண்பாட்டை அந்த இளைஞன் காண்கிறான். பேச்சொன்று செயல் வேறாக இருக்கும் துறவியரை,
மனிதரை உத்தமமானவர்கள் என்று உலகம் நம்புகிறதே என்று அந்த இளைஞன் மனம் வெதும்புகிறான். நெஞ்சத்தில்
ஆசையைக் கொண்டிருப்பவர்கள் ஆசைகள் ஏதும் இல்லாதது போன்று வாழ்தலைப் போல இரக்கமற்ற
வாழ்வு வேறெதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள இந்தக் காட்சியைப் படைத்துக்காட்டுகிறார்
கலைஞர் கருணாநிதி அவர்கள்.
செயல் கணக்கீடு
‘‘நேராகத்
தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் – வளைந்து தோன்றும் யாழ் இன்பம் பயக்கும். அவ்வாறே
மாந்தரையும் அவர்தம் உருவத்தால் கணக்கிடுவதை விடுத்து, அவர்களின் செயல்களைக் கொண்டுக்
கணக்கிடுதல் நன்று ” என்ற பொருளைக் கலைஞர் கருணாநிதி
‘‘கணை
கொடிது, யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு
பாலால் கொளல்( 279)
என்ற குறளுக்கு விளக்கமாகத் தருகிறார். இதே பொருள் அவரின்
திருக்குறள் உரையிலும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
இக்குறளுக்கு
ஏற்ப ஒரு காட்சியை வடிவமைக்க வேண்டும். கலைஞரின் மனம் துறவியரை நோக்கிச் செல்லவில்லை.
இதற்கு இரு வீரர்களை எடுத்துக்கொள்கிறார். அவர்களின் வீரத்தையும் ஆண்மையையம் களமாகக்
கொள்கிறார்.
அந்த ஊருக்குப்
புதிதாக இரு தளபதிகள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்களின் ஒருவன் தோற்றத்தால் உத்தமன் போலக் காட்சி தருகிறான். மற்றவன்
தோற்றத்தில் இளித்த வாய், அலையும் விழிகள், முறுக்கு மீசை, முறுக்கு உடல் கொண்டவனாக மொத்தத்தில் முரடனாக அவன் காட்சி தருகிறான்.
முன்னவன் காட்சிக்கு நல்லவன். பின்னவன் காட்சிக்குத் தீயன். இவர்கள் இருவரையும் ஊர்
வரவேற்பு விழா வைத்து வரவேற்கிறது.
சில நாள்கள்
சென்ற நிலையில் நல்லவனாக தோற்றம் அளித்தவன் தேன்மொழி என்ற பெண்ணின் வீட்டுக்குள் நுழைய
முற்பட்டான். தேன்மொழியின் கணவன் ஊரில் இல்லை என்பதை அறிந்தே நல்லவன் இத்திட்டத்தைச்
செயல்படுத்த முனைந்தான்.
அந்நேரம்
கெட்டவனாகத் தோற்றத்தில் தெரிந்தவன் பாய்ந்து வந்து தேன்மொழியைக் காப்பாற்றுகிறான்.
நல்லவனான் பொய்யனுக்கும் கெட்டவனான நல்லவனுக்கும்
மற்போர் நடக்கிறது. முதலாமவன் மாண்டான். அடுத்தவனே
நல்லவன் என்னும் பெயர் பூண்டான்.
‘‘நேர்மையானவன்
போல் தோன்றிய தளபதி கீழ்மைச் செயல் புரிந்தான். கீழோன் போல் தோன்றியவனோ மேலான செயலாலே
மேலோன் ஆனான் ” என வாழ்த்தியது ஊர். ( கலைஞர் கருணாநிதி, 1986)
இவ்வாறு நெஞ்சத்தில்
வஞ்சமில்லாமல் வாழ்தலே நல்ல ஒழுக்கமிக்க வாழ்வு என்று வள்ளுவர் வழியில் ஒழுக்க நெறிகளைக்
காட்டுகிறார் கலைஞர் கருணாநிதி.
குன்றிமணி போன்ற மனிதர்கள்
வள்ளுவர்
மணிச்சிகை என்ற குன்றிமணி என்ற சிறு மணியைக் கூட உவமையாகக் கையாள்கிறார். முகப்பில்
கருத்தும் பின்பு சிவந்தும் காணப்படும் குன்றி மணி நெஞ்சத்தில் கருப்பு கொண்டு வெளிப்படையாக சிறந்த சிவப்பான செயல்களைச்
செய்பவர்களுக்கு உவமையாகின்றது.
மருத்துவ
சிகாமணி என்பது அவரின் பெயர். அவருக்கும் மருத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. என்றாலும்
அவர் மருந்துகள் சில விற்பதால் அப்பெயரைப் பெற்றுவிட்டார். ‘‘மருந்து தயாரித்து விற்கனை
செய்யும் வாணிபமும் அவருக்கு உண்டு. தான் தயாரிக்கும்
மருந்துகளே உயர்ந்தவை, உன்னதமானவை நேர்த்தியானவை என்பதைக் காட்டிக் கொள்ள அவர் ஒரு
மலிவான வியாபார தந்திரத்தைக் கையாண்டு வந்தார். அதாவது தன்னைத் தவிர மற்றுமுள்ள மருந்து
வணிகர்கள் அனைவருமே நேர்மையற்றவர்கள் – கலப்படம் செய்து மக்களின் உயிரோடு விளையாடுகிறவர்கள்
என்று பிரச்சாரம் செய்து வந்தார். யாரைப் பற்றியாவது, அல்லது எதைப் பற்றியாவது முந்திக்
கொண்டு ஒரு குறையைச் சொல்லாவிட்டால், அப்படிச் சொன்னவரைக் குறைகளே இல்லாத பத்தரைமாற்றுத்
தங்கமென் ஊரார் எண்ணிக் கொள்வார்களாம்! அந்த
வகையைச் சேர்ந்தவர், மருத்துவ சிகாமணி”(கலைஞர் கருணாநிதி, 1956)
இவருக்கு
ஓர் ஆசையும் இருந்தது. அரசாங்கப் பணியில் தான் இணைந்து அரசுக்குச் சேவை செய்யவேண்டும்
என்று . அவரும் இதற்காகப் பலரைப் பார்த்து, பலரைப் பற்றிக் குறைசொல்லி தான் குறையற்றவன்
என்பதாகக் காட்டிக்கொண்டு வேலை தேடி வந்தார்.
ஒருநாள்
இவரது மருந்து விற்பனைக்கடையில் அரசாங்கக் காவலர்கள் உள்புகுந்து இவரின் கடையில் விற்கப்படும்
மருந்துகளைத் தரம் பார்த்தனர். அத்தனையிலும் கலப்படம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதனை அறிந்த மக்கள் வெகுண்டு அவரின் கடைக்கு முன் குழுமி அவரின் நடிப்பினை நம்பி ஏமாந்தோமே
என்று குமுறினர்.
இவரின் உண்மை இயல்பு இப்போது தெரியவந்தது, இவரின் நடிப்பு
வெளிப்பட்டது.
‘‘புறத்தில்
குன்றிமணியைப் போலச் செம்மையானவர்களாகக் காணப்பட்டாலும் அகத்தில் அந்தக் குன்றி மணியின் மூக்கைப் போலக் கறுத்திருப்பவர்களும் இந்த உலகில்
இருக்கிறார்கள் என்று வள்ளுவர் கூறியிருப்பதை மறந்து விட்டீர்களா? அதற்கு எடுத்துக்காட்டுதான்
இந்த மருத்துவ சிகாமணி” என்று ஒரு பெரியவர் மருத்துவ சிகாமணியின் கலப்பட மனது குறித்து
வள்ளுவரை முன்மொழிந்து கூறினார்.
புறங்குன்றி
கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற்
கரியார் உடைத்து (277)
வெளித்தோற்றத்தில்
சிவப்பு, அகத்தில் கருப்பு என்ற நிலையைக் காட்ட அருமையான உவமையாக அமைந்து விடுகிறது
குன்றிமணி. இந்தக் குன்றிமணி வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கி அதனை விலக்க வாழவேண்டும்
என்று கூறும் வள்ளுவத்திற்கு தக்க இலக்கியமாகக் கலைஞர் கருணாநிதி அவர்களின் இக்குறளோவியம்
அமைந்துள்ளது.
உலகம் பழிப்பவற்றை ஒழித்தல்
கூடாவொழுக்கம் அதிகாரத்தின் நிறைவான குறள்
மழித்தலும்
நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது
ஒழித்து விடின். (280)
என்பதாகும். ”துறவறவியலிலே துறவின் தன்மையைப் பற்றி அறம்
போதிக்கும் அறிஞர் பெருந்தகை மொட்டை அடித்துக் கொள்ளுதல், சடை வளர்த்துக்கொள்ளுதல்
ஆகிய கோலங்கள் தீய ஒழுக்கத்தை விட்டவர்களுக்கு தேவையில்லை என்று வலியுறுத்தியிருக்கிறார்.
தலையை மொட்டை அடித்துக்கொள்ளுதலும் நீ்ட்டி சடை வளர்ப்பதும் உலகத்தினால் தீயை என்று கருதப்படும் காரியங்கைள
ஒழித்தவர்களுக்குத் தேவையில்லை என்பதே இதன்
பொருளாகும்” (கலைஞர் கருணாநிதி 1956) என்பது
இக்குறளுக்குக் கலைஞர் தரும் உரையாகும்.
இக்குறளோவியம்
இரண்டாம் பதிப்பில் காண இயலாததாக உள்ளது. குறளோவியத்தின் முதல் பதிப்பில் இது வெளிவந்துள்ளது.
திருவள்ளுவருக்கான உருவம் சடைமுடிகள் தரித்து, முப்புரிநூல் அணிந்து காட்டப்பெறுவது
அவரின் குறள் நெறிக்கே ஊறு விளைவிப்பது என்பதை இக்குறளோவியத்தில் கலைஞர் கருணாநிதி
அவர்கள் காட்டி நிற்கிறார்.
இவ்வாறு
அறத்துப்பாலில் கலைஞர் கருணாநிதியின் உள்ளத்தில் அதிகம் இடம் பெற்றிருப்பது கூடா ஒழுக்கம்
என்னும் தலைப்பிலான அதிகாரக் குறட்பாக்களே ஆகும். இவ்வதிகாரத்தின் வழி உலகம் போற்றும்
உன்னத நடத்தைகளுக்கும் இழி நடத்தைகளுக்கும் இடையே ஆன முரண் நடைபெற்றுக் கோண்டே இருப்பதை
உணரமுடிகின்றது.
தொகுப்புரை
கலைஞர்
கருணாநிதி அவர்கள் படைத்த புதுவகையான இலக்கிய வகை குறளோவியம் ஆகும். தேர்ந்த குறள்களுக்குத்
தேர்ந்த மாந்தர்களை வைத்துச் சூழல் ஒன்றை ஏற்படுத்தி குறள் நெறியை உலகிற்கு அளித்த
புதிய முயற்சி குறளோவியம். முப்பது ஆண்டு கால திருக்குறள் தவம் குறளோவியம். பல பொருளறியாக்
குறள்களுக்கு இது சிறந்த கைவிளக்காக விளங்குகிறது.
குறளோவியத்தில்
அதிக அளவில் காமத்துப்பால் சார்ந்த குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அறத்துப்பால் அதிகாரங்களில் அவர் அதிகம் கையாண்டது கூடா ஒழுக்கம்
என்னும் அதிகாரம் ஆகும். இவ்வதிகாரத்தில் இருந்து ஐந்து குறட்பாக்களை எடுத்து விளக்கம்
செய்துள்ளார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
மக்களிடம்
இருக்கும் மன வஞ்சனையைப் போக்கச் செய்வது கூடா ஒழுக்கம் என்றும் அதிகாரம்.
பசுவின்
இயல்பு மென்மையும், நேர்மையும் கொண்டது. அது புலித்தோலை அணிந்து புல் மேய்வதைப் போன்றது
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று நடத்துவார் தன்மை என்பதை வள்ளுவர் வழி கலைஞர் கருணாநிதி
அவர்கள் மிக அழுத்தமாக குறளோவியத்தில் காட்டியுள்ளார்.
துறவியின்
பேச்சு பற்றற்ற நெறியைக் கொண்டிருக்க அவர்
மடத்தில் கோலமயிலின் பிடியில் கிடப்பது அவரின் உள்ளொன்று வைத்துப் புறமொன்று நடக்கும்
செயலின் இழிவைக் காட்டுகவதாக உள்ளது.
இரு தளபதிகள்,
வீரம் உடையவர்கள் என்றாலும் அவர்கள் உருவில் அழகு அழகின்மை ஆகியன இடம் பெற்றிருந்தன. அழகானவன் உள்ளத்தில் அழகாய்
இல்லை. காமுகனாக இருக்கிறான். அழகில்லாதவன் என்று எண்ணப்பட்டவன் உள்ள அழகோடு போற்றப்பெறுகிறான்.
இரு வேறு உள்ளங்களின் இயற்கையைத் தன் குறளோவியத்தில் வள்ளுவ வரையறைப் படிக் காட்டுகிறார்
கலைஞர் கருணாநிதி அவர்கள்.
மருத்துவ
சிகாமணி பேசுவது கலப்படம் இருக்கக் கூடாது என்று. ஆனால் அவரின் மருந்துகள் கலப்பட உச்சத்தில்
இருக்கின்றன என்பதை அரசாங்க அலுவலர்கள் காட்டுகின்றனர்.அவரின் பேச்சு, இயல்பு, வணிகம்
அனைத்தும் உள் வஞ்சகமும், வெளிப்படையாக போலி உண்மையும் இருப்பதை மக்கள் ஒரு கட்டத்தில்
உணர்ந்து கொள்கின்றனர். குன்றிமணியாய் அவரைத் தூக்கி வீசுகின்றனர்.
உலகம்
பழித்ததை விட்டுவிட்டால் வேறு புற அடையாளங்கள் தேவை இல்லை என்பது வள்ளுவர் கருத்து.
அவரின் கருத்தையே உள் ஒன்று வைத்து புறம் ஒன்றாகத் திரித்து சமய அடையாளங்களுடன், காட்டிடும்
உலக இயற்கையைக் கலைஞர் கருணாநிதி அவர்கள் கண்டிக்கிறார்.
திருக்குறள்
நூல் உள் இருப்பது உண்மைகள். அதனை உணர்ந்தோர் வெளிப்படுத்துவது அதன் உண்மையை அன்றி
மற்றதை. இந்நிலையில் கூடா ஒழுக்கச் செயல்பாடுகளை ஒதுக்கி நற்செயல்கள் செய்து வாழ குறளோவியம்
நல்ல காட்சிகளை முன்னிறுத்துகி்ன்றது.
பயன் கொண்டநூல்கள்
கருணாநிதி, மு. கருணாநிதி, குறளோவியம், திராவிடன் பதிப்பகம், வேலூர், 1956
கருணாநிதி, மு. கருணாநிதி, குறளோவியம், பாரதி பதிப்பகம்,
சென்னை, 1986
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக