ஞாயிறு, நவம்பர் 27, 2022

திருவரங்க பஞ்ச ரத்ன கீர்த்தனங்களில் தியாகராஜரின் பக்தித் திறம் முனைவர் மு.பழனியப்பன் Jun 11, 2022

 



siragu thiyaagaraaja suvaamigal1
தியாகபிரம்மம் என்று அழைக்கப்பட்டவர் தியாகராஜ சுவாமிகள். இவர் இன்றைக்கு இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். தெலுங்கிலும், வடமொழியிலும் பல இசைப் பாடல்களை எழுதியவர். இராமபிரானின் மீது அளவற்ற பக்தி கொண்டவர். இராமபிரானை விக்ரக வடிவிலும், அவர் இருக்கும் கோயி்ல்களுக்குச் சென்று வணங்கும் நிலையிலும் இராம பக்தராக எப்போதும் இருந்தவர் தியாகராஜர்.

இவர் பாடிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பக்தி நிலையிலும், இசை நிலையிலும் உயர்ந்த தரத்தன ஆகும். இவற்றில் பக்தி உணர்ச்சி பெரும் அளவில் காணப்படும். இவர் திருவையாறு, ஸ்ரீரங்கம், லால்குடி போன்ற இடங்களில் உள்ள இறைவனை வணங்கி அந்த அந்த இறைன் மீது ஐந்து கீர்த்தனைகள் கொண்ட தொகுப்பாக பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் என்பதைப் பாடினார். இந்த பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் தியாகராஜரின் தனித்த முத்திரைகளைக் கொண்டு அமைந்தன. அவை இராமனுக்குப் பெருமையைக் காட்டின. மேலும் இவரின் இசையறிவையும் உலகிற்குக் காட்டின.

இவர் இராமனை அன்றி வேறு தெய்வங்களைப் பாடாதவர். திருமாலின் வேறு அவதாரங்களைக் கூட இவர் பாடவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவர் திருவரங்க இறைவனைப் பணிகின்றார். இதற்குக் காரணம் இராமன் திருவரங்க இறைவனை வணங்கினார் என்பது கருதி இவர் திருவரங்க இறைவனைப் பாடினார்.

இவர் ஒருமுறை சித்திரை மாத்தில் நடைபெறும் திருவிழாவைக் காண ஸ்ரீரங்கத்திற்குச் சென்றார். அப்போது, திருவரங்க நாதர் தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். அவ்வாறு பவனி வந்த திருவரங்க இறைவரை இவரால் முழுவதும் தரிசிக்க இயலவில்லை. இவர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரால் இறைவனை முழுவதும் தரிசிக்க முடியவில்லை. இவர் வருத்தத்துடன் நின்றிருந்தார்.

தங்கக் குதிரையில் வந்த திருவரங்க இறைவன் சற்று தூரம் சென்றதும் நகர முடியாமல் நின்றது. தங்கக் குதிரை வாகனத்தை நகர்த்த பல முயற்சிகள் எடுத்தனர். இருப்பினும் நகரவில்லை. தங்கக் குதிரையைத் தூக்கி வந்தவர்கள் தங்களால் தூக்கமுடியவில்லை என்று சொல்லிவிட்டனர். இதன் பிறகு அங்கிருந்த ஒருவர் தியாகராஜர் இறைவனை முழுவதும் காண இயலவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். அவரைக் கூட்டி வந்து இந்த இடத்தில் வணங்க வைத்தால் ஓரளவு இந்தத் தங்கக் குதிரை நகரும் என்றார்.

தியாகராஜரை அழைத்து வந்தனர். அவர் மனம் உருக திருவரங்க பஞ்ச ரத்ன கீர்த்தனையைப் பாடினார். இறைவன் முதலாக அனைவரும் அந்தக் கீர்த்தனையைக் கேட்டனர். தம்மை மறந்தனர். புதிய வேகத்துடன் தங்கக் குதிரையில் ஸ்ரீரங்க இறைவன் கிளம்பினார். கோயிலை அடைந்தார். இவ்வாறு தியாகராஜரின் பாடல்கள் சக்தி நிரம்பினவாக விளங்குகின்றன.

இந்த ஸ்ரீரங்கக் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளின் பக்தி நிலைப்பாட்டை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது. இந்த பஞ்ச ரத்ன கீர்த்தனை தெலுங்கு மொழியில் அமைந்துள்ளது. இதனை தமிழ் எழுத்து வடிவில் அமைத்துக் கொண்டு, அதன் பொருளைத் தமிழில் தந்து அதன்வழி அந்தப் பாடல்களில் உள்ள பக்தி அனுபவத்தை வெளியிடும் போக்கில் இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்க பஞ்சரத்ன கீர்த்தனைகள்

இந்த ஐந்து கீ்ர்த்தனைகள் பின்வரும் தொடக்கத்தைப் பெற்றுள்ளன.
1. ராஜு வெடலஜு – தோடி ராகம்
2. விநராத நா மாகநவி – தேவ காந்தாரி ராகம்
3. சூதாமுராரே –ஆரபி ராகம்
4. ஓ ரங்கசாயி – காம்போதி ராகம்
5. கருண ஜுடமய்ய – சாரங்க ராகம்
என்ற தொடக்கங்களை உடைய கீர்த்தனைகள் தியாகராஜரால் திருவரங்க பஞ்சரத்ன கீர்த்தனைகளாகப் பாடப்பெற்றுள்ளன. இப்பாடல்கள் ஐந்தும் முறைமாறி அமைந்துள்ளன. சில பிரதிகளில் சூதா முராரே என்ற தொடக்கமுடைய பாடல் முன்னதாக வருகின்றது. சில பிரதிகளில் ராஜு வெடலஜு என்ற தொடக்கமுடைய பாடல் முன்னதாக வருகின்றது. இதுபோன்று முன் பின்னாக பல பிரதிகளில் இந்த ஐந்து பாடல்களும் அமைந்துள்ளன. மேற்காட்டிய முறைப்படி இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

முதல் கீர்த்தனை – ராஜு வெடலஜு என்ற தொடக்கமுடையது.
பல்லவி
ராஜுவெடலஜு தாமுராரே கஸ்தூரி ரங்க
அனுபல்லவி
தேஜி நெக்கி ஸமஸ் தராஜுலூடி கமுஸேய
தேஜரில்லு நவரத்னபு திவ்ய பூஷண முலடிரங்க
சரணம்
காவேரி தீரனனு பாவனமகு ரங்கபுரி
ஸ்ரீவெலயு சித்ர வீதி லோவேட்ககராக
ஸேவனுகநி ஸுருலுவிருலசேப்ரே மனு பூஜிஞ்சக
பாவிஞ்சித்யாக ராஜுபாடகவை போகரங்க

என்பது தெலுங்கில் அமைந்த தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட தியாகராஜ கீர்த்தனை ஆகும்.
இப்பாடலின் பொருள்- காவிரியும் கொள்ளிடமும் இணையும் இடத்தில் கோயில் கொண்டுள்ளவன் திருவரங்கன். அவன் இலங்கையை நோக்கி அனந்த சயனம் கொண்டுள்ளான். அத்தகையவன் ஸ்ரீரங்க வீதியில் தங்க குதிரை வாகனத்தில் வந்து அருள் செய்கிறான். அவனைத் தேவர்கள் வணங்குகிறார்கள்.

திருவரங்க இறைவர் கையில் செங்கோல் வைத்திருக்கிறார். நெற்றியில் கஸ்தூரி திலகம் வைத்து இருக்கிறார். தன் உடல் முழுவதும் நீல பட்டாடை சாற்றி வருகிறார். அவர் தங்கக் குதிரையில் வருகிறார். அவன் ராஜாவாக உலா வருகிறார். அவரைக் கண்குளிரக் கண்டுகளிப்போம் என்று பாடுகிறார் தியாகராஜர்.

இரண்டாம் கீர்த்தனை – விநராத நா மாநவி என்ற தொடக்கமுடையது
பல்லவி
விநராத நா மாநவி
அனுபல்லவி
கநகாங்க காவேடிரங்க ஸ்ரீ காந்த
காந்தலெல்ல காமிஞ்சி பிலிசிதே
சரணம்
தேஜி நெக்கி பாக தெருவுந ராக
ராஜஸதுலு சூசி ரம்மநி பிலிசிதே

பாகதேய வைபோக ரங்க
ஸ்ரீ தியாகராஜநுத தருணுலு பிலிசிதே
என்ற இப்பாடலின் பொருள் திருவரங்கநாதன் உலா வரும் நிலை பற்றி அமைகிறது. தங்க நிறமுடைய ரங்கநாதா, காவேரி ஆற்றின் கரையில் இருப்பவரே! தேவி மகாலட்சுமியின் துணைவரே! என்னுடைய வேண்டுகோளை எப்பொழுது ஏற்கப் போகிறீர்கள்.

பெண்கள் அனைவரும் உம்மை வரவேற்க நடனமாடுகிறார்கள், அரச குடும்பத்தினரும் உன் வருகையைக் கொண்டாடுகிறார்கள். திருவரங்க நாதனாகிய தாங்கள் தங்கக் குதிரையில் வருவரை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

ரங்கநாதரே தங்களின் இராஜ ஊர்வலத்தில் எனக்கு, அவர்களுக்கு ஏன் பதில் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் என்று மனதில் ஒரு வேண்டுகோளை வைத்துக்கொண்டு தியாகராஜர் இந்தக் கீர்த்தனையைப் பாடியுள்ளார்.

மூன்றாம் கீர்த்தனை- சூதாமுராரே என்ற தொடக்கமுடையது.
பல்லவி
சூதாமு ராரே ஸுத துலார ரங்கபதிநி
அனுபல்லவி
ஸுதாபதி பூஜ்யுடட ல்ருங்கார லேகருடட
சரணம்
ஸரிகஞ்சு லாலுவட சௌகட்ல போகுலட
பருவம்பு ப்ராயமட பரமாத்முடட ரங்க

முக நிர்ஜித சந்த் ருடட முத்து மாடலாடு
ஸுக மொஸங்கி ப்ரோகநட ஸுந்தராங்குடட ரங்கநி

ஆகம ஸஞ்சாருடட அகில ஜகத்பாலுடட
த்யாக ராஜஸந்நுதுடட தருயலார ரங்கபதிநி
என்னும் இந்தக் கீர்த்தனை சற்று நீளமானது.
ஓ பெண்களே! ஸ்ரீரங்கபதியைப் பார்க்க உடன் வாருங்கள்!
ஆதி கவி வால்மீகி ஸ்ரீ ரங்கநாதரை ஸ்ரீ ராமச்சந்திரர் வழிபட்டார் என்று கூறுகிறார். இதன் காரணமாகவே அவரை வணங்குவோம். இந்தக் கீர்த்தனையில் ரங்கபதியை சீதாபதி வணங்கினார் என்று தியாகராஜர் குறிப்பிடும் கவியழகு சிறப்பாக உள்ளது.

சரிகை பட்டாடையையும், அழகான மாலைகளையும் ரங்கநாதர் தன் மேனி மீது அணிந்து கொண்டுள்ளனார். அவரின் காதுகளில் அழகான காதணிகள் அணியப் பெற்றுள்ளன. அவர் சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்தியவராக இருக்கிறார். பருவ வயதுடைய இளங்குமரனாக அவர் இருக்கிறார். திருவரங்கநாதர் பரம புருஷர். அவர் வேதங்களாலும் உபநிடதங்களாலும் சர்வ ஆதாரன் என்றும் போற்றப்பெறுகிறார்.

அவரின் முகம் முழுநிலவு போன்று அழகாக உள்ளது. அவரின் பேச்சும் இனிமையானது. அவர் பேரின்பத்தை நமக்கு அளிப்பவர். அவர் பக்தர்களுடன் அன்பான உறவைக் கொண்டுள்ளார். அவர் ஆகமங்களிலும் வேதங்களில் ஊடுருவி நிற்கிறார்.

கூடியிருக்கும் பெண்களே அவரின் அழகை ரசிக்க வாருங்கள் என்று இந்தப் பாடலின் பொருள் அமைகிறது,

நான்காம் கீர்த்தனை- ஓ சாயி என்ற தொடக்கமுடையது
பல்லவி
ஓ ரங்க ஸாயி பிலிசிதே
ஓயனுசு ரா ராதா
அனுபல்லவி
ஸாரங்க தருடு ஜூசி
கைலாஸாதிபுடு கா லேதா (ஓ)
சரணம்
பூ-லோக வைகுண்டமிதியனி
நீ லோன நீவேயுப்பொங்கி

ஸ்ரீ லோலுடையுண்டே மா
சிந்த தீரேதென்னடோ

மேலோர்வ லேனி ஜனுலலோ நே
மிகுல நொகிலி திவ்ய ரூபமுனு

முத்யால ஸருலயுரமுனு கான
வச்சிதி த்யாகராஜ ஹ்ருத்பூஷண
என்னும் இப்பாடலும் நீண்ட அடிகள் கொண்டதாக உள்ளது.

ஓ திருவரங்கத்தில் பள்ளிகொண்டோனே! தியாகராசனின் இதய அணிகலனே! அழைத்தால், ‘ஓ’யென வரலாகாதா?
சாரங்கம் ஏந்துவோன் (உன்னைக்) கண்டு வணங்கினான் அன்றோ! கைலாய பதியாகினானன்றோ! பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தில் இலட்சுமியுடன் இருந்துவிட்டால் எமது கவலைகளை யார் தீர்க்க வல்லார்?

மற்றவர்களின் உயர்வை ஏற்றுக் கொள்ளாத மனிதர்களிடை, நான் மிக்கு துயருற்று அலைகிறேன்.. உனது) திவ்விய உருவத்தினை, முத்துச் சரங்கள் விளங்கும் திருமார்பினைக் காண வந்தேன் என்று தியாகராஜர் இதில் தன் வேண்டுகோளை வைக்கிறார்.

கருத்துகள் இல்லை: