ஐந்தாம் கீர்த்தனை-கருணா சூடாவாய என்ற தொடக்கமுடையது.
பல்லவி
கருண ஜுடமய்ய மாயய்ய காவேடி ரங்கய்ய
அனுபல்லவி
பரம புருஷ! விநு மாபாலி பெந்நிதாநமா
வரத நலுகுரிலோ வரமோஸகி கரமிடி
சரணம்
சரடேஸி கநுலசே ஜெலங்கு பய நாச்சாருலதோநு மரி
ஸத்பக்துலதோ ஆள்வாருலதோ நீவு வர நைவேத்யமுல
நாரகிஞ்சு வேளல ஹரி த்யாகராஜநிகரமிடி
என்ற பாடல் திருவரங்கநாதனைத் தன் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்ல வேண்டுகிறார் தியாகராஜர்.
ஓ பரம புருஷா! ஓ காவேரி கரையில் வசிக்கும் ரங்கநாதரே! எங்களுக்கான விருப்பமான வரங்களை அள்ளித் தருபவரே! வரதரே! என்னைப் பாருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள்.
என்னைக் கைப்பிடித்து எனக்குத் துணையாக வாருங்கள். எனக்கு நான் விரும்பும் வரங்களைத் தருவீராக! உங்களது கருணையையும் எனக்கு அருள்வீராக!
நீங்கள் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியின் அருகில் இருக்கும் நேரம் அன்பான நேரமாகும். அப்போது தங்களுக்கு நைவேந்தியம் நடைபெறும். அதுவும் நல்ல நேரம். அந்த நேரத்தில் பக்தகோடிகளும், ஆழ்வார்களும் உம்மைத் தரிசித்து மகிழ்வார்கள். அந்நேரத்தில் என்னையும் என் கரங்களைப் பற்றிக் கொண்டு அழைத்துச் செல்வீராக. அழைத்துச் சென்று என்மீது கருணை காட்டுவீர்களாக! என்று தியாகராஜர் குறிப்பிடுகிறார்.
இவ்வைந்து பாடல்களும் சித்திரை திருவிழாவில் காவிரி நதிக்கரையில் திருவரங்க நாதரின் தங்கக் குதிரை வாகனக் காட்சியைக் கண்ட நிலையில் தியாகராஜர் பாடியனவாகும். அதற்கான அகக்குறிப்புகள் இக்கீர்த்தனைகளில் காணக் கிடைக்கின்றன.
ஸ்ரீஇராமனை அன்றி வேறு யாரையும் பாடாத இயல்பினரான தியாகபிரம்மம் இக்கீர்த்தனைகளிலும் அக்கருத்துக்கு முக்கியத்துவம் தருகிறார். ஸ்ரீஇராமபிரன் வணங்கிய தெய்வம் அரங்கநாதன் என்பதால் இத்தெய்வத்தைப் பாடுவது அவரின் கருத்துக்கு ஏற்புடையதாக விளங்கியது.
ராஜுவெடலஜு என்ற தொடக்கமுடைய கீர்த்தனையில் காவேரி தீரம், ரங்கபுரி, சித்ரவீதி போன்ற குறிப்புகள் திருவரங்கத்தில் இக்கீர்த்தனம் பாடப்பட்டதை உறுதிசெய்கின்றன. சூதாமுராரே என்ற தொடக்கமுடைய கீர்த்தனையில் ரங்கபதி, ரங்க போன்ற குறிப்புகள் இடம்பெற்று இக்கீர்த்தனையும் திருவரங்க நாதனைக் காண வந்த தியாகராஜ அனுபவத்தைக் காட்டுவதாக உள்ளது. கநகாங்க என்ற தொடக்கமுடைய கீர்த்தனையில் காவேடிரங்க, வைபோக ரங்க, போன்றனவும் ரங்கபதியின் அடையாளங்களே ஆகும். ஓ ரங்கசாயி என்ற கீர்த்தனையின் தொடக்கமே ரங்கநாதரைக் குறித்ததாகும். மேலும் பூலோக வைகுந்தம் என்று திருவரங்கம் சிறப்பிக்கப்படுகிறது. கருணா ஜடமய்யா என்ற தொடக்கமுடைய பாடலில் காவேடி ரங்கய்ய என்று ரங்கநாதர் குறிக்கப்படுகிறார். இதன் காரணமாக தியாகராஜர் வணங்கிய தெய்வமாக அரங்கநாதர் விளங்குகிறார். அரங்கநாதர் ஸ்ரீஇராமன் காலத்திலும், தியாகராஜர் காலத்திலும் பெருமையுடனும் திருவிழாக்களுடனும், ராஜ கம்பீரத்துடன் இருந்தார் என்பதைத் தியாகராஜர் கீர்த்தனைகள் எடுத்துரைக்கின்றன.
ஸ்ரீ ரங்கநாதரை பரம புருஷராக, சர்வ ஆதாரராக தியாகராஜர் காண்கிறார். மேலும் தன் குறைகளை அவரிடம் சொல்ல நேரம் பார்த்துக் காத்து நிற்கிறார். ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து இருக்கும் மகிழ்ச்சியான நேரமே நல்ல நேரமாக தமது குறைகளைத் தீர்க்கும் நேரமாக இருக்கும் என்று கருதி அந்நேரத்திற்காகக் கா்த்துநிற்கிறார் தியாகராஜர். ஸ்ரீரங்கநாதர் தங்கக் குதிரையில் ஏறி தன் குறைகளைப் போக்க வருகிறார் என்ற எண்ணத்தில் உறுதி கொண்டவராக தியாகராஜர் விளங்குகிறார். தமிழில் பாடிய ஆழ்வார்களும் திருவரங்கநாதனைத் துதிப்பதைச் சுட்டிக் காட்டி நிற்கிறார் தியாகராஜர்.
இவ்வாறாக இராம பக்தியினின்று சற்று மாறுபட்டு அமைகிறது ஸ்ரீரங்க பஞ்ச கீர்த்தனம். இருப்பினும் தியாகராஜர் கொள்கைக்கு மாறுபடாமல் இந்தக் கீர்த்தனங்கள் பாடப்பெற்றுள்ளன. ஸ்ரீஇராமனையே ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்த இசை அறிஞர் தியாகராஜர். அவரின் கீர்த்தனங்கள் இந்திய இசையாக மிளிர்வன. அதனைப் போற்றுவதும் காப்பதும் பாடுவதும் ரசிப்பதும் துதிப்பதும் ஒவ்வோரு இந்தியரின் கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக