நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே
மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில்
பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன.
குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள்
தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள்
தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும்
இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம்
தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல்,
பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக்
காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை
குறைவதற்கான காரணம் ஆகும்.
மேலும் பள்ளிகளில் நாட்டுப்புற மரபு
சார்ந்த விளையாட்டுக்களுக்கு இடமில்லாமல் இருப்பதும் ஒரு பெருங்குறையாகும்.
பள்ளிகளில் உலகமயமாக்கப்படுதல் காரணமாக உலக அரங்கில் விளையாடப்படும்
விளையாட்டுகள் விளையாடச் சொல்லித்தரப்பெறுகின்றன. இதன் காரணமாக கிராமப்புற
விளையாட்டுகள் மறைந்துவருகின்றன. மேலும் கிராமப்புற விளையாட்டு சார்ந்த
பாடல்களும் சிறுவர்களால் விளையாடப்படாத காரணத்தினால் அழிவுக்குள்ளாகி
வருகின்றன. இருப்பினும் இவற்றில் இருந்துத் தப்பிக் கிடைக்கும் சிறுவர்
பாடல்களைத் தொகுப்பது அவற்றை ஆராய்வது என்பது இக்காலத்திற்குத் தேவையான
ஒன்றாகும். எதிர்கால சமுதாயத்திற்குத் தமிழகத்தின் மரபு சார்
விளையாட்டுக்களை பதிவாக்கம் செய்யும் முயற்சியாகவும் இது விளங்கக் கூடும்.
சிறுவர்கள் பாடிவந்த வாய்மொழிப் பாடல்கள்
அவர்களுக்குக் கல்வியறிவு, உலக அறிவு, சமுதாய இணக்கம், பண்பாட்டு அறிவு,
பழகும் முறை ஆகியனவற்றைக் கற்றுத்தருவனவாக விளங்குகின்றன. இப்பாடல்கள்
சொல், பொருள், தொடை அளவில் எளிமையும் இனிமையும் உடையனவாகும். இவற்றின் பொது
அமைப்பு என்பது இவ்வியலின் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது.
நாட்டுப்புற இலக்கியம் – பொது வரையறைகள்
நாட்டுப்புறத்து இலக்கியம் நாட்டுப்புற
இலக்கியம் ஆகின்றது. இதனைப் பற்றி ஆராயும் இயல் நாட்டுப்புறவியல் ஆகின்றது.
தொழிலையும், மொழியையும், சமயத்தையும் பொதுவான அடிப்படைக் கூறுகளாகக் கொண்ட
எந்த ஒரு குழுவும் கூட்டமும் நாட்டுப்புறம் (Folk) என்று அழைக்கப்படும்
நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் மரபு வழிப்பட்ட படைப்புகள்
(Traditional creations) எனலாம். இவ்வியலுக்குள் இலக்கியம் கலை, பண்பாடு,
பழக்க வழக்கங்கள் போன்றவை அடங்கும். நாட்டுப்புற இலக்கியத்தைப் பாடல், கதை,
கதைப்பாடல் விடுகதை, பழமொழி என்று ஐந்து வகையாகப் பகுத்துக் கொள்ளலாம்
என்று நாட்டுப்புறத்துக்கும், நாட்டுப்புறவியலுக்கும் விளக்கம் தருகின்றார்
சு. சண்முகசுந்தரம்.
ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை,
பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, வரலாற்றை, நாட்டு நடப்பை உண்மையான முறையில்
படம் பிடித்துக் காட்டுவதே நாட்டுப்புறவியல் அல்லது நாட்டார் வழக்காற்றியல்
எனலாம்என நாட்டுப்புற இலக்கியத்திற்கு விளக்கம் தருகின்றார் எஸ்.
ஸ்ரீகுமார்.
புராணங்கள், மரபுக்கதைகள், கதைகள்,
பழமொழிகள், புதிர்கள், கூற்றுக்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்,
நாடகங்கள், தனிப்பாடல்கள், இசை, நடனம், கதைப்பாடல்கள், வழிபாடுகள்,
தெய்வங்கள், சடங்குகள், விழாக்கள், மாய மந்திர வித்தைகள், பில்லி,
சூனியங்கள், கலை, கைத்தொழில் ஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியப்
பொதுச்சொல்லாக நாட்டுப்புற இலக்கியம் அமைகின்றதுஎன்று நாட்டுப்புற
இலக்கியம் என்பதற்கான பொருளை வரையறை செய்கின்றனர் ஆய்வாளர்கள்.
கற்றாரைக் காமுறச் செய்யும் பாடல்கள்
நிறைந்து நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றின்
கொள்கலமாய் அமைந்ததுவே நாட்டுப்புற இலக்கியம்என்று நாட்டுப்புற
இலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கிறார் ச.வே. சுப்பிரமணியம்.
தமிழர்தம் பழம் இலக்கியங்கள் பற்றிக்
கருத்துத் தெரிவித்துள்ள மு. வரதராசன் தமிழில் பழைய இலக்கியம்
தமிழ்நாட்டில் நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து மலர்ந்த பாடல்கள். அந்தப்
பாடல்களின் செய்யுள் வடிவமும், வேறு எந்த மொழியிலிருந்தும் கடன்
வாங்கப்பட்டதன்று. அது மக்களிடையே வழங்கி வந்த நாட்டுப்புறப்
பாடல்களிலிருந்து வடித்து அமைக்கப்பட்ட வடிவமே என்கிறார்.இக்கருத்தின்
வழியாக தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் தமிழக மக்களின் சொந்த வடிவம் என்றதை
அறிந்து கொள்ளமுடிகின்றது.
நாட்டுப்புறவியலின் தன்மை பற்றிய
பின்வரும் கருத்து நாட்டுப்புறவியலை இன்னும் விளக்குவதாக உள்ளது.
நாட்டுப்புற இலக்கியங்கள் வாய்மொழியாக வாழ்ந்து வருகின்றன. இதனால்
எழுதப்பட்டனவாக இருந்தாலும் அவற்றில் நாட்டுப்புறக் கூறுகள்இருப்பின்
அவையும் நாட்டுப்புற இலக்கியங்கள் என்றே கருதப்படும். நாட்டுப்புற
மக்களுடைய வாழ்க்கையை, எண்ணத்தைப் பிரதிபலிக்கும் எதையும் நாட்டுப்புற
மக்கள் ஏற்றுக்கொள்வர். ஏற்றுக் கொண்டால் அது பரவும். நாட்டுப்புற மக்களின்
இலக்கியம் என்பது அது பரவும் தன்மையைக் கொண்டே முடிவு
செய்யப்படுகின்றதுஎன்று நாட்டுப்புறவியல் என்பது பரவும் தன்மையானது என்பதை
இக்கருத்தின் வழி அறியமுடிகின்றது.
நாட்டுப்புற இலக்கியம் தமிழில் எழுந்து
வளர்ந்த காலச் சூழலை நாட்டுப்புறவியல் தமிழகத்தில் ஐம்பதுகளில் முகிழ்த்து,
அறுபதுகளில் அரும்பி, எழுபதுகளில் போதாகி, எண்பதுகளில் மணம் பரப்பி
வருகின்றதுஎன்று இனம் காட்டுவார் ஸ்ரீகுமார். எண்பதிற்குப் பிறகு
நாட்டுப்புற ஆய்வுகள் எழுந்து இவ்வியலை வளப்படுத்தி வருகின்றது.
நாட்டுப்புற இலக்கியம் வரலாற்றுச்
சான்றாகவும் விளங்குவது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ்ச் சமூகத்தின்
முந்தைய இரண்டு நூற்றாண்டுகளின் சமூக வரலாற்றையும், கிராமத்து மண்ணின்
இயல்பையும், உணர இந்தப் பாடல்கள் பெரிதும் உதவுகின்றனஎன்ற இந்தக் கருத்து
நாட்டுபுற இலக்கியம் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது என்பதை
எடுத்துக்காட்டுகின்றது.
இக்கருத்துக்களால் பின்வரும் முடிவுகளுக்கு வரமுடிகின்றது.
நாட்டுப்புறம் என்பது மொழி, இனம், பண்பாடு
போன்றவற்றால் ஒருங்கிணைந்த ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிப்பது என்றும்,
அதன் வாய்மொழி இலக்கிய வெளிப்பாடு என்பது பாடல் வடிவில், பாடல் சார்ந்த கதை
வடிவில், விடுகதைகள், சொலவடைகள் போன்றனவாக வெளிப்படலாம் என்றும் இவற்றை
மொழியியல், உளவியல் போன்ற துறைகள் வழியாக ஆராய்வது என்பது நாட்டுப்புற இயல்
ஆய்வு என்பன மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் பெறப்படும்
கருத்துக்களாகும். மேலும் நாட்டுப்புற இலக்கியம் பரவும் தன்மையைப் பெற்றது,
அது வரலாற்று ஆவணமாகவும், வரலாற்றுப் பதிவாகவும் கருதும் பெருமைக்கு
உரியது என்பதும் மேற்கருத்துகளின் வழிப் பெறப்படுகின்றது.
நாட்டுப்புற இலக்கியத்தைப்
பலவகைப்படுத்தலாம். நாட்டுப்புறப் பாடல்கள் என்பது நாட்டுப்புற
இலக்கியத்தின் மிக முக்கியமான பகுப்பாகும். வாயில் பிறந்து, செவிகளில்
உலவி, காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. என்று பிறந்தது, எவரால்
பிறந்தது என எடுத்துச் சொல்ல இயலாதது. கிராமத்து மக்களுடன் நெருங்கியத்
தொடர்புடையது. நாட்டார் பாடல், பாமரர் பாடல், பரம்பரைப் பாடல், கிராமியப்
பாடல், மக்கள் பாடல், என்றெல்லாம் அழைப்பர். நாட்டார் பாடல்கள்கிராமத்து
மண்ணின் மணம் கமழ்பவை, காற்றில் மிதப்பவை. ஓசை வடிவில் நின்று
கொண்டிருப்பவை. வாழையடி வாழையாக ஒருவர் பாட மற்றவர் கேட்க வந்தவை. இசை
சிறகால் கலைவானில் பறந்து கொண்டிருப்பவை. இவற்றில் உணர்ச்சி இருக்கும், ஓசை
தவழும், தாளக்கட்டு புரளும். ஆனால் இலக்கண வரம்பற்றவைஎன்று
நாட்டுப்புறப்பாடல்களின் இயல்புகளை அறிஞர் சுட்டுவர்.
நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல்கள்
நாட்டுப்புறப்பாடல்கள் ஆகும். நாட்டுப்புறப்பாடல்கள் நாட்டுப்புற மக்களின்
வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள
நிகழ்வுகள் நாட்டுப்புறப்பாடலின் பொருளாகின்றனஎன்று
நாட்டுப்புறப்பாடல்களுக்கு விளக்கம் அளிக்கின்றார் சு. சக்திவேல்.
கவிதை இலக்கியத்திற்கு என்றுள்ள
சம்பிரதாயங்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் தானே எழுந்து, தான்
விரும்பியவாறு வீசும் தென்றல் போலவும், தம் மனம் போல் பொங்கிச் சுரக்கும்
தண்சுனை போலவும், சுற்றியிருக்கும் யாரையும் எண்ணாமல் ஏதோ பேசும் மழலைக்
குழந்தை போலவும் இயல்பாகப் பொங்கிப் பெருகுவது நாடோடிப்பாடல்என்று நாடோடிப்
பாடல்களாக நாட்டுப்புறப்பாடல்களைக் காண்கிறார் சண்முகசுந்தரம்.
நாட்டுப்புறப்பாடல்கள் நெகிழ்ந்த
தொடரமைப்பைச் சார்ந்தவை ஆகும். எழுத்திலக்கியத்தைப் போன்று
நாட்டுப்புறப்பாடல்களில் எதுகை, மோனை, இயைபு, இரட்டைக்கிளவி ஆகியவற்றைக்
காணமுடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களுக்கு அடிவரையறை இல்லை என்று
நாட்டுப்புறப்பாடல்களின் தன்மைகளை ஆய்வாளர் எடுத்துக்காட்டுகின்றனர்.
இவை தவிர நாட்டுப்புறக் கதைகள், விளையாட்டுகள், விடுகதைகள், சொலவடைகள் போன்ற பல வகைகள் நாட்டுப்புற இலக்கியத்தின்பால் அமைந்துள்ளன.
பல்வேறு அறிஞர்கள் பகுத்த பகுப்புகளை
அடிப்படையாக வைத்துக் கொண்டு அனைவரது கருத்துகளும் ஒருங்கே அமையுமாறு
நாட்டுப்புற இலக்கிய வகைகளை ஆறு. இராமநாதன் பின்வருமாறு பிரித்துக்
கட்டமைத்துள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்கள்
- தாலாட்டு
- குழந்தை வளர்ச்சி நிலைப்பாடல்கள்
- விளையாட்டுப் பாடல்கள்
- தொழிற்பாடல்கள்
- வழிபாட்டுப்பாடல்கள்
- இரத்தல் பாடல்கள்
- இழப்புப் பாடல்கள்
இவை மேலும் பகுப்பிற்கு உள்ளாகின்றன.
தாலாட்டின் வகைகள்
- தாய் பாடுவது
- பாட்டி பாடுவது
- அத்தை பாடுவது
- சகோதரி பாடுவது
- செவிலி பாடுவது
குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்
- தவழல் பாடல்கள்
- உண்ணல் பாடல்கள்
- சாய்ந்தாடல்
- கை வீசல்
- கை தட்டல்
- அம்புலி
- நாப்பயிற்சி
விளையாட்டுப் பாடல்கள்
விளையாட்டுப் பாடல்கள் பொதுவாக இரு
வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை உடற்பயிற்சி விளையாட்டு, வாய்மொழி
விளையாட்டு என்பனவாகும். அவற்றிற்கும் உள் பிரிவுகள் உண்டு.
உடற்பயிற்சிப் பாடல்கள்
- சடுகுடுப் பாடல்
- திம்பிப் பாடல்
- கண்ணாமூச்சிப் பாடல்
- வெயிலா நிழலாப் பாடல்
- ஏழாங்காய்ப் பாடல்
- கோலிப் பாடல்
வாய்மொழி விளையாட்டு
- வேடிக்கைப் பாடல்கள்
- வினா விடைப்பாடல்கள்
தொழிற்பாடல்கள்
தொழிற்பாடல்களிலும் இருவகைகள் உண்டு. அவை 1. வேளாண்மைத் தொழில்கள், வேளாண்மையில்லாத தொழில்கள் என்பனவாகும்.
வேளாண்மைத் தொழில்கள்
- ஏர்ப்பாடல்
- ஏற்றப்பாடல்
- நடவுப்பாடல்
- களைவெட்டும் பாடல்
- அறுவடைப் பாடல்
- பொலி பாடல்
வேளாண்மை இல்லாதத் தொழில்கள்
- நெல் குற்றும் பாடல்
- சுண்ணாம்பு இடிக்கும் பாடல்
- பாரஞ் சுமக்கும் பாடல்
- வண்டியோட்டும் பாடல்
- மீன்பிடிப்புப் பாடல்கள்
வழிபாட்டுப் பாடல்கள் என்பது அடுத்த
வகையாகும். இதுவும் இருவகைப்படும். பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு
என இருவகைப்படுகின்றது. இவற்றுள் சிறு தெய்வ வழிபாட்டுப் பாடல்கள்
- பூசைப் பாடல்
- விளக்குக் கேள்விப் பாடல்
- நோன்புப் பாடல்
ஆகிய மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.
கொண்டாட்டப் படல்கள் என்பது சிறப்பு, பொது என இருவகைப்படுகின்றது.
சிறப்புக் கொண்டாட்டப் பாடல்கள்
- சமுதாயக் கொண்டாட்டம்
- குடும்பக் கொண்டாட்டம்
என இருவகைப்படுகின்றது.
சமுதாயக் கொண்டாட்டம் என்ற வகையில்
1. சமயந் தொடர்பானவை
2.சமயந் தொடர்பற்றவை
என இருவகையாகவும்
சமயந்தொடர்பானவையில்
1.இந்து சமயம் தொடர்பானவை
2. பிற சமயந் தொடர்பானவை
என்று இருவகையாகவும்,
சமயம் தொடர்பற்றவை என்ற பகுப்பில்
- பிரச்சார, ஊர்வலப்பாடல்
- பிறந்தநாள் விழா ஊர்வலப்பாடல்
என இருவகைகளாகவும் பகுக்கப்படுகின்றன.
குடும்பக் கொண்டாட்டப் பாடல்களில்
- காதணிவிழாப் பாடல்
- மஞ்சள் நீராட்டு விழாப்பாடல்
- வளைகாப்பு விழாப் பாடல்
- மணவிழாப் பாடல்
என்ற நான்கு வகையாகவும். இந்நான்கில் மணவிழாப்பாடல் என்பது
- நலுங்குப்பாடல்
- ஊஞ்சல் பாடல்
- சம்பந்தப் பாடல்
என்ற மூவகை படுவதாகவும் பகுக்கப்பெறுகின்றது.
கொண்டாட்டப் பாடல்களில் மற்றொரு வகையான பொது என்ற பிரிவில்
- பொதுமக்கள் நிகழ்ச்சிகள்
- கலைஞர்களின் நிகழ்ச்சிகள்
என்ற இருவகைப்படுகின்றன.
பொது மக்கள் நிகழ்ச்சிகள் என்பதில்
- கும்மிப் பாடல்கள்
- கோலாட்டப் பாடல்கள்
ஆகியன அமைகின்றன.
கலைஞர்களின் நிகழ்ச்சிகள் என்ற பகுப்பில்
- கதைத்தொடர்பு நிகழ்ச்சிகள்
- கதைத் தொடர்பில்லா நிகழ்ச்சிகள்
ஆகிய இரண்டும் அமைகின்றன.
கதைத் தொடர்பு நிகழ்ச்சிகள் என்ற பகுப்பில்
- கதைப்பாடல்
- வில்லுப் பாடல்
- தெருக் கூத்துப்பாடல்
- தோல் பொம்மலாட்டப் பாடல்
- கொலைச் சிந்து
ஆகியன அமைகின்றன.
இரத்தல் பாடல்கள் என்ற பகுப்பில்
- குடு குடுப்பைப்பாடல்
- குறிசொல்லிப் பாடல்
- உண்டிப்பிலிகாரர் முதலிய பிச்சைக்காரர் பாடல்
ஆகியன அமைகின்றன.
இழத்தல் பாடல்கள் பல்வேறு பகுப்புகளை
உடையதாக உள்ளது. இதன் பொதுப் பிரிவுகள் இரண்டாகும். அவை உயிர் இழப்புப்
பாடல்கள், பிற இழப்புப் பாடல்கள் ஆகியனவாகும்.
உயிர் இழப்புப் பாடல்கள் என்பன இருவகைப்படும்.
- மகளிர் பாடுவன (ஒப்பாரி)
- கலைஞர் பாடுவன
இவற்றில் கலைஞர் பாடுவன மேலும் இருவகைப்படுகின்றன.
- மாரடிப்பாடல்
- கைலாசப் பாடல்
ஆகியன அவ்விரு வகையினவாகும்.
பிற இழப்புப் பாடல்கள் என்ற பகுப்பில்
- உரிமை இழப்புப்பாடல்
- பொருள் இழப்புப் பாடல்
- மான இழப்புப் பாடல்
- உயிர் வாழும் நம்பிக்கை இழப்பு
ஆகிய பாடல்கள் அமைகின்றன.
இவ்வாறு பெருத்த அளவில்
நாட்டுப்புறப்பாடல்களை வகைமை செய்து அளித்துள்ளார் ஆறு. இராமநாதன்.
இவற்றுள் ஒன்று சிறுவர் பாடல்கள் ஆகும். இச்சிறுவர் பாடல்கள் ஆறு.இராமநாதன்
கருத்தின்படி குழந்தை வளர்ச்சி நிலைப்பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள்
ஆகியவற்றின் அடிப்படையில் அமைவனவாகும்.
இவ்வகையில் நாட்டுப்புறப் பாடல்கள் என்பது
விரிந்த வகைகள், விரிந்த களங்கள் கொண்டது ஆகும். ஒவ்வொரு
நாட்டுப்புறத்தின் சிறந்த அடையாளங்கள் இந்நாட்டுப் புறப்பாடல்கள் ஆகும்.
-தொடரும்
thanks to siragu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக