திங்கள், ஜூலை 07, 2014

மறைமலையடிகளாரின் நடைக் கோட்பாடு

மறைமலையடிகளார் தனித்தமிழ் அறிஞர் ஆவார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். சைவ சித்தாந்தக் கொள்கைகைளைப் பரப்ப இவர் சைவ சித்தாந்த மகா சமாசத்தை நிறுவினார். தன் வாழ்வில் நாற்பது ஆண்டுகள் துறவியாகக் கழித்த இவர் தமிழின்பால் கொண்டிருந்த பற்றைத் துறக்காதவர். இவர் இலங்கைக்குச் சென்று தமிழறிவு வளர்த்த பேரறிஞர் இவர் அறுபத்துநான்கு நூல்களுக்குமேல் படைத்தவர். இவர் முல்லைப்பாட்டிற்கும் பட்டிப்பாலைக்கும் ஆராய்ச்சி உரைகளை வரைந்துள்ளார். இவ்விரு உரைகளின் வழி  இவர் கைக்கொண்ட உரைமரபுகளை அறிந்துகொள்ள முடிகின்றது. இக்கட்டுரை பட்டினப்பாலைக்கு மறைமலையடிகளார் வரைந்த ஆராய்ச்சி உரையை முன்வைத்து அவரின் நடைநலத்தை அறிவிப்பதாய் உள்ளது.


நடையியல் (Stylistics) மொழியைஅமைக்கும்முறையைக்குறித்துஆராயும்அறிவுத்துறையாகும். மறைமலையடிகளார் தனித்த நடைநலம் மிக்கவர். அவரின் சங்க இலக்கிய உரைகள் திட்பமும், நுட்பமும், ஆழமும், அகலமும் வாய்ந்தன. பல்நோக்குத் தன்மையுடையன. எனவே இதனை ஆராய்ச்சி உரை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஆராய்ச்சிக்கு உரிய தேடுதலும், பல்நோக்குத் திறனும், பல் நூல் பயிற்சியும் கொண்டுள்ள உரையாக இவரின் உரை அமைவதால் இவரின் உரையை ஆராய்ச்சி உரை எனக்  கொள்வது பொருத்தமுடையதாகும்.
பட்டினப்பாலைக்கு உரை எழுதப் புகுந்த இவர் அந்நூலின் சொல்நலம், பொருள் நலம், யாப்புநலம், அணிநலம் ஆகியவற்றையும், பழக்கவழக்கப் பதிவுகள், வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை வெளிப்படுத்தி உரை கண்டுள்ளார். இதன் காரணமாக உரை கொள்ளும் மரபில் ஆய்வுக்கான அருமைகளைப் புகுத்திய பெருமை இவருக்கே உரியதாகின்றது. உரையாசிரியர்கள் ஆராய்ச்சித் திறமுடையோர் என்னும் கருத்து  இவரால் மேலும் வலிமை பெற்றது.
பட்டினப்பாலை உரையில் பாட்டின் இயல்பும் உரைநடையின் இயல்பும் இவரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. இவர் இவ்விரண்டில் பாட்டே சிறப்புடையது என்கிறார். மேலும் சில இடங்களில் நச்சினார்க்கினியர் செய்த உரைகளில் உள்ள குறைகளைக் களைகின்றார். உரைக்கு  வளைமை சேர்க்கும் நிலையில் பல்வேறு நூல்களை மேற்கோள் காட்டுவது இவரது பாங்கு. அதோடு தன் உரைகளில் படிப்பவர்க்கு விளக்கம் அளிக்கும் முறையில் பற்பல உவமைகளை அவர் கையாளுகின்றார்.
மேலும் அவரது உரையில் துல்லியத்தன்மை என்பதும், தரவுகளைத் திரட்டித் தருவது என்பதும் முக்கியமாகக் காணப்படும் கூறுகள் ஆகும். இவ்வகையில் மரபு சார்ந்த உரையாசிரியர்களின் நிலையில் இருந்து வேறுபட்டு எடுக்கொண்ட நூலை பற்பல நிலைகளில் உரைக்கட்டுரைகள் வழங்குவது என்பதும், புதிய உரையாசிரியர்கள் கைக்கொள்ளும் சுருங்கிய பொருள் தரும் நிலையில் இருந்து மேம்பட்டு விரிவான உரை காண்பது என்பதும் இவரின் தனித்தன்மையாகும்.
பட்டினப்பாலை உரையும் ஆராய்ச்சி நடையும்
பட்டினப்பாலை உரைப்பகுதி என்பது பாட்டின்இயல்பு, பட்டினப்பாலை, பொருட்பாகுபாடு, பாலை, வாகை, பாட்டின் வரலாறு, ஆக்கியோன் வரலாறு, பாட்டுடைத்தலைவன், பாட்டின் நலம் வியத்தல், இப்பாட்டின்கண் தோன்றிய பழைய நாள் வழக்க ஓழுக்க வரலாற்றுக் குறிப்புகள், பாவும் பாட்டின் நடையும், விளக்க உரைக்குறிப்புகள், அருஞ்சொற்பொருள் வரிசை என பன்னிரு விளக்கக்குறிப்புகள் காணப்படுகின்றன.

பாட்டின் இயல்பு
பாட்டின் இயல்பு என்ற முதல்பகுதி பாட்டின் இயல்பினையும் உரைநடையின் இயல்பினையும் ஒப்புநோக்கி உரை வரைகின்றார் மறைமலைஅடிகள்.
பாட்டுஉரை
பாட்டினால் பெரும் பயன் பெரிதுஉரை  ஓரளவிற்கு மட்டுமே நலம் பயப்பது
செய்யுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடைகளால் அமைந்த பாவாய் ஒரு வரம்புட்பட்டுச் சொற்சுருக்கம் உடைத்தாய் நடத்தலின் அதன்கண் புதைந்த பொருளும் அவற்றோடு ஒப்ப ஒழுகித் திட்பமும் ஆழமும் உடையதாகின்றது.உரை(யும்) ஒரு வரம்பின்கண் படாது சொற்பெருக்கமுற்று நடைபெறுதலால் அதன்கட் புதைந்த பொருளும் ஆழமாகவின்றி அச்சொற்களோடு ஒத்து ஒழுகி மெல்லிதாகிவிடுகின்றது,
பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக் கொண்டுபோய் உயிர்களின் உணர்வுநிலையை எழுப்பிவிடுவதாகும்.உரையெல்லாம் அறிவுநிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன் மேற்சென்று உணர்வுநிலையைத் தொடமாட்டாதாகும்.
செய்யுளிலோ பொருட்சாரமான சொற்கள் மாத்திரம் ஆய்ந்தமைக்கப் படுகின்றனவாகலின் அச்சொற்கள் கொண்ட பொருட்கருவை அறியப் புகுவானொருவன், தன் அறிவால் அதனைக் கூர்ந்தறியவேண்டுதலின் தன்னறிவு மிக நுணுகப் பெறுதலோடு அச்சிறிய சொல்லிற் பெரிய பொருளடக்கி நிற்றலை அறிந்த மாத்திரையினாலே தன்னை யறியதொரு வியப்புமுடனெய்தி அதன்கண் ஓர் இன்பந்தோன்ற அதன் வயப்பட்டுச் சிறக்கின்றான்.உரையில் ஒரு வரையறை யின்மையாலே பொருட்கு வேண்டுவனவும் வேண்டாதனவுமான பல சொற்கள் நிரம்பி நின்று வியப்பினைத் தாராவாய்த் தாமெடுத்த பொருளை மாத்திரம் எம்மறிவுக்குப் புலங்கொள விளக்கியொழிகின்றன.
பாட்டு ஒன்றுமே உயிர்களுக்கு அறிவை விளக்கி அதற்கும் மேற்பட்ட உணர்வை எழச்செய்து இன்பம் பயப்பதொன்றாய் நிலைபெறுகின்றது.உரைப் பயிற்சியில் அறிவு மாத்திரம் விளக்க மெய்துமேயல்லது உணர்வின் வழித்தான இன்பம் தோன்றுவதில்லை.
பாட்டுக்களே இயற்கையாகவே பல திறப்பட்ட இசைதழுவி நடக்குமாகலின் அவை உயிருணர்வை எழுப்புதற்கட் பின்னும் சிறப்புடையனவாம்.உரையெல்லாம் இயற்கையிலேயே இசைதழுவாது நடப்பனவாகலின் அவை உணர்வை எழுப்புமாறு எவ்வாற்றானும் இல்லை.

பாட்டிற்கும் உரைக்குமான வேறுபாடுகளை தடைவிடையாக இவர் தம் உரையில் தருகின்றார். மேற்கண்ட ஒப்பீட்டில் ஆரம்பம் முதலே பாட்டின்பக்கம் மறைமலையடிகள் நின்று அதற்கே சார்புடையவராகத் தன்னையும், தன்னைப் படிப்பிப்பாரையும் அமைத்துக்கொண்டுவிடுகின்றார்.
பட்டினப்பாலை ஆராய்ச்சி உரையின் தொடக்கம் இவ்வாறு உரைநடைக்கும் பாட்டிற்கும் அமைந்துள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்கின்றது. இதன் காரணமாக உரைநடை மெல்லியத்தன்மையில் இருந்துச் செறிவு பட அமைக்கப்படவேண்டும் என்ற கொள்கையை உடையவர் மறைமலையடிகள் என்பது அறியத்தக்கது.
அடுத்து புறம்,அகம் என்றமைந்த பாகுபாடு பற்றி ஆராய்கிறார் மறைமலையடிகள்.
‘‘இதனாசிரியர் புறத்தே கட்புலனுக்கு உருவாய்த் தோன்றும் பட்டினத்தையும், அகத்தே உயிரினுணர்வுக்குப் புலனாய் அருவாய்த் தோன்றும் பாலையொழுக்கத்தினையும் பாடுதற்குப் புகுந்த நுணுக்கத்தை உணருங்கால் இப்பாட்டின் உயர்ச்சி தெற்றென விளங்கா நிற்கும்’’(பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, ப. 30) என்று அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல் பட்டினப்பாலை என்று மறைமலையடிகள் முடிகின்றார்.
‘‘இப்பட்டினப்பாலை முழுவதூஉம் முந்நூற்றோரடிகாள னமைக்கப் பட்டிருக்கின்றது. இவற்றுள் இருநூற்றுத்தொண்ணூற்றேழகளிற் புறப்பொருள் விரிவும், ஏனை நான்கடிகளில் மாத்திரம் அகப்பொருள் சுருக்கமும் சொல்லப்பட்டிருக்கின்றன.’’ (ப. 42) என்று புறம் அகம் சார்ந்த நூல் பட்டினப்பாலை என்ற கருத்திற்கு வலு சேர்க்கின்றார்.
இதற்குஉரிய காரணத்தையும் அவரே குறிப்பிடுகின்றார். ‘‘புறப்பொருட் சிறப்பே பெரும்பான்மையாற் கூறிவைத்து ஏனை அகவுணர்வின் திறனெல்லாம் மிகச் சுருங்கவே சொல்லப்பட்டன. புறத்தே விரிந்த அறிவெல்லாம் முறைமுறையே சுருக்கப்பட்டு அகத்தே செல்வுழி அஃதொன்றின் மாத்திரமே உறைந்துநிற்றலிற் புறப்பொருள்வழி வைத்து விளக்கப்படும் அகப்பொருளெல்லாம் மிகச் சுருக்கிக் கூறுதலே மனவியற்கைக்கு இயைந்ததாம்’’ (42) என்ற இந்தக்கருத்து மனிதரின் மனஇயற்கையில் அக உணர்வும், புறஉணர்வும் பெறும் இடத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.
புற உணர்வு மனிதருக்கு அதிகமாகவும், அகஉணர்வு குறைவாகவும் இருக்கவேண்டும் என்ற மறைமலையடிகளாரின் விழைவும் பட்டினப்பாலைக்குள் கலந்து அகத்திற்கான இடம் சுருக்கப்பட்டுள்ளது என்பதைக் கற்பவர் உணர்ந்து கொள்ள வைத்துவிடுகின்றார் மறைமலையடிகளார்.
பட்டினப்பாலை – பெயர் பொருத்தம்
வேந்தர் பெருமானான சோழன் கரிகாற் பெருவளத்தான் செங்கோலோச்சிய தலைநகரான காவிரிப்பூம்பட்டினததைச் சிறப்பித்துக் கூறுமுகத்தால் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் அகத்திணையொழுக்கத்தில் இடைநின்ற பாலையொழுக்கத்தை உணர்த்துதற்குப் புகுந்த நல்லிசைப் புலவரான உருத்திரங் கண்ணனார் இப்பாட்டிற்குப் பட்டினப்பாலை எனப் பெயர் குறித்தருளினார் (ப.30) என்று பட்டினப்பாலைக்கான பெயர்பொருத்தத்தை நூலின் முதலிலேயே எடுத்துரைக்கிறார் மறைமலையடிகள்.
மேலும் அகத்திணையான பாலையையும், அதற்கு ஈடான புறத்திணையான வாகையையும் இணைத்து அவையும் பட்டினப்பாலை என்ற பெயர்ப் பொருத்தத்தில் பொருந்துவதை மறைமலையடிகள் விளக்கிநிற்கின்றார்.
பாலை
       பாலை என்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உணரத்தும் அக ஒழுக்கமாம். தன் மனக்கினிய காதலியை மணந்து கொண்டு தலைமகன் இல்லிருந்து இல்லறம் நடாத்துங்கால், வேற்றுநாட்டிற்குச் சென்று பொருள் தேடலைக் கருதித் தன் மனைக்கிழத்தியைப் பிரிந்து போதற்குறித்தவழி அக்குறிப்பினை அறிந்த அவன் காதலி அவனைப் பிரிதற்கு ஆற்றாளாய் மிக வருந்தா நின்றனள். அவ்வருத்தத்தைக் கண்டு அவளைப் பிரியப்பெறானாய்த் தன் நெஞ்சை நோக்கி ‘‘முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்,வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே என்று கூறித் தான் செல்லுதல் தவிர்த்தான். இங்ஙனஞ் செலவு தவிர்ந்தது இப்போது ஆற்றாளான இவளைப் பலதிறத்தானும் அறிவுறுத்தி ஆற்றிப் பின் பிரிதல் பொருட்டேயாம். ஆகவே இப்போது தான் பிரிதலை யொழித்து பின் பிரிந்து போதற்குக் காரணமாகையால் இப்பாட்டு பிரிதல் நிமித்தத்தின்கண் வந்த பாலையொழுக்கத்தை விளக்குவதாயிற்று என்க.  (பக். 69)

வாகைப் பொருத்தம்
கரிகால்சோழன் தன் இளம் பருவத்தே பகைவர் இட்ட் சிறைக்களத்தில் இருந்தபோது அவரை வெல்லும் வகையெல்லாம் நினைந்து பார்த்துப் பின் அச்சிறைக்களத்தினின்றும் அஞ்சாது தப்பிப்போய்த் தன் அரசவுரிமையினைக் கைப்பற்றிக் கொண்டு அப்பகைவர்மேற் சென்று அவரை யெல்லாம் வென்று அவர் நாடு நகரங்களை அழித்து வெற்றி வேந்தனாய்ச் செங்கோல் ஓச்சினமை இருநூற்றிருபத்தோராம் அடிமுதற்கொண்டு இருநூற்றுத் தொண்ணூற்றொன்பதாம் அடிகாறும் இனிது விரித்துக் காட்டினாராகலின் பாலையோடு இயைபுடைய வாகை என்னும் புறத்தினையும் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவரால் ஈண்டுச் சொல்லப்பட்டதென்க.’’(ப.70) என்று வாகையையும் பாலைத்திணையுடன் பொருத்தி பட்டினப்பாலைக்கு மேலும் விளக்கத்தைத் தருகின்றார் மறைமலையடிகள்.

பாட்டின்நலம் வியத்தல்
பொருள் நலத்தை வியப்பதில் இரு நிலைகளைக் காணுகின்றார் மறைமலையடிகள்.
தனியே கிடந்த பொருள்
ஒரு பாட்டின்கண் அமைந்த பொருள்
என்பன அவ்விருநிலைகளாகும்.
தனியே கிடந்த பொருள் அறிவுக்குப் புலப்படும். வேறு இன்பம் பயப்பது இல்லை.
ஒரு பாட்டின்கண் அமைந்த பொருள் அறிவிற்குப் புலப்படுவதுடன் நம் மனநினைவின் உணர்ச்சியை எழுவித்து இன்பம் பயப்ப தொன்றாம்.
என்ற இரு நிலைகளில் பொருள் அமையும் தன்மையை மறைமலையடிகள் எடுத்துரைக்கின்றார்.
திங்கள் வானில் விளங்குகின்றது – தனியே கிடந்த பொருள்

‘‘கொழுந்தாரகை முகைக்கொண்டலம்
பாசைடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கமலம் எழில் தந்தென’’ (திருச்சிற்றம்பலக் கோவையார்)
என்ற பகுதி பாட்டின்கண் அமைந்த பொருள்.
இப்பாட்டில் இரு காட்சிகள் காட்டப்பெறுகின்றன.
ஒருகாட்சி- நீர்மடுவில் பச்சிலைகள் பரவி இருக்க அவற்றின் நடுவே வெண்தாமரை மலர்ந்திருத்தல்
மற்றொருகாட்சி- விண்பரப்பில் விண்மீன்களுக்கு மத்தியில் முழுநிலவு தோன்றியிருத்தல்

இவ்விரு காட்சிகளையும் ஒப்புநோக்கிவிட்டுப் பின்வரும் முடிவிற்கு மறைமலையடிகள் வருகின்றார். ‘‘இராக்காலத்தே முழுநிலவுடன் காணப்பட்ட அவ்வானின் தோற்றத்தை, நிலத்தின்கண்ணுள்ள ஒரு மடுவின் தோற்றத்தோடு ஒப்பாகவைத்துக் காட்டினமையால் அதற்கு இவ்வின்பம் விளைக்கும் ஆற்றல் பொருந்தலாயிற்றென்பது நன்கு புலனாம். ஆகவே பாட்டின்கண் சொல்லப்படும் பொருளுக்கு இசைந்த வேறோரு தோற்றத்தினை எழுப்புதல் செய்யுளியற்றும் நல்லிசைப் புலவர்க்கு மட்டும் வாய்த்ததொரு திறமாம்.

செய்யுளில் உவமை, உருவகம் ஆகியன கலந்து அமைந்திருப்பதால் அதன் வளமை கூடுகின்றது என்ற கருத்தினுக்கு மறைமலையடிகள் வருகின்றார். இதன் காரணமாக தன்மையணி, உவமை அணி, உருவக அணி ஆகிய மூன்றுமே தமிழ்மரபு சார்ந்த அணிகள் என்பது அவரின் கருத்து. மற்ற விரிக்கப் பெற்ற அணிகளை அவர் ஏற்கவில்லை.
‘‘தம்மாற் கூறப்படும் பொருள்களின் வழியே அறிவு செல்லுங்காற் புலவர்க்கு இயற்கையாய்த்  தோன்றும் ஒப்புமைகள் உவமை உருவகம், என்னும் இவ்விரண்டே யாகலின் இவ்வியற்கை நெறி திறம்பிளெல்லாம் அமைத்துப் பொருளுண்மை திரித்துக் கற்பார்தம் மன உணர்வைச் சிதைக்கும் பிறரெல்லாம் புலவரெனப்படுதற்குச் சிறிதும் உரியர் ஆகார் என்பதூஉம் அவரான் அமைக்கப்படும் அவ்வணிகளெல்லாம் வெற்றாரவார வெறும் போலிகளேயாமென்பதூஉம் உண்மையறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கற்பாலனவேயாம்.
இவ்வுண்மை கடைப்பிடித்தன்றே ஒப்புயர்வில்லாச் செந்நாவன்மைச் செவ்வறிவுத் தெய்வப்பெற்றியாளரான ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளதிகாரத்துள் உவமவியல் என ஒன்றே வகுத்து உவமம் ஒன்றையே அணிந்துரையாக வைத்து விளக்கினார். இத்தெய்வ ஆசிரியரோடு திறம்பிப் பிறர் தமக்கு வேண்டியவாரெல்லாம் அணிகளைப் பெருக்கி எழுதினாராயினும் அவையெல்லாம் தொல்காப்பியத்தின்முன் தலைதூக்கமாட்டாவா யொழிதல் காண்க ப.77) என்ற இக்கருத்து மறைமலையடிகளாரின் தனித்தமிழ் உள்ளத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இக்கருத்தில் தண்டியலங்காரத்தின் பெயரையோ, அல்லது தண்டியாசிரியர் பெயரையோ குறிப்பிடாது ஆனால் அவற்றையே குறிவைத்து அவற்றில் தலைதூக்கியுள்ள வடமொழிச்சார்பைக் குறிவைத்து அதனைப் பொய்யாக்கும் அவரின் முனைப்பு தெரியவருகின்றது.

பட்டினப்பாலையின் ஆசிரியர் தன்மைஅணி, உவமை அணி ஆகியவற்றை எவ்வாறு புனைந்துள்ளார் என்பதை தெள்ளிதின் ஆராய்ந்து உரைக்கின்றார் மறைமலையடிகள்.
‘‘உலகியற் பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மன உணர்வை எளிதிலே கவர்தற் பயத்தனவான அரிய பெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாந் தன்மைநவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறாவன சில வந்தால் அவற்றை அழகு பெறக் கூறல் வேண்டி உவமையும், வைத்துரைக்கும் நுட்பம் மிகவும் பாராட்டற்பாலதொன்றாம்’’(ப. 79) என்ற இந்தக் கருத்து மறைமலையடிகளார் தன்மைஅணியை, உவமை அணியை எங்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டியுள்ள இடங்களாகும்.


இதன்பின் மறைமலையடிகள் தரவுகளைச் சேகரித்துத் தரும் ஆய்வுநெறிமுறைக்கு இவ்வுரைப்பகுதியைக் கொண்டு செல்லுகின்றார்.  பட்டினப்பாலையில் இருபது உவமைகள் காணப்படுகின்றன என்பது மறைமலையடிகளார் கருத்து.அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தம் உரைப் பகுதியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.. இது பட்டினப்பாலையில் உவமைகள் பற்றி ஆராய்பவர்களுக்கு மிக்கத் துணைசெய்யும்.
பொருள்களைக் கிடந்தவாறே கூறிய இடங்களையும் மறைமலையடிகள் தொகுத்துரைத்துள்ளார்.
பட்டினப்பாலையில்       பொருள்களைக் கிடந்தவாறு கூறுவதிலும் திரித்துக் கூறும்முறை என்ற ஒன்று உண்டு என்பதை மறைமலையடிகள் விளக்குகின்றார். எடுத்துக்காட்டிற்குப் பின்வரும் தொடர் கருதத்தக்கது.
‘‘வானம்பாடிப் பறவை மழைத்துளியை உண்டு உயிர்வாழுமென்பதும், குயிற்பறவையுந் தூதுணம் புறாவும் தனித்துள்ள காளிக்கோட்டத்தில் ஒதுங்கியிருக்குமென்பதும் இவரால் மிகவும் நன்றாகச் சொல்லப்பெற்றுள்ளன’’(82)
மேலும் பட்டினப்பாலை ஆசிரியர் வானநூல், வரலாற்றுச் செய்திகளைத் தருதல் ஆகியவற்றால் சிறந்திருப்பதைக் காட்டி, பண்டைத்தமிழ்ப் புலவர் பெற்றியைப் பற்றியும், தற்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அறிவுத் துறைகளைப் பற்றியும் மறைமலையடிகள் குறிப்பிடுகின்றார்.
‘‘பண்டைக்காலத்திருந்த தமிழ்ப்புலவர்  இலக்கண இலக்கியம் வல்லாராதலோடு ஏனை உண்மை நூற்புலமையும் உடன் வாய்ப்பப் பெற்றிருந்தார். ஒரு சாரார் இசைத்தமிழும், பிறிதொருசாரார் நாடகத்தமிழும்,மற்றொருசாரார் ஓவிய நூலும், வேறொரு சாரார் மருத்துவநூலும், பின்னொருசாரார் வான் நூலும் மற்றை ஒரு சாரார் சமயநூலுமாகப் பலப்பல பயின்று விளங்கினார்.’’(84) என்ற குறிப்பை வெளிப்படுத்தும் மறைமலையடிகளார் மனதில் தற்கால புலவரும் இவ்வகையான பல்வகை அறிவுத் திறனைப் பெறவேண்டும் என்ற வேட்கை இருப்பதை உணரமுடிகின்றது.
பாட்டின் நடை
பட்டினப்பாலையின் செய்யுள் நடை பற்றிய மறைமலையடிகளாரின் கருத்து அவர் யாப்பிலக்கணத்தின்மீது கொண்டுள்ள தேர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது,
‘‘அகவலோசை என்பது ஒருவன் தான் கருதியனவெல்லாம் வரம்புபடாது சொல்லிக்கொண்டு போகும் வழி இயற்கையே ஒன்றும் தொடர்பு ஒலியாகும். வெண்பாவிற்குரிய செப்பலோசை என்பது கேட்பப் பிறனொருவன் அதற்கு மாறு சொல்ல நடைபெறுஞ் சொன்முறையில் இயற்கையே தோன்றி இடையிடையே நிற்றல் பெற்றுச் செல்லுவதாம்’’ (பக்கம் 90) என்று பாவிற்கான விளக்கத்தையும், அவற்றின் இயல்பையும் விளக்கி நிற்கிறார் மறைமலையடிகள்.
பட்டினப்பாலையில் ஆசிரியப்பாவின் இலக்கணம் பொருந்தி வந்தாலும் இடையிடையே வஞ்சிப்பாவின் சாயல் இருப்பதை வெளிப்படுத்துகிறார் மறைமலையடிகள். ‘‘வஞ்சிப்பா அடிகள் இடையிடையே கலக்கத் தூங்கலோசை மயங்கிவந்தவாறென்னையெனின், இப்பாட்டின் முதற்றொட்டு முடிவுகாறும் அகவலோசையே வந்ததாயின் இடையிடையே ஓசை வேறுபடாமல் ஒரோசையாய் நடந்து கேட்பார்க்கு வெறுப்பு தோற்றுவிக்குமாகலின் அங்ஙனம் ஆகாமைப் பொருட்டு வஞ்சிக்குரிய தூங்கலோசையினை ஆங்காங்கு வேறுபடமாற்றால் நயமுற இசைவித்துப் பாடுவாராயினார்.’’ (பக்கம்.91) என்ற மறைமலையடிகளாரின் கருத்து அவரின் ஆய்வு நுணுக்கத்திற்குச் சான்று பயப்பதாக உள்ளது.
மேலும் ஆசிரியப்பா அடிகள் எவை, எவை என்பதையும், அவற்றில் அளவடியாக வந்தவை எவைஎவை என்பதையும், வஞ்சிப்பா அடிகளாக வந்தவை எவைஎவை என்பதையும், அவற்றில் குறளடியாக வந்தவை எவை எவை என்பதையும் தம் உரையில் மறைமலையடிகள் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது அவரின் செய்யுள் சார்ந்த யாப்பறிவிற்கு மேலும் விளக்கம் தருவதாக உள்ளது.
மேலும் இப்பட்டினப்பாலையில் எதுகை,மோனை பயின்றுவந்துள்ள இடங்களையம் இவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை நோக்குமிடத்துத் தற்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியான பா நலம் பாராட்டல் என்ற முறைமை மறைமலையடிகளாரின் ஆய்வுரை ஒட்டியது என்பது இங்கு உணரத்தக்கது.
அடுத்து சொல் இயல்பினை ஆராய்கிறார் மறைமலையடிகள். ‘‘ இனி இப்பாட்டின்கண் சிறிதேறக்குறைய ஆயிரத்து முந்நூற்றறுபத்தொன்பது சொற்களிருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம்,அங்கி,ஆவுதி, பூதம், மது,பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பனவாகும். ஞமலி என்னும் சொல் பூழிநாட்டிற்குரிய திசைச்சொல்லாகும். ஆகவே இப்பாட்டில் நூற்றுக்கு ஒரு விழுக்காடு பிறநாட்டுச் சொற்கள் கலந்தனவென்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க. (பக்கம் 96) என்ற இக்கருத்தின் வாயிலாக தமிழ் தூயதாம் தன்மை பெறவேண்டுமானால் அது பிறமொழிச் சொற்கள் கலவாத நிலை பெறவேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்தியவர் மறைமலையடிகளார் என்பதை உணரவேண்டியுள்ளது.

உரையாசிரியர் பணி
மாட்டு என்ற பொருள்கோளின்படி பட்டினப்பாலை அமைக்கப்பெற்றுள்ளது என்று கருதுகிறார் மறைமலையடிகள். இந்த மாட்டு என்ற பொருள்கோளுக்கு உரிய பொருள் கொள்ளும் தன்மையில் இவர் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியரோடு முரண் கொள்ளுகின்றார். இம்முரணை மிக நாகரீமாகப் படிப்பவர்க்கு உணர்த்துகிறார் மறைமலையடிகள்.
‘‘ஒரு பாட்டின் முதற்பொருளைச் சிறப்பித்துக்கொண்டு அமைந்து கிடக்கும் சார்புப் பொருள்கள் இன்னோரன்ன பெரும்பாட்டுகளில் அகன்று நிற்குமாகலின் உரைகூறலுறும் ஆசிரியன் அவை தம்மையெல்லாம் அணுகிய நிலையில் வைத்துப் பொருளுரைக்கும் நெறியினையே தொல்லாசிரியர் மாட்டு என வழங்கினார்’’ (பக்கம்.98) என்பது மாட்டு என்பதற்கான பொருளாகும். இதுவே உரையாசிரியரின் பணியும் ஆகும்.
‘‘இனி மாட்டு என்னும் பொருள்கோள் இதுவேயாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், இப்பத்துப்பாட்டுகட்கும் ஒருமுறையுமின்றி ஓரிடத்து நின்ற ஒரு சொல்லையும், பிரிதோரிடத்து நின்ற பிரிதொருசொல்லையும் எடுத்து இணைத்து உரை உரைக்கின்றார். அங்ஙனமுரைகூறுதல் நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரணாதலானும், இவர்க்கு முன்னிருந்த நக்கீரனாரை உள்ளிட்ட தொல்லாசிரியரெவரும் இவ்வாறு உரை உரைப்பக் காணாமையானும் நச்சினார்க்கினியர் உரை முறை கொள்ளற்பாலதன்றென மறுக்க.
நச்சினார்க்கினியருரை கூறாவிடின் இப்பத்துப்பாட்டுக்களின் பொருள் விளங்குதலரிதேயாதல் பற்றியும் இவர் தொல்காப்பியம், கலித்தொகை முதலிய பண்டைச் செந்தமிழ்நூல்கட்கு அரிய பெரிய தண்டமிழுரை வகுத்தது பற்றியும் இவரை நெஞ்சார வாழ்த்தி இவர்க்குத் தொண்டு பூண்டொழுகும் கடப்பாடு மிகவுடையேமாயினும், இவர் வழுவிய இடங்களிலும் இவரைப் பின்பற்றி உலகை ஏமாற்றுதல் நடுவுநிலையாகாதாகலின் இவர் தம் வழூக்களைக் களைந்து திருத்திப் பின் இவரைச் செந்தமிழ் மாமுகில் வள்ளலாய்க் கொண்டு வழிபடுவோமாக’ ’என்ற மறைமலையடிகளாரின் குறிப்பு இவரின் மறுக்கும் தன்மையில் உள்ள நனிநாகரீகத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.
இவ்வகையில் பட்டினப்பாலை உரையில் பல்வகை ஆராய்ச்சிகளுக்கு இடம்கொடுத்து உரை வகுத்துள்ளார் மறைமலையடிகள். இவரின் உரையில் பாடபேதம் காட்டுதல், சொற்பொருள் விளக்கம் தருதல், விளக்கக் குறிப்புகள் உரைத்தல்,அயல்நாட்டு அறிஞர்கள் தம் நூல்களை ஒப்புநோக்குதல் போன்ற பல பண்புகள் காணப்படுகின்றன.
முடிவுகள்
மறைமலையடிகளின் நடையியல் கோட்பாடு என்ற தலைப்புடைய இக்கட்டுரையின் வழி பெறப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.
விளக்கவுரை, பதவுரை, விருத்தியுரை, காண்டிகையுரை என்ற உரைவகைகள் பலவற்றில் மறைமலையடிகள் செய்தது ஆராய்ச்சி உரை என்ற அளவில் ஆராய்ச்சி நோக்குடையதாக அமைந்துள்ளது.
மறைமலையடிகள் தமிழ்நடையைப் பெரிதும் போற்றியுள்ளார். பட்டினப்பாலையில் ஒரு விழுக்காடு அயற்சொற்கள் கலந்துள்ளதால் இச்சிற்றளவைக் கண்டு இது நல்ல தமிழ்நடைநூல் என்கிறார். அயல்சொல் கலவாமல் தமிழை எழுதவேண்டும் இவரின் தனித்த நடைக் கொள்கையாகும்.
இவரின் நடையில் எடுத்துக்கொண்ட இரு பொருள்களை ஒப்புநோக்கி அவற்றில் சிறந்த ஒன்றை நிலைநிறுத்தும் போக்கு காணப்படுகிறது. பாட்டு, உரை ஆகியனவற்றையும், பொருள் தனித்துக் கிடப்பது, பாடலில் பயின்றுவருவது ஆகியவற்றையும் அகம், புறம் ஆகியவற்றையும், தன்மை அணி- உவமை அணி என்பதையும் நுணுகி வேறுபடுத்தி ஆராய்ந்து இவர் இவற்றுள் ஒன்றை நிறுவும் தன்மை உடையவராக உள்ளார்.
யாப்பு நுணுக்கம் பெற்றவராக மறைமலையடிகள் விளங்கியமையால் நூலின் யாப்பமைதி பற்றிய அறிவிக்கும் செய்திகள் ஆராய்ச்சிக்கு வலுசேர்க்கின்றது.

பிற உரையாசிரியர்களை மறுக்கும்போது மிக நனி நாகரிகத்துடன் விளங்கி குறிப்பிட்ட ஒன்றை மட்டும் ஒத்துக்கொள்ளாது மற்றஅவரின் தமிழ் கருதிய செயல்பாடுகளை மதித்து உரை  செய்திருப்பது  இக்காலத்தவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறை.

பட்டினப்பாலையில் பயின்றுவந்துள்ள உவமை, உருவகத்தொடர்கள், தன்மை அணித் தொடர்கள் ஆகியனவற்றை இவர் தொகுத்தளித்துள்ளமை ஆய்வின் பாற்பட்டதாகும். இத்தகைய பணியை இக்கால உரையாசிரியர்களும் பின்பற்ற வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் உரை மரபு என்பது ஆய்வின்பாற் பட்டதாக அமைந்தால் மட்டுமே சிறக்கும்  என்பதற்கு இவரின் பட்டினப்பாலை உரை சிறப்பானது.
வடமொழி மரபுகளை ஒதுக்குவது இவரின் கொள்கையாகும். அணிகள் பலவாக விரித்துரைத்த தண்டியலங்காரத்தை இவர் தம் உரையில் மறைமுகமாகச் சாடுகின்றார். தொல்காப்பியமே தலையாய இலக்கணம். அதுவே தமிழரின் வாழ்க்கை இலக்கணம் என்பதில் உறுதி பட இருக்கும் இவர் தொல்காப்பிய நூலைக் கொண்டே தம் முடிவுகளை அறிவிக்கும் திறம் இவரின் தொல்காப்பியத்தின் மீதான விருப்பத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.
 

கருத்துகள் இல்லை: