புதன், ஜூன் 11, 2014

இலக்கிய உலகின் உயிர்த் துடிப்பு கம்பனின் ராமகாதை


இலக்கிய உலகின் உயிர்த்துடிப்பாய் விளங்கிக் கொண்டிருப்பது கம்பனின் ராமகாதை என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.
காரைக்குடியில் கம்பன் கழகம் சார்பில் நடத்தப்படும் மாதக் கூட்டத்தின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில், ஸ்ரீராமப்பிரியன் எஸ். சேகர் எழுதிய அமுத ராமாயணமும் அருளாளர்களும் என்ற நூலை சனிக்கிழமை வெளியிட்டு பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:
கம்பன் காவியம் எப்படிப்பட்டது. வெறும் கதையாகவோ, வெறும் கவிதையாகவோ படிக்க இயலாது. உணர்வாகவும், உயிர்த் துடிப்பாகவும் நாம் படித்தால் தான் கம்பன் கதைகளை உணர முடியும்.
நம் தமிழிலக்கியத்திற்கென்று நீண்ட நெடிய வரலாற்றுத் தடம் உண்டு. எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் பேசும் மொழியல்ல தமிழ். அதையும் தாண்டி வாழ்க்கைக்கு இலக்கணம் பேசுகிறது. எப்படி வாழ வேண்டும் என்று வாழும் நெறிமுறைகளுக்கு வழிகாட்டுகிறது. எனவே, கவியரசு கண்ணதாசன் கம்பனின் ராமகாவியத்தில் உள்ள சொற்கள் நமக்கு அகப்படாது என்று சொல்லுவார். அந்த அளவுக்கு இலக்கிய வளம் நிரம்பிய மொழி தமிழ். இலக்கணத்தின் பாதையிலும் செம்மையாக சென்று கொண்டிருக்கும் மொழியும் தமிழ்.
ஒரு காலத்தில் எவருக்கும் கிடைக்காத அரிய நெல்லிக்கனி அதியனுக்குக் கிடைத்தது. சாவா மருந்து அது. அதனை தான் உண்ணவிரும்பாத அதியன் தமிழ் மூதாட்டி ஒளவைக்கு தந்தான். எதற்காக? ஒளவை நெடுங்காலம் வாழ வேண்டும் என்பதற்கல்ல. அருமைத்தமிழ் நெடுங்காலம் வாழ வேண்டும் என்பதற்காக நெல்லிக்கனியைத் தந்தான்.
அன்று நமது இலக்கிய உலகத்தை மன்னர்கள் போற்றினார்கள். உலகத்தில் சமயத்தை உயர்த்திப் பிடித்த மொழி தமிழ் மொழி ஒன்றாகத் தான் இருக்க முடியும். பக்தி இயக்கத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட தமிழ் மொழி, நம் தேசத்தின் விடுதலை ஒரு வினாக்குறியாக இருந்த போது வியப்புக்குறியாக மாற்றிக் காட்டியதும் தமிழ் மொழி தான்.
தமிழில் ஆயுத எழுத்து ஒன்று தான் என்று எண்ணிக் கொண்டிருந்த போது அனைத்து எழுத்துக்களையும் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுத எழுத்துக்களாக மாற்றிக் காட்டிய பாரதியின் காலத்தில் தமிழ், தன்னை தேச விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டது. எல்லோரும் தமிழ்க் கல்வி கற்று விட்டால் தமிழ் மக்கள் துன்பங்கள் நீங்கும் என்று சொன்ன புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கூற்றுப்படிதான் இன்று தமிழ் இலக்கிய உலகம் பயணம் செய்து கொண்டிருக்கிறது.
மன்னர்களால் போற்றப்பட்ட தமிழ், ஆலயங்களில் வளர்க்கப்பட்ட தமிழ், தேசத்தை வளர்த்த தமிழ் என இத்தனை தமிழையும் தாண்டி கால வெள்ளத்தின் நீரோட்டத்தில் இன்னமும் இலக்கிய உலகம் ஜீவித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதன் உச்சமாய் கிடைத்த உயிர்த்துடிப்பு தான் கம்பனின் ராமகாதை என்றால் அது மறுக்க முடியாத உண்மையாகும். அரசர்கள் வெல்வது அதிசயமில்லை. ஆண்டவன் வெல்வது அற்புத மல்ல. மானுடம் வென்றதடா என்று கூறியவன் மகாகவிஞன் கம்பன். அந்த வகையில் ஸ்ரீ ராமப்பிரியன் இங்கு படைத்திருக்கும் இந்நூலுக்காக பெரும் உழைப்பு உள்ளது. அவர் ராமர் பக்திக்காக இதனை படைத்திருப்பதால் அனைவரும் படிக்கவேண்டும் என்றார்.
விழாவில் பொன்னம்பல அடிகளார் வெளியிட்ட நூலின் முதல் பிரதியை பேராசிரியர் அய்க்கண் பெற்றுக் கொண்டார். கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர்கள் சொ. சேதுபதி, பழனியப்பன், மாணிக்கவேலு செட்டியார் குடும்பத்தினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

thanks to dinamani
கருத்துரையிடுக