செவ்வாய், அக்டோபர் 12, 2010

காப்பியங்களில் திருப்பு முனைகள்




தமிழன்னையின் அணிகலன்களாகக் காப்பியங்கள் விளங்குகின்றன. தமிழன்னையின் காற்சிலம்பாக சிலப்பதிகாரமும், இடையணியாக மணிமேகலையும், கழுத்தணியாகச் சீவக சிந்தாமணியும், வளையாக வளையாபதியும், காதொளிரும் குண்டலமாக குண்டலகேசியும் விளங்குகின்றன. இவைதவிர தமிழன்னை அணியும் மாலையாக தேம்பாவணி அமைகின்றது. இவ்வகையில் காப்பியங்களால் பெரிதும் வளம் பெற்றுத்திகழ்கிறாள் தமிழன்னை.


இக்காப்பியங்கள் நேரிய நெறிகளையும், கற்போருக்கு அரிய அறிவுரைகளையும் வழங்குவதோடுப் படிப்போருக்குப் பல்வகைச் சுவைகளையும் இணைத்தே வழங்குகின்றன. குறிப்பாக காப்பியக் களங்களில் உள்ள திருப்புமுனைகள் கற்போரைக் காப்பியத்தின் மீதுள்ள ஆர்வத்தை மிகுவிக்கின்றன. அடுத்து நிகழப்போவது என்ன என்பதை அறியச் செய்ய, அதன் முலம் கற்பவரை வியப்பில் ஆழ்த்த அவை காத்ததுக் கொண்டிருக்கின்றன.


சிலப்பதிகாரத்தில் சொற்களை எண்ணிப் எண்ணிப் பேசுகின்ற கண்ணகி மதுரையில் தன் கணவனுக்குத் தீமை நேர்ந்தபோது நேராகச் சென்று மன்னனிடம் நீதி கேட்கிறாள். இந்த முறைமை, நேர்மை அவளுக்கு எப்படி வாய்த்தது. அதிகம் பேசாத அவள் மன்னன் அவையில் மன்னனையே எதிர்த்துக் கேள்வி கேட்கும் நடைமுறைக்கு மாறியது எப்படி. இந்த மாற்றம் சாதாரணமாக உடனே நிகழ்ந்து விட முடியுமா.


மதுரை மாநகரத்திற்குள் கோவலன் சிலம்பினை விற்கச் செல்லுகிறான். கண்ணகி அவனை வழியனுப்பி விட்டு ஆயர் குலத்தாருடன் அமர்ந்திருக்கிறாள். ஆயர் மக்கள் வாழ்வில் அன்று பல தீக்குறிகள் ஏற்படுகின்றன. குடங்களில் இட்ட பால் உறையவில்லை. காளைமாடுகளின் கண்களில் கண்ணீர் வழிகிறது. வெண்ணெய் உருக்க முற்பட்டபோது அது உருகாது அப்படியே இருக்கிறது. அங்குமிங்கும் அலையும் ஆட்டுக்குட்டிகள் ஆடாது அசையாது நிற்கின்றன. இத்தீக்குறிகளைக் கண்டு ஆயர் குலத்தினர் அஞ்சி நிற்கின்றனர்.


மனம் மயங்கிப் போய் இருந்த அவர்களைத் தேற்றி மாதரி கவலைப் படாதீர்கள்.... நாம் அனைவரும் ஆயர் பாடியில் பலராமனுடன் கண்ணன் ஆடிய பாலசரிதை நாடகங்களை ஆடுவோம.... இதனால் துன்பம் தீரும் என்று கூறுகிறாள்.


அனைத்துப் பெண்களும் நாடகமாடத் தயாராகின்றனர். நின்ற பெண்களுள் எழுவரைத் தேர்ந்து அவர்களுக்குப் பெயர்கள் இடப் படுகின்றன. அவர்கள் காளைகளை வளர்ப்பவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். ஒருபெண் கண்ணனாக மாறுகிறாள். அவளுக்குத் துளசி மாலை சூட்டப்படுகிறது. ஆட்டம் தொடங்குகிறது.


அரக்கர்கள் கண்ணனை அழிக்கக் கன்றுக்குட்டியாகவும், மரங்களாகவும் வந்து நின்றனர். அவற்றைக் கண்ணன் அழித்தான்.


கடலைக் கடந்து அமுதம் ஏற்பட நல்லோர் வாழக் கண்ணன் உதவினான்.


பெண்கள் நீராடியபோது அவர்களின் ஆடைகளைக் கவர்ந்தான் மாயவன். அவர்களுள் ஒருத்திக் கண்ணனை மிகவும் நேசித்தாள். நப்பின்னை என்று பெயர் பெற்ற அவள் கண்ணனின் அருகிலும், பலராமனின் அருகிலும் சென்று சென்று கண்ணனின் அழகினைப் பருகினாள். இவர்கள் அனைவரும் கூத்தாடினர். அதுபோல் நாமும் ஆடுவோம். அவன் புகழ்பாடுவோம் என்று அவர்கள் பாடி ஆடினர்.


சோ அரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேகவன் சீர் கேளாத செவி என்ன செவியே?

மடந்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை,நூற்றுவர் நாற்றிசையும் போற்றப்

படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது

நடந்தானை ஏந்தாத நாவென்ன நாவே?


என்றெல்லாம் நாட்டிய நாடகத்தை நடத்தி அந்த ஆயர் பெண்கள் தங்களுக்கு வந்த தீமையைப் போக்க முயன்றனர்.


இந்த ஆடலை, நிகழ்த்துக் கலையை ஆடாமல் அசையாமல் கண்ணகி கண்டு கொண்டிருக்கிறாள். கண்ணன் அரக்கர்களை அழித்தது, இராவணனை அழித்தது, பஞ்சவர்கள் நலம் பெற தூது நடந்தது இவற்றையெல்லாம் காட்சியாகக் கண்ட கண்ணகி நெஞ்சினில் தீமையை அழிக்க வேண்டும். அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது.


இந்நேரத்தில் ஒரு பெண் கோவலனுக்கு இழைக்கப் பெற்ற தீமை குறித்து ஓடி வந்து சொல்லுகிறாள். இதனைக் கேட்ட கண்ணகி மயக்குமுற்றக் கலங்குகிறாள். என்கணவனே என் கணவனே என்று கதறி அழுகிறாள். இனி நான் என்ன செய்வேன் என்று குமுறுகிறாள்.


கணவனை இழந்த பெண்கள் கைம்மை நோன்பு நோற்று வாழ்வதைப் போல மன்னவன் தவறிழைப்ப நான் துயருற்று வாழ்வதா?


கணவனை இழந்தபின் பாவங்களைத் தொலைக்க புண்ணிய தீரத்தம் ஆடும் மகளிர் போல் நான் ஆவேனா? மன்னவர் தவறிழைப்ப அறம் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவேனோ?


கணவர் இறந்தால் அவரின் உடல் தீயில்முழ்க கவலையே உருவான மகளிர் போல நான் வாழ்வேனா. மன்னவன் தவறிழைப்ப இம்மையில் பழி கொண்டு, மறுமையிலும் வாழ்வின்றி நான் வாழ்வேனா?


குரவை ஆடிய மகளிரே! கேளுங்கள்! என் கணவன் கள்வனா? காய்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா? என்று கலங்கி மொழிகிறாள் கண்ணகி.


அப்போது ஒரு குரல் உன் கணவன் கள்வன் அல்லன். இந்த ஊரைப் பெருந்தீ உண்ணப் போகிறது என்று கூறியது.


கண்ணகி அறத்தினை முன்னிறுத்தி மன்னவனை நீதிக் கேட்கப் புறப்படச் செய்வதற்கு ஆயர் மகளிர் ஆடிய ஆடல்கள் காரணமாக இருந்தன. கண்ணகிக்கு இவர்களின் ஆட்டம் நீதி கேட்க, நியாயத்தை நிலை நிறுத்த உதவியுள்ளது. மிகப் பெரிய திருப்பு முனையை இந்த ஆய்ச்சியர் குரவை சிலப்பதிகாரத்தில் நிகழ்த்தியுள்ளது.


மணிமேகலைக் காப்பியத்திலும் ஒரு திருப்புமுனை அதன் போக்கில் மாற்றத்தினை உண்டாக்கிவிடுகிறது. ஆடல் மகளாக வாழவேண்டிய மணிமேகலையை அறத்தின் செல்வியாக மாற்றிவிடுகிறது.


மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவினுக்கு அழைத்துப்போகிறது. அப்போது அங்கு மணிமேகலை தன் பழைய பிறவி பற்றி அறிந்து கொள்ளுகிறாள். முன்னாளில் இராகுலனும் இலக்குமியாகவும் வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் அசோக குமரனாகவும், மணிமேகலையாகவும் தோன்றியிருத்தலை அவள் அறிகிறாள். தன் மீது மோகம் தோன்ற இப்பழைய தொடர்பே காரணம் என மணிமேகலை அறிந்து கொள்கிறாள்.


தற்போது மணிமேகலையின் முன் முன்று வாழ்க்கைகள் நிற்கின்றன. ஒன்று பழைய பிறவியின் தொடர்வாக காதலை ஏற்று இல்லறம் மேற்கொள்வதா? அல்லது ஆடல் மகளாக தன் வாழ்வினைத் தொடர்வதா? அல்லது அறத்தின் செல்வியாக துறவிலேயே நிற்பதா? என்ற இந்த முன்று வழிகளில் அவள் துறவின் தூய்மை கருதி அறவாழ்வினை மேற்கொள்ளத் துணிகிறாள்.


இந்த வாழ்விற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமுதசுரபி அவள் கரங்களுக்குக் கிடைக்கிறது. தீவதிலகை என்ற புத்தபிரானின் பாதபீடிகையைக் காத்துவரும் பெண்ணின் முலமாக மணிமேகலை அமுதசுரபியைப் பற்றி அறிந்து கொள்ளுகிறாள்.


கோமுகி என்னும் பொய்கை நம்முன் உள்ளது. இப்பொய்கையில் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தின்போது அமுதுசுரபி என்ற பாத்திரம் தோன்றும். ஒருகாலத்தில் ஆபுத்திரன் கையில் இருந்த இப்பாத்திரம் அக்காலத்தில் அன்னமளிக்கும் அறத்தைத் திறமுடன் செய்தது. ஆனால் தற்போது இது பெறுவார் யாருமில்லை. மணிமேகலையே நீ இப்பாத்திரத்தைத் தற்போது பெற்று உலகிற்கு உணவளிப்பாய் என்று அவள் கூறினாள்.


இதனைக் கேட்டதும் தான் கொண்ட துறவு வாழ்வில் அறம் மேலும் கூடுவதற்கான வாய்ப்பாக இந்த வாய்ப்பினை மணிமேகலைப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்தாள். புத்தபீடிகையை வணங்கிப் புத்தபிரானைப் பலவாறு போற்றிப் பொய்கையில் கிடைத்த அமுதசுரபிப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அறக்கட்டளையை தீவதிலகை உணர்த்துகிறாள்.


மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்

கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்

(பாத்திரம் பெற்ற காதை 9599)

இவ்வகையில் பசிபோக்கும் உயிர்ப்பணியை மணிமேகலை ஏற்றுக் கொள்ள இந்தத் திருப்புமுனை உதவியுள்ளது.


சீவகனின் வாழ்வில் அவன் தன் ஆசிரியனைக் கண்டபோது


அவன் வாழ்வில் ஒரு திருப்புமுனை நேர்கிறது.

தெருமந்து மயங்கி வீழ்ந்தான் திருமலர்க்கண்ணி

மாரமுங் குழையச் சோரச் சொரிமலர்த்தாரும் பூணு

நீயெனப் பேச லோடும் பெரியவன் யாவனென்ன

பிறப்பினைத் தேற்றியாங்கக் கரியவன் கன்னற் கன்று


என்று இதனைச் சீவக சிந்தாமணி செய்யுள் குறிப்பிடும். யானைப்பசி நோயில் இருந்த சீவகனின் ஆசிரியர் நந்தட்டன் சீவகனைக் கண்டதும் அவரின் நோய் நீக்கப் பெறுகிறார். மாணவரைக் கண்டால் அந்த காலத்தில் வயிற்றவலி நீங்கியிருக்கிறது. இதன்பின் ஆசிரியர் சீவகனின் வரலாற்றை அவனறியும்படி எடுத்துரைக்கிறார். இதனைக்கேட்ட சீவகன் இது யார் வரலாறு என்றதும், உன் வரலாறு என ஆசிரியர் சொன்னதும் மயக்கமடைகிறான். பின் தெளிவு பெற்று ஆசிரியரின் வழிகாட்டலுடன் தன் பழைய நிலையை அடைவதற்கு உரிய வழிவகைகளைக் கண்டுப் பின் அவற்றின் வழி நடந்து வெற்றி பெறுகிறான்.


வளையாபதி , குண்டலகேசி ஆகிய நூல்கள் முழுமையும் கிடைக்கவில்லை. மேற்கோள்களாகக் கையாளப்பெற்ற சில பாடல்களே தற்போது கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு இவற்றின் திருப்புமுனை பற்றி அறியவேண்டி இருக்கிறது.


நவகோடி நாராயணன் என்பவன் வளையாபதியின் காப்பியத்தலைவனாகக் கருதப்படுகிறான். இவன் முன் ஒரு பெண்ணை மணம் புரிந்தான். பின்பு மற்றொரு பெண்ணை இவன் மணம் முடிக்கிறான். இப்பெண் தாழ்வான குலத்தவள். இவளை இவன் மணந்தமையால் தன் குலத்தாரால் இவன் இகழப்படுகிறான். இச்சூழலில் இரண்டாம் மனைவியின் மகன் தன் தந்தையையும் தாயையும் இணைத்து வைத்து வெற்றி பெறுகிறான். இதுவே இக்காப்பியத்தின் கதையாகும்.


இக்காப்பியத்தில் இணைவிழைச்சு என்ற பகுதியில் சில பாடல்கள் அமைந்துள்ளன. அதில் பின்வரும் பாடல் ஒன்று.


சுன்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்

ஆன்றாங்கு அமைந்த குரவர்மொழி கோடலீயார்

வான்றாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர் காமன்

தான்றாங்கி விட்ட கணைமெய்ப்படு மாயினக்கால்


அதாவது மிக்க காமத்து இயல்பால் சான்றோர் பழிப்பு ஏற்படும். மேலும் சுற்றம் இழந்து தனிப்படுவர். ஆசிரியர்களும் தூற்றுவர். வான் போன்று வளர்ந்து இருந்த புகழ் கூடக் கெடும் என்று காட்டும் இப்பாடல் வளையாபதியின் திருப்பு முனைப்பாடலாகக் கருதத்தக்கது.


சத்துவான் என்பவன்தான் குண்டலகேசிக் காப்பியத்தின் தலைவனாகக் கொள்ளப் பெறுகிறான். தலைவியாகக் குண்டகேசி அமைகிறாள். கள்வனான சத்துவனைக் காதலித்துக் கரம்பிடிக்கும் குண்டலகேசி அவனாலேயே அழிக்கப்படும் சூழல் வந்துற்றபோது அவனை இறப்பினுக்கு ஆளாக்கி சதி செய்வார்க்குச் சதி செய்கிறாள். இந்தப் பின்னணியில் பின்வரும் ஒரு பாடல் குண்டலகேசியில் அமைகிறது. இப்பாடலைக் குண்டலகேசியின் திருப்புமுனைப்பாடலாகக் கொள்ளலாம்.

சூவரிக் கமழ்தா ரரசன்விடு கென்ற போழ்தும்

துரித்தலாகா வகையாற்கொலை சூழ்த்த பின்னும்

பூரித்தல் வாடுதலென்று இவற்றாற் பொலி வின்றிநின்றான்

பாரித்த தெல்லாம் வினையின்பயனென்ன வல்லான்

(குண்டலகேசி 19)

இப்பாடலில் குண்டலகேசியின் கணவன் குற்றம் சாட்டப்பெற்று நின்ற நிலை எடுத்துரைக்கப்படுகிறது. இவன் வினைப்பயன் காரணமாகவே தனக்கு சிறைசெய்தல், உயிர் துறக்க வைத்தல் போன்றன நடைபெறுகின்றன என்பது உணர்ந்து அவன் கலங்காமல் நின்றான் என்பதுபோல இப்பாடலுக்குப் பொருள் கொள்ள இடம் உள்ளது. குண்டலகேசிக்குச் சத்துவானிடம் காதல் பிறந்திட இதுவே காரணம் என்பதால் இப்பாடல் திருப்புமுனைப்பாடலாகின்றது.


இவ்வாறு காப்பியத்தின் கட்டமைப்பில் உயரிய இடத்தைக் காப்பியத்திருப்பு முனைகள் பெற்று நிற்கின்றன. இவற்றின் போக்கால் காப்பியங்களுக்கு சுவைத்தன்மை கூடுகிறது. ஐம்பெருங்காப்பியங்களில் கண்ட இந்தத் திருப்புமுனைப்போக்கு மற்ற காப்பியங்களிலும் காணத்தக்கது. இவற்றைக் காணுவதன் முலம் காப்பிய உலகம் செழுமை பெறும்.

கருத்துகள் இல்லை: