ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010
இந்த வார கலாரசிகனில் என் புத்தகம் பற்றிய அறிமுகஉரை
தினமணி இதழின் ஆசிரியர் திருமிகு வைத்தியநாதன் அவர்கள் புதுக்கோட்டை கம்பன் கழகத்திற்கு உரையாற்ற சமீபத்தி்ல் வந்திருந்தார். அவருக்கே உரிய எளிமை, பரவசப் பழகுதல் இவற்றோடு உலா வந்த அவரிடம் என் நூல் பிரதிகளை தந்தேன். அதன் விளைவு இன்றைக்குத் தமிழ்மணியில் ஒரு அறிமுகச்செய்தியை அளித்திருக்கிறார். அவரின் தேடுதலுக்கும், தமிழ் ஆக்க முயற்சிகளுக்கும் காட்டாக இந்த அறிமுக உரை அமைந்திருக்கிறது. அவருக்கு என் நன்றிகள்
தமிழ்மணி
இந்த வார கலாரசிகன்
First Published : 29 Aug 2010 01:44:00 AM IST
Last Updated :
நாவல்கள் படிப்பதுபோல, கட்டுரைத் தொகுப்புகள் படிப்பதுபோல, வாழ்க்கை வரலாறு படிப்பதுபோல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துவிட முடியாது. ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் வேண்டுமானால் தங்களது ஆர்வம் கருதியும் தேவை கருதியும் இதுபோன்ற ஆய்வுக் கட்டுரைகளை ஊன்றிப் படிப்பார்கள். சராசரி வாசகனுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எட்டிக் காயாகக் கசக்கும் என்பதுதான் உண்மை.
ஆனால், முனைவர் மு.பழனியப்பன் எழுதியிருக்கும் "விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்' என்கிற புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிய நான், வியப்பின் விளிம்புக்குப்போய் கடைசிப் பக்கத்தையும் படித்து முடிக்கும்வரை அதிலிருந்து மீளவே இல்லை.
தமிழ் நாவல் இலக்கியம் தோன்றி ஏறத்தாழ 130 ஆண்டுகளாகப் போகின்றன. இதில் சுதந்திரத்துக்கு முற்பட்ட அரை நூற்றாண்டு கால நாவல் இலக்கியத்துக்குப் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு கணிசமாகவே இருந்திருக்கிறது. அன்றைய சநாதனிகளின் மேலாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில், பல எதிர்ப்புகளையும் தடைகளையும் மீறி, இந்தப் பெண் எழுத்தாளர்கள் இயங்கி இருக்கிறார்கள் என்பதுதான் போற்றுதலுக்குரியது.
இன்றைக்கு இருப்பதுபோல அவர்கள் பெண்ணியம் பேசி விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை. பெண்ணிய உணர்வுகளைக் கதைக் கருவாக்கி, பெண் மனதின் துக்கங்களையும், ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் தங்களது கதாபாத்திரங்களின் மூலம் சமுதாயத்தில் உலவவிட்டு, ஆணாதிக்கத்துக்கு எதிராக ஓர் எழுத்துப் புரட்சியே நடத்தி இருக்கிறார்கள் அந்தப் பெண் நாவலாசிரியர்கள்.
முனைவர் மு.பழனியப்பனின் பணி அசாதாரணமானது. விடுதலைக்கு முந்தைய காலத்தில் பெண் எழுத்தாளர்கள் படைத்த நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்டிருந்தால், "ப்பூ, இது என்ன பிரமாதம்' என்று அவரது உழைப்பை ஊதித் தள்ளியிருக்கலாம். ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட நாவல்கள் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. அவற்றை எல்லாம் தேடிப் பிடிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஒன்றா, இரண்டா?
அப்போது, அதாவது ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் வெளியான அந்த நாவல்கள், பல நூலகங்களால் பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல என்று தூக்கி எறியப்பட்டிருக்கும். அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், அந்தப் புத்தகங்களின் பக்கங்கள் இப்போது தொட்டால் நொறுங்கும் தன்மையதாக இருக்கும். முனைவர் பழனியப்பனின் முயற்சியால் அவற்றில் 43 நாவல்கள் தேடிப் பிடிக்கப்பட்டு, இந்தப் புத்தகத்தில் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டிருக்கின்றன.
விடுதலைக்கு முந்தைய காலத்தில் ராஜாத்தி அம்மாள், விசாலாட்சி அம்மாள், செய்யூர் சாரநாயகி அம்மாள், தேவகுஞ்சரி அம்மாள், கஜாம்பிகை அம்மாள், ராஜாம்பாள், இந்துமுகி, மீனாட்சிசுந்தரம்மாள், கோதைநாயகி அம்மாள், பிரஹதாம்பாள், வி.பாலாம்பாள், கஜாம்பாள், டி.பி.இராஜலட்சுமி, குகப்பிரியை, மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், கிரிஜாதேவி, வி.சரஸ்வதி அம்மாள், குமுதினி, ஜெயலட்சுமி ஸ்ரீநிவாசன், ஸரோஜா ராமமூர்த்தி, லட்சுமி முதலிய நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பட்டியலிட்டு, அவர்களது பங்களிப்பையும் பதிவு செய்கிறார் முனைவர் பழனியப்பன். அது மட்டுமல்ல, பல நாவல்களின் கதைச் சுருக்கங்களையும் தொகுத்தளித்திருக்கிறார்.
"விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்' என்கிற புத்தகத்தை ஆய்வாகவும் எடுத்துக்கொள்ளலாம். சுவாரசியமாக சாமானியர்களும் படித்துத் தெரிந்துகொள்ளும் தகவல் களஞ்சியமாகவும் கொள்ளலாம்.
நமது பதிப்பாளர்களும், தமிழக அரசின் நூலகத் துறையும், மகளிர் நலத்துறையும் ஒருங்கிணைந்து, முனைவர் மு.பழனியப்பனை வளைத்துப் பிடிக்க வேண்டும். இத்தனை தகவல்களைச் சேகரித்து ஆய்வு நடத்தி இருக்கும் இந்த மனிதரின் உதவியுடன், விடுதலைக்கு முந்தைய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் அனைத்தையும் மறுபதிப்பு செய்து, நாளைய தலைமுறைக்குப் பயன்படும்படி செய்யவேண்டும். யார் செய்வது என்பதல்ல முக்கியம், செய்தாக வேண்டும்!
*****
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக