எம். ரவீந்திரகுமார்
ஆய்வு மாணவர் எம். ரவீந்திரகுமார்
பிற்காலத்தில் தோன்றிய நீதி நூல்களில் முனைப்பாடியார் எழுதிய அறநெறிச்சாரம் ஓர் ஒப்பற்ற நீதி நூலாகும். மகளிர்க்கு கற்பு இன்றியமையாதது என்ற கருத்தை இந்நூல் பற்பல இடங்களில் வலியுறுத்துகிறது.
மடப்பதூஉம் மக்கட் பெறுவதூம்உம் பெண்பால்
முடிப்பதூஉம் எல்லாருஞ் செய்வர், படைத்ததனால்
இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதாம் நல்லறத்தே
நிற்பாரே பெண்டிரென் பார்(160)
பெண்கள் பிள்ளை பெறுதலாகிய பயனையும், மகளிருக்குரிய அழகிய ஆபரணங்களைத் தரித்தலுமாகிய இந்த செயல்களை அனைத்துப் பெண்களுமே செய்வர். ஆனால் கிடைத்த பணம் கொஞ்சமாகிலும், மற்றவர்களுடன் பகிர்ந்து, தாங்களும் உண்டு, இல்லறத்தில் தரும நெறிகளையும் விருப்பத்துடன் கடைபிடித்து, கற்புச் செறிவில் நீங்காது உறைபவர்களே உண்மையான மகளிர் என்று கருதப்படுவர் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும்.
தலைமகனில் தீர்ந்துறைதல் தான் பிறரில் சேர்தல்
நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் கலனனிந்து
வேற்றூர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்
கோற்றொடியாள் கோளழியு மாறு (162)
கணவனைவிட்டு பிரிந்து வாழ்தலும், பிறர் இல்லங்களுக்கு அடிக்கடிச் செல்லுதலும், ஒழுக்கமற்ற மகளிருடன் பழகுதலும், ஆபரணங்களை அளவுக்கதிகமாக அணிந்து கொள்ளுதலும் , ஊரில் நடக்கும் விழாக்களுக்கு தனியாகச் செல்லுதலும் கணவனின் ஒத்துழைப்பின்றி விரதங்களை மேற்கொள்ளல் போன்றவை பெண்ணின் கற்பு நெறி அழிவதற்கான வழிகளாகும் என்கிறது அறநெறிச் சாரம்.
அதே கருத்தை வலியுறுத்தும் இன்னொரு பாடல் பின்வருமாறு .
அயலூ ரவன்போக அம்மஞ்ச ளாடிக்
கயலேர்கண் ஆர எழுதிப் புயலைம்பால்
லண்டோச்சி நின்றுலாம் வாளேர் தடங்கண்ணாள்
தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று (163)
என்பது பாடலடிகள் ஆகும்.
தன் கணவன் வெளியூர் போகும்போது எழிலாக மஞ்சள் பூசி குளித்து கயல்போன்ற விழிகளுக்கு கரிய மைதீட்டி, கருத்த முகில்போன்ற கேசத்தில் தரித்த பூக்களிலுள்ள மதுவை அருத்துவதற்காக மொய்க்கின்ற தும்பிகளையெல்லாம் துரத்தியவாறு அங்குமிங்கும் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கும் பெண்ணின் செயல்பெரிய ஆயுதமான `கதையை'க் கொண்டுத் தன் கணவன் அறியாவண்ணம், அவன் மண்டையை பிளக்கும் வண்ணம் பின்னால் இருந்து தாக்குகின்ற கொடுமையான செயல்களுக்கு ஒப்பானது என்பது இப்பாடலின் கருத்தாகும்.
கற்பில்லாத மனைவியர் தத்தம் கணவன் மார்களுக்கு எமன் போன்றவர்கள் என்பது இப்பாடலின் திரண்ட கருத்தாகும்.இவ்வகையில் பெண்களை அடக்கிவைக்கத் தக்க ஒழுக்க நடைமுறையாகக் கற்பு இலக்கியங்கள் வாயிலாக அக்காலத்தில் காட்டப் பெற்றுள்ளது. பழங்காலச் சட்டமாக இருந்த இவை தற்காலத்தில் பொருந்துவனவாக இல்லை. மேலும் இவை ஒரு பக்கச் சார்புடையன. கற்பு என்ற நெறி ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருப்பதாகக் கொண்டால் ஆண்களுக்கும் மேற்சொன்ன கட்டுப்பாடுகள் காட்டப் பெற்றிருக்கப்பட வேண்டும். ஆனால் ஒருபக்கச் சார்பாக, குறிப்பாக ஆண்களின்வசதிக்காக பெண்களை அடக்கி ஆண்டு கொள்ளும் போக்கினதாகக் கற்பு அக்காலத்தில் வரையறுக்கப் பெற்றிருந்திருக்கிறது என்பது அறநெறிச்சாரத்தினைப் பெண்ணிய வாசிப்பின் வழியாகக் காணுகையில் தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக