ஞாயிறு, ஏப்ரல் 25, 2010

நகரத்தார் படைப்புகள்

முனைவர் மு. பழனியப்பன்
பேருரையாளர் ,
மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை
muppalam2006@gmail.com

நகரத்தார் படைப்புகள் பற்றிய ஆய்வு முன்னோட்டம்.
நகரத்தார் குலத்தில் படைப்புகள் என்பது ஒரு வழிபாட்டு முறையாகும். இவ்வழிபாட்டுமுறை பெரும்பாலும் எதிர்பாராமல் நடந்த நிகழ்வுகள் காரணமாக உயிர் நீத்த சுமங்கலிப் பெண்களின் நினைவாகக் கொண்டாடப்படுவதாகும். இப்படைப்பு குடும்ப அளவிலும், குடி அளவிலும், பங்காளிகள் அளவிலும், ஊர் அளவிலும் கொண்டாடப்படுதல் உண்டு. சில ஆண்தெய்வங்களுக்கும் படைப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

குறிப்பாக மாத்தூர் பிரிவினர் அதிக அளவில் படைப்பு முறைகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர வயிரவன் கோயில் சார்ந்தோர் அடைக்காத்தாள் படைப்பு என்பதைக் கொண்டாடுகின்றனர். இதுதவிர பள்ளத்தூர் அழகன் செட்டியார் படைப்பு, அலவாக் கோட்டை நாச்சாத்தாள் படைப்பு போன்றன குறிக்கத்தக்கன. இப்படைப்புகள் நடைபெற வீடுகளும் உள்ளன. இவற்றைப் படைப்பு வீடுகள் என்பர். இப்படைப்பு வீடுகளில் சுத்தம் என்பது நூற்றுக்குநூறு அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக படைக்கும் படைப்பு தவிர சொந்த முறையில் திருமணம் கருதிப் படைக்கும் படைப்புகளும் உண்டு. இப்படைப்பு வீடுகளில் ஏலம் போடுதல் என்பது நடைமுறையில் உள்ளது. இந்த ஏலத்தில் எடுக்கப்படும் பொருள்கள் மங்கலம் அருளும் என்ற நம்பிக்கை நடைமுறை இன்றும் தொடர்கிறது.

இத்தகைய படைப்பு முறைகளைப் பற்றிய ஆராய்வது நகரத்தார் குலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும். இவ்வாய்விற்குப் பலரது செய்தி உதவிகள் தேவை. அத்தோடு பெரிய நகரத்தார் சங்க அமைப்புகள் நிதி உதவி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட அளவில் பொருளாதார உதவி கிடைத்தால் இதனை ஆராய்ந்துப் புத்தக அளவில் ஏறக்குறைய ஆயிரம் பக்கங்களுக்குள் வெளியிட முடியும். தக்க படங்கள், பேட்டிகள், படைப்பு நடக்கும் நாளன்று சென்று தகவல் சேகரித்தல் என்பதற்கு இந்நிதி உதவி பயன்படும்.
குழுவாக அமைந்து இதனைச் செய்ய உள்ளோம். அன்போடு என் மின்னஞ்சல் முகவரிக்கு மேல் தகவல்களுக்கு விளக்கங்களைப் பெறத் தொடர்பு கொள்ளுங்கள்.

2 கருத்துகள்:

செந்தில் நாதன் Senthil Nathan சொன்னது…

நல்ல முயற்சி!!

குழுவில் இணைய விருப்பம்..

nerkuppai thumbi சொன்னது…

nalla muyarchi