வெள்ளி, மார்ச் 13, 2009

திருக்குறளில் ஊழியல்



திருக்குறளில் அதிகம் விவாதத்திற்கு உரிய களமாக விளங்குவது ஊழியல் என்ற பகுதியாகும். கடவுள் மறுப்புக் கொள்கை, கடவுள் ஏற்புக் கொள்கை ஆகிய இருவேறுபட்ட கருத்துச் சார்புடையவர்கள் இவ்வதிகாரம் தரும் கருத்து விவாதங்களில் பங்கு கொண்டு ஒருவருக்கு ஒருவர் நேர் மாற்றான கருத்துக்களைத் தந்துள்ளமை இதன் புதிர்த் தன்மைக்கு மேலும் சிறப்பளிக்கின்றது. இதற்கு உரை தந்த உரையாசிரியர்கள் வழுவிட முடியாத நிலையில் தான் கடவுள் ஏற்புக் கொள்கை உடையவரா அல்லது மறுப்புக் கொள்கை உடையவரா என்பதை அறிவித்திட வேண்டிய சிக்கலை ஏற்படுத்தும் பகுதியாகவும் இது உள்ளது.
ஊழியல் அதிகாரத்துச் செய்திகளை விட உரையாசிரியர்களின் கருத்துக்கள் அதிகம் ஆராயத்தக்கனவாக உள்ளன. ஊழியல் பற்றிய செய்திகளையும், அதன் புதிர்த் தன்மைகளையும், அது குறித்து உரையாளர்கள் கொண்டிருந்த நோக்குகளையும் ஒருங்கிணைத்தே ஊழியல் என்ற பகுதியை நோக்கவேண்டி உள்ளது. இந்த இயலைப் புரிந்து கொள்ள நுண்ணிய நூல் பல இருப்பினும் உண்மை அறிவே தேவைப்படுகின்றது.
ஊழ் என்ற ஓர் அதிகாரம் மட்டுமே ஊழியல் என்ற உட்பிரிப்பில் வைக்கப் பெற்றுள்ளது. திருக்குறளின் முப்பத்தெட்டாம் அதிகாரமாக ஊழ் அமைக்கப் பெற்றுள்ளது. இது அறத்துப்பால் முடிவு பெறும் சூழலில் பொருட்பாலுக்கு முன்னதாக அமைக்கப் பெற்றுள்ளது. காமத்துப்பால் இதனைத் தொடர்ந்து வருகிறது. அறத்தினால் விளையும் பயன் பொருளும், இன்பமும் என்பதால் இந்த இயல் இவ்விடத்தில் வைக்கப் பெற்றுள்ளது என்பது அனைவரும் ஏற்கும் காரணம் ஆகும். இங்குப் பயன் என்பது வினைப்பயனைக் குறிப்பது ஆகும். அதாவது ஊழ் ஆகும்.
கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம், அறிவு முதல் வாதம் என்ற முன்று அடிப்படை வாதங்கள் தமிழத்தின் இலக்கிய அரசியல் பின்னணியில் இதுவரை இருந்து வந்திருக்கின்றன. கருத்து முதல் வாதம் என்பது கடவுளை முதலாக வைத்து ஆராயும் பின்னணி பெற்றது. தமிழ் இலக்கியப் பரப்பில் மிக நெடும் பரப்பு இதன் அடிப்படை வாய்ந்ததே ஆகும். பொருள் முதல்வாதம் என்பது பொதுவுடைமைச் சிந்தனையின் விளைவால் தமிழகத்தில் தோன்றியது. அறிவு முதல் வாதம் என்பது பெரியாரியக் கொள்கைகளின் சார்பால் தமிழகத்திற்குக் கிடைத்த ஒரு வழியாகும். இம்முன்று அடிப்படைகளில் கருத்து முதல் வாதத்தினரும், அறிவு முதல் வாதத்தினரும் ஊழியல் பற்றிய விவாதங்களில் பெரிதும் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். பொதுவுடைமைச் சார்புடைய உரைப்பகுதி திருக்குறளுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் மட்டுமே அமைந்தன (எஸ். இராமகிருஷ்ணன் அவர்களின் உரை இவ்வகைப்பட்டது. இவ்வடிப்படையில் ஊழியலை வள்ளுவர் படைத்தமைக்கான தேவை என்ன என்பதை ஆராய வேண்டி இருக்கிறது.
ஊழும் இறைச்சார்புடையோரும்
இறைவனை வணங்குவோர், இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் ஊழ் என்பதனை இறைச் சார்புடையதாகவே எண்ணுகின்றனர். பெரும்பாலான பழைய உரையாசிரியர்கள் அனைவரும் இக்கருத்துடனே உரை கண்டுள்ளனர். பரிமேலழகர், காலிங்கர், பரிதியார் முதலான உரையாசிரியர்கள் இறைநம்பிக்கையின் பாற்பட்டே உரை கண்டுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் நெருக்கத்தில் இருக்கும் தற்போதைய சூழலில் திருக்குறளுக்கு உரைகண்டவர்கள் என்ற நிலையில் கடவுள் ஏற்புக் கருத்துச் சார்புடைய உரையாசிரியர்களைத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும்.
"உயிர், பொறி புலன்களால் செய்யும் செயல், செயல்களின் விளைவாகிய ஊழ், அவரவர் செயலின் பயனை ஊழை அனுபவிக்க வேண்டுமென்ற நியதி, எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் இறைவன், இந்த நான்கினையும் ஆராய்தலே தெளிவு'' (குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை,தொகுதி.2. ப. 258) என்ற நிலையில் இறைவனை முன்வைத்து அவனின் வழிகாட்டுதலால் நடக்கும் நியதிக்கு ஊழ் எனப் பொருள் கொள்ளுகின்றனர் இறைச்சார்பாளர்கள்.
வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377)
என்ற குறளுக்கு உரை வகுக்கப் புகுந்த அறவாணன் "வாழ்க்கையை வகுத்த தெய்வம் (ஊழ்) வகுத்திருந்தால் ஒழிய ஒருவர் கோடிஅளவு பொருள்களைச் சேர்த்து வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க முடியாது'' (க. ப. அறவாணனின் திருக்குறள் உரை.ப. 377) என்று தெய்வச் சார்புடைய உரையைக் காணுகின்றார்.
தெய்வத்தின் சார்பில் சென்ற காலத்தில் உயிர்கள் செய்த வினையின் பயனாக இக்காலத்தில் அனுபவிக்கும் நன்மை, தீமைகள் ஊழ் எனப்படுகின்றது என்று பல உரையாசிரியர்கள் மேற்கண்டோரைத் தொடர்ந்து கடவுள் ஏற்புக் கருத்துடன் ஊழியலுக்கு விளக்கம் தந்துள்ளனர்.
ஊழும் இறை மறுப்பாளர்களும்
`ஊழினை இறைவன் தரும் பயன்' என்ற கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டு உரை ஆக்கியவர்களின் வரிசையில் நிற்போரை கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்க இயலும். ஊழ் என்பதற்கு இவர் இயற்கை நிலை எனப் பொருள் கொள்ளுகின்றார். ஊழ் என்பதற்கு உலக முறை எனப் பொருள் கொள்ளுகின்றார் வ. சுப. மாணிக்கனார், இயற்கை நியதி எனப் பொருள் கொள்ளுகின்றார் ச.வே.சுப்பிரமணியன். இவ்வரிசையில் குழந்தை, சிற்பி போன்றோரும் அடங்குவர்.
வகுத்தான் எனத் தொடங்கும் முன்காட்டிய குறளுக்குப் பின்வருமாறு இம்முவரும் பொருள் கொள்ளுகின்றனர். "வகுத்த முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்காவிட்டால் கோடிப் பொருள் குவித்தாலும் அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.'' என்பது கலைஞர் உரை.`அமைத்தவன் அமைத்த நெறிப்படி அல்லது கோடி தொகுப்பினும் நுகருதல் இயலாது' என்பது வ.சுப. மாணிக்கனார் கருத்து. " பொருள்களை ஈட்டுதல் என்பது ஒன்று. அவற்றைப் பயன் கொள்ளல் என்பது மற்றொன்று. ஈட்டிய பொருள்கள் பயன்படாமலும் போகலாம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது பழமொழி'' என்பது ச.வே. சுப்பிரமணியனாரின் உரை. இவ்வுரைகளைத் தொகுத்துக் காண்கையில் விதி, வினைப்பயன், தெய்வம் முதலியன பின்தள்ளப் பெற்று இயற்கையின் விளைவாக ஊழ் காட்டப் பெற்றுள்ளமையை அறியமுடிகின்றது.
இவ்வாறு அடிப்படையில் வேறுபட்ட ஒன்றுக்கு ஒன்று முரணான இரு கருத்துக் களன்கள் உருவாக ஊழியல் என்ற அதிகாரம் இன்று வரை இருந்து வருகிறது என்பது உணரத்தக்கது. உரையாளர்கள் தம் கருத்துரைகளில் மாறுபட்டாலும் அவர்கள் தம் இலக்கிய உறவில் வேறுபாடு கொள்ளாது இருப்பது நயத்தக்க நாகரீகம் ஆகும்.
வள்ளுவர் ஊழின் வலி அறிந்தவர் என்றாலும் அவர் அதனையும் வெற்றி கொள்ள இயலும் என்ற கருத்தில் நிலைத்து நிற்கிறார். இதனை இவரின் ஊக்கமுடைமை, ஆள்வினைஉடைமை ஆகிய அதிகாரங்களில் அமைந்த ஊழ் எதிர்ப்புக் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. ஊழையும் உப்பக்கம் காணுதல், தெய்வத்தான்ஆகாது எனினும் முயற்சி கூலிதரும் ஆகிய குறள்களில் தன் முயற்சியால் மனிதன் முன்னேற வேண்டும் என்று வள்ளுவர் விரும்பியுள்ள விழைவு தெரியவருகிறது.
"அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் பல அதிகாரங்களுள் ஊழின் ஆற்றலை வள்ளுவர் மறுப்பதுடன் ஊழ்வினையின் இலக்கணமாகச் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் எதிர்மறையான கருத்துக்களையே விளக்கிச் செல்கின்றார். எனவே ஊழ் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் இடம் பெறச் செய்யப் பெற்றிருந்தாலும் அவை நியதிக் கோட்பாட்டை ஒட்டி அமையவில்லை. ஆதலால் வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஊழ் பற்றிய சிந்தனையின் வளர்ச்சியே ஆசீவகமாக உருப் பெற்றிருக்க வேண்டும்'' என்று ஆசீவத்தின் தோற்றத்திற்கு வள்ளுவக் கருத்துக்கள் காரணமாக இருந்திருக்கும் வாய்ப்பினை நெடுஞ்செழியன் எடுத்துக்காட்டுகின்றார். (தமிழ்க்காவல் இணையதளம்) வள்ளுவர் ஊழினை மனித சமுதாயத்தினை முடக்கும் வன்மையுடையதாக ஆக்காது அதனை வெல்லும் ஆற்றலை மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கையாண்டுள்ளார் என்ற கருத்தினை மேற்காட்டிய மேற்கோளின்வழி பெற முடிகின்றது.
ஊழியல் தரும் கருத்துக்கள்
ஊழ் இருவகைப்படும். அது ஆக்கம் தரும் ஆகூழ், கேடுகளைத் தரும் போகூழ் என்பனவாகும். ஆகூழால் முயற்சி, கைப்பொருள் முதலியன பெருகும். போகூழால் சோம்பல் உருவாகும்(1). நல்லனவெல்லாம் தீய முடிவுகளைத் தரலாம். தீயனவெல்லாம் நல்ல முடிவுகளைத் தரலாம். இது ஊழின் புதிர்த்தன்மை(5). விரும்பிக் காத்தாலும் ஊழால் செல்ல வேண்டிய பொருள்கள் நிற்காது. இருக்க வேண்டிய பொருள்கள் போகாது(6). வகுத்தான் வகுத்த வழிப்படியே தான் வாழ்க்கை செல்லும். அவன் வழிப்படி அல்லாது மிகுந்த செல்வத்தைப் பெற்றிருந்தாலும் அனுபவிக்க இயலாது(7). வறுமை உடையவர்கள் பொருள்களைப் பெற ஆசைப்படாது துறவு வாழக்கையை நாடிப் போவர். இவ்வாறு விட்டுவிலகிப் போவதற்கும் ஊழ் காரணமாக அமையவேண்டும்(8). நல்லன நடக்கும் போதெல்லாம் நன்மை என்று மகிழ்ந்து அனுபவிப்பவர்கள் தீமை நடக்கையில் அதனை ஏற்காது அவற்றைக் களைய நினைப்பது ஏன் எனத் தெரியவில்லை(9). ஊழினை விட வலிமையானது எதுவும் இல்லை. அது மற்ற எல்லாவற்றையும் விட முந்தி வரக்கூடியதாகும்(10).
மேற்கண்ட ஏழு குறள்கள் ஓரளவிற்குக் குழப்பம் இல்லாமல் பொருள்களைத் தருவன. எஞ்சியுள்ள முன்று குறள்களில் பல்வேறு குழப்பங்கள் மண்டிக் கிடக்கின்றன.
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவு அகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை (2)
நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் (3)
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. (4)
இம்முன்று குறள்களிலும் அறிவு, செல்வம் இரண்டுக்கும் இடையே நடைபெறும் போட்டியை முன்வைத்து வள்ளுவர் சில கருத்துக்களைச் சொல்லியுள்ளார்.
இழவூழ் எனப்படும் போகூழ் பேதமை தந்து நிற்பதாகும். ஆகல் ஊழ் என்னும் ஆகூழ் அறிவை விட (அகற்றி) செல்வத்தை வளத்தை அதிகம் தந்து நிற்கும்.(2)
நூல்கள் தரும் அறிவை விட உண்மை அறிவு வலிமை வாய்ந்தது. செல்வம் காரணமாக அறிவற்றவர்கள் அறிவைப் பெற நுண்ணிய நூல்கள் பல கற்றாலும் உண்மை அறிவு என்பது உயிர்களுடன் ஒட்டி நிற்பது. அதற்கு இணையாக வருவிக்கப் பெற்ற அறிவு நிற்காது(3).
அறிவு உலகம், பொருள் உலகம் இவை இரண்டும் வேறு வேறானவை. பொருள் உலகத்தை ஆகூழால் கொண்டு வரமுடியும். அறிவு சார்ந்த உலகத்தை அதனால் கொண்டு வரவேமுடியாது. எனவே ஊழ் என்பதற்கும் அறிவு என்பதற்கும் நேர் முரண் உண்டு. ஊழையும் உப்பக்கம் காணும் திறம் உண்மை அறிவு, ஊக்கம் பெற்றவர்களிடத்தில் உண்டு. அவர்கள் வெற்றி பெறுவார்கள். எனினும் இருவேறுபட்ட அறிவுசார், அறிவற்ற, செல்வம் சார், செல்வமற்ற உலகம் என்ற இரு நிலையில் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
மேற்கண்ட முன்று குறள்கள் பெருத்த உரை மாறுபாடுகளைக் கொண்டு விளங்குவன. இவற்றிற்கான விளக்கங்கள் உரையாசிரியர்கள் தம் தரத்திற்கு ஏற்ப வேறுபட்டு பொருள் கொள்ளப்படுகின்றன. கட்டுரையாசிரியர் இவற்றை கருத்து முதல் வாதம், அறிவு முதல் வாதம் முதலான இற்றைக்கால நோக்கங்களின்படி அணுகியுள்ளார். இதன்முலம் தற்கால உலகையும், மக்களையும் பிரித்து இனம் காண முடியும். செல்வம் சேர்ப்போர் அதனையே குறிக்கோளாக இயங்கியும், எழுந்தும், சுருங்கியும், தேய்ந்தும் வருகின்றனர். அறிஞர்கள் அறிவினை மையமிட்டு செல்வத்தைப் புறந்தள்ளி தன் வழி நடந்து செல்லுகின்றனர். இக்கருத்து வள்ளுவர் காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. தற்போதும் உள்ளது. இனியும் இம்முரண் அழியாது நிற்கும் என்பதில் ஐயமில்லை.
--

1 கருத்து:

ttpian சொன்னது…

Thamiz vazha!