வெள்ளி, மார்ச் 28, 2008

அழியும் தருவாயில் உண்மையானப் பெண்ணிலக்கியங்கள்

பெண்களின் உண்மையான இலக்கியம் அவர்களின் சுய வாழ்க்கைக் குறிப்புகளிலும், வாய்மொழி இலக்கியங்களிலும் மட்டுமே உள்ளன என்று பெண்ணியவாதிகள் உறுதிபட உரைக்கின்றனர்.
தமிழின் தனித்தன்மை அது வாய்மொழி இலக்கியங்களையும்? எழுத்து வழி இலக்கியங்களையும் ஒருசேர வளர்த்து வருவதே ஆகும். எழுத்து வழி இலக்கியத் தாக்கத்தின் விளைவு வாய்மொழியிலும், வாய்மொழித் தாக்கத்தின் விளைவு எழுத்து வழி இலக்கியத்திலும் ஏற்பட்டு வருவது தமிழுக்குக் கிடைத்த கொடுக்கல் வாங்கலில் குறிக்கத்தக்கக் கொடுக்கல் வாங்கல் ஆகும்.
வருங்காலத்தில் இக்கொடுக்கல் வாங்கல் நீடிக்குமா என்பது ஐயத்தின் பாற்பட்டதாக உள்ளது. கிராமங்கள் நகரம் நோக்கிப் போய் விட்ட சூழலில் கிராமத்தின் சொந்த அடையாளங்களில் ஒன்றான வாய்மொழி இலக்கியங்கள் அழிவையே சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் வாய்மொழி இலக்கியங்களின் தலைமுறைப் பரவல் என்பது முற்றிலும் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டு விட்டது. பெண்கள் தங்கள் சொத்துக்களைக் காப்பதைப் போல அக்காலத்தில் தங்கள் தாய் தந்த வாய் மொழி இலக்கிய வளங்களைக் காத்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது சொத்தையும் காக்க முடியாமல், இலக்கியப் பரவலையும் தர முடியாமல் சிக்கலில் பெண்கள் சிக்கித்தவித்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலை நீடித்தால் பெண்கள் தங்களின் வாய்மொழி இலக்கிய அடையாளங்களை விட்டுவிட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்.
தமிழ் வாய்மொழி இலக்கியங்களில் தாலாட்டு, ஒப்பாரி, கும்மிப்பாடல்கள் போன்ற வகைப் பாடல்கள் பெண்கள் மட்டுமே பாடக் கூடிய பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடியப் பாடல்களாகும். இவற்றைத் தூய்மையான பெண்ணிலக்கியம் என்று கருதுவதில் மாற்றுக் கருத்து இல்லை.
எவ்விதப் புனைவும் பொய்யும் இல்லாது இந்த இலக்கியங்களில் பெண்ணினத்தின் உண்மை நிலையை உரைக்கும் போக்கின என்பதில் ஐயமில்லை. இவற்றைப் பதிவு செய்துக் காப்பாற்ற வேண்டியது இன்றைய தேவை. கொஞ்சம் நஞ்சம் கிராமச் சூழல் ஒட்டியுள்ள இக்காலத்தில் இப்பாடல்களின் தொகுப்பைத் தேடித் தொகுக்க வேண்டிய கடமை பெண்இலக்கியச் சார்புடைய ஒவ்வொருக்கும் உண்டு.
இவ்வகைக் காப்பு இல்லாமல் அழிந்த பாடல்களும் உண்டு. அவற்றில் பெண்களின் பூப்புச் சடங்கின் போது பாடப்படும் பாடல்கள், பெண்கள் சாந்தி முகூர்த்தத்தின் போது மணப்பெண்ணுக்குப் புரியும் வகையில் பாடும் அகச்சார்புடைய பாடல்கள் போன்றன இழந்து போய்விட்டப் பாடல் வகைகள் ஆகும்.
இந்நிலை ஒப்பாரி, தாலாட்டு, கும்மிப்பாடல்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இனி வரும் சந்ததியனர் கவனம் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் ஓர் ஆய்விற்காகப் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சிற்றூரான அரங்குளம் மஞ்சுவயல் என்ற கிராமத்து வாய்மொழி இலக்கிய வளங்களைத் தொகுக்கும் பணி செயல்படுத்தப் பெற்றது. இப்பணியில் உழைத்த ஆய்வாளர் ( ப. பிரமிளா) தொகுத்த சில ஒப்பாரிப்பாடல்கள் குறித்து இக்கட்டுரைச் சிந்திக்கிறது.
ஆதண்டக்காய் காய்க்கும் அலரிப் பூ பிஞ்சிரங்கும்
ஆணாய் பிறந்திருந்தால் அப்பன் வீட்டு அரண்மனையில்
அம்பெடுப்பேன் விலெடுப்பேன்
மாரியம்மன் கோயிலாண்டை மண்ணாய்ப் பிறந்திருந்தால் -
எனக்கு
மாசம் ஒரு பூசை வரும் என்ன பெத்த அம்மா
பெண்ணாய்ப் பிறந்த குறைப் புலம்பிக் கிடக்கிறனேஸ
(ஆர். மீனாட்சி, வயது.70)
இறந்த தாய்க்கு மகள் பாடும் ஒப்பாரி இது. ஆண்பிள்ளைக்குப் பிறந்த வீட்டில் இருக்கும் உரிமை தனக்கு இல்லையே என்ற ஏக்கம் இப்பாடலில் நிரம்பிக்கிடக்கிறது. அழ வந்த மகள் ஐந்தாறு நாள் விருந்தாய் இருந்து அழுதுவிட்டுப் போய்விட வேண்டிய நிலையை இவ்வொப்பாரி எடுத்துரைக்கிறது.
இறந்தவள் அம்மா. வந்துப் பாடுபவள் மகள். இருவரும் பெண்ணினம் சார்ந்தவர்கள். இவர்களுக்குள் இருக்கும் ஒன்றுபட்டப் பாலினத்தன்மை இப்பாடலுக்கு மேலும் வலு சேர்க்கின்றது.
தாயையோ, தந்தையையோ இழந்தத் துக்கத்தில் இருக்கிறாள் ஒரு பெண். அவளுக்குப் புகுந்த இடத்தில் அவ்வளவு வசதி வாய்ப்பு, அன்பு, அரவணைப்பு இல்லை. இறந்து கிடக்கும் தன் தந்தை,தாய் ஆகிய யாரோ ஒருவரிடத்தில் இதனைப் பின்வருமாறு அவள் சொல்லி அழுகிறhள்.
மாட்டுக் கயிறு அவுத்து
மாமரத்தில் ஊஞ்சலிட்டே- நீங்க
மவளாருக்கு ஏத்ததொரு
மன்னவரத் தேடலையே
மனக்கவலை தீரலையே
மலையில கிடந்ததொரு
மலப் பாம்ப தேடுனியோ-அந்த
மலப் பாம்பு சீறுறதும்
மவளாப் பொலம்புறதும் நீங்க போகும்
மண்டலகள் கேக்கலயோ
(கே. சுப்பம்மாள், வயது 43)
இப்பாடலில் மலைப்பாம்பு என்ற உவமையை இப்பெண் பயன்படுத்துகிறhள். எதனை உண்டாலும் அப்படியே முழுங்கிவிடும் இயல்புடைய மலைப்பாம்பிற்கு இவளின் கணவன் ஒப்புமை காட்டப்படுகிறான். அவளின் துயரம் மண்டலம் கேக்க மோனைத் தொடைப் பயன்பட்டுள்ளது.
விதவைக் கோலம் கொள்ளும் ஒரு பெண்ணின் அவலக்குரல் மற்றொரு பாடலில் தெரிகின்றது.
சீமை அழியுதுண்ணு நான் சிந்தையிலும் எண்ணலியே
சீமை அழியலயே என் சிறப்பழிஞ்ச மாயமென்ன
கடுகு சிறுதாலி கல்பதிச்ச அட்டியலாம்;
கல்பதிச்ச அட்டியலை நான் கழட்டி வைக்க நாளாச்சே
பட்டுக் கழட்டி வச்சேன் நான் பாதம் வரை வெள்ளையிட்டேன்
சிவப்பு கழட்டிவச்சேன் என் தேகமெல்லாம் வெள்ளையிட்டேன்
ஆத்துல புல்லறுத்து அறுகம்புல்லு பந்தலிட்டு
அரும மக தாலி வாங்க ஒங்க அனைவருக்கும் சம்மதமோ
( செல்வி. வயது 75 )
இப்பாடலில் தாலி வாங்க என்ற தொடர் அமங்கலத்தை மங்கலமாக்கும் மங்கலத் தொடராகும். விதவைப் பெண் தன் வெள்ளைக் கோலத்தினைத் தெரிவிக்கும் பல குறிப்புகள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன. மேலும் தாலி இழக்கும் துயரையும் அப்பெண் பாடலில் தொட்டுக் காட்டியுள்ளார்.
இவ்வாறு பாடல் தோறும் பெண் தன்னைப் பற்றிச் சிந்திக்கிற அருமை இப்பாடல்களில் உண்டு. சார்புடைமை ஏற்றப் பெற்ற அச்சார்பு இன்மை வந்த போது தவிக்கும் தவிப்பிற்கு ஆற்ற யார் உதவுவது. அழியாத் துயரமாக பெண்களின் வாழ்வு தொடருவதை இப்பாடல்கள் பதியவைத்துள்ளன.
இப்பாடல்களைப் பாடிய பெண்களின் வயது ஏறக்குறை மூத்த வயது என்பது கவலைக்குரியது. இவ்வயதுப் பெண்கள் தலைமுறைப் பரவலாக தன் சொத்துக்களை மற்றவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது தேவை.
இத்தேவை நிறைவேறினால் உண்மையான பெண்ணிலக்கியம் நிலைபெறும்.
கருத்துரையிடுக