வெள்ளி, டிசம்பர் 22, 2023

ஞான வாசிட்டம் தந்த ஞானம்

 

கோவிலூரின் கதை                                                    கோவிலூர் ஆண்டவர் திவ்ய வரலாறு

 

ஞான வாசிட்டம் தந்த ஞானம்

கனகு, காரைக்குடி

            முத்திராமலிங்கர் எனப்படும் கோவிலூர் ஆண்டவர் சீர்வளர் சீர் முத்துராமலிங்க ஞான தேசிகரின் ஞான வாழ்க்கை தொடர்கிறது.

முத்திராமலிங்கரின் முத்தி ரேகை

முத்திராமலிங்க ஆண்டவருக்கு மெய்ப்பொருளின் தொடக்கம் பொருள் வைத்த சேரியில்  நிகழ்ந்தது. அவர் செல்லப்போகும் ஞான வழியைப் பலரும் முன்னரே அறிந்து ஆண்டவருக்குச் சொல்லி மகிழ்ந்தனர். சிக்கலில் ஆண்டவரின் தந்தையாரின் கீழ் பணிசெய்த சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் ஆண்டவரின் கைரேகைகளின் குறிப்புகளைப் பார்த்து அவர் ஞான வழி செல்ல வேண்டியவர் என்று வழிகாட்டினார். ஆண்டவர் தட்சிணாமூர்த்தி வடிவம் என்று உணர்ந்தார்.

திருநீற்றுக் காப்பு

இளம் வயதில் திருநீற்றை முழுவதும் பூசிக் கொள்வது ஆண்டவரின் வழக்கம். இதில் கிடைக்கும் ஆனந்தம் அவருக்குப் பேரானந்தம். இதனை ஏதோ வித்தியாசமான செயல் என்று கருதி சாமியாடியிடம் அவரின் குடும்பத்தார் அவரின் வித்தியாசமான செயல்கள் விலகிப் போக ஒரு சாமியாடியிடம் அழைத்துச் சென்றனர். அந்தச் சாமியாடி சாமியாடினார். கண்களை மூடிக் கொண்டு அச்சாமியாடி தாம்பூலம் கேட்க ஆண்டவர் வெற்றிலையுடன் மூன்று சுண்ணாம்புக் கட்டிகளை வைத்துக் கொடுக்க, சாமியாடியும் வெற்றிலை உண்டார்.  அவரின் வாய் வெந்துபோனது. வெற்றிலை சாமியாடிக்கா? சாமியாடியின் மேல் வந்த இறையருளுக்கா? என்ற சந்தேகத்திற்குப் பதில் கிடைத்தது. வெற்றிலை சாமியாடியின் உடலுக்குத்தான். சாமியாடியின் மேல் வந்த இறையருள் வலிதில் வந்தது என்று எல்லோருக்கும் உணர்த்தினார் ஆண்டவர்.

குட்டிச் சுவரும் ஞானக் குதிரையும்

ஆண்டவர் சிறுவராக இருந்தபோது அவரின் இல்லத்திற்கு ஒரு முறை தீயினால் பாதிப்பு வந்தது. வீடு தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளை முதலில் காப்பாற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அன்பின் உணவுப் பொருள்கள், மற்ற பண்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருந்தனர். ஆண்டவர் மற்ற குழந்தைகளுடன்  இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தார். மற்ற குழந்தைகளின் மனதில் கவலையும் வயிற்றில் பசியும் இருப்பதைக் கண்டார். தானே முன்வந்து எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி வயிற்றுப் பசி போக்கினார். அதன் பின் அந்தக் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டு ஒரு குட்டிச் சுவரின் மீது ஏறி  அதனைக் குதிரையாகப் பாவித்து குழந்தைகளுக்கு  விளையாட்டு காட்டினார். குதிரையின் மீது இருந்த ஆண்டவர் ‘‘செவலைக் காளை ஊரை மேய்கிறது. நீ செவ்வையாக நட ” என்று மெய்வாக்குகளைச் சத்தம் போட்டுச் சொல்லிக் கொண்டு குதிரையை ஓட்டினார். குழந்தைகளும் திரும்பத் திரும்பச் சொல்லின. செவலைக் காளை என்பது எரியும் நெருப்பு. அதுவே சிவந்த காளை. அந்தக் காளை ஊரை அழித்துக் கொண்டிருக்கிறது. அழிவன எல்லாம் அழியப் போகின்றன. உன் பாதையைப் பார்த்து நீ போ  என்று ஞானம் தேடி, ஞானக் குதிரை ஓட்டினார் ஆண்டவர்.  இதனைப் பார்த்த அவரின் உறவுப் பெண் ஒருவர் ”குட்டிச் சுவர் குதிரையாகுமா?” என்றார்.  அதற்குப் பதிலாக மகிழ்நன் இன்றி மகப்பேறு வாய்க்கப் பெறும் காலத்தில் ”குட்டிச் சுவரும் குதிரையாகும்” என்றார்.இன்றைக்கு மகிழ்நன் இன்றி மகப்பேறு காண நவீன மருத்துவம் வழி காட்டுகிறது. இனி குட்டிச் சுவரெல்லாம் குதிரையாகிவிடும் காலமும் வரலாம்.

வேதாந்தப் பாடம்

பொருள்வைத்த சேரி  ஆண்டவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. எத்திசை போவது எனத் தெரியாத கப்பல் ஞானத் திசை போக உகந்த லிங்க ஞான குரு வழிகாட்டினார். தன்னுடனேயே ஆண்டவரை இருக்க வைத்து, அவருக்கு நாளும் ஞான உபதேசங்களைச் சொல்லி வைத்தார். அவரின் நெசவு செய்யும் தறியின்மேல் விரிந்து கிடந்த ஞான வாசிட்டத்தை எடுத்து இதுவே உனக்கான நூல் என்று ஆண்டவருக்கு அவரின் ஞான குரு வழங்கினார். ஞான வாசிட்டம் என்னும் பெரு நூலை ஆண்டவர் வணங்கி வணங்கிப் படித்துப் படித்து மனதில் இருத்தினார்.

இல்லறமும் கூடியது

            உகந்த லிங்க ஞான குருவிடம் ஆண்டவரின் தந்தையார்  தன் மகனுக்கு இல்லற பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். இல்லற ஞானியாக விளங்கிய உகந்த லிங்கரும்  ஆண்டவருக்கு இல்லற பந்தத்தை ஏற்படுத்த மனம் ஒப்பினார். தேவகோட்டையைச் சார்ந்த மீனாட்சி (மீனாம்பிகை) என்ற துணையும் ஆண்டவரின் வாழ்க்கைத் துணையானது. இல்லறமே நல்லறமாக நாளும் வளர்ந்து வந்து ஆண்டவர் என்னும் ஞான விருட்சம்.

யோகீஸ்வரரின் ஞான வாக்கு

            காரைக்குடி என்னும் ஓங்காரக்குடிக்கு ஒரு நாள் யோகீஸ்வரர் ஒருவர் வந்து மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அவர் தன்னுடன் உரையாடும் அளவிற்கு ஞானம் உடைய யாராவது இருந்தால் அவரை அழைத்து வாருங்கள் என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் கூறினார். அப்போது ஞானம் மிகுந்தவராக விளங்கிய ஆண்டவரை அறிமுகம் செய்தனர். அந்த யோகீஸ்வரர் ஆண்டவரை அப்படியே தழுவி மகிழ்ந்தார். மேலும் ”இவர் பலரையும் நன்னிலை அடையச் செய்யும் ஞான குருவாக விளங்கக் கூடியவர். வேதாந்தத்தை உபதேசிக்க வந்தவர். இவரை நகரத்தார்களின் ஞான குருவாகக் கொள்ளுங்கள். இதற்கான அடையாளம் இன்னும் சில நாள்களில் தெரியும்” என்றார். இதனைக் கேட்ட மக்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்து தங்களுக்குத் தேடாமல் கிடைத்த ஞானமுத்து என்று ஆண்டவரை வணங்கி நின்றனர்.

கொப்புடைய நாயகியின் பாதுகாவல்

            ஆண்டவர் திருக்கல்யாணம் முடித்து மீண்டும்  தனது தந்தை வாணிபம் செய்து வந்த சிக்கல் என்னும் ஊருக்கு வந்தார். இல்லறத்தையும்  நடத்தினார். வேத விழுப்பொருளையும் நாளும் பயின்றார். ஆண்டவருக்குத் தாங்க முடியாத சுர நோய் வந்தது. ஆண்டவர் துவண்டுபோனார். சுர நோயில் இருந்து எவ்வாறு தப்புவது என்று வழி தெரியாது நின்றார். அப்போது ஒரு பெண் ஆண்டவரின் அருகில் வந்து தீர்த்தம் ஒன்றை வழங்கினார். அதனை வாங்கிப் பருகிய அந்த நொடியில் ஆண்டவருக்கு இருந்த சுரநோய் தீர்ந்துபோனது. அதுவரை தெரிந்த அந்தப் பெண்ணின் உருவமும் உடன் மறைந்தது.

            ஆண்டவருக்கு இது அதிசயமாக இருந்து. வந்தது யார் என்று எண்ணி எண்ணி ஏங்கினார். வந்தது கொப்புடையம்மை என்று உணர்ந்தார். அவரின் உள்ளம் கொப்புடையம்மையைத் துதித்தது.  ஞானப்பால் தந்தாள் உமையம்மை. ஞான தீர்த்தம் அருளினாள் கொப்புடையம்மை. வருத்தப்படுபவருக்கு வந்து நிற்கும் காவல் தெய்வமாகக் கொப்புடையம்மை என்றும் பாதுகாக்கிறாள். ஞானப்பால் உண்ட சம்பந்தர் பாடியதுபோல் ஞான தீர்த்தம் உண்ட ஆண்டவரும் கொப்புடையாளைப் பாடினார்.

ஆலோன் இறந்தும் உமை பாகத்  தண்ணல் இறந்தும் கமலமுறை

நாலா நநத் தோன் முடிந்து இறந்தும் நார தாதி யோர் இறந்தும்

காலா திகளும் மொழிந்து இறந்தும் ககனமாதி யழிந்து இறந்து

மாலோ கங்களில் இறந்து நின்றாள் அம்மே கொப்பை யுடையவளே

சந்திரமண்டலம், சிவபெருமான், பிரம்மன், மக்கள், காலம், உலகம், மற்ற உலகங்கள் கடந்து நிற்பவள் அன்னை கொப்புடையாள் என்று நம்மைக் கடந்து நமக்காக நிற்பவள் கொப்புடையம்மை என்று மனமுருகிப் பாடினார் ஆண்டவர்.

காலடி பற்றிய கதை

            ஞான வாசிட்டமும் ஆண்டவரின் மனதிற்குள் நிறைந்து வந்தது. ஒருநாள் இரவில் உகந்த லிங்க ஞானகுரு உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் அவரின் பாதங்களைப் பார்த்து, பிடித்து ஆசிரியருக்கு அசதி போக்கிக் கொண்டிருந்தார் ஆண்டவர். ஆண்டவரைச் சோதிக்க ஏதேனும் ஒரு பாடலைச் சொல்லுக என்றார் ஆசிரியர்.

            குருவின் பெருமையை  அறிந்த வண்ணம் ஆண்டவர் வைராக்கிய சதகப் பாடல் ஒன்றைச் சொன்னார்.

            ”உன்னுமுணர் வுக்குணர் வாயென  உண்மை தந்தாய்

            மன்னும் சுருதிப் பொருளாய் வழி காட்டி நின்றாய்

            பின்னும் குருவாய் அடைந்து உன்னருள் பேண வைத்தாய்

            என்னென்றுரைப்பேன் நின் கருணை இருந்தவாறே”

என்ற பாடலைச் சொன்னவுடனேயே மிக மகிழ்ந்தார் உத்தலிங்க ஞான குரு. தக்க சீடன், வேதாந்த தத்துவத்தினை உலகிற்குத் தரும் உத்தமன் என்று, பாராட்டி மிக மகிழ்ந்தார்.

ஞானவாசிட்டம்  நிறைவு

            ஞானவாசிட்டம் முழுவதையும் கற்றார், உணர்ந்தார்,ஓதினார் ஆண்டவர்.  ஞானவாசிட்ட நிறைவின் பொருட்டு தன் குருவிற்குப் பலவகை அலங்காரங்கள்,அபிடேகங்கள், காணிக்கைகள் செய்து ஞான வாசிட்ட வெற்றியைக் கொண்டாட எண்ணினார் ஆண்டவர். அதற்கான பொருளுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

            அந்நேரம் அவரின் தந்தையார் காரைக்குடிக்குச் செல்லக் கடைப் பொறுப்பினையும், பணப்பெட்டிச் சாவியையும் வியாபாரக் கூட்டாளியிடம் தந்தார். அத்தோடு, அவரிடம் ‘‘என் மகனிடம் பெட்டிச் சாவி சென்றுவிடாமல் பார்த்துக் கொள் ” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

            அவரும் சாவியைக் காத்தார். அப்போது ஊரில் இருந்து ஓலை வழியாகச் செய்திகளைக் கொண்டுவரும் வேலையாள் பல ஓலைகளை எடுத்து வந்தான். அவனைப் பார்த்த, ஆண்டவர் இதுவே சரியான தருணம் என்று எண்ணி அவனை வழி மறித்து ஓலை மாற்றினார். ”கூட்டாளியின் அன்னை இறந்து போய்விட்டார் என்றும் உடன் புறப்பட்டு வரும்படியும்” ஓலையில் எழுதி ஆண்டவர் அவ்வோலை கூட்டாளிக்குச் சென்றது. அவரும் ஓலையை மெய் எனக் கருதி ஆண்டவரிடம் சாவிகளை ஒப்படைக்கிறார்.

            பெட்டியில் தூங்கிய பணம் ஞான வாசிட்ட வெற்றி விழாவிற்கு உதவி- பெரும்பேறு அடைந்தது. விழா சிறந்தது. ஊர் போன கூட்டாளியை ஆண்டவரின் சித்தப்பா மாயாண்டி விசாரிக்க பொய் மெய்யானதும்,மெய் பொய்யானதும் தெரியவந்தது. என்ன செய்வது . ஞானவாசிட்ட விழா நிறைவடைந்து இருநாள்கள் கழித்தபின்பே உண்மை வெளிப்பட்டது.

மயில் பிடிக்கப் போய் கோயில் பிடித்த கதை

            காரைக்குடிக்கும் சிக்கலுக்கும் அவ்வப்போது தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆண்டவர் காரைக்குடிக்குச் செல்கிறேன் என்று ஒரு முறை தன் குருவிடம் சொல்லிவிட்டுக்கிளம்பினார். அப்போது குருவின் பத்தினி ”காரைக்குடிக்குச் சென்று, திரும்பி வரும்போது, மயில்குஞ்சுகளைப் பிடித்துக் கொண்டுவரவேண்டும்” என்றார். அதனை குருவாசகமாக ஏற்று ஆண்டவரும் காரைக்குடிக்கு வந்தார். அவரின் பணிகள் நிறைவடைந்த பின் மயில் குஞ்சுகள் பற்றிய நினைவு வந்தது.

            காரைக்குடிக்கு அருகில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியான கோவிலூர் அருகில் மயில் குஞ்சுகள் கிடைக்கும் என்று எண்ணி தன் நண்பர் நல்லானுடன் ஆண்டவர்  கோவிலூருக்கு வந்தார். வந்த நேரம் நல்ல நேரம். கோவிலூர் தெய்வ வளம் பெறுவதற்கான நேரம் அது. வந்தவர் வேடர்களை அழைத்து இரு மயில் குஞ்சுகள் வேண்டும். பிடித்து வாருங்கள் என்றார். அவ்வேடர்கள் மயில் குஞ்சுகள் பிடிக்கப் போயினர்.

            அந்நேரத்தில் அருகில் உள்ள  கோயில் ஆண்டவர் கண்ணில் படுகிறது. வன்னி மரங்கள் சூழ்ந்திருக்க அருள்மிகு கொற்றவாளீசர் , திருநெல்லை அம்மன் வீற்றிருக்கு புராதன தலம் அது. இருந்தாலும் பராமரிப்பு இன்றி அக்கோயில் இருந்தது. அப்பனும் அம்மையுமாக வீற்றிருக்கும் அக்கோலம் ஆண்டவரின் மனதில் அழியாக் கோலமானது. நல்லானிடம் நாம் இக்கோயிலுக்கு வாரந்தோறும் வரவேண்டும் என்றார். திங்கள் கிழமையும், வியாழக் கிழமையும் கோயிலுக்கு வந்து தொண்டாற்றுவது என்று இருவரும் முடிவு செய்தனர்.

            மயில் குஞ்சுகளை வேடர்கள் பிடித்து வந்தனர். அவற்றைப் பொருள் வைத்த சேரிக்கு அனுப்பி வைத்தார் ஆண்டவர்.

            மயில் குஞ்சு பிடிக்கப் போனவர்களைக் கோயில் பிடித்துக் கொண்ட கதை இதுதான். வாரந்தோறும்  அருள்மிகு கொற்றவாளீசர், திருநெல்லை அம்மனை இருமுறை ஆண்டவர் சுவாமிகள் வழிபட்டு வந்தார். அவ்வாறு வழிபடும் ஒரு நாளில் மழை மிகுந்தது. ஒதுங்க இடம் இன்றி ஆண்டவனுடன் ஆண்டவரும் ஒடுங்கினார். இருந்தாலும் மழையின் வேகம், பெய்யும் காலம் ஆகியன அதிகமாயின. இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது யோகம் செய்து கொண்டிருந்தார் ஆண்டவர்.

            விடியலில் அன்னைக்கும் அப்பனுக்கும்  இருக்க இடம் நன்மையாய் அமைக்கவேண்டுமென ஆட்களை ஏவினார். பனை ஓலைகள் மாற்றப்பட தயாராக இருந்தன. ஆட்கள் பனையோலையை வேய முற்பட்டனர். அப்பன், அம்மை இருந்த குடிசை சாய்ந்து விழுந்தது. ஆண்டவர் மனதில் இக்கோயில் கற்கோயிலாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

           

தந்தை செவிகள் கேட்டும் கேட்காதவை

            ஆண்டவரின் மனதிற்கு ஏற்ப பணம் தருவதில் ஆண்டவரின் தந்தைச் சற்று கண்டிப்புடன் இருந்து தடைகள் செய்துவந்தார். ஆண்டவர் தன் குருவின் பத்தினியும், அவரின் இரு பெண்குழந்தைகளும் மங்கலம் பெற பெரும் பொருள் கொடுக்க வேண்டித் தன் தந்தையிடம் வேண்டுகோள் வைத்தார்.

            வேண்டுகோளைக் காதில் வாங்கவே இல்லை ஆண்டவரின் தந்தையார். ஆண்டவர் தன் தந்தையை நோக்கி ‘‘ தங்களுக்குக் காது கேட்காதா ” என்றார்.அந்தச் சொற்கள் தந்தையின் காதுகளில் விழுவதற்குமுன்பு அவரின் காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டன.

            தந்தையாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே ஆண்டவரின் குருவினைக் கண்டார். நடந்ததைச் சொன்னார். உகந்த லிங்க ஞானகுரு, ”ஆண்டவர் கையால் திருநீறு பெற்று உய்க ” என்றார். குருவின் முன்னிலையில் தந்தைக்கு நீறளித்து அவரின் செவிகள் பழுதினை நீக்கினார் ஆண்டவர். மேலும் ”இந்நாள் முதல் தன் குருவின் குடும்பத்தைக் காத்துவருக!” என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே ஞானக் காதுகள் பெற்று உய்ந்தார்.

           

 

கருத்துகள் இல்லை: