கோவிலூரின் கதை -2 பெரிய துறவாண்டவர்
வரலாறு
முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை
பெரிய
துறவு
வேதாந்த
ஞான சூரியனாக விளங்கிய கோவிலூர் ஆண்டவர் முத்தி ராமலிங்கரிடத்தில் அன்பும், பணிவும்,
குரு பக்தியும் கொண்டு மகிழ்ந்து, ஞான வாழ்க்கையைக்
கைவரப் பெற்றவர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர் பெரிய துறவாண்டவர் என்றழைக்கப்பட்ட
அருணாசல சுவாமிகள் ஆவார்.
தேவகோட்டையில் வாழ்ந்த, வினைதீர்த்தான் செட்டியார், முத்தாத்தாள்
ஆச்சிக்கு இரு மகன்கள் பிறந்தனர். அவர்களுக்கு அருணாசலம், சிதம்பரம் என்று பெயரிட்டு
வளர்த்து வந்தனர். பிள்ளைகள் இருவரும் பிறவியிலேயே
அருள் நாட்டம் உடையவர்களாகத் திகழ்ந்தனர்.
வளர்ந்தனர். கற்றனர். இருவருக்கும் திருமணமும் முடித்து வைக்கப்பட்டது.
முன்னவரான
அருணாசலம் தன் குடும்பத்தின் வருமானத்திற்காகத் தொழில் செய்தவற்காக திருநெல்வேலிக்குச்
சென்றார். திருநெல்வேலியில் வேலை பார்த்து வரும் காலத்தில் அவருக்கு உற்ற தோழராக விளங்கியவர்
மற்றொரு அருணாசலம். இவர் கண்டனூரைச் சார்ந்தவர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து
பழகினர். இருவருக்கும் அருள் நாட்டம் ஏற்பட்டு உலக வாழ்வு சுமையாகத் தெரிந்தது.
இதன்
காரணமாக உலகப் பற்றில் இருந்து விடுதலை பெற
இருவரும் ஞானவழியைத் தேடினர். பல நூல்களைப் படித்தனர். துறவு, முக்தி நெறி பற்றி அறிந்து
கொள்ள யாது செய்வது எனத் தெரியாது கவலையுற்றனர்.
கோவிலூர் மடாலயத்தின் ஆண்டவர் இவர்கள் தேடிய ஞானவழிக்கு முதல்வராக விளங்கினார்.
அவரை இருவரும் சென்றுச் சந்தித்தனர். தங்களின் நிலையைத் தெரிவித்தனர். ஆண்டவரிடம் பாடம்
கேட்டனர். அத்தோடு பல நூல்களைத் தாமே படிக்கவும்
செய்தனர். அஞ்ஞாத வதைப் பரணி படிக்கவேண்டும் என்று அந்நூலைத் தேடி இருவரும்
அலைந்தனர். அந்நூல் குன்றக்குடி ஆதீனத்தில் இருந்ததாகக் கேள்விப்பட்டு அங்குச் சென்று
அந்நூலைத் தரக் கேட்டனர். அங்கு ”பரணி படித்தெல்லாம் துறவியாவது ஆகாத காரியம்” என்று
சொல்லிக் கொண்டே அந்த நூலை அவர்களுக்கு வழங்கினர். அச்சொற்கள் இருவரையும் இன்னமும்
துறவின் மீதான எண்ணத்தை மிகுதிப் படுத்தியது.
பெரிய
துறவும், சின்னத் துறவும்
ஆண்டவரின்
அனுமதி பெற்று இருவரும், இல்லற வாழ்வினைத்
துறந்து நெடுங்குடியில் உள்ள கைலாசநாதர் ஆயலத்தில்
உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் துறவு நிலையை மேற்கொண்டனர். தேவகோட்டை அருணாசலத்திற்கு வயது சிறிது அதிகம்.
அதனால் அவர் பெரிய துறவு எனப் பெயர் பெற்றார். கண்டனூர் அருணாசலம் சிறிய துறவு ஆனார். இவர்கள் இருவரும் சிதம்பரம் சென்று பரம்பொருள்
திருவடியைச் சிந்திக்கத் துவங்கினர்.
சிதம்பரத்தின்
வடக்குக் கோபுரம் சின்னத்துறவு ஆண்டவரின் தவம் செய்யும் இடமானது. பெரிய துறவின் தவம்
செய்யும் இடம் கேணி மடமாக விளங்கியது. இருவரும் சுவாமி தரிசனத்திற்கு வருகையில் சந்தித்துக்
கொள்வது என்ற நிலையில் துறவுப் பயணம் தொடர்ந்தது.
அப்பன் தந்த அன்னம்
இருவரும்
தமக்கென எப்பொருளும் கொள்ளாது, பிச்சை புகுந்து உண்டு வந்தனர். ஒருமுறை இருவரும் திருவெண்காடு சென்று இறைவனைத்
தரிசித்து அங்கேயே தங்க வேண்டிய நிலை வந்தது. இவர்கள் இருவரும் பிச்சை புகுந்து உண்ணும்
கொள்கையினர் என்பதால் அன்று இரவு இவர்களுக்குப் பிச்சை தருபவர் யாரும் இல்லை. பசியோடு
இருவரும் சற்று தீர்த்தம் அருந்திக் களைப்புற்று இருந்தனர். அந்நேரத்தில் கோயிலின்
உள்ளிருந்து ஆதி சைவர் ஒருவர் இறைவனின் பிரசாதத்தைத் தந்து இவர்களின் பசியாற்றினார்.
இனிது உண்டு இருவரும் உறங்கினர்.
அடுத்தநாள்
காலையில் மீளவும் சாமி தரிசனம் செய்யச் சென்றபோது, அதே உருவில் இருந்த ஆதிசைவர் ‘‘
நேற்று தாங்கள் எங்கு உண்டீர்கள்? எங்கு தங்கினீர்கள்” என்று கேட்க இவர்கள் இருவருக்கும்
அவரின் கேள்விகள் ஆச்சர்யத்தை அளித்தன. ‘‘தாங்கள் தானே இறை பிரசாதத்தைக் கொண்டு வந்து
தந்தீர்கள் ” என்று சொல்ல அவரோ நான் இரவில் தங்களைக் காணவே இல்லை. எதுவும் தரவே இல்லையே
” என்று மறுத்தார். வந்தவர் ஆதிசைவர் அந்தப் பரம்பொருள் என்றே இருவரும் உணர்ந்தனர். பசிக்குப்
பாலமுது தரும் பரமசிவன் தமக்கும் அருளிய மேன்மையை எண்ணி இருவரும் கசிந்து உருகி அவனைத்
தொழுதனர்.
பாத்திரம்
அறிந்து பிச்சை கொள்வோம்
பெரிய
துறவும், சின்னத் துறவும் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் சென்றபோது ஏற்பட்ட திருவிளையாடல்கள்
பலப்பல. ஒருமுறை ஒரு வீட்டின் முன் பிச்சை ஏற்று நிற்க, அந்த வீட்டில் அன்னம் சமைக்கக்
காலதாமதம் ஏற்பட்டு விட்டது. அவசர அவசரமாக அன்னத்தைப் பொங்கி அவ்வில்லத்தின் அம்மையார்
பிச்சை அளித்தார். சுடச் சுட அன்னம் நீருடன் கலந்திருக்க அதனைத் தாங்காது பெரிய துறவு
பாத்திரத்தைச் சற்று வேகமாக அசைக்கிறார். அருகில் இருந்த சுவற்றில் அவ்வன்னம் பரவி
ஓடியது. சூடு தனிந்தது. சுவற்றியல் ஒட்டிய அன்னத்தைச் சேகரித்து பெரிய துறவு உண்டார்.
இல்லத்து அம்மையார் கண்களில் தவற்றினுக்கு மன்னிப்பு கேட்டுக் கண்ணீர் சிந்தினார்.
மற்றொரு
முறை அலங்காரமான ஒரு வீட்டின் முன் நின்று இருவரும் பிச்சை கேட்டனர். அவ்வீட்டில் அலங்கரிக்கப்பட்ட
பெண்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் உள்ளே வாருங்கள் என்று இருவரையும் அழைத்தனர். சின்னத் துறவும், பெரிய துறவும் வீட்டின் உள்ளே
சென்று அமர்ந்தனர். அந்த வீடு இவர்கள் வருவதற்குத்
தகுதியில்லாத வீடு. அவ்வீட்டில் உள்ள பெண்கள் இவர்களை வேறுவிதமாக எண்ணி கதவைத் தாழிட்டு
விட்டனர். சின்னத் துறவும் பெரிய துறவும் அங்கேயே ஜப தபங்களை ஆரம்பித்து அசையாது நிட்டையில்
மூழ்கினர். நேரம் நேரம் ஆக ஆக பெண்களின் எண்ணம், மோகம் குறைந்தது. இவர்கள் ஞானிகள்
என உணர்ந்து பயந்து அலறிக் கதவைத் திறந்து இவர்களை வெளியில் செல்ல வேண்டினர். அதுமுதல் வீட்டினுள் சென்று பிச்சை கொள்வது இல்லை என்று முடிவெடுத்தனர்
துறவியர்.
வஸ்திரம்
போய் கௌபீனம் கொண்ட கதை
பெரிய
துறவு ஒருமுறை நீராடித் தன் ஒற்றை ஆடையைக் கையில் பிடித்துக் கொண்டு காய வைத்துக்
கொண்டு இருந்தார். அடித்த காற்றில் ஒற்றை நான்கு முழ வேட்டி காற்றோடுபோய்விட்டது. இறைவன் ஆடையையும் துறக்கச் செய்தான் என்று எண்ணி
பெரிய துறவு அதனையும் துறந்தார்.
சின்னத் துறவும், பெரிய துறவும் அருணாசல மலைக்குச் சென்று தவம் செய்ய காலம் கை கூட்டியது. இருந்தாலும் மலையினைக் காவல் செய்யும் காவலர்கள் அவர்களை மலைக்குள் செல்ல விடாது தடுத்தனர். ‘‘துறவியரையும் தடுக்கலாகுமோ?” என்று கேட்க, இங்கு விலங்குகள் பறவைகள் மட்டுமே செல்ல இயலும் என்றனர். ஏன் அவ்வாறு என்று கேட்க, அவை இயற்கையாய் இயற்கையோடு வாழ்கின்றன என்றனர். இருவரும் எங்களுக்கு மலைக்குச் செல்ல இடையாடைதான் காரணம் என்றால் நாங்களும் இயற்கையாகவே வாழ இயற்கை நிலை எய்துகிறோம் என்று சொல்லி ஆடை துறந்து அம்மலை சென்று தவமியற்றினர்.
சிதம்பரமும் காசியும்
பிச்சை புகுந்து, ஆடையையும்
வெறுத்தொதுக்கிய புண்ணிய ஆன்மா பெரிய துறவாண்டவர் ஆவார். இவருடன் இருந்து கண்டனூர்
அருணாசலம் என்னும் சின்னத் துறவாண்டவர் மெய்நெறி
பற்றி வந்தார்.
இவர்கள்
இருவரையும் பல நாள் கண்டு தரிசித்த இலங்கை நாட்டைச் சார்ந்த யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர்
இவர்களே துறவின் இலக்கணம் என்றுப் போற்றி பல காலும் பணிந்து வந்தார். துறவாண்டவர்கள்,
அவரின் தமிழ்ப் புலமை கண்டு அவரைக் கந்தபுராணச் சொற்பொழிவு செய்யச் சொல்லி மக்களுக்குப்
பக்தி நெறிப் பரப்ப வைத்தனர். அவரும் தொண்டு
நெறி பரப்பினார்.
இந்நாளில்
எம்பெருமான் சின்னத் துறவாண்டவருக்கு நேரில் தோன்றி காசி, முதலான வட நாட்டுத் தலங்களுக்குச்
சென்று வருக என்று கட்டளையிட்டருளினார். இதனை ஏற்று சின்னத் துறவாண்டவர் வடநாட்டுப்
பயணம் மேற்கொண்டு காசியில் வாழ்ந்து வந்தார்.
அவரின்
நிறைவுக் காலம் அவருக்குத் தெரியவர திருவாவடுதுறை மடத்தினருக்குத் தெரிவித்து அவர்
முக்தி பெற்றார். அவரைக் கற்பெட்டியில் வைத்து கங்கைக் கரையில் இறக்கி செய்வன செய்து
தகவலைக் கோவிலூர் மடாலயத்திற்குத் தெரிவித்தனர். இதன் பின் சிதம்பரத்தில் இருந்த பெரிய
துறவாண்டவர் கோவிலூருக்கே வந்து, ஆண்டவரின் பணிகளுக்கு உதவியாய் இருந்தார்.
ஆண்டவரின்
முக்திக் காலத்தின் போது கோவிலூர் வேதாந்த மரபின் தொடர்ச்சியாய்ப் பெரிய துறவாண்டவரை
இருக்கச் செய்த இறையருள் கலந்தார். இதன்பின் கோவிலூர் வேதாந்த மரபின் தொடர்ச்சியைப்
பெரிய துறவாண்டவர் இரண்டாம் பட்டமாக ஏற்றார்.
முத்தி ராமலிங்க ஆண்டவர் காலத்திலேயே தேவகோட்டை வினைதீர்த்தான் செட்டியார், முத்தாத்தாள் ஆச்சியின்
இரண்டாம் மகன் சிதம்பரம் மடத்தின் வரவு செலவுகள்,
மற்ற காரியங்களைக் கவனித்து வந்தார். அவர் குட்டையா சுவாமிகளுக்குப் பணி செய்ய சிறிது
காலம் மதுரை சென்று பின்பு திருப்பெருந்துறை என்றும் ஆவுடையார் கோயிலில் பணிகளைச் செய்துவந்தார்.
இந்நிலையில் அவர் கோவிலூர் ஆண்டவர் அருகிருந்து
அகன்றமையைப் பொறுக்கமாட்டாமல் பெரிய துறவாண்டவர்
அவரைக் கோவிலூருக்குத் திருப்பும் முயற்சியை மேற்கொண்டார். அவருக்குப் பலரும்
குருவின் பெருமை கருதி எழுதிய பாடல்கள் பலவற்றைத் தொகுத்து சீடாசாரம் என்ற தொகுப்பு
நூலாக்கி அதனை உரியவர்களிடம் தந்து உரியவரிடம் ஒப்படைக்க வைத்தார். இதனைக் கண்ட சிதம்பரம்
கண்களில் கருணை வெள்ளம் பெருகி மீளவும் முத்திராமலிங்க ஆண்டவரின் அடிநிழல் பற்றினார்.
இரண்டாம் பட்டமான பெரிய துறவாண்டவர், மற்றும் சிதம்பரம்
ஆகியோர் தம் மேற்பார்வையில் கோவிலும், கோவிலூரும், மடமும் வளர்ந்தது. நித்ய அன்னதானமும்
மடத்தில் நடைபெற்று வந்தது. இவர் கைவல்ய நவநீதத்திற்கு பத சாரம் என்ற உரை எழுதினார். மேலும் உலக நாத சுவாமிகளைக் கொண்டு,
சமி வன சேத்திர மான்மியம், விவேக சூடாமணி, ஜீவந் முக்தி விவேகம், சூத சம்கிதை, முக்திக்
காண்டம், சூத கீதை, ரிபு கீதை போன்றவற்றை வடமொழயில் இருந்து தமிழ்ப் படுத்தினார்.
சீர்வளர் சீர் முத்திராமலிங்க
ஞான தேசிகர் பரிபூரணத்தில் கலந்த, பதினேழாவது மாதம் இரண்டாம் பட்டமாகிய பெரிய துறவாண்டவர்
எனப்பட்ட சீர் வளர் சீர் அருணாசல ஞான தேசிக
சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார். சௌமிய வருஷம், கடக மாசம், சுக்கிலபட்சம், சதுர்த்தி
திதி, பூர நட்சத்திரம், மிதுன லக்னம் கூடிய நாளில் பெரிய துறவாண்டவர் பரப்பிரம்ம சமரச
சுபாவமடைந்தார்.