ஞாயிறு, நவம்பர் 27, 2022

இமயவரம்பன் பரம்பரையும், சேரநாடும் – பகுதி-2 முனைவர் மு.பழனியப்பன்

 



Oct 22, 2022

siragu imayavaramban.jpg.

இமயவரம்பனின் தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன்

இமயவரம்பனுக்குப் பின் அவனின் தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன் அரசுரிமை பெறுகிறான். அவனைப் பதிகம் ‘இமயவரம்பன் தம்பி அமைவர‘ என்று குறிப்பிடுகின்றது. இவனின் ஆட்சிக் காலம் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும். இவனுக்குப் பின்பு இமயவரம்பனின் மகன்கள் ஆட்சிக்கு வருகின்றனர். இவனின் மக்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவனின் ஆட்சிக்காலம் கி.பி. எண்பதாம் ஆண்டு முதல் கி.பி. நூற்று ஐந்தாம் ஆண்டுவரை என்று கணக்கிடப்பெற்றுள்ளது.

பல்யானை கெழுகுட்டுவன் துறவில் நாட்டம் கொண்டு தன் வாழ்நாளின் நிறைவில் துறவறம் மேற்கொண்டான். இவன் நெடும்பாரதாயனார் என்பவரைக் குருவாக ஏற்றுக் கொண்டவன். அவர் துறவு மேற்கொண்டு காடு செல்ல இம்மன்னனும் அவருடன் துறவு ஏற்றுச் சென்றான்.

இதன் காரணமாக இமயவரம்பனின் மூத்தமகன் களங்காய்க் கன்னி நாற்முடிச்சேரல் அரசினை ஏற்று நடத்தவேண்டியவனானான். பல்யானை செல்கெழுகுட்டுவன், பல யானைகளை உடைய படையைப் பெற்றிருந்தான். இவன் கீழ்க்கடல் முதல் மேற்கடல் வரை யானைகளை நிறுத்தி அவைகளின் வழியாக நீரைக் கொணர்ந்து மங்கல நீராட்டை தான் வணங்கும் இறைவனுக்கு நிகழ்த்தியவன் ஆவான்.

இவனின் மனைவி பற்றியும் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

‘மண்ணாவாயின் மணம் கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழ் இருங்கூந்தல்
ஓரீஇயின போல இரவு மலர் நின்று
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத் தோள் இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே”

என்று பல்யானை செல்குழுகுட்டுவனின் தேவியைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. சேரமாதேவியின் கூந்தலில் பூச்சுகள் பூசாதபோதும், இயற்கை மணம் உடையதாக விளங்கி நிற்கும். அவள் முல்லை மலர் சூடியுள்ளாள். அவளின் கண்கள் குளத்தின் மலர்கள்போல குளுமை பெற்றுச் சுழலும். அவளின் தோள்கள் மூங்கில் ஒத்ததாக அமையும். இவளோட பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று பாலைக் கௌதமனார் வாழ்த்துகிறார்.

இம்மன்னன் இல்லறம் துறந்து துறவறம் சென்றான் என்பது குறிக்கத்தக்கதாகும்.

இதுவரை சொல்லப்பெற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலான், பல்யானை செல்கெழு குட்டுவன் ஆகிய மன்னர்களைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்படுகிறது.

‘‘கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்,
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
“போற்றி மன் உயிர் முறையின் கொள்க” என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும்,
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி,
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்”
என்ற குறிப்புகள் நடுகல் காதையில் சேரன் செங்குட்டுவனின் (கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்) முன்னோர்கள் பற்றிக் குறிப்பிடும்போது உரைக்கப்பெறுகின்றன.

கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட கடல் சார்ந்த பகைவர்களை வென்றவன் இமயவரம்பன் ஆவான். மேலும் இவன் இமயமலை வரை சென்று விற்பொறி அங்குப் பொறித்தவன் என்பதும் இங்குச் சுட்டப்பெற்றுள்ளது.

இவனைத் தொடர்ந்து அரசாட்சி புரிந்த பல்யானை செல்கெழுகுட்டுவன் நான்மறையை ஓதும் அந்தணனாகிய பாலைக் கௌதமனார் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரை மேலுலகம் புகச் செய்தவனாக விளங்கினான். மேலும் இவன் யவனரை அடக்கியவன். அகப்பா என்னும் கோட்டையை அழித்து வென்றவன். மேலைக்கடல் கீழைக்கடல் என்ற இருகடல்களில் இருந்தும் நீரைக் கொணர்ந்து அயிரை என்ற இறைக்கு நீராடல் நிகழ்த்தியவன்.

இவர்கள் இருவரையும், சேரன் செங்குட்டுவனின் முன்னோர்களாகக் காட்டுகிறது சிலப்பதிகாரம்.

இமயவரம்பன் – வேளாவிக்கோ பதுமன் தேவி ஆகியோரின் மூத்த மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு இரு மனைவியர். ஒருவரின் பெயர் வேளாவிக்கோ பதுமன் தேவி என்பதாகும். மற்றொருவரின் பெயர் சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணை என்பதாகும். இவ்விரு தேவியருக்கும் பிறந்த மக்கள் தன் சித்தப்பாவிற்குப் பின்பு அரசுரிமை பெறுகின்றனர்.

“ஆராத் திருவின் சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் முனை
பனிப்பப் பிறந்து, பல் புகழ் வளர்த்து,”

என்று களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் பெற்றோர் பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இவன் குடநாட்டில் இருந்து அரசாட்சி புரிந்து வந்தான். இவனின் ஆட்சிக்காலம் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும். இவனின் ஆட்சிக்காலம் கி.பி நூற்று ஆறாம் ஆண்டு முதல் கி.பி. நூற்று முப்பதாம் ஆண்டுவரை எனக் கணக்கிடப்பெறுகிறது.

”சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின்
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்கச்
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! நின் போர் நிழல் புகன்றே”
என்று இவன் நார்முடி அணிந்த நிலையைக் காட்டுகிறார் காப்பியாற்றுக் காப்பியனார். பசும்பொன் தகட்டில் முத்துக்கள் பதித்த நிலையில், சிலந்தி வலை போன்ற அமைப்பில், நார் தொங்க இவன் மணிமுடி சூட்டிக்கொண்டமையால் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்று அழைக்கப்பெற்றான்.

இவனைப்பற்றி அகநானூற்றிலும் ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

”இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.”

என்ற இப்பாடலில் நன்னன் என்பவன் சேரர்களிடம் இருந்து பெற்ற நிலப்பகுதியை மீண்டும் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் போர் செய்து நன்னனை வென்று பெற்றான் என்ற குறிப்பு கிடைக்கப்பெறுகின்றது.

இவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பவன் ஆவான். இவன் ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆவான். சேரநாட்டை நார்முடிச்சேரலுக்குப் பின்பு அரசுரிமை ஏற்ற கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனுக்குப் பின்பு அரசுரிமை பெற்றவன் ஆவான்.

இமயவரம்பன்- சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணை ஆகியோரின் மகன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்பவனுக்குப் பின்பு குடநாட்டினை மையமாக வைத்து சேரநாட்டை ஆண்டவன் இமயவரம்பன் சேரலாதனுக்கும், அவனின் மற்றொரு மனைவியான சோழன் மணக்கிள்ளி நற்சோணை என்பவளுக்குப் பிறந்த கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்பவன் ஆவான். இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலத்தில் குடநாட்டிலேயே இருந்து தன் அண்ணனுக்கு ஆட்சியல் உதவிகள் பல புரிந்து வந்தான். இவனின் ஆட்சிக் காலம் ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் ஆகும். இவனே சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் சேரன் செங்குட்டுவன் ஆவான். இவனுக்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் பற்றிய குறிப்புகள் பதிற்றுப்பத்தில் இல்லை.

“வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”
என்று, சேரன் செங்குட்டுவனின் பெற்றோர் பற்றிய குறிப்பு பதிகத்தில் இடம்பெற்றுள்ளது. இவனின் ஆட்சிக்காலம் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆகும். இவன் ஆண்ட காலம் – கி.பி நூற்று இருபத்தொன்பது முதல் கி.பி நூற்று இருபத்தொன்பதாம் ஆண்டு முதல் நூற்று எண்பத்து நான்காம் ஆண்டு வரை என்று கருதப்படுகிறது.

இவனின் மனைவி இளங்கோ வேண்மாள் ஆவாள். இவளைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

‘‘வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி,”

என்று இலவந்திகை வெள்ளி மாடத்தில் சேரன் செங்குட்டுவன் இருந்தபோது அவனுடன் அவன் மனைவியும் உடன் இருந்தாள் என்பது தெரியவருகிறது. இவனின் மகன் குட்டுவன் சேரல் என்பவன் ஆவான். இவனைப் பற்றிய குறிப்பு, பரணருக்குப் பரிசளித்த நிலையில் தெரியவருகிறது. இவன் பரணருக்குப் பணிவிடைகள் செய்து அவரைக் காத்து வாழ்ந்துள்ளான். இவனுடன் பிறந்தவன் குட்டுவன் கோதை ஆவான். இவனே சேரன் செங்குட்டுவனுக்குப் பின்பு அரசாட்சி பெற்றுள்ளான். பாண்டியன் நெடுஞ்செழியன் இவனுடன் போர் செய்து வென்றான் என்ற குறிப்பும் கிடைக்கின்றது.

இவனைப் பற்றி புறநானூற்றில் ஐம்பத்து நான்காம் பாடலில் குறிக்கப்பெற்றுள்ளது.

”வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை”
என்ற நிலையில் குட்டுவன் கோதை தன்னிடம் பொருள் பெற வந்தவர்களுக்கு எளிமையானவனாக இருந்துள்ளான். ஆனால் பகைவர்களுக்கும் அச்சம் தருபவனாக விளங்கியுள்ளான். இவன் சேரமான் கோக்கோதை மார்பன் என்றும் அழைக்கப்பெற்றுள்ளான். இவனைப் பற்றிப் பொய்கையார் ஒரு பாடல் புறநானூற்றில் பாடியுள்ளார்.

”கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;”
என்று தொண்டியை தன்னகராகவும், இம்மன்னனைத் தன் மன்னனாகவும் கருதிப் பொய்கையார் பாடுகிறார்.
இவனைப் பற்றி அகநானூற்றிலும் ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

‘‘இழை அணி யானைப் பழையன் மாறன்,
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
கோதை மார்பன் உவகையின் பெரிதே”

என்று சோழன் கிள்ளிவளவன், பாண்டியன் பழையன் மாறனை வென்ற நிலையில் சேரமான் கோக்கோதை மார்பன் உவகை கொண்டதை மேற்பாடல் பதிவு செய்கின்றது. இதற்குக் காரணம் பாண்டிய மன்னன் இவனை வென்ற நிலையில் தற்போது அவன் தோல்வியைத் தழுவியது இவனுக்கு மகிழ்வைத் தருவதாக உள்ளதாகக் கொள்ளலாம்.
இவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்ததை ‘கடவுள் பத்தினி கல்கோள் வேண்டி” என்று பதிற்றுப்பத்தின் பதிகம் குறிக்கிறது. மேலும், சிலப்பதிகாரமும் பதிற்றுப்பத்தும் இவனின் வெற்றிகளை ஒன்றுபட உரைக்கின்றன.

‘‘சிறு குரல் நெய்தல், வியலூர் எறிந்தபின்;
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று;
நெடுந் தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து,
கொடும் போர் கடந்து; நெடுங் கடல் ஓட்டி;
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை,
கடும் புனல் கங்கைப் பேர் யாற்று, வென்றோய்!
நெடுந் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே!”

என்று சேரன் செங்குட்டுவனின் வியலூர், கொடுங்கூர் வெற்றி, இமயத்தில் கண்ணகிக்குக் கல் எடுத்தது போன்ற வெற்றிச் செயல்கள் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. பதிற்றுப்பத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது.
இவனைப் பற்றிய குறிப்பு அகநானூற்றிலும் இடம்பெற்றுள்ளது.

‘‘மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது”
என்று கடல் பிறக்கோட்டிய செய்து பரணரால் பதிவு செய்யப்பெற்றுள்ளது. இவன் கடலுடன் போர் செய்து கடலைப் பிறக்கோட்டி வேல் நட்ட செய்தி மேற்பாடலில் பரணரால் பதிவுசெய்யப்பெற்றுள்ளது.

இமயவரம்பன் – பதுமன் தேவி ஆகியோருக்குப் பிறந்த இளைய மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

இமயவரம்பனின் மகன் சேரன் செங்குட்டுவனுக்குப்பின்பு இமயவரம்பன் –பதுமன் தேவி ஆகியோருக்குப் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேரநாட்டின் முடியுரிமை பெறுகிறான். இவன் சேரநாட்டினை முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிகிறான்.

“குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்”
என்று பதிகம் இவனின் பெற்றோர் பற்றிக் குறிப்பிடுகிறது.

இவனின் தேவியுடன் இவன் ஊடல் கொண்டு இரந்து நிற்கும் காட்சியைப் பதிற்றுப்பத்து காட்டுகின்றது.
‘‘துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச்
சிலைப்புவல் ஏற்றின் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர்இதழ் மழைக்கண் பேரியல் அரிவை
ஒள்இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப்
பல்சில கிண்கிணி சிறுபரடு அலைப்பக்
கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்
எயிறர் ஓங்கிய சிறுசெங்குவளை
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு
யாரையோ எனப் பெயர்வோள்”
என்ற நிலையில் கோபம் கொள்பவளாக இவனின் தேவி விளங்குகிறாள்.

இவன் வரை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பரம்பரையினர் சேரநாட்டை ஆண்டு வந்துள்ளனர். கி.பி. நாற்பத்தைந்து முதல் கி.பி. நூற்று அறுபத்தேழு வரை சேரநாடு இமயவரம்பன் பரம்பரையினரால் ஆளப்பெற்று வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: