அப்துற் றஹீம் படைத்த ஒளி வெள்ளம் நாவலில் இணை முரண்களின் போராட்டமும், அறத்தின் வெற்றியும்
முனைவர் மு.பழனியப்பன்Apr 2, 2022
தொண்டியில் பிறந்து, உலக இலக்கியங்களைக் கற்று, உன்னத இலக்கியங்களை படைத்து வழங்கிய அறம் சார்ந்த படைப்பாளர் அப்துற் றஹீம் ஆவார். தன்னம்பிக்கைச் சிந்தனைகள், அறச் சிந்தனைகள், நற்சிந்தனைகள் போன்றவற்றைக் கொண்டு தூய படைப்புகளைப் படைத்துச் சிறந்தவர் அப்துற் றஹீம் ஆவார். இவர் மக்களுக்கு அறிவு புகட்டும் புலமையும், ஆழமான வாசிப்பும், வரலாற்று அறிவும், பன்மொழிப் புலமையும் கொண்டுத் தன் படைப்புகளை எழுதியுள்ளார். நன்னம்பிக்கை விதைகளை படிப்பவர் மனதில் விதைத்து அறத்தை விளைவிக்கச் செய்தவர் அப்துற் ரஹீம் ஆவார். இவரின் நூறாண்டு நினைவைக் கொண்டாடும் இவ்வாண்டில் அவரின் சிந்தனைகளை இச்சமுதாயத்திற்கு வழங்கிட வேண்டிய அவசியம் உள்ளது
இவர் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்களில் மக்களின் அறம் சார்ந்த வாழ்க்கைக்கான வழிகளை விளக்கியுள்ளார். இவர் காட்டும் இனிய வழியில் வாழ்க்கையை நடத்திச் செல்லும் நிலையில் மக்கள் பேரின்பப் பெருவாழ்வினை அடைய முடியும் என்பது உறுதி.
இவர் சமயத்தால் இசுலாமியராக இருந்தாலும் இவர் எழுத்துக்களில் சமய நல்லிணக்கமும், பல் சமயக் கருத்துகளை எடுத்தாளும் பொதுமைத் திறமும் காணப்படுகிறது. இவர் பல சான்றோர் கருத்துகளை முன்வைத்து, அவர்கள் தந்த செய்திகளை, அவர்களின் அனுபவங்களை எடுத்துக்காட்டுகளாகக் காட்டி தம் படைப்புகளைப் படைத்தளித்துள்ளார்.
இவர் எழுதிய சமூக நாவல் ஒளிவெள்ளம் என்பதாகும். இந்நாவல் அறத்தை முன்வைத்து அற எண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அறங்களைச் செய்து வெற்றி பெறும் வண்ணம் எழுதப்பெற்றுள்ளது. அப்துற் றஹீம் இந்நாவலில் உலகின் இயல்புகளை எடுத்துக்காட்டுகின்றார். உலகம் என்பது இரு பக்கம் உடையது. அந்த இரு பக்கங்களும் முரண்களாக விளங்கி ஒன்றை ஒன்றுப் போராடி வெல்லத் துடிக்கின்றது என்ற அடிப்படைக் கருத்தை உடையவராக விளங்குகிறார் அப்துற் றஹீம். இரு முரண்களை உள்ளடக்கியது வாழ்வென்றாலும் அதில் அறத்தின் பக்கமே வெற்றி என்பது இவர் கண்ட அனுபவ உண்மையாகும்.
இவரின் ஒளிவெள்ளம் நாவல் இரட்டை முரண்களை ஒட்டியே எழுதப்பெற்றுள்ளது. இந்நாவலில் அப்துல் ரஹீம் இன்பம், துன்பம்- நல்லவன், கெட்டவன், உயர்வு, தாழ்வு – ஏழை, பணக்காரன் – அளிப்பவன் பெறுபவன் –மேலே கீழே, பெரிய மனிதன் – எளிய மனிதன் என்ற இரு இணை முரண்கள் எடுத்துரைத்து இவற்றின் போராட்டமாக நாவலை நடத்திச் சென்றுள்ளார். இரு இணை முரண்களுக்கு இடையேயான போராட்டமாக இந்நாவல் அமைந்து அறத்தின் பக்கம் இந்நாவல் வெற்றியைத் தருகின்றது. இவர் காட்டும் இணை முரண்களை அவை எவ்வாறு மக்களை ஆட்டுவிக்கின்றன என்பதை விளக்கும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
அறவாழ்வும், மறவாழ்வும்
மனிதர்கள் அறத்தின்பாற்பட்டு வாழ்பவர்களாக விளங்கமுடியும். அல்லது அறத்திற்கு எதிரான மறத்தின் பக்கம் நின்று வாழ முடியும். நல்லவனாகக் கொஞ்சமும், கெட்டவனாகக் கொஞ்சமும் வாழ இயலாது. மனிதனின் இளமை வாழ்வு நல்லதை நோக்கி அமைந்தால் நல்லதே வாழ்க்கையாகின்றது. அவ்வாறு இல்லாமல் ஒரு மனிதனின் வாழ்க்கை இளமையிலேயே தீமையை நோக்கியதாக அமைந்துவிட்டால் தீயவனாக அவனை உலகம் வாழ வைத்துவிடுகின்றது. நிறைவில் அறத்தின் பக்கம் நிற்பவர் வெற்றி பெறுகிறார். மறத்தின் பக்கம் நின்றவர் மண்ணோடு மண்ணாகிறார். இந்த இருநிலை முரண்களை அடிப்படையாகக் கொண்டதாக ஒளி வெள்ளம் நாவல் விளங்குகின்றது.
‘அறவாழ்வு வாழ்பவனின் குடியே வாழையடி வாழையாக வாழ முடியும். அறம் துறந்து மறவாழ்வு வாழும் எவரும் முன் கூறிய தத்துவப்படி அழிந்து பட வேண்டியதுதான். அற வாழ்வும் சிறந்த் பண்பும் பெற்றவர்களுக்கே நல்ல சந்ததியும் ஆண் தன்மையும் அமைகின்றன. மற்றவர்களுக்குச் சந்ததி விருத்தி அற்று குடி முறிந்து அவர்களின் பெயர்கள் விரைவில் மறைந்து விடுகின்றது. எனவே அறம் செய்து பிறர்க்கு உதவி, எளியோரை ஆதரித்து, தீனர்களின் கண்ணீரைத் துடைத்து எவன் வாழ்கின்றானோ அவனே இந்த உலகில் வாழத் தகுதி உடையவன். அவனே நல்ல சந்ததியைப் பெறுவான். மற்றவர்கள் புல்லைப்போல் வாழ்ந்து சந்ததியற்று மண்ணோடு மண்ணாகி விடுவார்கள். அவர்களுடன் அவர்களின் பெயரும் மண்ணில் புதையுண்டு மறைந்துவிடும்” (ப. 39) என்று அறவாழ்வின் உயர்ச்சியையும் மறவாழ்வின் தாழ்வினையும் எடுத்துரைக்க்கிறார் அப்துற் றஹீம்.
அறத்தின்படி வாழ்ந்து வெற்றி பெற்றவர்களாக அப்துற் றஹீம் ஆன்ட்ரு கார்னீஜி, ராக்பெல்லர் ஆகியோரின் வாழ்வினை எடுத்துக்காட்டுகிறார். இவ்வறத்தின்பாற்பட்டு வாழ்ப்வனாக இந்நாவலின் கதை நாயகன் குரிசில் வாழ்கிறான். இந்நாவலின் எதிர் நிலைப் பாத்திரமாக மறம் சார்ந்த பாத்திரமாக முத்து என்பவன் படைக்கப்பெற்றுள்ளான். இவர்கள் இருவருக்குமான வாழ்வியில் முரணாகவே ஒளிவெள்ளம் நாவல் நடத்திச் செல்லப்பெற்றுள்ளது.
நல்லவன், கெட்டவன்
ஒளிவெள்ளம் நாவலின் கதை நாயகன் குரிசில், எதிர்நிலைத் தலைவன் முத்து் ஆகியோர் சிறுவயது முதல் ஒன்றாகப் படித்தவர்கள். இவர்கள் வாழ்வின் நிறைவு வரை ஒன்றாக பயணிக்கிறார்கள். இருவரும் முறையே நல்லவர் கெட்டவர் என்ற நிலைப்பாட்டிலேயே வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்.
”அறஞ் செய விரும்பு” அந்த அமுத மொழிகள் குரிசிலின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணின. … அன்றுமுதல் அந்த மொழிகள் அவனது உள்ளத்தில் நீங்காது இடம்பெறலாயிற்று. ஔவை அவனுக்காகவே அவை அருளியுள்ளது போன்ற உணர்ச்சி அவனுக்கு மீண்டும் மீண்டும் ஏற்பட்டதும் அவனுடைய அழகிய முகத்தில் புன்னகை பொலிவுடன் இதழ் விரித்தது. ..ஔவையின் அமுத மொழிகளே அவனுடைய உள்ளம் முழுவதும் பரவி நின்றது. அன்று முதல் அவன் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டன. வகுப்பிலேயே நல்ல பையன் என்று பெயர் எடுத்தான் அவன்” (ப.22) என்று குரிசிலின் அறம் சார்ந்த வாழ்வின் தொடக்கத்தைக் காட்டுகிறார் அப்துற் றஹீம்.
“ஆனால் முத்து இதற்கு நேர்விரோதமாக இருந்தான். சதா பையன்களுடன் சண்டை பிடிப்பதும், புத்தகங்களைக் கிழிப்பதும் சிலேட்டுகளை உடைப்பதுமே அவன் வேலைகளாக இருந்தன. மற்றவர்க்குத் துன்பம் இழைத்து அவர் வருந்துவதைப் பார்த்து அவன் கைகொட்டிச் சிரித்தான். அவனே தலைவன். பணக்கார வீட்டுப் பையனாக இருந்ததால் மற்றப் பையன்கள் எல்லாம் அவனைக் கண்டு பயந்தார்கள்” (ப. 22) என்று தீயவன் என்ற அடையாளங்களுடன் முத்து சித்திரிக்கப்படுகிறான்.
இவ்வாறு நாவலில் இருஇணை முரண்களாக நேர்தன்மையும் எதிர் தன்மையும் போராட்டத்துடனேயே பயணிக்கின்றன.
பெரிய மனிதன் , ஏழை எளிய மனிதன்
சமுதாயத்தில் அந்தஸ்து காரணமாக பெரிய மனிதன், எளிய மனிதன் என்ற இரு முரண்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இருப்பினும் நல்லவன், எளிய மனிதனாக வளர்கிறான். கெட்டவன் பெரியமனிதனாக வளர்ச்சி பெறுகிறான்.
‘பெரிய மனிதர்கள் என்று முட்டாள் சமுதாயத்தால் கருதப்படும் எத்தனை பேர் தங்கள் செய்த கொலைகளை மறைத்து விடுகின்றார்கள்? பழிகளுக்கும், பாபங்களுக்கும் தங்களின் பணத்தால் அணைகட்டு விடுகிறார்கள்” (ப. 64) என்று பெரிய மனிதர் என்பதற்கான வரையறைத் தருகின்றார் அப்துற் றஹீம்.
பெரிய மனிதர்கள் இன்னமும் பல வேலைகளைத் தனக்குத் தானே செய்துகொள்கிறார்கள் என்கிறார் அப்துற் றஹீம். ‘‘நல்லவனான ஏழை எளியவன் (னால்) எட்டி உதைக்கக் கூடிய அவ்வளவு கேவலமான செய்கைகளையும் செய்து விட்டு மக்கள் மன்றத்தில் உலவுகிறார்கள். மேடை மீதேறிப் பேசுகின்றார்கள். பூமாலை, புகைப்படம், கை தட்டு, கரகோஷம் ஆகியவைகளும் அவர்களுக்குக் கிடைக்கின்றன.
ஆனால் அவர்களின் உள்ளம் அழுகிய புண். நாற்றமெடுக்கும் சாக்கடை. அதற்கு மாற்றாக அவனுடைய ( எளிய நல்ல மனிதனின் ) உள்ளமோ தென்றல் மிதந்துவரும் பூம்பொழில். அதில் வண்ண மலர்கள் உண்டு. தீங்கனிகள் உண்டு. பண்ணிசைக்கும் குயில்கள் உண்டு சோர்வு தணிக்கும் நிழல்கள் உண்டு’” (ப.64) என்ற நிலையில் பெரிய மனிதருக்கும் எளியமனிதருக்குமான வாழ்க்கை வேறுபாடுகளை எடுத்துரைக்கிறார் அப்துற் றஹீம்.
நாவலில் பெரிய மனிதனாக முத்து காட்டப்பெறுகிறான். எளிய மனிதனாக முத்துவுடன் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராக எளிய மனிதர் ஒருவர் படைக்கப்பெற்றுள்ளார். இதில் முத்துவுக்கு எதிர் முரணாக அமைபவர் வேறு ஒரு பாத்திரம் ஆவார்.
‘‘முத்துவுடன் போட்டியிட்டவர் ஓர் ஏழை. ஆனால் அவர் உத்தமர். தொண்டு செய்ய வேண்டுமென்ற ஆர்வம் உள்ளவர். நாட்டு நலனுக்காகத் தியாகம் செய்தவர். அவர் பக்கமும்இப்பொழுது கூட்டம் கூடத் துவங்கியது. அவரிடம் விளம்பரம் செய்யப் பணமில்லை. வீடு வீடாகச் சென்று அடக்கமாக, மரியாதையாக மக்களை அணுகித் தன்னை ஆதரிக்கும்படி வேண்டிக்கொண்டார். அவருடைய கள்ளமற்ற வெள்ளை மனமும், புன் முறுவல் தவழும் முகமும் மக்களைக் கவர்ந்துவிட்டன. ” (ப. 102) என்று எளிய மனிதராக நல்லவராக முத்துவை எதிர்த்துப் போட்டியிடுபவர் சித்திரிக்கப்படுகிறார். இருப்பினும் இவரும் குரிசிலைப் போன்று அறத்தின் பக்கம் நிற்பவர் ஆகிறார்.
“முத்து அதற்கு நேர்மாறாகத் தன் வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆட்களை ஏவியவண்ணமிருந்தான். தன்னை எதிர்த்து எவராவது பேசினால் அவரைத் தாக்கும்படியும் தன் ஆட்களிடம் கூறினான். பலரையும் தன் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பித் தனக்கு ஓட்டுப் போடாவிட்டால் அவர்களின் குடிசையில் தீவைத்துவிடுவதாகவும், காலை முறித்துவிடுவதாகவும் ஊரை விட்டே விரட்டி விடுவதாகவும் சொல்லி அனுப்பினான். தன்னை எதிர்த்த கணக்குப்பிள்ளை மாணிக்கத்தின் மகன் குரிசில் அடைந்த கதியையும் பெருமிதத்துடன் எடுத்துச்சொல்லி எச்சரித்தான்.” ( ப. 102) இங்கு முத்துவிற்கு எதிராக குரிசில் தேர்தலில் நிற்கவில்லை என்றாலும் குரிசில் என்ற பாத்திரத்தின் அறச் சார்பு முத்துவிற்கு எதிர் முரணாகவே தொடர்வதை உணரமுடிகின்றது.
வெற்றியும் தோல்வியும்
முத்துவினால் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறான் குரிசில். இருப்பினும் பம்பாய் சென்று குரிசில் தொழிற்சாலை குழுமம் ஒன்றில் பணி புரிந்து மிகு செல்வம்பெற்று இராமநாதபுரத்தில் அமைந்துள்ள தன் ஊரின் உள்ளவர்களை முன்னேற்ற அங்குத் தொழிற்சாலை, அற நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆதரவு இல்லங்கள் போன்றவற்றை அமைக்கிறான். இதன் மூலம் தான் பிறந்த ஊருக்கு நல்லது செய்பவனாகக் குரிசில் தன் வாழ்வில் வெற்றி பெறுகிறான். ஆனால் முத்து தன் வாழ்நாளின் இறுதியில் சொத்து சுகம் எல்லாம் இழந்து, வீடு இழந்து நோயுற்று மற்றவர்கள் ஏச்சும் பேச்சுக்கும் ஆளாகி குரிசிலின் தயவால் காப்பாற்றப்படுகிறான். குரிசிலின் வெற்றி, முத்துவின் தோல்வி என்ற இரு இணை முரண்களில் இந்நாவல் நிறைவு பெறுகிறது.
‘‘முத்துவின் வீடும் கடைசியில் ஏலத்துக்கு வந்தது. இனிமேல் அவன் அந்த வீட்டில் தங்கமுடியாது. ஆனால் அவன் முரட்டுத் தனமாகக் கத்தினான். என்னை என் வீட்டை விட்டு எவரும் வெளியேற்ற முடியாது என்றும் புரியாது பேசினான். இரண்டு போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். அவனுக்கு உதவியாய் அங்குத் தங்கியிருந்த வளதான அத்தையும் ஒரு துணி மூட்டையுடன் வெளியேறினாள். முத்துவின் சொத்து அந்த அழுக்கடைந்த துணி மூட்டைதான். முத்து சீறினான். போலீஸ்காரன் பிடரியில் ஓர் அடி கொடுத்தான்” (ப. 117) என்று முத்துவின் பயனற்ற தோல்வியைத் தழுவிய வாழ்க்கையைக் காட்டுகிறார் அப்துற் றஹீம்.
குரிசிலின் அறம் சார்ந்த வாழ்வை “உங்களின் தர்மம் உங்கள் வீட்டு முற்றத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும். என்ற ஒரு மகானின் வாக்குப்படி அவன் அறம் அவனுடைய சொந்த ஊரிலிருந்து ஆரம்பம் ஆகியது. எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் வைத்திய நிலையங்கள் அமைத்தான். கல்விச் சாலைகள் அமைத்தான். இல்லை என்று வந்தோருக்கு அள்ளிக் கொடுத்தான். அவன் பெயர் அந்த மாவட்டம் முழுதும் சிறிது நாளில் பரவிவிட்டது. அந்த ஊர் மக்களுக்கும் அவன் மீது அளவற்ற மதிப்பு ஏற்பட்டது. அவனது ஆதரவால் அந்த ஊரில் வேலையற்றோர் இல்லை. பசித்தோர் இல்லை. அறிவுக் கண் பெறாதோர் இல்லை. அவன் மதிப்பு உச்சம் ஏறியது. ஆனால் அவன் ஏழைகளோடு ஏழையாய் வாழ்ந்தான். தொழிலாளரோடு தொழிலாளராய் வாழ்ந்தான். …. இவ்விதம் அவன் மக்கள் தொண்டு செய்ததால் மக்கள் அவனை ஏழைகளின் தோழன், உத்தமன் ஊருக்கு உபகாரி என்று போற்றத் துவங்கினார்கள்” (ப. 99) என்று குரிசிலின் அறம் சார்ந்த வாழ்வு தந்த வெற்றிகளை எடுத்துரைக்கிறார் அப்துற் றஹீம்.
இவ்வாறு குரிசில், முத்து ஆகிய இரு பாத்திரங்கள் அறத்தின் குறியீடாகவும் , மறத்தின் குறியீடாகவும் கட்டமைத்து அறத்தின் வெற்றியையும் மறத்தின் தோல்வியையும் எடுத்துரைத்து மக்கள் ஒளி வெள்ளம் நாவலின் வழியாக அறம் சார்ந்த வாழ்க்கை வாழ அறிவுறுத்துகிறார் படைப்பாளர் அப்துற் றஹீம்.
கலை வளர்க்கும் வாழ்க்கை- வறுமை போக்கும் வாழ்க்கை
இந்நாவலில் கலை வளர்ச்சி அவசியமாக, மக்கள் வறுமை போக்கல் முக்கியமா என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. இதுவும் இந்நாவல் கொண்டுள்ள இணை முரண்களாகவே கொள்ளத் தக்கது. மிகக் காட்டமாக இவை இரண்டு முரண்கள் குறித்துச் சிந்தித்துள்ளார் அப்துற் றஹீம்.
“நாட்டில் மக்கள் உண்ண உணவின்றி அவதிப்படுகிறார்கள். படித்துப் பட்டம பெற்ற இளைஞர்கள் கூடக் கால் கடுக்கக் காரியாலாயங்களில் ஏறி ஏறி இறங்கி ஏமாந்து திரும்பி குளங்களிலும் குட்டைகளிலும் வீழ்ந்து மூழ்கி அழிகின்றார்கள். ரயில் தண்டவாளத்தையும், மரக்கிளையையும் தஞ்சம் என அடைந்து மடிந்து போகின்றார்கள். உடல் உரமும் அசையா நம்பிக்கையையும் பெற்ற மக்கள் கூடச் சொந்த நாட்டை விட்டு அந்நிய நாடுகள் சென்று அவதியுறுகின்றார்கள். இவ்விதம் நாடு நலிந்திருக்கும்போது கலாமன்றம் கட்டுகிறார்கள். திறப்பு விழாவாம். தேநீர் விருந்தாம். அந்த மாபெரும் காரியத்தை சாதித்தவர்களுக்கு மதிப்புரைகளாம். க” (ப. 108) என்று கலை வளர்ச்சியைப் புறம் தள்ளி மக்கள் வறுமையற்று வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் அப்துற் றஹீம்.
மேலும் “மனித நாகரீகத்தின் வளர்ச்சியைத் தடுப்பது வறுமை. வறுமை ஒழிந்தால் நாகரிகம், நல்ல பண்பு எல்லாம் வளரும். வறுமை இருக்கும்வரை ஒரு சமுதாயம் தலை நிமிர முடியாது. நாகரித்திலும் உயர முடியாது. வறுமை அழிந்தபின் மக்களின் பசி அகன்றபின் கலையைப் பற்றிக் கவலைப் படலாம். பசிப்பவர் இருக்கும் வரை கலைக்கு இடம் கொடுப்பது கூடாது. மேலும் கலைக்கு ஓர் அளவுக்குத்தான் மதிப்பு அளிக்கவேண்டும். கலை மக்களைத் தம் ஜீவிகளாய் ஆக்குகின்றது. சோம்பேறிகளாய் ஆக்குகின்றது. மக்களின் ஒழுக்கத்தைக் கெடுக்கின்றது”(ப. 112) என்று கலையைப் பின்னுக்குத் தள்ளி வறுமை ஒழிப்பே தற்போது தேவை என்ற கருத்தை முன்வைக்கிறார் அப்துற் றஹீம்.
இதற்காக ஐரோப்பாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் தன் நாவலில் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஐரோப்பாவில் ஒரு முறை ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டது. அவ்வீட்டில் ஒரு பச்சிளம் குழந்தையும், ரபேல் என்ற புகழ் பெற்ற ஓவியக் கலைஞரின் ஓவியமும் இருந்தன. இவற்றில் ஒன்றைக் காப்பற்ற முடியும் என்ற நிலையில் ஐரோப்பிய மக்கள் ரபேலின் ஓவியத்தைக் காப்பாற்ற வேண்டினார்களாம். இது தவறு என்று முடிவு சொல்கிறார் அப்துற் றஹீம்.
“இந்தக் காட்சி அவனுடைய (குரிசில்) மனத்தில் அந்நூலைப் படித்த பொழுது வேதனையை அளித்தது. வேதனையை மட்டும் அளிக்காது வாழ்வு சம்பந்தப்பட்வரை ஓர் அரிய உண்மையை அவனுக்கு அளித்தது. ஐரோப்பியக் கலைஞர்கள் அழகிய இளம் மதலை தீயில் வெந்துபோக அனுமதித்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் கலை ஆர்வம். ரபேலின் சித்திரத்தின் மேல் அவர்கள் கொண்டிருந்த பற்று. இவ்வித நிலை எவ்வளவு மோசமானது என்பதைக் குரிசில் அறிந்தான். நாட்டில் உள்ள மக்கள் நல்ல முறையில் உண்டு சுகமாக வாழ வசதி செய்து தராத வரையில் இவ்விதம் கலை கலை என்று கத்திக் கொண்டு திரிவதைக் கண்டு அவன் வருந்தினான்”( ப.110) என்று வறுமை ஒழிக்கும் வாழ்க்கையே தற்போது சமுதாயத்திற்குத் தேவை என்று கருத்துரைக்கிறார் அப்துற் றஹீம். கலை வாழ்க்கையை விடுத்து அவரின் மனம் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யும் வாழ்க்கையே உலகிற்குத் தேவை என்ற முடிவிற்கு வருகிறார் அப்துற் றஹீம்.
இவ்வாறு ஒளி வெள்ளம் நாவல் மக்கள் வாழ்வு வளம் பெறுவதற்காகச் செய்திகளை முன்வைத்து, அறத்தின் பக்கம் நின்று வெற்றி பெறுபவதாக விளங்குகின்றது.
தொகுப்புரை
தன் படைப்புகளால் நூறாண்டு கடந்து வாழும் அப்துற் றஹீம் அவர்கள் படைத்த நாவல் ஒளிவெள்ளம் என்பதாகும். இந்நாவல் அறத்தை முன்வைத்து எழுதப்பெற்றுள்ளது. அதே நேரத்தில் உலக மக்கள் அறம் சார்ந்தும் மறம் சார்ந்தும் வாழும் வாழ்க்கை குறித்தான மதிப்பீடுகளை வழங்குவதாகவும் இந்நாவல் படைக்கப்பெற்றுள்ளது. குரிசில் என்பவன் அறத்தின்பாற்பட்டு வாழ்ந்து பல இன்னல்கள் அடைந்தபோதும் தன் வாழ்வின் நிறைவில் மற்றவர்களுக்கு உதவிகள் புரிந்து நற்பெயர் பெறுகிறான். முத்து என்பவன் அடாத செயல்களே செய்து வாழ்வின் நிறைவில் இருக்க இடமுமின்றி, ஆதரிப்பார் எவரும் இன்றி அல்லல் பட்டு மடிகிறான். இவ்விரு பாத்திரங்களை முறையே அறத்தின் மறத்தின் குறியீடுகளாகக் காட்டி அறவாழ்வே சிறந்தது என்று காட்டுகிறார் அப்துற் றஹீம்.
மேலும் ஒளிவெள்ளம் நாவலில் இரு இணை முரண்கள் தொடர்ந்து போராட்டக் களம் காண்கின்றன. அவை அறவாழ்வு, மறவாழ்வு – நல்லவன், தீயவன்- எளிய மனிதர், பெரிய மனிதர்- வெற்றி , தோல்வி -வறுமை போக்கும் வாழ்க்கை, கலை வளர்க்கும் வாழ்க்கை என்ற முரண் கூறுகள் இந்நாவல் வழியாக வளர்த்துச் செல்லப்பெற்று அறமே நற்பண்பே, எளிமையே, வெற்றி பெறுகின்றது. கலை வளர்க்கும் வாழ்க்கையை விட வறுமை போக்கும் வாழ்க்கையே சிறந்தது என்று முடிவு காண்கிறார் அப்துற் றஹீம் என்ற படைப்பாளர். இவர் கலை வளர்க்கும் எண்ணத்தைப் புறம் தள்ளி விட்டு வறுமை போக்கும் வளமான வாழ்க்கைக்கான வழிகளை மக்கள் பெறவேண்டும் என்ற துடிப்புடன் இந்நாவலைப் படைத்துள்ளார். இதுவே இவர் படைப்புகளின் மையப் புள்ளியாகவும் அமைகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக