ஞாயிறு, ஏப்ரல் 03, 2022

மன்னரைச் சேர்ந்தொழுகல் 1மன்னரைச் சேர்ந்தொழுகல்

 

மன்னரைச் சேர்ந்தொழுகல்

முனைவர் மு.பழனியப்பன்

Feb 26, 2022

siragu mannar
உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றது. உயர்ந்தோர் என்ற நிலை செல்வத்தால், அறிவால், கல்வியால், மதிப்பால், அதிகாரத்தால், பலத்தால், துணிவால் எனப் பலவற்றால் ஏற்படலாம். உலகில் உயர்ந்தவர்கள் மட்டுமே வாழ்வதில்லை. உயர்ந்தவர்களுக்கு உதவி செய்வோர், அவர்களைப் பின்பற்றி வாழ்வோர் போன்ற பலரும் வாழ்வார்கள். ஆகவே உலகம் உயர்ந்தவர்களைத் தலைமையாகக் கொண்டு இயங்குகிறது. அத்தலைமையின் கீழ் பலரும் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.

திருவள்ளுவர் காலத்தில் அரசன் என்பவன் அதிகார பலம், செல்வ பலம், படை பலம், அறிவு பலம், ஆட்சி பலம் சார்ந்தவனாக விளங்கினான். அவனைச் சார்ந்து அவன் எல்லைக்கு உட்பட்டோர் வாழ்ந்துவந்தனர். அவ்வாறு சார்ந்து வாழ்வோரை மன்னரைச் சேர்ந்து ஒழுகுவோர் என்று குறிப்பர். அமைச்சர்கள், தூதுவர்கள், அறிஞர்கள், நீதிபதிகள், படைத்தளபதிகள் போன்ற பலரும் மன்னரைச் சேர்ந்தொழுகும் நிலையினர் ஆவர்.

இ்க்காலத்தில் ஆட்சி, அதிகாரம், வளமை போன்றன மன்னராட்சிக்கு ஈடான மக்களாட்சி அமைப்பில் அரசியல்வாதிகளுக்கு அமைகின்றன. இவர்களிடம் பழகும் முறைமையையும் எடுத்துரைக்கும் நிலைப்பாடு உடைய அதிகாரமாக ”மன்னரைச் சேர்ந்தொழுகல்” என்ற அதிகாரம் அமைந்து சிறக்கிறது. அரசியல்வாதிகளுக்குத் துணை செய்யும் அலுவலர்கள், அதிகாரிகள், சமுதாய ஆர்வலர்கள், மக்கள் போன்றோர் அரசியல்வாதிகளுடன் கலந்து பழகும் முறையை இப்பகுதி உணர்த்துவதாகக் கொள்ளலாம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல. அதிகாரிகள், தலைவர்கள், குடும்பத் தலைவர்கள், குழுமத் தலைவர்கள் போன்ற தலைமைப் பண்பு உடையவர்கள் அனைவரும் உயர்ந்தோர் என்ற பட்டியலில் அடங்குகின்றனர். இவர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் அனைவரும் அவர்களைச் சேர்ந்து ஒழுகுபவர்கள் ஆகின்றனர்.

வள்ளுவர் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உள்ள பணி நெருக்கடிகள், கால நெருக்கடிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் காட்ட இப்பகுதியைப் படைத்துள்ளார்.

தற்காலத்தில் மனித வளமேம்பாட்டுச் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெற்று வருகிறது. வள்ளுவர் இச்சிந்தனைகளைத் தம் காலத்திலேயே அறிந்து திருக்குறளில் தந்துள்ளார். தனிமனிதனின் அவன் சார்ந்த மனித சமுதாயத்தின் ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மதிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனித வள மேம்பாடு கணிக்கப்பெறுகிறது.

மன்னர், மன்னரைச் சேர்ந்து ஒழுகுவோர் அனைவரும் மனித வளம் மேம்பாட்டின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்றனர்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு (385)

என்று மன்னன் என்கிற தலைமைக்கான இலக்கணத்தைக் கட்டமைக்கிறது திருக்குறள். சட்டங்களை இயற்றல், பொருளாதாரத்தைப் பெருக்கல், அதனைக் காத்தல், சட்டத்தைக் காத்தல், அதன்பின் அதனைத் தக்கமுறைப்படி பயன் ஆக்கல் என்ற அடிப்படைகளை உடையது அரசு என்ற அமைப்பாகும். இதன் தலைவன் மன்னன் அல்லது ஆட்சியாளன் என்று கொண்டால் அவனுக்குத் துணை செய்ய தக்க ஆலோசகர்கள் இருப்பார்கள். மன்னன் அனைத்துத் துறைகளிலும் துறைபோகியவனாக இருந்தாலும் அவனறிய செய்திகளைச் சொல்லுவதற்கு ஒரு மந்திரச் சுற்றம் இருக்கும். அந்தச் சுற்றம் ஆட்சியாளனின் போக்கிற்கு ஏற்பவும், அவனை நிலை நிறுத்தவும், அவனைச் சரியான பாதையில் செல்லவும் தன்னாலான முயற்சிகளைச் செய்தாக வேண்டும்.

இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பால் மனிதசமுதாயம் பெருத்த நன்மையை இன்பத்தைப் பெறும். நாளும் இன்பம் பெருகி நல்ல தலைமையின் கீழ் மனித குலம் மேம்படும். இத்தகைய நிலையே சரியான மக்களாட்சி ஆகும். அந்த மக்களாட்சியைக் கொண்டுவர ஆட்சியாளரின் ஆலோசகர்கள் தக்கபடி நடக்க வேண்டும் என்ற நிலையில் தான் மன்னரைச் சேர்ந்து ஒழுகுபவர்களுக்கான பணிகளைத் திருக்குறள் முன்வைக்கிறது.

அகலாது அணுகாது சேர்ந்தொழுகல்

ஆட்சி, அதிகாரம் மிக்கவர்களுடன் பழகும் நிலையில் பழகுபவர்கள் தீயிடத்தில் பயன் கொள்வது போல பயன் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

‘‘அகலாது அணுகாது தீக் காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். ”(691)

நல்ல குளிர்காலத்தில் நெருப்பு மூட்டி குளிர் காய்பவர்கள் தீயை விட்டு அகலாமலும் அதே நேரத்தில் மிக நெருங்கிவிடாமலும் இருப்பதைப் போல அதிகாரம் மிக்கவர்களிடத்தில் அதிகம் நெருங்கிவிடாமலும் அதே நேரத்தில் விலகிவிடாமலும் பழக வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

குறிப்பாக தற்காலத்தில் மக்கள் ஆட்சி அதிகாரம் பெற்றவர்கள் ஒரு புறமும், அலுவலக அதிகாரம் பெற்றவர்கள் ஒரு புறமும் அமைய இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி என்ற இலக்கினை அடைய இயலும். மாறாக வேறு வேறாகச் செயல்பட்டால் காரியங்கள் நடைபெறாமல் போய்விடும். இந்த நிலையில் இந்தக் குறள் மன்னரைச் சேர்ந்து ஒழுகுபவருக்கான தகுந்த அரசியல் பாடத்தைக் காட்டி நிற்கிறது. இகல் வேந்தர் என்ற தொடர் விரைவில் கோபப்படும் தன்மையை உடைய வேந்தரை அல்லது அதிகாரம் மிக்கவரைக் குறிப்பதாகும். மிக விரைவாகக் கோபத்தின் எல்லைக்குச் சென்று விடக் கூடிய ஆட்சி அதிகாரம் மிக்கவர்களிடத்தில் அணுகியும் விலகாமலும் நட்பினை அமைத்துக்கொள்வதே சிறப்பாகும்.

திருக்குறளின் தாக்கத்தில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் இதனை ஆசிரியர்- மாணவர் இடையேயான உறவிற்கும் தீ உவமையைக் கையாள்கிறார்.

‘‘அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு
எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்
அறத்தின் திரியா படர்ச்சி வழிபாடே” (நன்னூல் நூற்பா எண்- 46)

என்று ஆசிரியர் மாணவர் உறவு அமைய வேண்டிய முறைமையை நன்னூல் எடுத்துரைக்கின்றது. தீக் காய்வார் போல தீயிடத்து நெருங்கிவிடாமலும், அகன்று விடாமலும் ஆசிரியர் மாணவர் உறவு இருக்கவேண்டும் என்கிறார் நன்னூலார். ஆசிரியர் மாணவர் உறவினைத் தீ உவமை காட்டிய அவர் அடுத்து நிழலை உவமையாக்கி சூட்டினை அணைத்து குளிர்விக்கிறார். வெய்யில் காலத்தில் நிழலில் இருந்து நீங்காமல் இருப்பதுபோலு ஆசிரியர் கற்பிக்கும் காலத்து மாணவர்கள் அமர்ந்திருக்கவேண்டும் என்கிறது நன்னூல். மேலும் எத்திறம் ஆசானுக்கு விருப்பமானதோ அத்திறத்தில் மாணவர்கள் இயங்க வேண்டும் என்று நன்னூல் வேண்டுகோள் வைக்கின்றது. அறத்தின் திரியாமல் ஆசிரியர் மாணவர் இருவரும் இயங்குதல் வேண்டும் என்ற நன்னூலின் வேண்டுகோள் வள்ளுவர் வழிப்பட்டதே ஆகும். மன்னரைச் சேர்ந்தொழுகல் என்பது இங்கு ஆசிரியரைச் சேர்ந்தொழுகுவதற்கும் ஆகி நிற்கிறது.

மன்னரைச் சேர்ந்தொழுகும் முறைக்குத் தீயை உவமை காட்டிய வள்ளுவர் இதற்கு அடுத்து அமைந்த குறள்கள் அனைத்திலும், மன்னரைச் சேர்ந்தொழுகுவோருக்கான அறிவுரைகளை வகுத்துக் காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: