சனி, டிசம்பர் 01, 2018

துறவி


Siragu Kasturba-Gandhi2
மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய பங்கு அன்னை கஸ்தூரி பாய் அவர்களுக்கு உண்டு. காந்தியடிகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இளம் வயது முதலே கஸ்தூரி பாய் அவர்களுடன் கலந்து பழகிய காரணத்தினால் காந்தியடிகளுக்கு மிகச் சிறந்த துணைவியாக அன்னை கஸ்தூரிபாய் விளங்கினார்.
அன்னை கஸ்தூரிபாய் அவர்களும் காந்தியடிகளுக்கு பல வழிகளில் வழிகாட்டியாக, காந்தியக் கொள்கைகளை ஏற்பவராக சிறந்த சத்யாகிரகியாக விளங்கியனார். இளம் வயதிலேயே திருமணம் ஆன காரணத்தினால் காந்தியடிகள் கஸ்தூரிபாயை தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ள விரும்பினார். கஸ்தூரிபாயை ஆலயத்திற்கு அடிக்கடி போகக் கூடாது, தோழிகளுடன் உரையாடக் கூடாது என்றெல்லாம் காந்தியடிகள் கட்டுப்படுத்தியதுண்டு. இதற்குக் கட்டுப்பட்டும் கட்டுப்பாடாமலும் கஸ்தூரிபாய் நடந்து வந்தார். கட்டுப்பட்டபோது மகிழ்ந்த காந்தியடிகளில் கட்டுப்படாதபோது வருத்தப்படமால் இருக்க இயலவில்லை. தன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் கட்டுப்பாட்டை மீறும்போது கோபம் வரும் என்பதை அறிந்துகொள்ள இந்த அனுபவங்கள் காந்தியடிகளுக்குக் கைகொடுத்தன.
சில நேரங்களில் தன் வழியில் முழுவதும் கஸ்தூரி பாய் நடக்கவில்லை என்று காந்தியடிகள் வருத்தப்பட்டதுண்டு. அவர் மீது சந்தேகப்பட்டது கூட நடந்திருக்கிறது. இருவரும் பல நாள்கள் பேசாமல் இருந்துள்ளனர். இப்படி நடந்ததெற்கெல்லாம் அன்பே காரணம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்பது காந்தியடிகளின் வாதம்.
‘‘நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு எல்லாம் அன்பே காரணம். மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே நான் விரும்பினேன். அவள் தூய வாழ்க்கை நடத்தி நான் கற்றவைகளை அவளும் கற்பதன் மூலம் எங்கள் இருவருடைய வாழ்க்கையும் எண்ணங்களும் ஒன்றாக இருக்கும்படி செய்யவேண்டும் என்பது என் அபிலாஷை” என்பது காந்தியடிகளின் எண்ணம்.
காந்தியடிகள் தன் மனைவியின் நிலை பற்றி நிறையச் சிந்தித்து கஸ்தூரிபாய் அவர்களைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். அதற்குப் பல சம்பவங்கள் துணை செய்துள்ளன.
ஒருமுறை தன் மனைவி கஸ்தூரிபாய் மீது சந்தேகப்பட்டதை வருத்தத்துடன் காந்தியடிகள் தெரிவிக்கிறார். ‘‘ஒரு வேலைக்காரனைத் தவறாக சந்தேகித்துவிட்டால் அவன் வேலையை விட்டுப் போய்விடுவான். அதே போல மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டை விட்டே அவன் வெளியேறிவிடுவான். நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால் நட்பை முறித்துக்கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவான். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே! அவள் எங்கே போவது? என் மனைவியையும் நான் இந்தகைய நிர்கதியான நிலைமைக்குக் கொண்டுபோய் விட்டதை எண்ணி என்னால் மறக்கவே முடியாது. என்னை மன்னித்துவிடவும் முடியாது என்று சந்தேக நிலைப்பாட்டைப் பற்றி காந்தியடிகள் குறிப்பிடுகிறார்.
சந்தேகம் என்ற காரணத்தால் நட்பை நண்பர்கள் இழக்கலாம். மகனும் தந்தையும் பாசத்தை இழக்கலாம். ஒரு முதலாளி சந்தேகம் காரணமாக நல்ல வேலைக்காரனை இழக்கலாம். ஆனால் ஒரு மனைவி கணவனைச் சந்தேகப்பட்டால் எதுவும் செய்துவிட இயலாது என்ற நிலைப்பாடு எவ்வளவு துன்பமானது என்பதைத்தான் காந்தியடிகள் உணர்த்துகிறார். அதே நிலைப்பாடுதானே கணவன் சந்தேகப்பட்ட நிலையிலும் எதுவும் செய்ய இயலாதவனாக இருக்க வேண்டும். மாறாகக் கணவன் விவாகரத்து, புறம் தள்ளுதல் போன்றவற்றிற்குப் போதல் எவ்வகையில் நியாயம் என்பதே இங்கு காந்தியடிகளின் வாதம்.
Siragu Kasturba-Gandhi1
கணவன் மனைவி என்ற உறவுப் பிணைப்பு என்பது புனிதமானது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணைந்து வாழ்வது என்பது சாதனை. அந்தச் சாதனையில் அதிகம் விட்டுக்கொடுக்கவேண்டியவர்கள் பெண்களாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
துறவி யார் என்று ஒரு கேள்வி கேட்டால் மனைவிதான் துறவி என்கிறார் ஒரு கவிதைக் கணவர்.
நீ பிறந்திட்ட ஊரினை, உறவை
நின்னருள் தந்தையைத் தாயை
ஆவிநேர் அண்ணன் தம்பியை மற்றும்
அன்புடைத் தங்கையைப் பிறரைக்
காவலன் என்று வந்த என் வடிவம்
கண்டதும் துறந்து என்பின் வந்தாய்
தேவியே நின்றன் துறவு மேம்பாட்டைத்
தியாகத்தை வியப்பது எவ்வாறே!
இந்தக் கவிதைக் கணவன் ஒருவர் தன் தியாக மனைவிக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில் எழுதியிருக்கிறார். என்பின் வந்தவள் என்ற சொற்சேர்க்கையில் மனைவி கணவனை முன்னிறுத்தித் தான் பின் நிற்கவேண்டும் என்ற மரபு ஆர்வம் இருப்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
தன் தந்தை, தாய், தம்பி, தங்கை, அண்ணன், அக்காள் என்ற சொந்தங்களை தன்னைப் பார்த்த உடனே துறந்து வந்த மனைவியைப் பாராட்டும் இந்த மனப்பாங்கு ஒவ்வொரு கணவரிடத்திலும் வரவேண்டும். மனைவியிடத்தில் நன்றி தெரிவிக்க வேண்டியவர்கள் இந்தக்கவிதையைப் பரிசாக மனைவிக்கு அளிக்கலாம்.
தன்னுடைய உறவுகள் அனைத்தையும் கணவன் என்ற ஓர் உறவு உருவானபின் விட்டுவிடுகிறது மனைவியின் உள்ளம். தன் உறவுகளுடன் ஒன்றி வாழ்ந்த மனைவி, அன்றிலிருந்து அவர்களில் இருந்து வேறாய் இருக்க வேண்டியவளாகிறாள். மற்றொரு குடும்பத்தின் உறவுகளுடன் அன்பு செய்ய வேண்டியவளாகிறாள்.
மகாத்மா காந்தியடிகள் அன்னை கஸ்தூரிபாயின் பொறுமையைப் போற்றுகிறார். பெண்களே பொறுமையின் அவதாரம் என்பது காந்தியடிகளின் கருத்து.
‘‘மனைவி கணவனின் வாழ்க்கைத் துணைவியும் தோழியுமே அன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப் போல் தன் வழியில் அவள் நடந்து கொள்ள சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டேன்.” என்ற காந்தியடிகளின் மொழிகள் ஒவ்வொரு கணவனும் பின்பற்ற வேண்டிய, சொல்லவேண்டிய எண்ண வேண்டிய மொழிகள்.
ஒவ்வொரு மனைவியும் கணவனின் புரிதலுக்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை நிறைவேற்றவேண்டும். ஒருமுறை கஸ்தூரிபாய் அவர்கள் மிகக் கடுமையாக நோயால் தாக்கப்பெற்றிருந்தார். அவரை மீட்டெடுக்க அசைவ உணவு தரப்படவேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். கஸ்தூரிபாயின் உடல் நலம் கருதி காந்தியடிகளும் இதற்குச் சம்மதித்தார். கஸ்தூரிபாயைச் சம்மதிக்கவும் செய்தார். ஆனால் கஸ்தூரிபாய் அசைவ உணவு எடுத்துக்கொள்வதை மறுத்தார். மேலும் அசைவ உணவு உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் மருத்துவமனையை விட்டு உடன் கிளம்பச் சொன்னார்.
ஒரு வெற்றி பெற்ற குடும்பத்தின் தலைவர்களாக கஸ்தூரிபாயும், காந்தியடிகளும் விளங்கியதால் அவர்களின் குடும்பம் உலகம் போற்றும் குடும்பமாக நிலைத்து நிற்கிறது.

கருத்துகள் இல்லை: