அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒரு தியாக வரலாறு. அவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு வேறு யாரின் துணையோ அல்லது வேறு நூல்களின் துணையோ தேவையில்லை. அவரே எழுதிய சத்திய சோதனை போதும். சத்திய சோதனை ஒரு மகத்தான மனிதர் தானே எழுதிய தன் வரலாற்று நூல் மட்டும் அல்ல. இந்தியாவின் வரலாற்றை, சத்தியத்தின் வரலாற்றை, இந்திய மக்களின் எழுச்சியை, இந்தியாவின் ஆன்ம பலத்தை விளக்கும் மிகப்பெரிய ஆவணம். சத்திய உணர்ச்சி பொங்கித் ததும்பும் உன்னத காவியம். அந்தக் காவியத்தின் ஒவ்வொரு எழுத்திலும் சத்தியம் நூறுக்கு நூறு விழுக்காடு சத்தியமாக விளங்குகிறது.
சத்திய சோதனை நூல் இந்திய மக்கள் இல்லம் தோறும் இருக்கவேண்டிய புத்தகம். இந்திய மக்களின் மனங்கள் தோறும் இருக்க வேண்டிய புத்தகம்.
சத்திய சோதனை நூல் முழுவதும் சொல்லப்பட்டிருப்பது சத்தியம் என்ற ஒன்று மட்டுமே. சத்தியம் ஒன்றே அதன் 623 பக்கங்களிலும் நிரம்பிக்கிடக்கிறது. சத்திய சோதனை நூலினை ஆரம்பம் முதல் இறுதி வரை படிக்கலாம். அல்லது இறுதியில் இருந்துத் தொடங்கி ஆரம்பம் வரை படிக்கலாம். ஒரு நாளை ஒரு பக்கம் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வரியேனும் படிக்கலாம். எப்படிப் படித்தாலும் சத்தியம் என்ற அடிநாதத்தின் வெற்றி குறைவில்லாமல் சத்திய சோதனை நூலுக்குள் வெளிப்பட்டு நிற்பதை உணரமுடியும்.
சத்திய சோதனை என்ற தன் வரலாற்று நூலை தன் வாழ்வின் ஒரு கட்டத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டிய கால நெருக்கடி மகாத்மாவிற்கு ஏற்பட்டு விடுகின்றது. அப்போது அவர் சத்திய சோதனையின் நிறைவுப் பக்கங்களை முடிக்கச் சத்தியப் பேரொளியின் அளவிடற்கரிய வெளிச்சத்தைப் பற்றி எழுதி நிறைவு செய்கிறார்.
‘‘சத்தியத்தைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை ஒரே மாதிரியான என்னுடைய அனுபவங்கள் எனக்கு உறுதியாக உணர்த்தியிருக்கின்றன. சத்தியத்தைத் தரிசிப்பதற்கு உள்ள ஒரே மார்க்கம் அகிம்சைதான் என்பதை இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு அறிவுறுத்துகின்றன. அப்படி அறிவுறுத்தவில்லையாயின் இந்த அத்தியாயங்களை எழுதுவதற்கு நான் எடுத்துக்கொண்ட சிரமமெல்லாம் வீணாயின என்றே கொள்ளுவேன். இந்த வகையில் என் முயற்சிகளெல்லாம் பலனற்றவையே என்று நிரூபிக்கப்பட்டு விடலாம். அதன் குற்றம் என்னுடையதேயன்றி அம்மகத்தான கொள்கையினுடையதல்ல என்பதை வாசகர்கள் அறிய வேண்டும்.”
என்று சத்தியத்தின் வலிமையை அதனை மகாத்மா கண்டறிந்த நிலையை சத்திய சோதனையின் நிறைவுப் பக்கங்கள் அறிவிக்கின்றன.
சத்தியமும் அகிம்சையும் வேறு வேறு ஆனதல்ல. மற்ற உயிரினங்களைத் துன்புறத்தாத இம்சை செய்யாத குணமே சத்தியத்தின் திருக்காட்சியாகும்.
‘‘பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப்போலவே, நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட ஆசைப்படுகிறவர் யாரும், வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும் விலகி நின்றுவிட முடியாது. அதனாலேயே சத்தியத்தினிடம் நான் கொண்டிருக்கும் பக்தி என்னை ராஜிய துறையில் இழுத்துவிட்டிருக்கிறது. ” என்பது காந்தியடிகளின் வாக்கு.
காந்தியடிகள் அரசியலுக்கு வரக் காரணம் அவருள் உறைந்து கிடந்த சத்தியம்தான். அகிம்சைதான். ஓர் உயிர் துன்பப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஆயிரம் ஆயிரம் மனித உயிர்கள் அடிமைப் பட்டுக்கிடப்பதைப் பார்த்துக் கொண்டுச் சகித்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தினாலேயே அரசியிலின் பக்கம் காந்தியடிகள் தன் வாழ்வின் திசையைத் திருப்ப வேண்டியதாக இருந்தது. அப்படித் திருப்பியபோது இந்திய அரசியலுக்கும் தீர்வு, வெற்றி சத்தியத்தின் மூலமாகவே கிடைக்கும், கிடைக்கவேண்டும் என்பது காந்தியடிகளின் கொள்கையாக விளங்கியது.
எனவே தான் காந்தியடிகளின் மனதில் நீக்கமற நிறைந்து நிற்கிற சத்தியம் அவரைத் துன்பப்படும் மக்களுக்கு நிம்மதி, நியாயம், அன்பு பெற உழைக்கத் தூண்டியது.
சத்திய சோதனை நூலில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் பலப்பல. இருப்பினும் சத்திய சோதனை நூல் வழியாக சத்தியத்தின் ஒரு துளியை மட்டுமே தான் கண்டு கொண்டதாகவும், தான் முழுவதும் கண்டு கொள்ள முடியாத அளவிற்குச் சத்தியம் மிகப் பெரிய பேரொளி என்றும் காந்தியடிகள் சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார்.
‘‘அவ்வப்போது சத்தியத்தை ஒரு கண நேரம் கண்டு கொண்டது, சத்தியத்தின் விரிக்க வொண்ணாத பெருஞ்சோதியை நான் தெரிந்து கொண்டதாகவே ஆகாது. நான் தினந்தோறும் கண்ணால் பார்க்கும் சூரியனைவிட கோடி மடங்கு அதிகப் பிரகாசம் உடையது சத்தியத்தின் ஜோதி. உண்மையில் நான் கண்டிருப்பதெல்லாம் அந்த மக்கதான பரஞ்சோதியின் மிகச் சிறிய மங்கலான ஒளியையேயாகும். ஆனால் என்னுடைய எல்லாச் சோதனைகளின் பலனாகவும் ஒன்றை மாத்திரம் நான் நிச்சயமாகக் கூறமுடியும். அகிம்சையைப் பூரணமாக அடைந்தால் மட்டுமே சத்தியத்தின் பூரணமான சொரூபத்தையும் தரிசிக்க முடியும்” என்ற மகாத்மாக காந்தியடிகளில் பொன்னெழுத்துகள் சத்தியத்தின் மிகப் பெரும் சக்தியைக் காட்டுவன.
மகாத்மா காந்தியடிகளின் சத்திய தரிசனமே சத்தியசோதனை. அகிம்சை வெளிப்பாடே சத்தியத்தின் வெளிப்பாடு. சத்தியம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபட்ட ஒன்றா. அல்லது எல்லாருக்கும் ஒன்று தானா என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.
சத்தியம் ஒன்றுதான். உண்மை ஒன்றாக மட்டும்தானே இருக்க முடியும். அந்த ஒன்று எது. சத்தியமாக இருப்பது. அதுவே காந்தியடிகள் வலியுறுத்துவது.
ஆசியருக்கான சத்தியம் எது? மாணவருக்கான சத்தியம் எது? அலுவலருக்கான சத்தியம் எது? குடும்பத் தலைவருக்கான சத்தியம் எது? குடும்பத் தலைவிக்கான சத்தியம் எது? எல்லாம் ஒன்றுதான்.
அவரவர் கடமையை நேர்மையாக ஒழுங்காக குறைவின்றி செய்தல். இதுவே சத்தியம். ஆசிரியருக்கான கடமையைக் குறைவின்றிச் செய்வது ஆசிரியருக்கான சத்தியம். மாணவருக்கான கடமையை,ஒழுக்கத்தை, சக மாணவர்களுடன் வேறுபாடின்றி, ஒற்றுமையாக அன்புடன் வாழ்தல் மாணவருக்கான சத்தியமாகின்றது. அலுவலருக்கான கடமை அலுவல் பணிகளைத் தடையில்லாமல் சரிவரச் செய்வது. குடும்பத்தலைவரின் கடமை, குடும்பத்தலைவியின் கடமை அவரவர்கான பணியை அவரவர் சரிவர குறைவராமல் செய்வது.
இதுவே சத்தியம். சத்தியம் ஒன்றே ஒன்றுதான். தூய்மையான எதிர்பார்ப்பில்லாத கடமை. பிறருக்குத் துன்பம் அளிக்காத அகிம்சை. இந்தக் கடமையைப் போற்றி வாழும் அனைவரும் சத்தியத்தின் பேரொளியைத் தரிசிக்கமுடியும் என்பது மகாத்மா காந்தியடிகளில் நம்பிக்கை.
சத்தியத்தின் சுவாசமாக விளங்கிய மகாத்மா காந்தியடிகளில் பாதம் பட்ட இந்த இந்திய மண்ணில் அவரவர் கடமையை அவரவர் சரிவர செய்து சத்தியத்தின் பெருமையை நிலைநாட்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக