திங்கள், அக்டோபர் 17, 2016

பூவிலைப் பெண்டு

தமிழ் மக்களின் பண்பாடு தனித்துவம் வாய்ந்தது. சங்க காலம் தொட்டு இருந்து வரும் பண்பாட்டுச் செழுமை இன்னமும் மாறாமல் தமிழர் வாழ்வில் பின்பற்றப்பட்டு வரப்பெறுகிறது. சங்ககாலக் காதல் மரபுகள் அகத்திணைப் பண்பாடுகளாகப் போற்றப்பெறுகின்றன. போர் செய்யும் முறைகள் புறத்திணை மரபுகளாக ஏற்கப் பெறுகின்றன.

தமிழர்களின் போர் முறை முற்றிலும் அறம் சார்ந்து அமைந்திருந்தது. போர் செய்வதற்கு என்று தனியிடம் ஒதுக்கப் பெற்றிருக்கிறது. அவ்விடத்தில் போர் நடக்கப் போகிறது என்பது முன்னரே அறிவிக்கப் பெற்றுள்ளது. இதன் காரணமாக அவ்விடத்தில் இருக்கும் பெண்கள், நோய் உடையோர், குழந்தைகள் போன்றோர் மாற்றிடங்களுக்குச் செல்ல வேண்டுகோள் விடப்பெற்றுப் போர் நடைபெற்றுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு முரசு ஒலிக்கும். சூரியன் சாயும் நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பெற மீண்டும் முரசு முழங்கும். இரவு நேரங்களில் தமிழர் போர் செய்தலைத் தவிர்த்துள்ளனர்.

போரின் மிக முக்கியமான அடையாளம் பூச்சூடுதல் ஆகும். அடையாளப் பூ ஒன்றைச் சூடியே போர் நடைபெற்றுள்ளது. போர்க்காலத்தில் ஆண்கள் பூச்சூடுதல் இயல்பாகும். வெட்சிப் பூவைச் சூடினால் கால்நடைகளைக் கவரும் போர் என்று பொருள். வஞ்சிப் பூவைச் சூடினால் மண் குறித்துப் போர் நடக்க உள்ளது என்று பொருள். மேலும் பூ அணிதல் என்பது போர் செய்பவன் எந்த அணியைச் சார்ந்தவன் என்பதை அறிந்து கொள்ளவும் பயன்பட்டுள்ளது.

வெட்சிப் பூச்சூடி கால்நடைகளைக் கைப்பற்ற ஓர் அணி செல்கிறது. அந்த அணியை எதிர் கொள்ளக் கரந்தைப் பூச்சூடிய அணி களமிறங்குகிறது. அக்காலத்தில் பூக்களே அணிகளை அறிந்து கொள்ள அடையாளமாக இருந்துள்ளன. தற்காலத்தில் சீருடைகள் காட்டும் அடையாள நிலையை அக்காலத்தில் பூக்கள் காட்டியுள்ளன.

எல்லாம் சரிதான். போர் அறிவிக்கப்பெற்ற நிலையில் போருக்கு ஆயத்தம் ஆவதை விட முக்கியமானதாக இந்தப் பூப்பறிக்கும் வேலை இருந்திருக்க கூடுமோ என்ற எண்ணம் எழுகிறது.. எனவே எல்லா ஆண்களும் போருக்குச் செல்லும் முன்னர் தாம் அணிந்து கொள்ள வேண்டிய பூவைப் பறிக்கக் காட்டுக்குப் படையெடுத்திருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுகின்றது.

இப்போதுகூட ஒரு வழக்குத் தொடர் மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ளது. அதாவது ஒருவர் மற்றொருவரை அடிக்க முனைகிறார் என்று வைத்துக் கொள்வோம். அடிக்க வருபவர் வேகமாக வரும்பொழுது, அடிவாங்க இருப்பவர், “நீ என்னை அடிக்க வந்தால் என் கை பூப்பறித்துக் கொண்டு இருக்குமா?”என்று கேட்பார். இது சங்க காலத்தில் நடைபெற்ற பூச்சூடுதல் என்ற நிலையின் மிச்சமாகும்.

சரி பூவை எவ்வாறு வீரர்கள் பெறுவார்கள். எவ்வாறு சூடுவார்கள். இவை அடிப்படைக் கேள்விகள். பூவை அடையாளமாகத் தலையில் மட்டும் அணிந்து கொள்வார்களா? என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம். பூ போரின் அடையாளம் என்பதால் அதனைத் தலையில் மட்டும் இல்லாது தன் உடலின் பெரும்பாலான இடங்களில் தமிழர்கள் அணிந்து கொண்டுள்ளனர். பூக்களை எப்படிப் பெறுவர் என்பது கொஞ்சம் சிக்கலான கேள்வி. 


இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் புறநானூற்றுப் பாடல் ஒன்று அமைகிறது.

“நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மிணும் பேர் எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவன் கொல்லோ
அளியல்தானே பூவிலைப் பெண்டே” 


என்பது அந்தப் பாடல். இது புறநானூற்றில் இடம்பெறும் 293 வது பாடலாகும். இப்பாடலைப் பாடியவர் நொச்சி நியமங்கிழார் ஆவார். தன் பெயரிலேயே புறப்பொருள் சார்ந்த பூவை வைத்துள்ள இப்புலவர் பாடிய இப்பாடல் போர் முறை குறித்தப் பல பண்பாடுகளை உணர்த்துவதாக உள்ளது.

அந்த ஊரில் போர் அறிவிக்கப் பெற்றுவிட்டது. யானை மீது அமர்ந்து கொண்டு, யானையைக் குத்துக்கோலால் அடக்கியபடி முரசு அறைபவன் போர் வந்துவிட்டது என்று தெரிவிக்கிறான். அது மட்டும் இல்லாது, அவன் போருக்கு உரிய பூக்களை யானை மீது ஏற்றிக் கொண்டு வந்து அவற்றை வீரர்களுக்கு வழங்குகிறான். இன்னமும் போர்க்கு தயாராகாத ஆண்களைப் பார்த்துப் பூக்களைப் பெற்றுக்கொள்ள வாருங்கள் என்று சத்தமாக அழைக்கிறான்.

பாடலின் முதல் பகுதி தரும் பொருள் இது. இக்கருத்தின் வழியாக போர் வருவதற்கு முன்பே அரசன் போர்ப்பூவைச் சேகரித்து வைத்துவிடுகிறான் என்பது தெரியவருகிறது. மேலும் யானையின் மீது ஏற்றி வீடுதோறும் பூக்களை வழங்கும் முறையைச் சங்ககால மன்னர்கள் வைத்திருந்தனர் என்பதும் தெரியவருகிறது. போர்க்குரிய பூவைப் பறிக்க ஆண்கள் போகவேண்டுவதில்லை. அவர்களுக்கு யானை மீது அமர்ந்து முரசு அறைபவன் பெருமையோடு பூக்களை வழங்கியிருக்கிறான் என்பதும் தெரியவருகிறது.

பாடலின் பின்பகுதியில் மற்றொரு பண்பாட்டுக் குறிப்பும் உள்ளது. தற்காலத்தில் பூக்களைக் கடைகளில் விற்கின்றனர். கிராமப் புறங்களில் பூக்களை வீதி வீதியாகச் சென்று விற்கும் நடைமுறையும் உண்டு. சங்ககாலத்திலேயே இவ்வாறு வீடுதோறும் சென்று பூ விற்கும் நடைமுறையைப் பெண்கள் செய்து வந்துள்ளனர். அப்பெண்களுக்குப் பூ விலைப் பெண்கள் என்று பெயர் வைக்கப் பெற்றுள்ளது. அழகானத் தமிழ்ப்பெயர் பூவிலைப் பெண்டு என்பது.

இப்பெண்கள் போர் முரசு அறிவித்தபின் போருக்குச் செல்லும் வீரர்களின் வீடுகளுக்குச் செல்லாமல் மற்ற வீடுகளுக்குப் பூக்களை விற்கச் செல்லுகின்றனர். பூவிலைப் பெண்டிர்க்கு அன்று குறைவாகவே வியாபாரம் நடைபெற்றது. இதன் காரணமாக அவள் இரங்கத் தக்கவள் ஆகின்றாள்.


ஏனென்றால், போருக்குச் செல்லும் வீரர்களின் வீடுகளில் போருக்கான பூவைப் பெற்றபின்பு அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் தன் தலையில் பூக்களை அணிவதில்லை என்பது சங்ககால வழக்கமாகும். அதாவது போர் முடித்துத் தன் கணவன் வீடு திரும்பும் வரை தன் தலையில் பூச்சூடாத மரபு இருந்துள்ளது. போர் வெற்றி பெற்றுக் கணவன் வந்ததும் பூச்சூடி அதனைக் கொண்டாடியுள்ளனர். இதனையே இப்புறநானூற்றுப்பாடல் சுட்டுகிறது.

“வினை எனப் பிறர் மனைப் புகுவன் கோல்லோ
அளியல் தானே பூவிலைப் பெண்டே”


என்று பூ விற்கும் பெண் இரங்குதலுக்கு உரியவள் என்று அவளுக்காக இரங்கி ஒரு புறநானூற்றுப் பாடல் அமைக்கப் பெற்றுள்ளது. இப்பாடல் வழியாகப் பல்வேறு தமிழர் மரபுகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

போருக்கு முன் பூக்களை யானை மீது ஏற்றி வழங்கிய அரசன் போரில் வெற்றி பெற்ற நிலையில் அவன் வீரர்களுக்குப் பல பரிசுகளை வழங்கியுள்ளான். வெற்றியைத் தேடித்தந்த வீரர்களுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பூக்களை வழங்கியுள்ளான். போருக்கு முன்னர் மணம் மிக்க பூக்களை வழங்கிய மன்னன், போர் வெற்றிக்குப் பின்னர் கனம் மிக்க பூக்களை வழங்கியுள்ளான். தமிழர் வாழ்வில் பூக்கள் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது என்பதற்கு இது போன்று பல சான்றுகள் உள்ளன. தமிழ் இலக்கியப் பாடல்கள் இலக்கிய நயம் சொட்டுவன மட்டுமல்ல. பண்பாட்டு வளம் சேர்ப்பன என்பது இங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது.muthukamalam
கருத்துரையிடுக