புதன், ஆகஸ்ட் 05, 2015

முன்பு பின்பு இன்றி (கம்பரின் எதிர்காலவியல் சிந்தனைகள்)


Raman
முக்காலங்களில் சிறப்படையது எதிர்காலம். இன்றைய காலத்தில் நின்றுகொண்டு, நேற்றைய காலங்களில் நடந்த தவறுகளைத் திருத்திக்கொண்டு நாளைய காலத்தை வளமாக அமைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் எதிர்காலம் நம்பிக்கைக்குரிய காலமாக விளங்குகின்றது. எதிர்காலத்தில் நிகழ உள்ள, நிகழவேண்டிய நடப்புகளை இன்றைக்கு அல்லது நேற்றைக்குச் சொல்லுவது என்பது எதிர்காலவியல் ஆகின்றது. வரலாறு (https://ta.wikipedia.org/s/a8d) தற்கால மாற்றங்களின் போக்குக்கள், விஞ்ஞான(https://ta.wikipedia.org/s/1bl) தொழில்நுட்ப வளர்ச்சி நிலைகள் போன்ற பல அம்சங்களின் துணையுடன் எதிர்காலத்தை நோக்கி பகுப்பாய்வது, வருவதுரைப்பது எதிர்காலவியல் (Future Studies) ஆகும் என்று எதிர்காலவியலுக்கான வரையறையைத் தருகின்றது விக்கிப்பீடியா. அறிவியல், சமுதாயம் போன்றவற்றில் தகுதி மிக்க வளர்ச்சிகளை எடுத்துரைப்பது எதிர்காலவியல் ஆகின்றது.
கம்பராமாயணம் தொன்மை வாய்ந்த கதையாகும். இக்கதையை மீட்டு எடுத்துத் தமிழில் தன்னிகரற்ற காப்பியமாகக் கம்பர் வரைகின்றார். கம்பர் காலத்தில் இருந்து இதனைக் கண்ணுறும்போது கம்பரின் காலம் நிகழ்காலம் ஆகும். இராமாயணக்காலம் கடந்த காலம் ஆகும். கம்பராமாயணம் தற்போது ஆராயப்படும் காலத்தில், படிக்கப்படும் காலத்தில் அது எதிர்காலத்திற்கும் பொருந்துவதாகப் படைக்கப்பெற்றிருப்பது தெரியவருகின்றது. பற்பல புதிய துறைகளில் கம்பர் தன் கருத்துகளைப் பதிவு செய்திருப்பது கருதி எதிர்கால எல்லைக்கும் ஏற்ற வகையில் கம்பர் தன் காப்பியத்தைப் படைத்துள்ளார் என்பது தெரியவருகின்றது.
கம்பராமாயணத்தில் இராமனுக்கு முடிசூட்டுவிழா நடைபெறப் போகிற சூழலில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் ஆட்சியைப் பற்றியும் அது நடைபெறவேண்டிய நெறிகள் பற்றியும் வசிட்டர் எடுத்துரைக்கிறார். இதனைத் தொடர்ந்து இராமன் கிட்கிந்தை அரசைப் பெற்று அதனை சுக்கிரீவனிடத்தில் ஒப்படைக்கின்றபோதும் எதிர்காலச் சிந்தனைகள் பொருந்திய அரசினைச் சமுதாயத்தைப் படைக்க எடுத்துக்கொண்ட முயற்சி தெரியவருகின்றது. அதுபோன்று வீடணனுக்கு அரசை அளிக்கின்றபோதும் எதிர்காலத்தில் இலங்கையில் நல்லாட்சி நடைபெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இராமன் செயல்படுவதாகக் கம்பர் காட்டுகின்றார். இந்த மூன்று அரசியல் சூழல்கள் மிக முக்கியமானவை… இவற்றை ஒருங்கிணைத்துப் பார்த்தால் கம்பரின் எதிர்காலக் கணிப்புகள் இவை என்பதை உணர்ந்து கொள்ள இயலும்.
இந்த மூன்று சூழல்களிலும் அரசிற்கு அனுபவம் இல்லாத புதியவர்கள் அரசுரிமை ஏற்க வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதாவது இராமன், சுக்கிரீவன், வீடணன் ஆகிய மூவரும் முதன் முறையாக அரச பதவி ஏற்கப் போகிறார்கள். புதியவர்களாக உள்ள இவர்களிடம் அரசியல், ஆட்சியியல் ஆகியவற்றை ஒப்படைக்கும்போது பழைய குறைகள் களையப்படும் என்று கம்பர் எண்ணியுள்ளார். புதியதோர் உலகைப் படைக்கப் புதியவர்கள் மிகத் தகுதியானவர்கள் என்பது இங்குக் கருதத்தக்கது. மேலும் இம்மூன்று சூழல்களிலும் மூவகை வேறுபாடுகள் இருப்பதை உணரவேண்டியுள்ளது.
இராமன் என்ற புதியவருக்கு அரசு நாளை என்று அமைந்தபோது அது அடையப்படாமல் கதை நகர்கிறது. வீடணனுக்கு உரிமை என்பது இலங்கை அரசாக இராவணன் இருக்கும்போதே ஏற்படுத்தப் பட்டுவிடுகின்றது. சுக்ரீவனின் அரசு மட்டுமே முன் உள்ள அரசியலாளரான வாலி இறந்தபின் அந்த இடத்தை நிரப்புவதற்காக ஏற்படுத்தப்படுகிறது. இம்மூன்று அரசுகளை அமைக்கின்றபோது சுக்கிரீவனின் கிட்கிந்தை அரசு மட்டுமே உறுதி என்ற நோக்கத்தில் அமைந்தது என்பதை அறியவேண்டியுள்ளது. இராமனின் ஆட்சிக் கனவு கலைகின்றது. வீடணனின் ஆட்சி என்பது இராவணன் அரசனாக இருக்கும்போது மாற்று அரசாக உருவாக்கப்பெற்றது. இந்தச் சிற்சில வேறுபாடுகள் காரணமாக சுக்கிரீவனின் அரசினைச் செம்மைப்படுத்த இராமன் பற்பல கருத்துகளை மொழிய வேண்டியவராகப் படைக்கப்பெற்றுள்ளான்.
வசிட்டர் வழியில் எதிர்காலச் சமுதாயமும், அரசும்: 
இராமனுக்கு நாளை முடிசூட்டுவிழா என்ற நிலையில் வசிட்டர் நாளைக்கு அரசமைக்க உள்ள இராமனுக்குச் சில அறிவுரைகளைப் பகர்கின்றார். இவ்வறிவுரைகள் கம்பரின் எதிர்காலச் சிந்தனைகளை எடுத்தியம்புவனவாக இருக்கின்றன.
‘‘என்புதோல் உடையார்க்கும் இலார்க்கும் தாம்
வன் பகைப்புலன்மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி மூவுலகத்தினும்
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ’’ 
( மந்தரை சூழ்ச்சிப்படலம்-24)
என்ற பாடல் எதிர்காலவியல் சிந்தனை கொண்ட பாடலாகும். முக்காலம், பிற்காலமாகிய எதிர்காலம் ஆகிய எல்லா காலத்திலும் அன்பின் அடிப்படையில் சமுதாயம் அமையவேண்டும் என்ற விழைவினை இப்பாடல் தெரிவிக்கின்றது.
எதிர்காலத்தில் ஆட்சியாளர்கள் கைக்கொள்ளவேண்டிய பண்புகளை மற்றொரு பாடல்வழி வசிட்டர் இராமனுக்கு உணர்த்துகிறார்.
‘‘வையம் மன்னுயிர் ஆக அம் மன்உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள் 
மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ
( மந்தரை சூழ்ச்சிப்படலம்-25)
இப்பாடலில் எதிர்கால ஆட்சி ஐயத்தின்மை இல்லாமல் தெளிவு பட இருக்க வேண்டும் என்கிறது. அவ்வாறாயின் ஆட்சிக்கு வருபவர்கள் அவர்களின் வழி ஆகியன எந்தக் குடிமகனுக்கும் ஐயத்தைத் தராத வகையிலும், ஆட்சியாளரின் வாழ்முறையில் எவ்வித சந்தேகத் தன்மையும் இல்லாமல் இருத்தலாகும். அறத்தைக் கடக்காமல், உண்மையில் நின்று செய்யும் ஆட்சியே எதிர்காலத்தில் வேண்டப்படுவது என்பது இங்குக் குறிக்கத்தக்கது.
அடுத்தடுத்த பாடல்களில் அரசனுக்கு வேண்டிய குணங்களைப் பட்டியலிடும் வசிட்டர் இன்னும் பல செய்திகளைத் தொடர்ந்து அடுக்குகிறார். பொன்னை நிறுக்கும் தாராசின் இயல்பினைப் போல நடுவுநிலைமையோடு ஆட்சியாளன் அமையவேண்டும். அமைச்சரும், சான்றோரும் சொல்லிய முறையில் அவன் ஆட்சி நடத்தவேண்டும்.
மங்கையரால் வரும் காமத்தை அரசியலாளர்கள் துறக்கவேண்டும் என்பதும் இங்கு வசிட்டரால் வைக்கப்படும் வேண்டுகோள். இவற்றையெல்லாம் தாண்டி போர் அற்ற எதிர்கால உலகைக் கம்பர் இங்குக் கனவு காண்கிறார்.
‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? 
( மந்தரை சூழ்ச்சிப்படலம்-21)
என்ற இப்பாடல் இன்றுவரை எதிர்காலவியல் பாதையாகவே அமைந்துள்ளது. வசிட்டர் இராமனுக்குச் சொன்ன இவ்வுரைகள் எதிர்காலத்தில் யார் ஆட்சியாளர்களாக வந்தாலும் ஏற்று நடக்கவேண்டிய நல்லுரைகள் ஆகும்.
இராமனின் வழியில் எதிர்காலச் சமுதாயமும் ஆட்சியும்:
இராமன் சுக்கிரீவனுக்கும், வீடணனுக்கும் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மக்களும், சமுதாயமும் நடக்க வேண்டிய முறைகளை அவர்களின் முடி புனையும் காலத்தில் எடுத்துரைக்கின்றான். இவற்றைத் தொகுத்துக் காணுகையில் இவை கம்பரின் எதிர்காலச் சிந்தனைகளை எடுத்துரைப்பதாக உள்ளன.
அரசன் தன் சுற்றத்தோடு இயைந்து நடக்கவேண்டியமுறையை இராமன் ‘‘சேய்மையோடு அணிமை’’என்ற கொள்கையைப் பின்பற்றவேண்டும் என்கிறான். அதாவது அரசியல் சுற்றத்தை மிக நெருங்காமலும், மிக அணுகாமலும் இருக்க வேண்டும் என்ற அரசியல் நடைமுறை இங்குக் கற்றுத்தரப்படுகின்றது.
மேலும் அரசியல் வல்ல அமைச்சர்கள் சொல்லும் சொற்களை ஏற்று அவர்கள் காட்டும் வினையத்தையும் ஏற்று ஆட்சி நடத்தவேண்டும் என்பது இராமனின் கூற்று. மேலும் சமுதாயம் என்பது மூவகையினரை உடையது என்கிறான் இராமன். நண்பர், அயலார், விரவார் என்போர் அம்மூவர் ஆவர். எதிர்கால சமுதாயத்தினைப் பற்றியது இக்கருத்து. இதில் எதிரிகள் இல்லாமல் இருப்பது கருதத்தக்கது.
எதிர்கால சமுதாயம் எளியோர்களைத் துன்பப்படுத்தும் சமுதாயமாக இருந்துவிடக்கூடாது என்பது கம்பரின் எண்ணம்.
‘‘சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.”
(அரசியல் படலம், 417)
என்ற இந்தப் பாடலில் நலிந்தோர்க்கும் நல்லரசாக எதிர்கால அரசுஅமைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கம்பர் பதிவுசெய்கிறார்.
குறிப்பாக இங்கும் மங்கையர் பொருட்டால் மரணம் எய்தும் என்று மகளிர்க்குத் துன்பம் தராத அரசாக எதிர்கால அரசுஅமைய வேண்டும் என்று கம்பர் விரும்புகின்றார்.
எதிர்கால சமுதாயத்தில் பாதுகாக்கத்தக்கவர்கள் பாதுகாக்கப்படவேண்டும், தீயவரை அறத்தின் வழியில் தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும் என்ற நெறிகளையும் பின்பற்ற இராமன் வாயிலாக கம்பர் வேண்டுகின்றார். அறத்தின் வழி அரசு நிலவ வேண்டும் என்பதும் கம்பரின் எதிர்கால அரசியல் நெறிகளுள் ஒன்று.
இவற்றைத் தொகுத்துக் காணுகையில் தற்காலத்தில் நடக்கும் சமுதாயக் கேடுகள் அவற்றைத் தீர்க்கும் முறைகள் ஆகியனவற்றைக் கம்பர் எதிர்கால நோக்கில் தன் இலக்கியத்தில் சிந்தித்திருப்பது தெரியவருகின்றது,
வீடணனுக்கு முடி சூட்டப்படும்காலத்தில் அவனிடத்தில் ஓரிரு செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே இராமனுக்கு நேரம்வாய்க்கின்றது.
‘‘இனிது இருத்தி, இலங்கைச்செல்வம் நின்னதே ’’ என்று சிற்சில சொற்கள் பேசி இராமன் வீடணனுக்கு எதிர்காலத்தில் அமையப்போகிற அரசை வழங்குகின்றான். இந்த நிகழ்வால் ‘‘தனித்தனி வாழ்ந்தேம் என்ன ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா ’’ ( வீடணன் அடைக்கலப்படலம், 140) என்று குறிப்பிடுகின்றார் கம்பர். இதன்வழி எதிர்கால சமுதாயத்தில் தனித்தனியாக உள்ள அத்தனை உயிர்க்குடும்பங்களும் மகிழும்படியான ஆட்சி மலரவேண்டும் என்று கண்டுள்ளார் என முடிய முடிகின்றது.
கம்பர் காலத்தில் எதிர்காலமாக விளங்கிய இந்நிகழ்காலம் சிறப்பாக அமைய, இந்நிகழ்காலக் கொடுமைகள் நீங்கக் கம்பர் பலவாறு சிந்தித்துள்ளார். இந்நிகழ்காலத்திலிருந்தும் இன்னும் பயணிக்க உள்ள எதிர்காலம் வரையிலும் கம்பரின் கருத்துகள் வேண்டற்பாலன.

நன்றி வல்லமை இணைய இதழ் - http://www.vallamai.com/?p=60383

கருத்துகள் இல்லை: