கல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். பாலக்காட்டுக் கணவாயின் தெற்குத் தாழ்வாரத்தில், ஆழியாற்றின் கரையில் பூர்வீகங்களின் மிச்ச சொச்சத்துடன் வாழ்ந்துவரும் கிராமமான ஆத்துப்பொள்ளாச்சி சிற்பியின் சொந்தமண். அதுவே அவரின் நிரந்தரக் கவிதை மண். தோப்பும் துரவும் சொந்தமாக இருக்க, கணக்கும் வழக்கும் அவருக்குத் தொல்லை தராமல் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றியவர் அவரின் தாயார் கண்டியம்மாள். அகலமான நெற்றியில் வட்ட வடிவமானச் சந்தனப் பொட்டோடு சிற்பியின் கவிதைகளில் காட்சி தருகிறார் அவரின் தந்தையார் பொன்னுச்சாமி. பிறந்த ஆண்டு, 1936.
மரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறதா புதுப்பாவலர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். கவிதை என்பது ‘‘மறைந்து கிடக்கும் மனிதநேய ஊற்றுக்களைக் கண்டடைகிற முயற்சி’’, ‘‘நேரே நில், நிமிர்ந்து பார், நெஞ்சில் பட்டதை வளமாய்ச் சொல்’’, ‘‘எழுத்து ஆன்மாவின் ரத்தம், கவிதைகள் காலத்தின் உதடுகள்’’, ‘‘வலிவுள்ள பழமை, அழகுள்ள புதுமை’’ இவையே சிற்பி தன் கவிதைகளுக்குக் கொண்டிருக்கும் இலக்கணங்கள். ‘‘தாகம் தொலைக்கும் சிறுநதியாய் என் கவிதை நடக்கட்டும்’’ என்பதே இவர் கவிதையின் பயன். தேங்காது இயங்கு, முதல் நிலை விரும்பு, வையகம் புகழ வாழ் என்பது சிற்பியின் ஆத்திச்சூடி. அதுவே அவர் வாழ்க்கைக்குச் சூடிக்கொண்ட கொள்கைகள்.
பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர் மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாரட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட இவர் பவள விழா கண்டவர். கோயம்புத்தூர் சிற்பியின் பவள விழா கண்டுக் கோலமுத்தூர் ஆனது. இதே நேரத்தில் சிற்பியின் கவிதைகள் ஒருங்காய் முளைத்து முத்துக்கொத்துக்களாயின. அவரின் நினைவினை மலராய், ரீடராய், கட்டுரைத் தொகுப்புகளாய் ஆக்கி மகிழ்ந்தார்கள் பவள விழாக் குழுவினர்.
ஆசிரியத் தொழிலின் அருமை, பெருமைகளை, கடுமை, சிறுமைகளை அள்ளித் தெளிக்கும் அவரின் கவிதை ஆசிரியர் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்ய வேண்டிய மரபுக்கவிதை. “வாத்தியாரு வேலை”என்பது அதன் தலைப்பு.
‘‘மணியடிச்சாப் பணிதுவங்கும் வாத்தி யாரு வேலை
மலிவுப் பதிப்பா ஆகிப்போச்சு வாத்தியாரு வேலை
மலிவுப் பதிப்பா ஆகிப்போச்சு வாத்தியாரு வேலை
எடுத்துச் சொன்னா வெட்கம் வாத்தியாரில் ஏழு பிரிவு
இவரை விட அவர் உயர்வாம்! மேடுபள்ளமாய்ப் பார்வை!
தடுக்கிவிழும் சிலராலே விளையும் அலங்கோலம்
… சின்னத் தவறு பண்ணினாலும் இவரு சீட்டு கிழியும் ’’
( சிற்பி கவிதைகள்,ப.189)
இவரை விட அவர் உயர்வாம்! மேடுபள்ளமாய்ப் பார்வை!
தடுக்கிவிழும் சிலராலே விளையும் அலங்கோலம்
… சின்னத் தவறு பண்ணினாலும் இவரு சீட்டு கிழியும் ’’
( சிற்பி கவிதைகள்,ப.189)
இதுவே வாத்தியாரு வேலையின் மகத்துவம். ஆனால் கல்விச் சாலையின் ஈடு இணையற்ற பெருமையை மற்றொரு கவிதைச் சிற்பம் வடித்தெடுக்கிறது. கவிதையின் தலைப்பு “பள்ளிக் கூடம்”.
‘‘எழுத்துக்களிலிருந்து
ஐீவித எதார்த்தங்களுக்கு
ஒரு தொடர் ஓட்டப்பந்தயம்
தொடங்குகின்றது
… காகிதப் பட்டறைகளில்
சூட்சும
ஆயுதத் தயாரிப்பு,
வாழ்க்கைப் போரைச் சந்திக்க’’ (மேலது, ப.673)
ஐீவித எதார்த்தங்களுக்கு
ஒரு தொடர் ஓட்டப்பந்தயம்
தொடங்குகின்றது
… காகிதப் பட்டறைகளில்
சூட்சும
ஆயுதத் தயாரிப்பு,
வாழ்க்கைப் போரைச் சந்திக்க’’ (மேலது, ப.673)
வகுப்பறைகளின் மீது கவிஞர் கொண்டுள்ள நம்பிக்கையும், ஆசிரியத் தொழில் மீது கொண்டுள்ள மரியாதையும் இணைத்துக் காணும்போது சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பும், எதார்த்தமும் ஒன்றுக்கொன்று ஏறுக்குமாறாய் இருப்பது தெரியவருகிறது.
படிமக் கவிதைகளின் பிதாமகர் சிற்பி. அணுக்கருச் சிதைவு படிமமாய்த் தொடர்கிறது அவரது“நாய்க்குடை” கவிதையில்
‘‘ ஹிரோஸஷிமாவின் சாம்பல் அணுக்கள்
சமாதான மழையைத் தாகித்திருக்க…
மானிட ரத்தக் கடல்களின் மேலே
சாவின் தலைவிரி கோல மகுடமாய்
காற்றுக் குமிழியில் விஷ நிறம் பூசி
நீரில் நச்சு ஊசிகள் தூவி
விரிகிறது இன்னும்
விரிகிறது இன்னும்
ராட்சத நாய்க்குடைக் காளான்’’ (மேலது, ப. 361)
சமாதான மழையைத் தாகித்திருக்க…
மானிட ரத்தக் கடல்களின் மேலே
சாவின் தலைவிரி கோல மகுடமாய்
காற்றுக் குமிழியில் விஷ நிறம் பூசி
நீரில் நச்சு ஊசிகள் தூவி
விரிகிறது இன்னும்
விரிகிறது இன்னும்
ராட்சத நாய்க்குடைக் காளான்’’ (மேலது, ப. 361)
“சிகரெட்” அவரது கவிதையில் படிமமாய் உறைகிறது.
‘‘சாம்பல் அணுக்களின்
சயன மண்டபம்
பாம்பு நோய் உறையும்
புற்றின் கோட்டை
.. இருவிரல் நடுவில்
புகையும் எரிமலை’’ ( மேலது,ப. 313)
சயன மண்டபம்
பாம்பு நோய் உறையும்
புற்றின் கோட்டை
.. இருவிரல் நடுவில்
புகையும் எரிமலை’’ ( மேலது,ப. 313)
ஒருகணம் பழுத்து, மறுகணம் உதிரும் சிறுசிறு சிவப்புக் கனிகளின் தோட்டம் என்று சிகரெட்டின் தன்மை பேசும் சிற்பியின் கவிதைகள் சிகரெட்டிற்குப் பாராட்டுவிழா நடத்துகின்றனவா, எச்சரிக்கைக் கூட்டம் நடத்துகின்றனவா என்று குழம்ப வைக்கின்றன.
பாரதியைப் பின்பற்றியவர் சிற்பி. காந்தியை இதயத்தில் ஏற்றியவர் சிற்பி. இவர்களுக்காகத் தனித்தனிக் காவியங்கள் படைத்தவர். இவரின் பாரதி கைதி எண் 253, மகாத்மா ஆகிய படைப்புகள் இவரின் தனித்த கவிக் காவிய முத்திரைகள். ஆதிரை, மௌன மயக்கங்கள் ஆகியன இவரின் காப்பியச் சிதறல்கள். நிலவுப் பூ (1963), சிரித்த முத்துக்கள் (1966), ஒளிப்பறவை (1971), சர்ப்ப யாகம் (1976), புன்னகை பூக்கும் பூனைகள் (1982), மௌன மயக்கங்கள் (1982)(தமிழக அரசு பரிசு பெற்றது), சூரிய நிழல் (1990), இறகு (1996), சிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது), ஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது), பூஜ்யங்களின் சங்கிலி (1999)(தமிழக அரசு பரிசு பெற்றது), பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு(2001), மூடுபனி (2003), சிற்பி: கவிதைப் பயணங்கள் (2005), தேவயானி (2006), சிற்பி கவிதைகள் தொகுதிகள் – 2 (2011), நீலக்குருவி (2012), கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு) ஆகியன இவரின் கவிதைத்தொகுப்புகள் ஆகும். இவை தவிர உரைநடை நூல்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், உரைநூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று பற்பல ஆக்கத்துறைகளில் இவர் தடம் பதித்தவர். இவர் பெற்ற பட்டங்கள், விருதுகள் ஐம்பதுக்கும் மேற்பட்டன. இவர் மலையாளக் கவி வள்ளத்தோளையும், பாரதியாரையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றவர்.
சொல்லுக்குள் சொல் முளைத்து புதுமை செய்வது சிற்பியின் பாணி.
கிளிஞ்சலுக்குள் சமுத்திர ஆர்ப்பரிப்பு
சமுத்திரத்திற்குள் கிளிஞ்சல் சங்கீதம்
கிளையசைவில் காற்று
காற்றசைவில் கிளையாட்டம்
பறவைக்குள் முட்டை
முட்டைக்குள் பறவையின் பதுங்கல்
நேற்றுக்குள் இன்றின் கல்லறை
இன்றுக்குள் உறைந்து கொண்டிருக்கும் நேற்று’’ (மேலது,ப.850)
சமுத்திரத்திற்குள் கிளிஞ்சல் சங்கீதம்
கிளையசைவில் காற்று
காற்றசைவில் கிளையாட்டம்
பறவைக்குள் முட்டை
முட்டைக்குள் பறவையின் பதுங்கல்
நேற்றுக்குள் இன்றின் கல்லறை
இன்றுக்குள் உறைந்து கொண்டிருக்கும் நேற்று’’ (மேலது,ப.850)
சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தைக் தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது.
அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள். இவரின் ஆக்கங்களை வல்லிக்கண்ணன் பின்வருமாறு மதிப்பிடுகிறார்.
‘சிற்பியின் கவிதைகள் கற்பனை வளம், கலைநயம், கவிதா வேகம், உணர்வு ஓட்டம் கொண்டுச் சிறந்து விளங்குகின்றன. இவரது ‘சிகரங்கள் பொடியாகும்’’, ‘‘ராட்சதச் சிலந்தி’’, ‘ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா?’’, ‘‘சர்ப்பயாகம்’’, ‘‘நாய்க்குடை’’ ஆகியவை வேகமும் விறுவிறுப்பும் கொண்ட சிந்தனைப் படையல்கள். முள். முள்.. முள் என்ற தலைப்பில் பல பொருள்கள் பற்றிய சிறு சிறு கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் சிற்பி. ரசமான கவிதை இது’’ என்ற வல்லிக்கண்ணனின் மதிப்பீடு என்றைக்கும் கல்வெட்டாய் சிற்பி கவிதைகளின் வல்லமை பேசும் வரிகள் ஆகும்.
தனக்குப் பின்னாக கவிதைகளை, கவிஞர்களை, திறனாய்வாளர்களை, மாணவர்களை, நண்பர்களை, நல்லிளைஞர்களை வரவேற்கும் பெருந்தன்மை வாய்ந்த நல்ல மனக் கவிஞர் சிற்பி. அவரின் படிப்பிற்கும், படைப்பிற்கும் அவரது அறைக் கதவுகள் அதிகாலை மூன்று மணிக்கே திறந்துவிடுகின்றன. என்பது அதிசயம் ஆனால் உண்மை.
நன்றி - வல்லமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக