ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

மணிவிழா நாயகர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன்




தில்லைக்கூத்தன் நின்றாடும் பொன்னம்பலத்தலம் ஆகிய சிதம்பரத்தின் செழுமிய வரலாற்று அடையாளம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை வரலாற்றுச் சிறப்புடையது. “தமிழ்காத்த உ.வே.சா., யாழ்நூல் தந்த விபுலானந்தர், இருமொழிப்புலவர் பண்டிதமணி, நாடறிந்த நல்ல உரையாசிரியர் நாவலர் வேங்கடசாமிநாட்டார், உரைவேந்தர் ஒளவை, நற்றமிழ் வல்ல நாவலர் சோமசுந்தரபாரதி, பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ., கலைவல்ல கா.சு.பிள்ளை, முத்தமிழ் வித்தகர் லெ.ப.கரு.இராமநாதன்செட்டியார்,செம்மல் வ.சுப.மாணிக்கம் என ஆன்றவிந்த அருந்தமிழ்ச்சான்றோர்கள் அணிசெய்த அறிவுக்கூடம்” என்பார் அப்பல்கலை.யின் முன்னைத் துணைவேந்தர் எம்.ஜி.முத்துக்குமாரசாமி அவர்ககள்
அத்தகு பெருமைமிகு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்தலைவராகவும், இந்தியமொழிப்புல முதன்மையராகவும் திகழ்கிற பேராசிரியர் முனைவர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் பழமையில் தோய்வும், புதுமையில் ஆய்வும், பெருமையில் பணிவும், கடமையில் உறுதியும், புலமையில் தெளிவும் கொண்டு விளங்கும் பெற்றியர்; நாடறிந்த பேச்சாளர்; நல்ல எழுத்தாளர்; சிறந்த கவிஞர்; மனித நேய மாண்பாளர்.

பிறப்பும் குடும்பமும்
திரு.பழ.முத்துவீரப்பன், மேலைச்சிவபுரியில் புலவர் நா.மு.மாணிக்கம்- அலர்மேலு ஆச்சி இணையரின் புதல்வராக, 02.01.1953 அன்று பிறந்தார். இவர்தம் அன்புத்துணைவியார் மு. உமையாள் ஆச்சி, பி.ஏ. பட்டம் பெற்றவர். இல்லறநெறியில் இனிதுவிளங்கிக் கணவர் பணிகள் யாவினுக்கும் கை கொடுத்து உதவிவரும் மங்கையர்க்கரசியார். இவர்களின் இனிய புதல்வி மு.நன்முல்லை, கணினிப் பொறியியல் துறையில் பி.இ. பட்டம் பெற்றவர். அவர்தம் கணவரும் மணிவிழாநாயகரின் மாப்பிள்ளையுமான மருத்துவர் சு.முருகுசுந்தரம், சென்னையில் புகழ்பெற்ற தோல்நோய் மருத்துவ நிபுணர்.

கல்வியும் பணிகளும்
திரு. பழ.முத்துவீரப்பன் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில், எம்.ஏ. தமிழ் (1974-1976)பயின்று பல்கலைக்கழக முதல் தகுதிபெற்றுத் தங்கப்பதக்கத்தையும் வென்றார். பின்னர், அதே பல்கலைக் கழகத்தில், 1984இல் சமஸ்கிருதத்தில் டிப்ளமோ பட்டம் பெற்ற அவர், தி.ஜானகிராமன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 1989ஆம் ஆண்டு முனைவர்ப்பட்டத்தினைச் சிறப்புநிலையாகப்  பெற்றார்.

தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே தமிழ் பயிற்றுவிக்கும் பேறு பெற்ற இவர், 1976இல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, 1987இல் இணைப்பேராசிரியராகப் பணி உயர்வு பெற்று, 1994இல் பேராசிரியர் ஆனார். 2005 முதல் 2008 வரை தொலைதூரக் கல்வி இயக்கத் தலைவர். 2008 முதல் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிவருகிறார். தமது,முப்பத்தேழு ஆண்டுக்காலப் பேராசிரியப்பணியில், நவமணிகளாக முனைவர்ப்பட்ட மாணாக்கர்களையும், முப்பத்தேழு இளமுனைவர்ப்பட்ட ஆய்வாளர்களையும் நெறிப்படுத்தியிருக்கிறார். இன்னும் பலர் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், உள்நாடு மற்றும் உலகின் பிறபகுதிகளில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக் கல்வி அமைப்பின் வாயிலாகச் சென்று பைந்தமிழ்ப்புலமையை மாணாக்க உள்ளங்களுக்கு மாண்புடன் வாரிவழங்கிய நல்லாசிரியரான இவர், அறுபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்றுச் சீரிய ஆய்வுகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். அறக்கட்டளைப் பொழிவுகளும் பல நிகழ்த்தியுள்ளார். அவ்வழி, ஆய்வுநூல்களும், படைப்பாக்கங்களுமாக இவர் எழுதிய நூல்கள் பதினான்காகும். பல்வேறு
கருத்தரங்குகளில் தலைமை மற்றும் அமர்வுப் பொழிவுகள் பல நல்கியுள்ள இவர் வானொலியிலும் ஐம்பதுக்கு மேற்பட்ட பயன்மிகு பொழிவுகளை அறித்துள்ளார்.  கம்பன் கழக விழாக்கள் உள்ளிட்ட  பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் அரங்கேறி, முந்நூறுக்கு மேற்பட்ட செறிவுமிகு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் கவி பாடியுள்ளார்

எழுதிய நூல்கள்
மௌனச்சிறகுகள் (கவிதைத்தொகுப்பு) 1978
தொல்காப்பியரும் பாரதிதாசனும் (ஒப்பாளிணிவு) 1981
வ.சுப.மாணிக்கனாரின் சொல்லாக்கம் (ஆளிணிவு) 1988
தி.ஜானகிராமன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு () 1990
சமுத்திரம் சிறுகதைகள் - ஒரு மதிப்பீடு (1992)
பக்திஇலக்கியச் சிந்தனைகள்(கட்டுரைத்தொகுப்பு) 1993)
இலக்கிய விளக்கம் (இலக்கியக்கட்டுரைகளின் தொகுப்பு) (1999)
அரசர் அண்ணாமலை கொடைவிளக்க மாலை (கவிமாலை) (2003)
பழமையிலே புதுநினைவு (2004)
செட்டிநாட்டுத் தாலாட்டுப்பாடல்கள் (தொகுப்பு) (2005)
ஆழ்ந்ததும் அறிந்ததும் (ஆய்வுக் கட்டுரைகள் (2007)
பக்திமலர்கள்  (பக்திஇலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு) (2009)
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் காப்பிய உரைத்திறன் (அறக்கட்டளைப் பொழிவு நூல்) (2010)
செம்மொழி இலக்கியச் சிந்தனைகளட (கட்டுரைகளின் தொகுப்பு) (2012)

நடத்திய பயிலரங்குகள் கருத்தரங்குகள்
சென்னை, செம்மொழி மத்தியநிறுவனத்தின் துணையோடு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில், சங்க இலக்கியப்பதிப்புகளும் சங்க இலக்கிய ஆய்வு வரலாறும் என்ற பொருண்மையில், பத்துநாள் பயிலரங்கினை ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தியிருக்கிறார். அவ்வாறே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பெற்ற பயிலரங்குகளில் பங்கேற்றுப் பல்வேறு பொருண்மைகளில் ஆய்வுரை நல்கியிருக்கின்றார்.
தமது பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் வாயிலாக, இயக்குநராக இருந்து பின்வரும் பொருண்மைகளில் தேசியக் கருத்தரங்குகளை நடத்திப் பல தொகுதிகளாக அக்கருத்தரங்க  கட்டுரைகளைப் பதிப்பித்தும் இருக்கின்றார். அக்கருத்தரங்கப் பொருண்மைகளாவன.
1. இருபதாம் நூற்றாண்டுப் பக்தி இலக்கியங்கள் (2006)
2. அறஇலக்கியங்கள் (2007) - 2 தொகுதிகள்
3. பன்னிருதிருமுறைகள்(2008) - 3 தொகுதிகள்
4. அறிஞர் அண்ணா படைப்புகள்- பன்முகப்பார்வை (2009) - 3 தொகுதிகள்
5. வஷீமீளலார் படைப்புகள்- பன்முகப்பார்வை (2010) - 7 தொகுதிகள். உ.வே.சாமிநாதையரின் தமிழ்ப்பணிகஷீமீ (2011) - 3 தொகுதி
7. மு.வ.வின் படைப்புகஷீமீ பன்முகப்பார்வை (2012) - 4 தொகுதிகள்     

பதிப்புப் பணியில்...
அண்ணாமலைப்பல்கலைக்கழக வெளியீடுகளாக வந்த பல்வேறு விழா மலர்களில் தமிழ்ப்பகுதியின் ஆசிரியராக குழுவில் உறுப்பினராக இருந்து தம்பணியைத் திறம்பட ஆற்றியவர். 2008 முதல் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையின் அமைப்பாளர் பொறுப்பேற்ற இவர், அப்பல்கலை.யின் அற்புதச் செல்வங்களை மீள்பதிப்பு செய்வித்து இந்த நூற்றாண்டிற்கு எழுச்சிமிகு தொண்டாற்றியதைத் தமிழுலகம் என்றும் போற்றி மகிழும். தமிழ்ப்பண்பாட்டு வரலாறு ஐந்தாம் தொகுதி, ஒப்பாய்வுநோக்கில் பாரதிதாசன், தொல்காப்பியம் - பொருளதிகாரம் உள்ளிட்ட நூல்களோடு, மீ.ப.சோமு அவர்கள் எழுதி இப்போது முதன்முதலாக அச்சாகி உலாவரும் சித்தர் இலக்கியம் 4,5,6ஆகிய முத்தொகுதிகளையும் சிறப்புறப் பதிப்பித்திருக்கின்றார். பிற்காலச்சோழர் வரலாறு,  அமெரிக்கக் கவிதைகள் 111 ஆகியனவும் இவ்வரிசையில் அடங்கும்.

இவை அனைத்துக்கும் மேலாக, கம்பராமாயணத்தின் 16 தொகுதிகளையும் மீண்டும் சிறப்புறப் பதிப்பித்து உலகெங்கும் கம்பப் பேரமுது பொங்கிப் பரவ வழிவகை செய்ததை, கம்பன் கழகங்களுக் கெல்லாம் தாய்க்கழகமாகத் திகழும் காரைக்குடிக் கம்பன் கழகம் அண்மையில் நடத்திய விழாவில் கொண்டாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்ற பொறுப்புகளும் ஆற்றிய பணிகளும்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், வேலூர் திருவஷீமீளுவர் பல்கலைக்கழகம், காந்திக்கிராமம் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆகிய பல்கலை.களின் ஆசிரியர் தேர்வுக்குழுவில் பல்வேறு காலக்கட்டங்களில் இடம்பெற்ற இவர், புதுவை மத்தியப்பல்கலைக்கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் ஆகியவற்றோடு, கோவை பி.எஸ்ஜி, கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணம்மாள் கல்லூரி, ஈரோடு கலைக்கல்லூரி, திருச்சி, தேசியக்கல்லூரி, மதுரை பாத்திமா கல்லூரி உள்ளிட்ட பல கல்விநிறுவனங்களின் பாடத்திட்டக்குழுவிலும் பங்கேற்றிருக்கிறார்.
இவர்தம் இலக்கியவிளக்கம், ஆழ்ந்ததும் அறிந்ததும், பழமையிலே புதுநினைவு, தொல்காப்பியரும் பாரதிதாசனும் ஆகிய நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக்கல்லூரிகளில் பாட நூல்களாக இடம்பெற்றிருந்தன.
இவைதவிர, தொல்காப்பியம், பண்டைய இலக்கியம், கம்பர், சைவசித்தாந்தம் உள்ளிட்ட பல பாடநூல்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழக அஞ்சல்வழி மாணாக்கர்களுக்காக இவர் எழுதி யிருக்கிறார். மேலும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ. பயில்வோருக்கான தொல் காப்பியப் பாடநூல் எழுதியுள்ளார்.

நன்றி திரு. சொ. சேதுபதி

கருத்துகள் இல்லை: