வெள்ளி, நவம்பர் 02, 2007

தமிழ்படித்தோரைக் காப்போம்


தமிழ்படித்தோரைக் காப்போம்
குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்றுத் தருவதில் பல சிக்கல்கள் உண்டு. தமிழை ஒரு பாடமாகக் கொள்வதில் பள்ளி அளவிலும், கல்லு}ரி அளவிலும் பல தடைகள் உண்டு. இவற்றை எல்லாம் தாண்டி தமிழை தனி ஒரு முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்க்கு எதிர்காலம் என்பது பல சிக்கல்கள் நிறைந்தது.அதில் ஒரு சிக்கலை மையமிட்டு இக்கட்டுரை முன்வைத்துத் தீர்வும் காண முயலுகின்றது.
தமிழ் படிக்க வரும் மாணவர்களின் தரம் என்பது அடிப்படையில் எண்ண வேண்டியது. எதுவும் கிடைக்காதவர்கள் வந்து சேரும் வேடந்தாங்கலாகத் தமிழ்ப்படிப்புகள் திகழ்ந்து வருகின்றன. இந்த வேடந்தாங்கல் மனப்பான்மையால் தமிழ் படிப்போர் இன்னமும் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்ப் படிப்புகள் இரு நிலைகளில் உள்ளன. ஒன்று பி.லிட். மற்றொன்று பி. ஏ. தமிழ். இந்த இரண்டையும் தமிழில் மொழி பெயர்த்தால் இவற்றிற்கான வேறுபாடின்மை புரிய வரும். அதாவது இளநிலை இலக்கியம், இளங்கலை இலக்கியம் என்பனவே இவற்றின் விரிவுகள்.
இந்த இரண்டுப் படிப்புகளும் அடிப்படையில் எவ்வித மாற்றமும் இல்லாதவை. இவற்றிற்கு ஒரு காலத்தில் மாற்றங்கள் இருந்தன. அதாவது பி.லிட் படிக்கும் மாணவர்கள் பகுதி. 1- தமிழ், பகுதி 2 ஆங்கிலம் ஆகியவற்றைப் படிக்காமல் முழுமையும் தமிழ் குறித்தப் பாடங்களையே பயில்வர். அதிலும் குறிப்பாக தொல்காப்பியம் என்ற இலக்கணத்தை முழுமையாகப் பயில்வர்.
பி.ஏ (தமிழ்) படிப்பவர்கள் பகுதி .1. தமிழ்;, பகுதி 2 ஆங்கிலம் ஆகியவற்றையும் இவற்றேhடு தமிழ்ப் பாடப்பகுதிகளையும் படிப்பர். இவர்கள் தொல்காப்பியம் படிப்பதில்லை. இவர்கள் தொல்காப்பியத்தை முதுகலையில் படிப்பர்.
பி.லிட். படித்தவர்கள் தொல்காப்பியத்தை மீண்டும் முதுகலையில் படிப்பர். இந்தச் சிறு வேறுபாடுகளே இந்தப் படிப்புகளுக்குள் உண்டு. என்றாலும் தற்போது பி.லிட் படிப்பவர்களும் பகுதி1, பகுதி 2 ஆகியவற்றைப் படிக்கும் மாற்றம் வந்துவிட்டது. தொல்காப்பியம் மட்டும் கூடுதலாகப் படிப்பவர்கள் பி.லிட் பட்டம் பெறுகிறார்கள் என்ற வேறுபாடு மட்டுமே இன்னமும் உள்ளது. இந்த ஒரு வேறுபாடு மட்டுமே தமிழ் மாணவர்களை இரண்டாகப் பிரிக்கிறது.
முதுகலையில் மாற்றம் இல்லாத போது இந்தப் படிப்புகளிலும் இந்த வேறுபாடு தேவையில்லை என்பது முதல் கருத்து.இது குறித்துக் கல்வி உலகம் முடிவு கட்டட்டும்.
வேலை வாய்ப்பில் பி.லிட், பி.ஏ ஆகிய தமிழ்ப்படிப்புகள் குறித்து எண்ணுகையில் அதிலும் ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது பி.லிட். படித்தவர்கள் மட்டும் புலவர் பட்டயம் (டிபிடி) என்ற ஏறக்குறைய இளநிலை கல்வியியல் (பி. எட்) படிப்பிற்கு இணையான ஒரு படிப்பைப் படிக்க வாய்ப்புள்ளது. இதனைப் படித்த உடன் பி.லிட் பட்டம் பெற்றவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர்.
ஆனால் இதே நிலை பி.ஏ(தமிழ்) படித்தவர்களுக்கு இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி. தெரிந்தோ தெரியாமலோ பி. ஏ (தமிழ் ) எடுத்தவர்கள் இந்த வாய்ப்பை இழக்கின்றனர்.
எனவே பி.லிட்., பி. ஏ.(தமிழ்) ஆகிய படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் ஒரே நிலையில் கொள்ளப் பெறவேண்டும் என்பதையே இக்கட்டுரை உணர்த்த விரும்புகிறது. அதாவது பி.ஏ (தமிழ்) படித்தவர்களும் புலவர் பட்டயம் என்ற படிப்பைப் படிக்கத் தகுதி உடையவர்கள் என்ற நிலை வந்துவிட்டால் ஓரளவிற்குத் தமிழ் படிக்கும் மாணவர்களின் நிலை மேம்பாடு அடையும் . அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அவசர கால தமிழ்க் காப்பு முயற்சி இதுவாகும்.இதனால் தமிழ் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரே நிலை எய்தலாம்.
நன்றி தமிழ் ஓசை ( 28,10,2007)
கருத்துரையிடுக