ஞாயிறு, ஜனவரி 07, 2007

முதல் காயம்

வேலைகளின் களைப்பில் எதை முன் செய்வது எதைப் பின் செய்வது என்று தெரியாமல் எப்படியோ எதையோ செய்து கொண்டிருக்கையில்
ஊர்ந்து செல்லும் பொம்மை என் இருவயது மகள் எனக்கும் உதவி செய்யாமல் மனைவிக்கும் உதவி செய்யாமல் தனக்குத் தானே உதவி செய்யாமல்
ஏதோ செய்து கொண்டிருந்தாள் பார்க்காத நேரம் செய்யத் தோணாத வேலைகளை அவள் செய்வாள்
காரட் சீவிய பாதி வேலையில் அரிசி கொதிப்பை அடக்க மனைவி செல்ல
மகள் சீவத் தொடங்கினாள் கையின் தோல் மெல்லச் சிதைபட்டு சிவப்பு ரத்தச் சுவர் தெரிந்தது அடுத்த நொடி வலியின் அழுகை
ஓடி வந்து பார்த்து பல சொல்லி அவள் அழுகை அடங்கவில்லை
அது அவளின் முதல் காயம்
கைகளைக் காட்டி காட்டி அழுதழுது முகம் சிவந்து
அழுகை வற்றிய நேரங்களில் அந்த காயத்தை தொட்டுத் தொட்டு வலியை மேலும் வலியதாக்கிக் கொண்டாள்
என்ன செய்வது மனைவி பெரிய துணியெடுத்துச் சிறிய கட்டு போட்டாள்
கட்டு உடனே நாள் முழுவதும் நடந்தாள் வலிக்க வேண்டும் என்று துணியைக் காயத்தை அழுத்தினாள் ஆனால் துணிப்பந்து வலி தரவில்லை மாறாக மென்மை தந்தது மேலும்¢ அழுத்தி மென்மையை மகள் பெற்றாள் அமைதி எங்களுக்கு
ஆனால் நாள் முழுவதும் அவள் கை தூக்கி அவள் நடந்த காட்சி
முதல் காயத்தின் முதல் வலி உணரப்பட்டது
இன்னமும் அந்த விரலில் வலி உணர்கிறாள் மகள்

கருத்துகள் இல்லை: