ஞாயிறு, ஜூலை 23, 2006

மனதை மயக்கும் மலைக்கோயில்


"பேரிரைச்சல் பெருவாழ்வு' வாழும் அனைவரும் தனிமையான நிம்மதியான ஓர் இடம் கிடைக்காதா என ஏங்குவது உண்டு. அவர்களுக்கான இடம்தான் மலையக் கோயில்.

புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் நச்சாந்துபட்டி என்ற ஊரின் முடிவில் உள்ளது. ஒரு மலை, அந்த மலையின் மேலும், அதன் அடிவாரத்திலும் சில கோயில்கள், அதனைச் சுற்றிச் சில கட்டடங்கள் இடிந்தும் இடியாமலும்... மக்கள் பேருக்குக் கூட இங்கு குடும்பம் குடும்பமாக வசிக்கவில்லை. அதனால்தான் இது தனிமையான ஊர். உலகத் தனிமையை இங்கு அனுபவிக்கலாம்.

மலையின் முன்புறத்தில் ஒரு குடைவரைக் கோயில். அந்தக் கோயிலில் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். அவர் மலையைக் குடைந்து அறை போன்ற அமைப்பில் வைக்கப்பெற்றுள்ளார். மலை அகலமாகக் குடையப்பெற்று அதன் ஒரு நீளத்தில் பெருமான் இருக்க எதிர்புறத்தில் மலையில் புடைப்புச் சிற்பமாகப் பிள்ளையார் இருக்கிறார். இவர் ஏறக்குறைய பிள்ளையார்பட்டி விநாயகர் போல உயர அமைப்பு உடையவர். ஆனால் இவருக்கு ஐந்து கரங்கள் உண்டு. சிவனுக்கும் பிள்ளையாருக்கும் இடைப்பட்ட இடத்தில் நந்தியில் எம்பெருமான் வீற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் ஒரு முனீஸ்வரர் சிலை உள்ளது. இவர் காவல் தெய்வமாக வணங்கப் பெறுகிறார். நீண்ட சடை முடி தாடியுடன், கையில் தண்டத்தோடு காட்சியளிக்கிறது, இவர் உருவம். இவர் மிகச் சக்தி வாய்ந்தவராக இந்த வட்டாரத்தில் வணங்கப் பெறுகிறார். பெயர் அறியப்படாத ஒரு முனிவரின் சிலையே இங்கு முனீஸ்வரர் சிலை என்றழைக்கப் படுகிறது. இந்த அமைப்பு முழுவதும் மலையின் குடைவரையாக உள்ளது.


இந்தக் குடைவரையை அடுத்து முன்னோக்கிய ஒரு கல்மண்டபம் உள்ளது. கருவறையைத் தொடர்ந்து இருக்கும் இந்த மண்டபம் இறைவர்க்குரிய வாகனங்கள் வைக்க பக்தர்கள் வணங்க உதவுகிறது. அடுத்து வெளிப்புற மண்டபம் உள்ளது. இதன் விதானத்தில் அற்புதமான பழைய ஓவியங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மூன்று: 1. கிருஷ்ணன் வெண்ணெய் உண்ணும் ஓவியம். 2 சிவனை வணங்கும் பார்வதியின் தவக்கோலம். 3 பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாள் பக்கத்தில் இளையபெருமாள்.
இவை மூன்றும் மிக அருமையானவை. இதில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை இராமன் என்று கொள்ளலாம். ஏனெனில் அவர் அருகில் தேவி துணை இல்லை. மாறாக இளையபெருமாள் இலக்குவன் வீற்றிருக்கிறார். அதோடு அவர்கள் வனவாசத்தில் இருக்கிறார்கள் என்பதை ஓவியத்தின் சுற்றுச் சூழல் விளக்குகிறது. குளம், கானகம் இவற்றைக் கருத்தில் கொண்டு ஓவியத்தை அணுகினால் இது விளங்கும்.


இதன் பிறகு வலமும் இடமும் இரு சன்னதிகள் காணப்படுகின்றன. இவற்றில் தற்காலிகமாக சில சிலைகள் வைக்கப்பெற்றுள்ளன. தட்சிணாமூர்த்தி, அய்யனார் போன்ற தெய்வங்கள் அவற்றில் சில. வலப்புறம் உள்ள ஒரு சிறு பகுதியில் ஒரு சிவலிங்கம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. எங்கெல்லாம் இடம் கிடைத்ததோ அங்கு சிவலிங்கம் என்பதாக இந்தக் கோயில் அமைந்துள்ளது.

வெளிச்சுற்றில் அம்மன் சன்னதி, பிள்ளையார், முருகன், கறுப்பர் கோயில்கள் தனித்தனியாக பிற்காலத்தில் எழுப்பப்பட்டுள்ளன. மலையைச் சுற்றி வந்தால் மற்றொரு இடத்தில் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. சற்று விசாலமான அறை அதற்குள் சிவலிங்கம் வாயில்படி என்று எவ்வித மாற்றமும் இல்லாமல் பழைய காலத்தில் இருந்தது இருந்தபடியே உள்ளது. உள்ளபடியேயான ஒரு குடைவரைக்கோயிலை நாம் தரிசிக்க முடிகிறது. இதன் பக்கங்களில் பல குகை மாடங்கள் அவற்றில் சிவ லிங்கங்கள், இதன் ஒரு புறச் சுவரில் பழையகால கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இதன் எழுத்து வடிவம் இதுவரை கிடைக்காத ஒன்று எனக் கல்வெட்டு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த எழுத்து வடிவத்தைக் கொண்டு இந்தக் குகைக்கோயில்களை மிகப் பழமைவாய்ந்தன என்று அவர்கள் கருதுகிறார்கள். இவை அனைத்தும் தற்போது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளன.

பெரும்பாலும் சமணர்கள் குடைந்த குகைக்கோயில்களில் வேறு கடவுளர்களை வைத்து வழிபட்ட மற்ற இடங்களில் இருந்து இவ்விடம் வேறுபடுகிறது. இங்குள்ள குகை மாடங்களில் சிவனே புடைப்புச் சிற்பமாக வீற்றிருப்பது இதற்கு ஓர் அரிய சான்று.

இதன் வெளிப்புறத்தில் ஒரு நந்தி தற்போது காணப்படுகிறது. மலையைச் சுற்றி வர தக்க நல்ல வழி உண்டு. தற்போது பெüர்ணமி கிரிவலம் இங்கு நடைபெறுகிறது. மேலும் இதன் சுற்றில் இரண்டு சுனைகள் உண்டு. இதனால் எம்பெருமான் குளுமையில் வீற்றிருக்கிறார்.


மலையின் மேலே பிற்காலத்தில் ஒரு முருகன் கோயில் நற்சாந்துப்பட்டி சார்ந்த நகரத்தார் ஒருவரால் அமைக்கப்பெற்றுள்ளது. முருகன் -வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இக்கோயிலைச் சுற்றி பெரிய மண்டபம் உள்ளது. இடும்பன் சன்னதி, ஒரு சுனை இவையும் அங்கு உண்டு. அருணகிரிநாதர் இந்த முருகனைப் பாடிப் பரவி உள்ளார். இந்த முருகனுக்கு தைப்பூசம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அருள் பெறுகின்றனர். இங்குள்ள மடங்களில் எல்லாம் அப்போது அன்னதானம் நடைபெறும் . இந்த ஊரின் விழாக்கோலம் அன்று ஒரு நாள் மட்டுமே. நமக்கு நாம் செல்லும் நாள் விழாநாள். புதுக்கோட்டையின் ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத் தளம் இந்த இடம்.

மு.பழனியப்பன்
கருத்துரையிடுக